Wednesday, September 7, 2011

திருப்பதியோ பக்தி சுற்றுலா - ஆதிச்சநல்லூர் திராவிடர்களுக்கு புத்திச் சுற்றுலா

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தில் தமிழர் தலைவர் விளக்கம்


சென்னை, செப். 7- பக்தர்கள் திருப் பதிக்குச் சுற்றுலா செல்லட்டும். நாம் தமிழர் களின் பண்டைய நாகரிகம் தோன்றிய இடமான ஆதிச்சநல்லூருக்குப் புத்திச் சுற்றுலாவாக செல்வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி கூறினார்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்பு பாராட்டுக் கூட்டம் நேற்று (6.9.2011) இரவு சென்னை பெரியார் திடலில் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தமது சிறப்புரையில் கூறியதாவது:
கல்வியியல் கருத்தரங்கு
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய நிகழ்ச்சி இங்கு ஒரு நல்ல கல்வியியல் கருத்தரங்குபோல நடைபெற்றது.
நல்லதொரு சிறப்பான உரையை ரொம்ப அற்புதமாக முனைவர் சி. மகேசு வரன் விளக்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண் டத்திற்கு அருகிலுள்ள ஊரான ஆதிச்ச நல்லூரில் கிடைத்த செப்பு வாள்களும், மொகஞ்சதாரோ - ஹரப்பா சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த செப்பு வாள்களும் ஒன்றை ஒன்று ஒத்துள்ளன. இதுதான் தமிழரின் தொன்மையான நாகரிகத்திற்கு அடையாளம் என்பதை முனைவர் சி. மகேசுவரன் சிறப்பாக விளக்கினார்.
நாம் ஆதாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
நமக்கு எந்த ஆதாரம் கிடைத்தாலும் எந்தத் தரவு கிடைத்தாலும் அதை வைத்து பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கவேண்டும்.
இதேபோன்ற சான்றுகள் வேறு நாடுகளில் கிடைத்திருந்தால், அதற்கு மிகப்பெரிய ஆதரவு, ஊக்கம், விளம்பரம் கிடைத்திருக்கும். ஆனால், அத்தகைய நிலை தமிழ்நாட்டில் இல்லை.
நம்மிடையே ஜாதீய ஓட்டம்
அதற்குக் காரணம் என்ன? நம்மிடையே ஜாதீய ஓட்டம் இருக்கிறது. மனிதன் பிறக்கும்பொழுதே ஜாதியில் பிறக்கிறான். மறையும் பொழுதும் சுடுகாடுவரை ஜாதியிலேயே மறைகிறான். மனிதன் செத்தாலும் ஜாதி சாவதில்லை.
எனவே, இங்கு எதுவும் அறிவைப் பொறுத்தது அல்ல. எல்லாம் ஜாதியைப் பொறுத்ததாகவே பார்க்கக் கூடிய சூழ்நிலைகள் இருக்கின்றன.
நமக்குள்ள பெரிய வருத்தமான செய்தி - ஆதிச்சநல்லூர் என்பதே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.
எத்தனை பேருக்கு இந்த எண்ணம் இருந்தது?
எத்தனை பேருக்கு அந்த ஆதிச்சநல்லூர் பகுதிக்குச் சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணம், விருப்பம் இருந்திருக்கிறது?
திருப்பதிக்குப் போகிறார்கள் - திருத்தணிக்குப் போகிறார்கள் - திருவண்ணாமலைக்குப் போ கிறார்கள் - ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் உள்ள தமிழர்களுக்குரிய அடையாள அகழ்வாராய்ச்சி சின்னமான ஆதிச்சநல்லூருக்கு செல்ல
வேண்டும் என்ற எண்ணம் - விருப்பம் நமக்கு வரவில்லையே.
ஏன் தமிழனுக்கு வரலாறு இல்லை?
ஏன் தமிழனுக்கு வரலாறு இல்லை? ஏன் தமிழனுக்கு இலக்கியம் இல்லை? எல்லாம் எதிரிகளால் அழிக்கப்பட்டன. இருட்டடிப்புச் செய்யப்பட்டன.
