எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழிப்பதுதான் பார்ப்பன தர்மம் சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு
சென்னை, செப். 5-பார்ப்பனர்களை எதிர்ப்ப வர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழிப்பது தான் பார்ப்பன தர்மம் என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
தந்தைபெரியாரின் கலை இலக்கியச் சிந்த னைகள் என்ற தலைப்பில் இரண்டாம் தொடர் சொற்பொழிவு 11.8.2011 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
பெரியார் அவர்களுக்கு தமிழே பிடிக்காதா?
தந்தை பெரியார்அவர்களுக்கு தமிழே பிடிக்காது. இசையே பிடிக்காது என்பது போன்ற ஒரு பரவலான எண்ணம் பலரால் பரப்பப் பட்டிருக்கின்ற நிலையிலே அவர்கள் எதையாவது வெறுத்தார்கள் என்று சொன்னால், அது மனித சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியதாக இருந்த காரணத்தால் வெறுத்தார்கள்.
பெரியார் எதை விரும்பினார்?
எதையாவது விரும்பினார்கள் என்றால் அது மனித சமுதாயத்தினுடைய வளர்ச்சிக்கும், முன் னேற்றத்திற்கும் பயன்பட வேண்டும் என்ற அளவுகோல் கொண்டு பார்த்தார்கள் என்பதை அவர்களுடைய எழுத்தின் மூலமாக பல்வேறு சம்பவங்களை எடுத்துச் சொல்லி நேற்று (முதல் சொற்பொழிவு) விளக்கியிருக்கிறோம்.
கலைத்துறையிலே நல்ல அளவுக்குத் தமிழர் களின் சிந்தனை அடிமைப்படுத்தப்படக் கூடாது. தமிழர்கள் அடிமையாவதற்குப் புலவர்களும் காரணம்
தமிழர்கள் அடிமைகளாகக் கூடாது. தமிழர்கள் அடிமைகளாவதற்கு நம்முடைய புலவர்கள் பெரும்பாலும் வடமொழிக் காவியங்களிலே யிருந்தும், அல்லது வடக்கே இருந்த கருத்துகளை இங்கே புகுத்தியதும், அல்லது இங்கிருந்துதான் சென்றது என்ற ஒரு அதிகமான மரியாதை என்று சொல்லி இப்படி ஒரு மூடநம்பிக்கையை உருவாக்கி காலம், காலமாக இவை எல்லாம் நிலைத்திருப் பதற்கு ஆணி அடித்துக் கொண்டிருப்பதால்தான் இன உணர்ச்சி இல்லை.
வ.ரா.எழுதிய கோதைத் தீவு
உங்களுக்கெல்லாம் ஒரு செய்தியை குறிப்பிட வேண்டும். அக்கிரகாரத்தின் அதிசய மனிதர் என்று அண்ணா அவர்களாலே வர்ணிக்கப்பட்ட வ.ராமசாமி அய்யங்கார் அவர்கள் கோதைத் தீவு என்ற ஒரு புதினத்தை அப்பொழுது எழுதினார்கள். கோதைத் தீவு என்ற அந்தப் புதினம் அற்புதமான ஒரு கற்பனைப்புதினமாகும். பெண்ணுரிமையை மய்யப்படுத்தி எழுதப்பட்ட ஒரு புதினம் அது.
துரோகம் மலிந்திருப்பதற்கு என்ன காரணம்?
அதிலே ஒரு பகுதியிலே மிக அழகாகச் சொல்லு வார்கள். நம்முடைய நாட்டிலே துரோகம் எல்லாத் துறைகளிலும் மலிந்திருப்பதற்கு என்ன காரணம்? ராமாயணத்தை இந்த நாட்டிலே முன்னிலைப் படுத்தியவர் யார்? பெரியாரல்ல. வ.ரா. அதிலே எழுதுகிறார்.
ராமாயணத்தை முன்னிலைப்படுத்தி அதிலே உள்ள விபீஷணர்கள் சொந்த அண்ணனையே காட்டிக்கொடுத்து பதவிக்குப் போன விபீஷ ணர்கள் இருக்கிறார்களே இந்த விபிஷணர்களை ஆழ்வார்களாக ஆக்கி அவர்களைப் பாராட்டி அவர்கள்தான் சிறந்த பாத்திரங்கள், அவர்கள்தான் சிறந்தவர்கள் என்பது போல காலம் காலமாக நிலைத்து சிரஞ்சீவிகளாக அவர்கள் எப்பொழுதும் இருப்பார்கள் என்பது போல ஒரு தொடர் பிரச்சார மும் அவர்களைத் தூக்கி நிறுத்தி ராவணனைக் கொச்சைப்படுத்தி விபீஷணனை பெருமைப் படுத்தியும் பேசிக்கொண்டிருக்கின்ற காரணத் தால்தான் இந்த நாட்டில் அன்று முதல் இன்று வரை துரோகம் எல்லாத்துறைகளிலும் வளர்ந் திருக்கிறது. அதுதான் அடிப்படையான கருத்து.
