சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகித அந்நிய முதலீடு இந்தியாவுக்குள் படையெடுக்கவிருக்கிறது - அதற்கு மத்திய அமைச்சரவை பச்சைக் கொடி காட்டியுள்ளது என்பது சில்லறை விடயமல்ல - மிகப் பெரிய விடயமாகும்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக உட்பட கடும் எதிர்ப்புக் கொடியைத் தூக்கி இருக்கின்றன. வியாபாரிகளும் போராட்டக் களத்தில் குதிக்க முடிவு எடுத்துள்ளனர்.
இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரின் தொகை 4 கோடி என்றும், இதோடு சம்பந்தப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் அத்தொகை 16 கோடி என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சில்லறை வணிகத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்குப் புழங்கும் தொகை சாதாரணமானதல்ல - இருபத்து இரண்டரை லட்சம் கோடி ரூபாய் என்று கணிக்கப் பட்டுள்ளது.
உலக நாடுகளின் தர வரிசையில் 76ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் - இவ்வளவு கோடி மக்களின் தலையில் கை வைக்கும் ஒரு காரியத்தை ஓர் அரசு செய்கிறது என்றால் - இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!
ஒரு பொருளாதார மேதை இந்தியாவின் பிரதமர், இன்னாரு பொருளாதார மேதை திட்டக் குழுவின் துணைத் தலைவர், அரசியலில் விதைபோட்டு கனி பறித்துக் கொட்டை எடுத்தவர் என்று கருதப்படும் ஒருவர் நிதி அமைச்சர்.
இவ்வளவு அதிமேதாவிகளும் சேர்ந்து இந்தியாவில் மூன்று நட்சத்திர நுகர்வுக் கலாச்சாரத்தைத் திணித்து ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வுக்குக் கொள்ளி வைக்கும் வேலையில் இறங்கிட எப்படி மனம் வந்ததோ தெரிவிக்கவில்லை! பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது என்பார்களே அது இதுதானோ?
அந்நிய சில்லறை வணிகம் என்ற ஒட்டகம் நுழைந்த நாடுகளின் நிலை என்ன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டாமா?
வெகு தூரம் போகக்கூட வேண்டாம். இந்தியா வுக்குள் தண்ணீர் வியாபாரம் செய்ய வந்தனவே அக்வாஃபைனா, (Aqua fina), கின்லீ (kinley) ஈவியான் (Evian) எஸ். கங்கா (Yes Ganga)அக்வாபியூர் (Aqua pure) சாபோல்ஸ் (Sobols) இவையெல்லாம், இந்தியா வுக்குள் புகுந்து, இந்திய மண்ணுக்குள் துளை போட்டு, தண்ணீர் எடுத்து, சுத்திகரிக்கப்பட்டதாகக் கூறி, அழகிய போத்தல்களில் பளபளப்பாக அடைத்து இந்திய மக்களின் தலையைத் தடவவில்லையா? ஒரு லிட்டர் பாலை விட ஒரு லிட்டர் தண்ணீரை அதிக விலைக்கு விற்கவில்லையா?
வீட்டில் காய்ச்சி வடிகட்டிப் பருகும் தண்ணீரைவிட இந்த வணிக நிறுவனங்கள் விற்கும் தண்ணீர் போத்தல்கள் தரமுள்ளவையல்ல! ஆனாலும் இத்தகைய போத்தல்களை வாங்கிக் குடிப்பதுதான் கவுரவம், நாகரிகம் என்ற போலி உணர்வுக்கு மக்களை அடிமைப்படுத்தி விட்டனரே!
மினரல்வாட்டர் என்று விளம்பரம் செய்தார்கள்; இதனை எதிர்த்து பொது நல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சாதாரண தண்ணீரை அவ்வாறு விளம்பரப்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டது உச்சநீதிமன்றம்.
உடனே என்ன செய்தார்கள்? ப்யூர்வாட்டர், பேக்டு டிரிங்கிங் வாட்டர் என்று போட ஆரம்பித் தனர். வியாபாரிகளுக்கா மக்களை ஏமாற்றத் தெரி யாது?
அதுவும் வெளிநாட்டில் இருந்து உள்ளே நுழைந்து உள்நாட்டு மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் பேர் வழிகள் மகா மகா தந்திரசாலிகள் ஆயிற்றே! சகல உத்திகளிலும் கைதேர்ந்தவர்களாயிற்றே!
இந்தியாவுக்குள் விற்பனையாகும் இந்த அயல் நாட்டு நிறுவனங்களில் தண்ணீர் போத்தல்களை விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம் (Centre For Science and Environment) ஆய்வு செய்து உச்சநீதிமன் றத்தில் வழக்கும் தொடுத்தது. 21 நிறுவனங்களின் சரக்குகளிலும் 32 வகையான நஞ்சுகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டனவே!
இந்த அந்நிய நிறுவனங்களின் பருப்பு வேகாத ஒரே மாநிலம் கேரளாதான் - விரட்டியடித்தனர் அம்மக்கள். இந்தக் குடிநீர் கேரளாவில் காலடி வைத்தால் எங்கள் உள்ளூர் இளநீர் வியாபாரம் படுத்து விடும் என்று கூறினார்களே அம்மக்கள்.
அதே நிலைதான் சில்லறை வணிகத்தில் அந் நியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தால் உள் நாட்டுச் சில்லறை வியாபாரிகள் அந்தத் திமிங்கலங்களோடு போட்டிப் போட முடியாமல், முக்காடு போட்டுக் கொள்ளும் நிலைதான் ஏற்படும்.
அந்தநிலை நாட்டில் பெரும் அளவுக்கு அமைதியின்மையையும், கலவரத்தையும் விளைவிக்கக் கூடும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!
No comments:
Post a Comment