அண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்றம் தடையால் மட்டுமல்ல- தமிழின உணர்வாலும் தடுத்து நிறுத்தியே தீருவோம்!
சென்னை சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சி முரசம் கொட்டினார்!
சென்னை, நவ.9-அண்ணா நூற்றாண்டு நூல கத்தை உயர்நீதிமன்ற தடையால் மட்டும் தடுக்கக் கூடாது, தமிழின உணர்வாலும் தடுத்து நிறுத் திடுவோம் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு ரையாற்றினார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்று வதா? என்ற தலைப்பில் 5.11.2011 அன்று இரவு கொட்டும் மழையில் சிறப்புப் பொதுக்கூட்டம் சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் ராதாமன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரை வருமாறு:
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இங்கு கூடியிருக்கின்ற அருமை பெரியோர்களே! தோழர்களே! அறிஞர்களே! தாய்மார்களே! உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.
குடிசெய்வார்க்கில்லை பருவம்
தந்தை பெரியார் அவர்களுக்கு மிகவும் பிடித்த குறள். ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களிலே மிகவும் பிடித்த குறள்.
குடி செய்வார்க்கில்லை பருவம்
குடி செய்வார்க்கில்லை பருவம்
மடி செய்து மானங் கருதக்கெடும்
என்ற குறளைத்தான் அய்யா அவர்கள் அடிக்கடி சுட்டிக்காட்டுவார்கள். அதாவது பொதுத்தொண்டாற்றக் கூடியவர்களுக்கு பொதுப் பிரச்சினையிலே கவலை கொள்ளக் கூடியவர்கள் மிகப்பெரிய அளவுக்கு கொட்டும் மழையானாலும் கொளுத்தும் வெயிலானாலும் கவலைப்படாது பணி செய்வதற்கு முன் வரவேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்களுக்கிருக்கின்ற அக்கறை அப்படிப்பட்டது. அந்தப் பணியினுடைய முக்கியத்துவம் அவ்வளவு ஆழமானது என்பதை எடுத்துரைப்பதற்காகத்தான் அந்தக் குறளை பெரியார் அவர்கள் மிகவும் விரும்பினார்கள்.
பொதுத்தொண்டு செய்யக்கூடியவர்களுக்கு மானம் பாராது தொண்டு செய்ய அவர்கள் முன்வரவேண்டும்.
மானம்-பருவம் பார்க்கக் கூடாது
மானம் பாராதது மட்டுமல்ல. பருவமும் பார்க்கக் கூடாது. நல்ல நேரம் வரட்டும் அல்லது வாய்ப்பாக வரட்டும். வெயில் வரட்டும், மழை பெய்கிறதே என்பதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்று சொல்லுவார்கள்.
அது போல, நாங்கள் அந்தப் பணியில் இருப்பது மட்டுமல்ல, எண்ணற்றத் தமிழர்கள் இதனாலே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர் களுடைய உணர்வுகள் என்பதிருக்கிறதே அது மிகப்பெரிய அளவுக்கு எரிமலை வெடித்துக் கிளம்புவதைப் போல அது எந்த நேரத்திலும் கிளம்பும் என்று காட்ட வேண்டியவர்களுக்கு காட்டுவதற்காக இந்த கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் வந்திருக்கின்றீர்களே இதுதான் இந்தப் பிரச்சினையினுடைய தன்மை என்ன என்பதற்கு ஒரு நல்ல அடையாளம். அதி புத்திசாலிகள் பாடம் பெறவேண்டும். அவர்கள் தெளிவு பெற வேண்டும்.
கலைஞர் அவர்களுக்கு எவ்வளவு வேதனை?
சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கலைஞர் கட்டினார். தரை தளத்தையும் சேர்த்து ஒன்பது தளங்கள். மற்றவர்கள் எல்லாம் சொன்னார்கள். கலைஞர் அவர்களுக்கு எவ்வளவு பெரிய வேதனை இருக்கும் என்பதை நம்மாலே எண்ணிப் பார்க்க முடியும்; உணர்ந்து பார்க்க முடியும்.
ஏனென்றால் கட்டடம் சிதைக்கப்படுகிறது. அல்லது மாற்றப்படுகிறது என்பது அல்ல. இந்த இனவுணர்வு என்பதிருக்கிறதே. அதற்கு எவ்வளவு பெரிய அறை கூவல் விடப்பட்டிருக்கிறது. அதைத் தமிழர்கள் எப்படி எடுத்துக்கொள்ளப் போகி றார்கள் என்ற கவலை எங்களைப் போன்ற பெரியார் தொண்டர்களுக்கு நிச்சயமாக உண்டு.