அய்யா சொல்லுவார்: தமிழனிடம் இருந்த கொஞ்சநஞ்சம் - மிச்சம் இருந்த அரிச்சுவடியையும் ஆடிப் பெருக்கில் நம்மவர்கள் ஆற்றில் விட்டுவிட்டார்கள் என்று சொல்லுவார்கள்.
பக்திச் சுற்றுலா - புத்திச் சுற்றுலா
எனவே, பக்திச் சுற்றுலா செல்பவர்கள் எப்படி செல்கிறார்களோ - அதுபோல, ஆதிச்சநல்லூருக்குப் புத்திச் சுற்றுலா செல்லவேண்டும். (சிரிப்பு - கைதட்டல்).
இராமாயணம் முந்தியதா? கந்த புராணம் முந்தியதா? என்பதற்கு அய்யா அவர்களே ஒருமுறை பதில் சொல்லியிருக்கின்றார். மனிதன் மிருகத்திடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கருவிகளை வடிவமைத்தான்.
மிருகம் அருகே வரும்பொழுது அதைக் குத்தி வீழ்த்த வேலைக் கண்டுபிடித்தான்.
வேல் பழையது - வில் புதியது
பிறகு மனிதனுக்கு அறிவு வளருகிறது. மிருகம் தூரத்தில் இருக்கும்பொழுதே - வீழ்த்தி தன்னை தற்காத்துக் கொள்ள கருவியைக் கண்டுபிடித்தான். அதுதான் வில்.
எனவே, மனிதன் முதன்முதலில் கண்டுபிடித்தது வேல். இரண்டாவதாகக் கண்டுபிடித்தது வில். வேல் என்பது கந்தபுராணத்தைக் கொண்டது. வில் என்பது இராமாயணக் கதையிலே உள்ளது. எனவே, கந்தபுராணம் முந்தியது; இராமாயணம் அதற்கு அடுத்து வந்தது என்று பெரியார் தனது பகுத்தறிவு கருத்தாலே சிந்தித்துச் சொன்னார். பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்து அவர் சொல்லவில்லை.
திராவிடர் நாகரிகமான காளை மாட்டுச் சின்னத்தை எடுத்துவிட்டு, ஆரியர்களின் சின்னமான குதிரையை வைக்க முயன்று - அந்த ஆட்சியை நாம் எதிர்த்துப் போராடி அகற்றினோம்.
மகேசுவரன் கூறியது சிறிய நூலாக வரவேண்டும்
முனைவர் சி. மகேசுவரன் மிகச் சிறப்பாக வரலாற்று ஆய்வுக் கருத்துகளைத் தொகுத்து வழங்கினார்.
முதலில் அது ஒரு சிறிய நூலாக வெளிவரவேண்டும். அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். நாம் பதில் சொல்வோம்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யமும் இணைந்து பற்பல ஆய்வுகளை மேற்கொள்ளும்.
திராவிடர் இயக்கச் செம்மல் க. திருநாவுக்கரசு
திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் அருமைச் சகோதரர் க. திருநாவுக்கரசு கைம்மாறு கருதாது தனது எழுத்துப் பணியை செய்து கொண்டிருப்பவர்.
ஏற்கெனவே நீதிக்கட்சிபற்றி இரண்டு நூல்களை எழுதியுள்ளார். மிகச் சிறப்பானவை அவைகள்.
நீதிக்கட்சி பாடமே பள்ளிப் பிள்ளைகளுக்கு வைக்கக்கூடாது என்ற பண்பாட்டுப் படையெடுப்பு சூழ்நிலை இன்றைக்கு உருவாகியுள்ளது. எனவே, மேலும் க. திருநாவுக்கரசு எட்டுத் தொகுதிகள் எழுதி அது வெளிவரவேண்டும்! திராவிட இயக்கச் செம்மல் க. திருநாவுக்கரசு அவர்களைப் பாராட்டுகிறேன்.
இஸ்லாமியர்களுக்குத்தான் முதலில் வகுப்புரிமை
1909- ஆம் ஆண்டிலேவகுப்புரிமையே முதலில் இஸ்லாமியர்கள்தான் பெற்றார்கள் என்று அய்யாவே வகுப்புரிமையைப் பற்றி விளக்கும் பொழுது ஏராளமான செய்திகளை விளக்கிச் சொல்லுகின்றார்.
- இவ்வாறு தமிழர் தலைவர் கி .வீரமணி தமது உரையில் குறிப்பிட்டார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...