இந்த நாடு வீழக் காரணம்?
ஆகவே தமிழர்கள் ராமாயணத்தை என் றைக்குப் போற்ற ஆரம்பித்தார்களோ என்றைக்கு விபீஷணனை ஆழ்வார் சிரஞ்சீவி என்று சொல்லி பெருமைப்படுத்த ஆரம்பித்தார்களோ அன்றைக்கே இந்த நாடு வீழ்ந்தது என்று கோதைத் தீவில் வ.ரா.ரொம்ப அற்புதமாக எடுத்துச் சொன் னார்.
கம்பனை விட வால்மீகி பரவாயில்லை
கம்பனுக்கு விழா நடத்துவதன் மூலம் தங் களுக்குப் பெருமை என்று சில தமிழர்கள் நினைக்கிறார்கள். அதிலே போய் ஆராய்ச்சி செய் கிறார்கள். அது அப்படிப்பட்டது. இப்படிப்பட்ட சிறப்புடையது என்று சொல்லுகின்றார்கள்.
இன்னும் கேட்டால் தமிழர்களைப் பொறுத்த வரையிலே கம்பனை விட, வால்மீகி எவ்வளவோ பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது. கம்பன் செய்த கோளாறு என்று தந்தைபெரியார் அவர்களே சொன்னார்கள்.
ராமாயணத்தை தமிழிலே பாடி...
ராமாயணத்தை மிகவும் நம்முடைய மனதிலே பதியக்கூடிய அளவுக்கு ஆணி அடித்தார்கள். அதைத் தமிழிலே பாட்டாகப் பாடி இன்னும் அதிகமான செயலை செய்துவிட்டார்கள்.
பார்ப்பனரல்லாத மக்களுக்கு தன்மான உணர்ச்சி
இதை எல்லாம் சந்தித்த தந்தை பெரியார் அவர்கள் இவைகளைத் தோலுரித்துக்காட்டி, பார்ப்பனர் அல்லாத மக்களுக்குத் தன்மான உணர்ச்சி வேண்டும். அறிவுத் தெளிவு வேண்டும். மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்க வேண்டும் என்பதையே கலையாக இருந்தாலும், இலக்கியமாக இருந்தாலும் அது எதுவாக இருந்தாலும்.
சுயமரியாதை கொள்ளைபோகக்கூடாது. பணம் கொள்ளை போனால் கூட மீட்டுக்கொள்ளலாம். ஆனால் மனிதனுடைய சுயமரியாதை கொள்ளை போனால் அதைத் தடுப்பது நமது கடமையல்லவா என்று கேட்டார்.
இசைவாணர்களே! கலைவாணர்களே! உங்களு டைய சுயமரியாதை கொள்ளை போவதற்கு நீங்கள் துணை போகலாமா? என்று அய்யா அவர்கள் கேட்டார்கள்.
தந்தை பெரியாருடைய இயக்கத்தைப் பார்த் தால் அவருடைய போராட்டத்தைப் பார்த்தால், அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால், தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். தந்தை பெரியார் அவர்கள் வெறும் எதிர்மறையாக எதையும் சொல்லிவிட்டுப் போய்விடுவதில்லை.
கடவுளை மற! மனிதனை நினை!
ஆக்கச் சிந்தனைகளுக்கு இந்த இயக்கத்தில் வேலை உண்டா? இல்லையா? என்றால் உண்டு. கடவுளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் அதோடு நிறுத்தவில்லை. மனிதனை நினை என்று சொன்னார்கள். மனிதனை நினை என்பதுதான் முத்தாய்ப்பானது. கடவுளை மறந்தால் தானே அவன் மனிதனை நினைக்க முடியும். மனிதர் களையே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது கடவுள் சிந்தனை. எதுவும் என் கையில் இல்லை என்று சொல்லுகின்ற ஒருவனாலே அவன் என்றைக்கு முன்னேற முடியும்? என்றைக்கு வளர முடியும்? என்றைக்குப் பொறுப்பேற்க முடியும். பொறுப் பேற்காதவர்கள் எப்படி வளர முடியும்? சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
அய்யாவின் தளபதி அண்ணா
பண்பாட்டுப் படை எடுப்பைத் தடுத்தார். சுயமரியாதை இயக்க காலகட்டத்தில் இலக்கி யத்தில், எழுத்தில், பேச்சில் அய்யா அவர்களுக்கு அண்ணா அவர்கள் ஒரு தளபதியாகக் கிடைத்தார்.
