காலப் பெட்டகத்தில் இடம் பெறும் பணி
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பெயருக்கேற்ப ஒரு அரும் பெரும் முடிவை நேற்று எடுத்துள்ளது.
மய்யத்தின் புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழிகாட்டுதலுடன், நேற்று சென்னை பெரியார் திடலில் மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.இராம சாமி அவர்களின் தலைமையில் கூடிய மய்யக் கூட்டம் இரண்டு மணி நேரம் ஆரோக்கியமான விவாதங்களு டன் நடைபெற்றது. இதுவரை இந்தியாவில் சமூக சீர்திருத்தம் என்றால் ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் என்னும் கூட்டுக்குள் அடைக்கப்பட்டுவிடும். தென்னாட் டில் தந்தை பெரியார் தலைமையில் எழுச்சியான இயக்கமாக நடத்தப்பட்ட தகவல்கள் எல்லாம் திட்டமிட்ட வகையில் இருட்டறையில் தள்ளப்பட்டுவிடும்.
அம்பேத்கரும் அவர்களுக்குக் கறிவேப்பிலைதான்! கவுதம புத்தரைப் பற்றிச் சொல்லும்போது கூட அவர் ஒரு பிணத்தைப் பார்த்தார்; ஒரு கிழவரைப் பார்த்தார்; ஒரு நேயாளியைப் பார்த்தார் - அவர் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது என்றுதான் எழுதி வைத்து உள்ளனரே தவிர, அவரின் அரிய சாதனை, வர்ணா சிரம எதிர்ப்பு, யாக எதிர்ப்பு, ஆத்மா எதிர்ப்புத் தொடர் பான உண் மைகள் வெளிவராவண்ணம் பார்த்துக் கொண்டனர்.
உண்மைக்கு மாறாக குப்தர்களின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று பரப்புரை செய்துள்ளனர். களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று எழுதி தங்கள் இருட்டு புத்தியை வெளிச்சமாகக் காட்டியுள்ளனர்.
சிப்பாய்க் கலகம் சுதந்திரப் போராட்டம் என்று தில்லு முல்லு செய்துள்ளனர். இது பற்றி தந்தை பெரியார் தெரிவித்த கருத்தின் தன்மை முக்கியமானது.
பிரிட்டிஷாருக்குக் காட்டிக் கொடுத்த பார்ப்பனர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் புத்தர் முதல் தந்தை பெரியார் வரை நாட்டில் நிகழ்ந்திருக்கக்கூடிய சமூகப் புரட்சிக்கான நடப்புகள், நிகழ்ச்சிகள், மகாத்மா ஜோதி பாபூலே, நாராயண குரு, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர், வள்ளலார், சித்தர்களின் பங்களிப்பு முதலியவற்றைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் உண்மை வரலாறு எழுதப்பட வேண்டிய அவசியம் குறித்து வரலாற்றுப் பேராசிரியர்கள் தத்தம் கருத்துக்களை ஆக்கப் பூர்வமாக எடுத்துரைத்தனர்.
பல்வேறு தலைப்புகளாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொருவரும் எழுதலாம் என்ற கருத்து உருவாக்கப் பட்டது. அடுத்த புதனன்று மீண்டும் கூடி அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டது. இந்தப் பணி சாதாரண ஒன்றல்ல; காலத்தால் முடிவு எடுக்கப்பட்டு, உண்மையின் வெளிச்சத்தை அங்கு இங்கு எனாதபடி பாய்ச்சும் பகுத்தறிவுப் பணி!
இருட்டடிப்புகளை இருந்த இடம் தெரியாமல் நெட்டித் தள்ளும் நிகரற்ற பெரும் பணி! திராவிடர் தம் உண்மை வரலாற்றைத் திக்கெட்டும் கொண்டு செல்லும் திருப்பம் தரும் கொள்கைப் பணி!
இருட்டடிப்புகளை இருந்த இடம் தெரியாமல் நெட்டித் தள்ளும் நிகரற்ற பெரும் பணி! திராவிடர் தம் உண்மை வரலாற்றைத் திக்கெட்டும் கொண்டு செல்லும் திருப்பம் தரும் கொள்கைப் பணி!
நமது வரலாறு ஒழுங்காக எழுதப்படவில்லை என்ற குறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட முழுமையாக ஆய்வு செய்து மேற்கொள்ளப்படும் ஓப்பரிய வரலாற்றுப்பணி!
பெரியார் அறக்கட்டளைகளின் கல்விப் பணி ஒரு பக்கம்; பதிவு செய்யப்பட்டுள்ள இந்த திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், மக்கள் பல்கலைக் கழகமான வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஓர் உறுப்பாக அமைந்து உலகப் பந்துக்குப் பாடம் நடத்தப் போகும் பேராசிரியப் பணி!
தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு ஆற்றப்பட்ட திருப்பம் தரும் பணிகள் பல உண்டு. அவற்றில் இது ஒரு விலை மதிக்கப்பட முடியாத நவரத்தினக்கல்!
கைகொடுக்க முன்வாருங்கள் - காலப் பெட்டகத்தில் இடம் பெற கையிணையுங்கள்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் செயல்பாடுகளுக்கு இப்பொழுதே அச்சாரமாகக் கரஒலி எழுப்புங்கள்!
- கலி.பூங்குன்றன்
No comments:
Post a Comment