Tuesday, August 16, 2011

உண்ணாவிரதம் என்னும் பிளாக் மெயில்!



அன்னா ஹசாரி ஒரு நல்ல மனிதர்; தான் ஏமாற்றப் பட்டதாகக் அவர் கருதுவதற்கு காரணமும் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் முதன் முதலாக 44 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட மசோதா வுக்குப் பிறகு, பயன்தரும் லோக்பால் அமைப்பையோ அல்லது லஞ்ச ஊழலுக்கு எதிரான வேறு பயனுள்ள நடைமுறையையோ உருவாக்குவதில் நேர்ந்த எல்லை யற்ற, மன்னிக்க முடியாத காலதாமதம் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வெறுப்படைந்தது போல அவரும் வெறுப்படைந்திருந்தார்.
காவல்துறை சீர்திருத்தங்கள், அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்ற நடைமுறையில் மத்திய புலனாய்வுத் துறையைத் தவறாகப் பயன்படுத்த இயலாத அளவுக்கு தானாகச் சுதந்திரமாகச் செயல்படுவதற்கும், எவர் மீதும் குற்றச்சாற்று பிறப்பிக்கவுமான அதிகாரத்தை அதற்கு அளித்தல் போன்று அல்லாமல், லோக்பால் அமைப்பை உருவாக் குவதற்கான அரசியல் உறுதி எந்த அரசியல் வாதிக்கும் இல்லாததால் அது இதுகாறும் உருவாக் கப்படாமலேயே உள்ளது. ஆட்சியில் இருக்கும் போது இத்தகைய சீர்திருத்தங்களைச் செய்வதை எந்தக் கட்சியுமே விரும்புவதில்லை. ஆனால், அவர்களே ஆட்சியை விட்டு வெளியே வந்துவிட்டால், சிங்கம் போல் கர்ஜனை செய்வர்.
என்றாலும், மற்றவர்களுடன் டில்லியில் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி நடத்தியதன் மூலம் அன்னா ஹசாரி தனது நோக்கத்தின் மீதான பொது மக்களின் மதிப்பைக் குறைத்துக் கொண்டார். ஜனநாயக முறையிலான தேர்தலின் மூலம் நீக்கப்பட இயன்ற பொது ஜன ஆதரவு பெற்ற நம் நாட்டு அரசை, (அந்நிய ஆட்சியை எதிர்த்து அல்ல) எதிர்த்து நடத்தப்பட்ட இந்தப் பட்டினிப் போராட்டத்தில் காந்தியின் பெயரை இழுத்தது முற்றிலும் பொருத்த மற்றதாக இருந்தது. சாகும்வரை பட்டினிப் போராட்டம் என்பது நிர்பந்தத்தை ஏற்படுத்தும், ஜனநாயக விரோதமான செயலாகவும், நாடாளு மன்ற ஜனநாயக நடைமுறையை பலவீனப்படுத்து வதாகவும், இழிவு படுத்துவதாகவும், உணர்வு பூர்வமாக பிளாக்மெயில் செய்யும் செயலாகவுமே கருதப்பட இயலும். ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் புகழ் பெற்ற குற்றவாளியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பப்பு யாதவ் பிகார் சிறைச்சாலையில், ஹசாரியின் கோரிக்கையை ஆதரித்து சாகும் வரை பட்டினிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது பெரிய வேடிக்கையாகும். ஒரு புதிய மாநிலம் அமைப்பது, ஒரு அரசு ஊழியரைப் பணிநீக்கம் செய்வது, ஒரு திட்டத்தை செயல்படுத்தாமல் நிறுத்துவது என்பது போன்ற, பாராட்டப்படத்தக்க நோக்கமோ கொள் கையோ இல்லாத அனைத்து விதமான கோரிக் கைகளுக்காகவும், உரிய நடைமுறைகளைப் பின்பற்ற முயலாமல், சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத் தில் பல