அதே போல புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு பெரிய போர்வாளாகக் கிடைத்தார். இன்றைக்கும்புரட்சிக் கவிஞருக்கு உரிய மரியாதை கிடைக்காததற்குக் காரணம் அவர்கள் யாரிடத்திலும் தலைவணங் காமல் சுயமரியாதை கொள்கையைச் சொன்னார் கள். இலக்கியத்திலே தனியாக நின்றார்கள் என்ற காரணத்திற்காகத்தான் இல்லை என்றால் அவரை மிகப்பெரிய கவியாக ஆக்கிக்காட்டியிருப்பார்கள்.
பாரதிக்குக் கிடைத்த விளம்பரம் புரட்சிக் கவிக்கு இல்லையே!
பாரதியாருக்கு கிடைக்கின்ற விளம்பரம் இன்னமும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குக் கிடைக்கவில்லை. நம்மவர்களே புரட்சிக் கவிஞர் என்ற சொல்லாட்சியைச் சொல்லாமல் பாவேந்தர், பாவேந்தர் என்று சொல்லுகின்றார்கள்.
கம்பனை கவிச் சக்கரவர்த்தி என்றெல்லாம் ஆக்கிவிட்டார்கள். ஆனால் இவர்களுக்குரிய தனித்தன்மை புரட்சிக் கவிஞருக்கு உண்டா என்று சொன்னால் அது கனகசுப்புரத்தினம் என்ற ஒருவரைத் தான் குறிக்கும் அதுவும் புரட்சிக் கவிஞர் என்று சொன்னால் அவர் சுயமரியாதைக் கவிஞர்.
முதலில் அவர் சுப்பிரமணிய துதி அமுது பாடியவர்தான். ஆனால் அய்யா அவர்களுடைய கருத்தை ஏற்று அவர்கள் மிகப்பெரிய அளவுக்கு மாற்றங்களை அடைந்து வந்தவர்தான் புரட்சிக் கவிஞர்.
இரணியன் அல்லது இணையற்ற வீரன்
புரட்சிக் கவிஞர் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்களை, தந்தைபெரியார் அவர்களின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்டு இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகத்தின் மூலம் தந்தை பெரியாருடைய கொள்கையைப் பரப்பினார். ஏனென்றால் அந்த காலத்தில் என்ன செய்தார்கள்? விபீஷணர்களை எல்லாம் ஆழ்வார்களாக ஆக்கினார்களோ, அதே போல தன் சொந்த தந்தையையே காட்டிக்கொடுத்து அழித்த வன் பிரகலாதன். தந்தைக்கு எதிராக எதிரிகளுக்கு பிரகலாதன் ஆயுதமாகப் பயன்பட்டு காட்டிக் கொடுத்தவன் பிரகலாதன்.
தந்தையைக் காட்டிக்கொடுத்த மகன்
பிரகலாதன் என்றாலே ஒரு அருவருப்பான சொல்லாகப் பயன்படுகிறது. பிரகலாதன் சொந்த தந்தையையே காட்டிக்கொடுத்தவன். அங்கே சகோதரன் விபீஷண ஆழ்வாராக ஆனான். அதே போல இங்கே மகன் ஆனான்.
இரணியன் என்றால் அவன் அசுரன் அரக்கன் அவன் பெயரை சொல்லக்கூடாது என்று சொன் னார்கள். இரணியனாகிய தன் தந்தையை பிரகலாதன் நரம்சிம்ம அவதாரம் எடுத்து வயிற்றைக் கிழித்தான் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். அன்பே உருவான கடவுள் என்று வேறு விளக்கமாகச் சொல்லுகிறார்கள். (கைதட்டல்-சிரிப்பு).
அன்பே உருவானவனா?
