மன்னர்கள், சாதாரண மனிதர்கள்தான் என்ற நிலையிலிருந்து பிற்காலச் சோழர்கள் காலத்தில் தெய்வங்களாக உயர்த்தப்பட்டனர். மன்னனே தெய்வம்: தெய்வத்தின் பிரதிபிம்பமே அரசன்; அவன் வழிவழி வருபவன்: அவனை அரசனாக்கியதே தெய்வம்தான்; என்று புராணம் எழுதி, ஊர்தோறும் வீதிதோறும் பரப்பின. பிற்காலச் சோழ, பாண்டிய அவைப் புலவர்கள். இதற்காகவே, தேவாரம், திருவாசகம் உருவாக்கினர். சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும் இப்பிரச்சாரம் செய்தனர். இதற்காக அரசர்கள் இந்தப் பிரச்சாரகர்களுக்கு பிரம்மதேயம் என்றும், நன்கொடை என்றும் பட்டயம் எழுதி வைத்து அதைக் கோயில் கற்களிலும் பதித்தனர்.
இதைக்கண்டு குமுறினார்கள் சித்தர்கள். தாவாரமில்லை தனக்கொரு வீடில்லை தேவாரம் ஏதுக்கடி? - குதம்பாய் என்று கேட்டனர். வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி? - குதம்பாய் என்று கிண்டல் செய்தனர்.
சுதுர்வேதம் ஆறுவகைச் சாத்திரங்கள் பல தந்திரம் புராணக் கலை சாற்றும் ஆகமம்
விதம் விதமான வான வேறு நூல்களும்
வீணான நூல்கள் என்று ஆடுபாம்பே! என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
நான்கு வேதம். ஆறு வகை சாத்திரம் - இவை வீணானவை என்கிறார் இந்தச் சித்தர். இந்த உலகம் என்பது உடையோர்க்கு - உடைமை வர்க்கத்தார்க்கு; மறு உலகம் என்பது உடைமை இல்லாதவர்களுக்கு என்று ஆறுதல் கூறிய சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் கொடுத்த பதிலடி இது.
- கே. முத்தையா எழுதிய தமிழ் இலக்கியம் கூறும் வர்க்க சமுதாயம் என்ற நூலிலிருந்து...
No comments:
Post a Comment