மக்களும் ஈடுபட்டுள்ளனர். உரிய நடை முறையில் நிவாரணம் பெறுவது என்பது சில நேரங்களில் மிகவும் சோதனை அளிப்பதாகவும் இருக்கும். ஆனால் விரைவில் புகழுடன் நிவாரணத் தையும் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் கைவிட்டு விடுவது, மிகவும் ஆபத்தானது மட்டுமன்றி, அராஜகத் துக்கும், ஆதரவு மற்றும் எதிர்ப்பு வன்முறைகளுக்கும் வழிவிடும். தெருக்களில் சமத்துவம் என்ற ராம் மனோகர் லோகியாவின் போராட்டத்தில் கும்பல்கள் நடத்திய வன்முறை நிகழ்வுகள் இந்த உண்மையை நினைவூட்டு கின்றன. ஜனநாயக முறைக்கு எதிரானது
ஹசாரியின் வெறுப்பு பரவலாக பலராலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஆனால் அவர் தனது கோரிக்கைகளை அளவுக்கு அதிகமாகவே வைத்துவிட்டார். தற்போதுள்ள லோக்பால் மசோதா அதிகப்படியான அளவுக்கு முன் எச்சரிக்கையைக் கொண்டதாக இருக்கிறது என்றாலும், அதற்கு மாற்றாகக் கூறப்படும் ஜன் லோக்பால் வரைவு மசோதா ஒன்றும் குறைகளே அற்றதாக இருப்பதல்ல. பட்டினிப் போராட்டம் தொடங்கப்படும் முன், லோக்பால் மசோதாவுக்கு உள்ள ஆட்சேபனைகளைப் பற்றி தெரிவிக்கலாம் என்று அரசால் கேட்கப்பட்டது. ஆக்கபூர்வமான விமர்சகர்கள் பயன் நிறைந்த முறையில் பங்கேற்றுச் செயல்பட்டிருக்க வேண்டிய இடமும், நேரமும் இதுதான். தான் விரும்பும் நடைமுறையே பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காக ஹசாரி பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு செய்துவிட்டார். அவர் விரும்பிய நடைமுறை என்ன தெரியுமா? சம எண்ணிக்கையிலான அரசு அலுவலர்களையும், தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக உறுப்பினர் களையும் கொண்ட ஒரு வரைவுக் குழு உருவாக்கப் படவேண்டும். அதற்கு சம அதிகாரம் கொண்ட இரு தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரையை அரசு (நாடாளுமன்றம் என்று மறைமுகமாகக் குறிப்பிடுவது) கட்டாயமாக ஏற்கவேண்டும். அரசு அல்லது அரசாட்சி என்பதைப் பற்றி சிறிதளவு கூட புரிதலற்ற, மரியாதை காட்டப் படாத, எவருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிராத, தங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொண்ட தனிப்பட்டவர்கள் அறிவிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்ற இந்தக் கோரிக்கை ஏற்க இயலாத, செயல்படுத்த முடியாத ஒன்றாகும். ஹசாரியின் போராட்டத்துக்கு தனது வழவழவென்ற ஆதரவை தனக்கே உரித்தான குறுக்கு புத்தியுடன் அளிக்க பா.ஜ.க. விரைந்து முன்வந்தது. கர்நாடக மாநிலத்தில் சுரங்கங்கள் மற்றும் நிலக் கொள்ளைக் கும்பலின் செயல்பாடுகளை விரைந்து நெருக்கமாக விசாரணை செய்த மரியாதைக், குரிய லோகாயுக்தா அமைப்பை செயலிழக்கச் செய்து, தந்திரம் செய்து, தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய அதே பா.ஜ.கட்சிதான் இப்போது ஹசாரிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது.