தன்மானத் தமிழர்களுக்கே விட்டுவிடுகின்றேன்!
அதனால்தான் சொன்னார்கள். இந்த நூலக இடமாற்றப் பிரச்சினையை தன்மானத் தமிழர் களுக்கே நான் விட்டுவிடுகின்றேன் என்று அவர்கள் சொன்னார்கள். நிச்சயம் தன்மான உணர்வு என்பதிருக்கிறதே அது செத்துப் போய் விடவில்லை. செத்துப் போகாது. சாகாது. பெரியாருடைய குரலை எவரும் தடுத்துவிட முடியாது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சிறப்பைப் பற்றி பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்பு அந்த கட்டடம் அமைந்திருக்கின்ற இடம் அதன் அமைப்பு, ஒவ்வொரு தளத்திலும் எவ்வளவு அரியவகை நூல்கள் இருக்கின்றன என்பது திரைப்படக் காட்சி மூலம் இங்கு வந்தவர்களுக்குக் காட்டினார்கள்.
மிக அழகாக படம் பிடித்துக் காட்டினார்கள். நம்முடைய கலி.பூங்குன்றன் அவர்களும், சுப.வீரபாண்டியன் அவர்களும்.
சிங்கப்பூர் தேசிய வாரிய நூலகம்
இன்னும் எவ்வளவோ அந்த நூலகத்தின் சிறப்பைப் பற்றிச் சொல்லலாம். இதுவரை எங்குமில்லாத புதுமைகள் இருக்கிறது. இன்னும் கேட்டால் அந்த நூலகம் சிறப்பாக உருவாக வேண்டும் என்பதிலே ஏதோ எங்களைப் போன்றவர்களுக்குக் கூட ஒரு சிறிய அளவுக்குப் பங்கு உண்டு. சிங்கப்பூருக்கெல்லாம் போகும் பொழுது அங்குள்ள தேசிய நூலக வாரியத்திற்கு இரண்டொரு முறை சென்று நிகழ்ச்சிகளிலே கூட நாங்கள் கலந்துகொண்டிருக்கின்றோம்.
அதை நாங்கள் பார்த்தபொழுது தமிழ்நாட்டிலே இப்படி ஒரு நூலகம் வரவேண்டும் என்று ஆசைபட்டபொழுது இதை முதல் அமைச்சராக இருந்த கலைஞர் அவர்களிடத்திலே சொன்னோம். அன்றைக்குப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த அருமைச் சகோதரர் மாண்புமிகு தங்கம் தென்னரசு போன்றவர்களிடத்திலே எடுத்துச் சொன்னபொழுதெல்லாம் கலைஞர்அவர்கள் அதை ஒரு பெரிய லட்சியத்திட்டமாக அதை ஆக்கிக் கொண்டு அற்புதமாக அதை வடிவமைக்க வேண்டும் என்பதிலே மிகுந்த கவலை எடுத்துக் கொண்டார்கள்.
அமைச்சர் சிங்கப்பூர் சென்று பார்த்து...
அதுமட்டுமல்ல. சிங்கப்பூரிலே இருக்கின்ற அதிகாரிகள், அங்கேயிருக்கின்ற நூலக அதிகாரிகள் இவர்களோடெல்லாம் தொடர்பு கொண்டு நீங்கள் சிங்கப்பூர் சென்று பார்த்து வாருங்கள் என்று கல்வி அமைச்சரை அனுப்பினார்கள். கல்வி அமைச்சர் சிங்கப்பூர் தேசிய நூலகத்தோடு தொடர்புகொண்டு போய் பார்த்து வந்து இதைப் பற்றிக் கலைஞர் அவர்களிடம் சொன்னார்கள். கலைஞர் அவர்கள் அதைவிட மிகச்சிறப்பாக இந்த நூலகத்தைக் கட்டியிருக்கின்றார்கள்.
நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியமென்ன?
சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் இந்த நூலகத்தைப் பார்த்து வியந்து சொன்னார்கள். அண்ணா நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவில் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். அப்படிப் பட்ட சிறப்பு வாய்ந்த நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?
இது வெறும் கட்டடத்தை மாற்றுவது அல்ல. இங்கே சுட்டிக்காட்டியதைப் போல இதன் பின்னணி, இதன் அடி நீரோட்டம் இருக்கிறதே அது அண்ணா பெயரை மதிக்க வேண்டும் என்று இருப்பவர்களானால் அண்ணாவினுடைய பெயரை சூட்டுவார்கள்.