அன்பே உருவானவன் என்றால் இன்னொரு வனைத் திருத்த வேண்டும். தண்டனையினுடைய தத்துவமே கூட யாரையும் கொலை செய்வது அல்ல. இப்பொழுது தண்டனையினுடைய தத்துவமே அவனைத் திருந்திய மனிதனாக ஆக்கி, சமுதாயத் திலே வாழவைக்க வேண்டும் என்பதுதான் சிறப் பான தத்துவம்.
சாதாரண மனிதனுக்கே இந்த நிலை என்றால் கடவுள் இன்னும் எவ்வளவு பெரிய நிலைக்கு இருக்க வேண்டும்? மன்னிக்கும் மனப்பான்மை மனிதனுக்கே இருக்கும் பொழுது மனிதனைவிட எல்லாவற்றையும் இயக்குகிறேன் என்று சொல்லு கின்ற கடவுள் நிலை எப்படி இருந்திருக்க வேண் டும்?
கடவுள் என்பது ஒரு பெரிய குழப்பம்
ஆனால் கடவுள் என்பது ஒரு குழப்பம் தெளி வில்லாத, முடிவில்லாத ஒரு கற்பனை. எங்களை எதிர்க்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழித்துவிடுவோம் என்பதுதான் அதன் தத்துவம். ஆகவே பார்ப்பனர்களைப் பொறுத்த வரையிலே அப்படி இருந்தார்கள் என்பதை வைத்துத்தான் ஜோதி பாஃபுலே இந்த அவதார கதையை சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
மூடநம்பிக்கைகளைப் பரப்பிய அவதாரங்கள்
அதுவும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு பெரியாருக்கும் அவருக்கும் நேரடியான தொடர்பு கிடையாது.
மாவலி அவதாரம் உள்பட ஒவ்வொரு அவதா ரமும் ஆரியர்கள் வேண்டுமென்றே சூத்திரர்களை-நம்மவர்களை ஒடுக்கப்பட்ட மக்களை-அவர்களை வீழ்த்துவதற்காகத்தான் என்று காட்டியிருக் கின்றார். நரசிம்ம அவதாரம் என்று எல்லா இடங்களி லும் நாடகம் போட்டு மக்கள் மத்தியிலே மூட நம்பிக்கைகளைப் பரப்பினார்கள். அந்த காலத்திலே நவாப் எஸ்.ராஜமாணிக்கம் என்று இருந்தார். எப்படி நடிகவேள் ராதா அவர்கள் தான்எதுவும் புராண நாடகங்களை நடத்தாமல் சுயமரியாதை கருத்துகளைக் கொண்ட சமூக நாடங்களையே நடத்துவது என்பதில் எப்படி அவர் உறுதியாக இருந்தாரோ அதே மாதிரி புராண நாடங்களையே நடத்தி பெரிய மனிதர் ஆனவர் நவாப் எஸ். ராஜமாணிக்கம் அவர்கள். மீனலோச்சின பாலகான விநோத சபை என்று மதுரையில் வைத்திருப்பார். நவாப் வேசம் போடுவார். அந்தக் காலத்தில் அவர் பிரபலமானவர். நவாப் ராஜமாணிக்கம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெருமை வாய்ந்தவர்.
பக்த பிரகலாதன் நாடகம்
அவருடைய கம்பெனியில் பக்த பிரகலாதன் நாடகம் பிரகலாதன் சிறிய பையன். உன்னுடைய கடவுள் விஷ்ணு எங்கேயிருப்பான்? நான் உதைக் கிறேன் சொல் என்று பிரகலாதனுடைய தந்தை கேட்பார்.
அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சொல்லுவார்கள். அப்படியா என்று கேட்டு இரணியன் தூணை எட்டி உதைப்பான். நரசிம்ம அவதாரம் எடுத்து டான்ஸ் ஆடி இரணியனை ஒன்றுமில்லாமல் ஆக்குவான். அதாவது பார்ப்பனர்களை எதிர்க்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை நாங்கள் எப்படியும் அழிப்போம் என்று காட்டுவதுதான் அந்தக் கதை.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இதை அப்படியே நாடகமாக ஆக்கினார். வேறு ஒன்றும் இல்லை. கடவுள் அவதாரம் எடுக்கவில்லை. சிங்கம் வரவில்லை.
இவன் அந்த மாதிரி ஒரு முகமூடியைப் போட்டுக்கொண்டு ஒரு வாளை வைத்துக்கொண்டு தூணுக்குப் பின்னால் ஒளிந்திருந்து இரணியனை குத்திவிட்டான் என்று இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகத்தில் புரட்சிக் கவிஞர் காட்டுவார்.
No comments:
Post a Comment