ஒரு நானூறு பேருடன் நான்கு நாட்கள் பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டதற்குப் பின், முன்பே அளிக்கப்பட்ட, ஆனால் தற்போதுதான் அரசு கெஜட்டில் அறிவிக்கப்பட்ட சமரசத் திட்டத்தை புத்திசாலித்தனமாக ஹசாரி ஏற்றுக் கொண்டார். 10 உறுப்பினர் கொண்ட ஒரு கூட்டு வரைவுக் குழுவை நியமிப்பது என்றும், அதில் அய்ந்து பேர்களை ஹசாரி நியமிப்பது என்றும், பிரணாப் முகர்ஜியை தலைவராகவும், நாகரிக சமூகத்தின் பிரதிநிதியாக சாந்தி பூஷனை இணைத் தலைவராகவும் நியமிப்பது என்றும் அரசு அளித்த திட்டத்தை ஹசாரி ஏற்றுக் கொண்டார். இக் குழுவினரிடையே கருத் தொற்றுமை ஏற்பட்டால், ஜூன் மாத இறுதியில் குழு தனது அறிக்கையை அளிக்கும்; மழைகால நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அதனை சட்டமாக்கும் நடைமுறை மேற்கொள்ளப்படும். நாடாளுமன்றம் இந்தப் பரிந்துரைகளைப் பரிசீலிப்பதையோ, திருத்தங்களை செய்வதையோ இது தடை செய்யாது. நாகரிக சமூகம் உதவிதான் செய்ய முடியுமே தவிர, அரசையும், நாடாளுமன்றத்தையும் மீறி அதனால் அதிகாரம் செய்ய முடியாது. கருத்தொற்றுமை ஏற்படாவிட்டால், தனது போராட்டத்தை மீண்டும் தொடரப்போவதாக ஹசாரி அச்சுறுத்தியுள்ளார்.
பட்டினிப் போராட்டம் சரியான வன்முறையா?
ஆட்களைக் கடத்திச் சென்று பணயப் பணம் கேட்பதை நாம் வெறுக்கிறோம். ஆனால், சாகும் வரை பட்டினிப் போராட்டம் என்பதும் வேறு வழியில் செய்யப்படும் அதே கடத்தல் போன்ற வேலைதான் என்பதை நம்மில் எவரும் நின்று சிந்தித்துப் பார்ப்ப தில்லை. சரியான முடிவுகளை அடையவேண்டும் என்றால் சரியான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இந்த மசோதாவைத் தயாரித்து சட்டமாக்கும் நடைமுறை தற்போது ஹசாரியால் உருவாக்கப்பட்டுள்ள பொது மக்களின் கருத்து என்னும் அழுத்தத்தையும் ஏற்றுக் கொண்டு தொடங்கும் என்று நம்புவோம். இதன் விளைவு ஆக்கபூர்வமானதாகவும், ஜனநாயக முறைப்படி யானதாகவும் இருக்கும்; இருக்க வேண்டும். தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ளும், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நடைமுறையைச் சீரழிக்கும் சுயநலவாதிகளின் காரணமாக இந்த முயற்சி கைமீறிப் போய்விட அனுமதிக்கக்கூடாது. வேகமான சில அறிக்கைகள் வெளியிடப்பட்டிருப்பதாலும், பல்வேறுபட்ட கடவுள் மனிதர்களும் மற்றவர்களும் தலைமையையும் புகழையும் பெற தங்களின் பலத்தைக் காட்டிக் கொண்டிருப்பதாலும், இந்த எச்சரிக்கை தேவையானதே. தவறான வழிகளில் பணம் ஈட்டும் அரசியல்வாதிகளை விமர்சிப்பது சட்டப்படி சரியானதே. ஆனால் அனைத்து அரசியல்வாதிகளையும் இழிவுபடுத்துவது நியாயமல்ல. அரசியல்வாதிகள் இல்லாமல் அரசியல் என்பதோ, அரசியல் நடைமுறை என்பதோ கிடையாது. சர்வாதிகாரம் மட்டும்தான் இருக்கும். அரசியல் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களை நாம் ஏற்படுத்துவது அவசியமானதாகும். அதே போல் காவல்துறை மற்றும் நீதித்துறை நடைமுறைகளையும் சீர்திருத்தி, பொதுவாழ்க்கையில் தூய்மையை உறுதிப்படுத் தும் வகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய நிருவாக இயந்திரத்தை உருவாக்குவதும் அவசியமானதே. இந்த விஷயத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் நிரம்ப இருக்கின்றன. தனது செயல்பாடுகளின் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை அரசு அறிந்திருப்ப தாகவே நம்புகிறோம்.
தாழ்த்தப்பட்ட அதிகாரிக்குச் செய்யப்பட்ட அவமானம்!