அவ்வளவு பெரிய நூலகத்தை சிதைத்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று நினைத்து இது எங்கள் முடிவு என்று தமிழக முதலமைச்சர் அந்த அம்மையார் அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். அதுவும் அந்த அமைச்சரவையிலே யார் அதை விவாதிக்கப் போகின்றார்கள்?
நல்ல காரியத்திற்குப் பாராட்டு
முதல்நாள் காலையிலே அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நீதிமன்றத்திலே அடுத்த நாள் இது பற்றி வழக்கு வருகிறது. உடனே அரசு ஆணையாகப் போடப்பட்டு, கொண்டு வரப் பட்டிருக்கிறது என்ற அளவிலே அதை அரசு வழக்குரைஞர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் என்ன காரணத்தை அவர்கள் சொன்னார்கள்? சரியான காரணம் ஏதாவது உண்டா? எல்லோரும் கேட்டார்கள். ஏன் மாற்ற வேண்டும் என்று. பொதுவாக நாம் கேட்பதை விட மிக முக்கியமானது என்னவென்றால் இவர்கள் எல்லாம் என்னை எதிர்த்தவர்கள் என்ற சமாதா னத்தைக் கூட அவர்கள் சொல்லக்கூடும். யார் எதிர்த்தார்கள் என்பது முக்கியமல்ல. நல்ல காரியம் செய்யும் பொழுது நாம் பாராட்டுவதற்கு என்றைக்குமே பின் வாங்கியது கிடையாது. அந்த நிலையிலே இன்றைக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது-என்ன காரணத்தைச் சென்னார்கள்?
முடிவை முன்னாலே வைத்து பின்னாலே காரணம்!
முடிவை முன்னாலே வைத்து காரணத்தைப் பின்னாலே கண்டுபிடித்தார்கள். அதுதான் ரொம்ப விசித்திரமானது. முடிவு முன்னாலே. அந்த முடிவு என்ன? கலைஞர் அவர்களுடைய பெயர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருக்கிறது.
ஏற்கெனவே கலைஞர் அவர்கள் எதை எதை செய்தார்களோ. அதை எல்லாம் மாற்ற வேண்டும்- இது ஒன்று.
திராவிட உணர்வை அழிக்க...
அதைவிட ரொம்ப ஆழமானது. தமிழ் இன உணர்வு, திராவிட இன உணர்வு என்பதிருக்கிறதே அது அறவே இருக்கக் கூடாது. அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். பழைய நிலை போல வெளிப்படையாக போர் தொடுப்பது என்பது ஒரு முறை.
ஆனால் ஆரியம் பல முறைகளைக் கையாளும். அதிலே ஒரு முறை என்னவென்று சொன்னால் உடுருவல் முறை. அதற்கு வெவ்வேறு கால கட்டங்களை உருவாக்கிக்கொண்டு அதனுடைய அடிப்படையிலே வருவார்கள் என்பதை புரிந்த நேரத்திலே அண்ணா அவர்கள் ஆரிய மாயை பற்றி சொன்னபொழுது பேசுநா இரண்டுடையாய் போற்றி, போற்றி பேராசை பெருந்தகையே போற்றி, போற்றி என்று வரிசையாக எழுதினார்.
அண்ணா அவர்கள் தெளிவாகச் சொன்னார். நயவஞ்சகம் எப்படியிருக்கும்? மாற்று வழிகளிலே அதை சொல்வதைப் போல அவர்கள் சொன்னார்கள். அதே நேரத்திலே இன்றைக்கு வெளிப்படையாக கோடு போட்டது மாதிரி இருக்கிறது. தமிழர்களில் யாருக்கு நியாய உணர்வுகள் இருக்கிறதோ அவர்கள் அத்துணை பேரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு இடமாற்றம் செய்யக் கூடாது. அதில் நியாயங்கள் இல்லை என்று சொன்னார்கள்.
குழந்தைகள் மருத்துவமனை வருகிறதென்றால் ஏற்கெனவே இருக்கின்ற குழந்தைகள் மருத்துவ மனையை இன்னும் பிரபலப்படுத்தலாம். அகல மாக்கலாம். பெரிய அளவுக்கு கட்டலாம். புதிதாக மருத்துவமனை கட்டுவதற்கு சென்னையிலே ஏராளம் இடமிருக்கிறது என்பதை மற்றவர்கள் கேட்பதைவிட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டார். நாமாவது கொஞ்சம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். தலைமை நீதிபதி கொஞ்சம் ஆத்திரத்தோடு கேட்டுவிட்டார். இதில் கட்சிக் கண்ணோட்டம் இல்லை. இதிலே நியாயக் கண்ணோட்டம். அந்த நியாயக் கண்ணோட்டத் தோடு சொன்னார்.
