Tuesday, September 6, 2011

பி.ஜே.பி.யின் மனுதர்மப் புத்தி!


அன்னாஹசாரே - ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்ததால் ஏற்பட்ட பலன் பாரதீய ஜனதாவின் கணக்கில் சேர்ந்திருக்கிறது என்று ஊடகங்கள் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இந்தக் காரணத்துக்காகத்தான் இந்த ஹசாரே இந்த ஊழல் ஒழிப்புக் கொடியைத் தூக்கிப் பிடித்துள்ளார் என்று தொடக்க முதலே திராவிடர் கழகத் தலைவர் சொல்லி வருகிறார். சிறப்புக் கூட்டம் போட்டும் பேசினார்.

கோணிப்பைக்குள் இருக்கும் பூனை இப்பொழுது வெளியில் வந்துவிட்டதே!

பார்ப்பன - பனியா சக்திகள் பார்ப்பன ஊடகங்கள், அரசியலில் பா.ஜ.க. ஒன்று சேர்ந்து வியூகம் வகுத்துத் தான் இந்த வேலையைத் தந்திரமாகச் செய்தன.

அவர்கள் நினைக்கும் இந்தக் காரியம் வெற்றி பெறுவதற்குப் பெரும் ஒத்துழைப்புக் கொடுத்தது மத்தியில் உள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான். ஹசாரேயின் மிரட்டலை மத்திய அரசு கையாண்ட விதம் கேலிக்குரியதாகும்.

ஒரு தனி மனிதனாக ஊழலைப் பற்றிப் பேச வெளியே வந்தபோது அய்ந்து மத்திய கேபினட் அமைச்சர்கள் ஓடோடிச் சென்று கன்னத்தைத் தடவிக் கொடுத்தபோதே - ஓகோ, நம்மைக் கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது என்ற மனப்பால் குடிக்க ஆரம்பித்தார். இவர்களை நன்றாக விரட்டலாம் என்று கணக்குப் போட்டுவிட்டார்.

அதனைத் தொடர்ந்து நாட்டில் நடந்து வந்த நிகழ்ச்சிகளையும் பொது மக்கள் பார்த்து ரசித்த வண்ணமாகவே உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பயன்படுத்தும் பாரதமாதா உருவம் உண்ணாவிரதம் என்ற சண்டித்தனம் மேற்கொள்ளப்பட்ட மேடையின் பின் திரையாக அணி செய்ததே!

ஊழலில் இடஒதுக்கீடு எங்கிருந்து வந்தது? இடஒதுக்கீடுக்கு எதிரான குரல் ஏன் அங்கு ஒலித்தது? தாழ்த்தப்பட்டோர் வெளிப்படையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து விட்டனரே! சமூக நீதிக்கு எதிராகவும், மதச் சார்பற்ற தன்மைக்கு எதிராகவும் ஒரு கூட்டம் ஒன்று சேர்ந்து உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றியது என்பதுதானே உண்மை?

இந்த நாடகம் நடந்து முடிந்தபின் தயாராக ஏற்கெனவே எழுதி வைத்திருந்த சேதியை ஏடுகளில் வெளியிட ஆரம்பித்து விட்டனர். அதுதான் - இப்பொழுது தேர்தல் நடந்தால் பா.ஜ.க.வுக்குத்தான் அனுகூலம், கணிப்புகள் என்று கூறித் தம் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள்.

ஊழல் என்றால் பா.ஜ.க. ஆளும் கருநாடகத்தில் முற்றிப் போய் வெடித்துக் கிளம்பவில்லையா? நேற்று கூட பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளாரே! இதற்குப் பெயரென்னவாம்?
அவர் கைது செய்யப்பட்டதை பா.ஜ.க. எதிர்க்கிறதே - இதுதான் ஊழலை ஒழிக்கும் ஒய்யாரமா?

பாரதிய ஜனதா மீது எந்தக் குற்றச் சாற்று வைக்கப் பட்டாலும் அதற்கு உள்நோக்கம் கற்பித்துப் பார்ப்பதுதான் - அதற்கே உரித்தான பார்ப்பனீய அணுகுமுறை.

பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பேயிக்கும் பங்கு உண்டு என்று நீதிபதி லிபரான் ஆணையம் கூறினால், அது எப்படி வாஜ்பேயியின் பெயரைச் சேர்க்கலம் என்று கூறி நாடாளுமன்றத்தையே முடக்குகிறார்கள் என்றால் என்ன பொருள்? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தம் மனுதர்மக் கோட்பாட்டின் காலில் போட்டு மிதிக்கிறார்கள் என்றுதானே பொருள்?

மும்பைக் கலவரத்தில் சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே முதல் குற்றவாளி என்றால், அவர்மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் பொழுது கலவரத்தில் ஈடுபடு கிறார்கள் என்றால் இது என்ன போக்கிரித் தனம்?

குஜராத் மாநில முதல் அமைச்சர் மீது உச்சநீதி மன்றம் மொத்தினாலும், அது பற்றி எந்தவித விமர்சனத்தையும் எழுதுவதில்லையே - இந்த பார்ப்பன ஊடகங்கள்!

குஜராத்தில் லோக்பால் நீதிமன்றம் என்ற ஒன்று பெயரளவில் இருக்கிறது. அதற்குக் கடந்த 3 ஆண்டு காலமாக நீதிபதி நியமனம் செய்யப்படவில்லை. அதைப் பற்றி யாரும் குறை சொன்னதில்லை. ஆளுநர் தன்னிச்சையாக நீதிபதியை நியமனம் செய்தார் என்று கூறி நாடாளுமன்றத்தை செயல்பட முடியாத வகையில் முடக்குகிறார்கள்.

இது என்ன நியாயம் - என்ன ஜனநாயகம்? சங் பரிவார் நம்பும் ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் மனுதர்மத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள கட்சி என்பதை அதன் ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.

1 comment:

monica said...

கடைசியில் பூனை வெளியே வந்து விட்டது.இப்பொழுதாவது இளையதலைமுறை உண்மை என்ன என்பதை புரிந்துகொள்ளட்டும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...