நீதிபதி கேள்வி எல்லா ஏடுகளிலும்...
இவ்வளவு பரந்து விரிந்த சென்னையிலே வேறு இடமா கிடைக்கவில்லை? தமிழக அரசுக்கு இதை மாற்றிவிட்டுத்தானா கட்ட வேண்டும்? இவ்வளவு அழகான ஒரு இடத்தை விட்டுவிட்டா இன்னொரு இடத்தைத் தேடுவது? என்று கேள்வி கேட்டுவிட்டுச் சொன்னார். ஆத்திரத்தோடு அவர் கேட்ட கேள்வி எல்லா ஏடுகளிலும் வந்தது. ஏன் மெரினாவிலே போய் கட்டுங்களேன்!
ஏன் மெரினாவிலே கூட இடம் இருக்கிறது. அங்கே குழந்தைகள் நல மருத்துவமனையை கட்டலாமே என்று தலைமை நீதிபதி தமிழக அரசைப் பார்த்து கேட்டிருக்கின்றார். இதைவிட வேறு என்ன கேள்வி கேட்க வேண்டும்? புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? நீதிபதிகள் இந்தப் பிரச்சினையைப் புரிந்த காரணத்தினால்தான் நீதிமன்றம் உடனடியாக இடைக் காலத்தடை வழங்கியிருக்கிறது.
இதை இடைக்காலத்தடை என்பது மட்டும் நான் நினைக்கவில்லை. தடையால் மட்டுமே இதை கைவிடும்படியாக செய்யக் கூடாது. நம் படையா லும் அதை செய்து முடிக்க வேண்டும். தமிழின உணர்வு படையாலும் அது செய்து முடிக்கப்பட வேண்டும் என்பதிலேயிருக்கின்ற நியாயங்களை எடுத்துச்சொல்வதற்காகத்தான் இந்தக் கூட்டம். இது முடிவல்ல. இது தொடக்கம்.
அ.தி.மு.க. அரசாலே தூக்கி எறியப்பட்டது
தமிழ்ப்புத்தாண்டு அ.தி.மு.க. அரசாலே தூக்கி எறியப்பட்டது. ஏதோ மக்கள் எல்லாம் வரிசையாக வந்து தமிழ்ப்புத்தாண்டு கூடாது என்று சொன் னார்களா? தமிழ் ஆண்டுகள் பிரபவ, விபவ, சுக்கில, விரோதி, குரோதி என்று இருக்கிறது.
வெளிநாட்டுக்காரர் யாராவது வந்து உங்கள் தமிழ் வருடப் பிறப்பின் வரலாறு என்ன என்று கேட்டால் அதற்கு இவர்கள் என்ன சொல்லு வார்கள்? மிகக் கேவலமாக இருக்கும். நாரதரும், கிருஷ்ணரும் சேர்ந்து பெற்ற பிள்ளைதான் தமிழ் வருடப் பிறப்பு என்று சொன்னால் இதை யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? முடியாது. இது அறிவுக்குப் பொருந்துமா என்றால் ஏற்றுக்கொள்ள முடியாது.
1921 ஆம் ஆண்டில் தமிழ் அறிஞர்கள் எடுத்த முடிவு
1921-லே தமிழ்ப்புலவர்கள் எல்லாம் எது தமிழ் வருடப் பிறப்பு என்பதை ஒன்று கூடி சொல்லியி ருக்கின்றார்கள்- நம்மைப் போன்றவர்கள் பிறக்காத காலத்திலே.
-(தொடரும்)
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- பகவான் ரமணரிஷி தமது சொத்தை தம்பிக்கு எழுதி வைத்தார்
- பெண்கள் எல்லா உரிமைகளையும் பெற வேண்டும் என்கிற அக்கறை பெரியாரைத் தவிர உலகில் வேறு எவருக்காவது இருந்ததா? வேலூர் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் அறிவார்ந்த கேள்வி
- இந்தியாவின் தலைசிறந்த சமூக புரட்சியாளர் தந்தை பெரியார்!
- புதிய உலகை உருவாக்கும் கருவிகளாக ஒவ்வொருவரும் வர வேண்டும்
- மத்திய அரசு எஜமானனாக இருந்துகொண்டு மாநில அரசுகளை அன்றிலிருந்து இன்றுவரை அடிமையாக நடத்தி வருகிறது சென்னையில் தமிழர் தலைவர் ஆதாரத்துடன் விளக்கவுரை
No comments:
Post a Comment