தேசத்தின் கவனம் முழுவதும் ஜந்திர் மந்திர் மீது குவிந்திருந்த போது, கேரள மாநிலத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு தாழ்த்தப்பட்ட அதிகாரியின் அலுவலகம், மேசை, நாற்காலி போன்ற தட்டுமுட்டுச் சாமான்கள், அவர் பயன்படுத்திய வாகனம் ஆகிய அனைத்தும் மாட்டு சாணம் கலந்த நீர் தெளிக்கப்பட்டு பாரம்பரிய முறையில் புனிதமாக ஆக்கப்பட்டுள்ளன. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய இழிவுகள் சட்ட விரோதமானவை; அரசமைப்புச் சட்ட விரோதமானவை. இதனைப் பற்றியும், இதனைப் போன்ற மிகப் பல தவறுகளைப் பற்றியும் நமது நாகரிக சமூகம் என்ன செய்ய உத்தேசித்துள்ளது? லஞ்சம் போன்ற மனிதத் தன்மைக்கு எதிரான ஜாதி ஒடுக்குமுறை வேரோடு அழிக்கப்பட வேண்டியதாகும். நாகரிக சமூகத்தின் உதவியுடன் அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய இன்னும் பல நூறு விஷயங்கள் உள்ளன.
இவ்வாறு கூறுவது லஞ்ச ஊழலில் இருந்து கவனத் தைத் திசை திருப்பும் முயற்சியல்ல. ஆனால், சமூகத்தில் சம நிலையையும், சமநிலைக் கண்ணோட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுவதே யாகும். இந்தியா நாள்தோறும் மாறிக் கொண்டிருக் கிறது. நம் முன் உள்ள தடைகளை, இடையூறுகளை வென்று, தாண்டி நாம் முன்னேறுவோம்.
கிரிக்கெட் என்பது போரா?
கிரிக்கெட் போட்டிகள் பற்றி இந்தியா முழுவதிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் கடந்த வாரம் நிலவிய போது இத்தகைய ஒரு சமநிலைத் தன்மை இல்லாமல் இருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த மனப்போக்கு நீண்ட தொரு காலமாகவே உணரப்பட்டு வந்துள்ளது என்றாலும், முதலில் மொகாலியில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற அரை இறுதிப் போட்டியின் போதும், பின்னர் மும்பையில் நடந்த இலங்கையுடனான இறுதிப் போட்டியின் போதும், இது குறிப்பிடத்தக்க ஓர் உச்ச நிலையை எட்டியது. கட்டுப்பாடு அற்ற ஆர்வம் என்பது வேறு. ஆனால் போர், போர்க்களம் என்பது போன்ற பேச்சு, செய்தித் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கிரிக்கெட்டைத் தவிர மற்ற அனைத்து செய்தி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத் துவம் அளிக்காமல் பல வார காலம் விலக்கி வைக்கப் பட்டிருந்தது முட்டாள் தனமானது. அந்த நிகழ்ச்சியின் போது போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் கிலானியை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விடுத்த அழைப்பின் பின்னணியில் இருந்த நல்லெண்ணமும் தவறாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. அது ஒன்றும் ஒரு உச்சி மாநாடு என்பதாகக் கருதப்பட வில்லை. என்றாலும் அத்தகையதொரு அடையாளம் அதில் இல்லாமல் போகவில்லை. பெருத்த ஆதரவு காட்டப்படாத நிலையில், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மற்ற விளையாட்டுகளுக்கு நம் நாட்டில் காட்டப்படும் அலட்சியம், பாரபட்சம், புறக்கணிப்பு ஆகியவற்றை அடிக் கோடிட்டுக் காட்டுவதாக நமது கிரிக்கெட் வீரர்களுக்கு அளிக் கப்படும் பணம் அமைந்திருக்கிறது. விளையாட்டுப் போட்டிகளும், உடலைப் பேணும் கலாச்சாரமும், ஒரு நாட்டின் நாடி நரம்புகளைப் போன்றவை. நமது இளைஞர்கள், தங்களின் விளையாட்டு, உடற்பயிற்சித் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் இன்றி வாடுவது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகும். விளையாட்டுத் துறை அமைச்சகம் இந்த விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருக்கிறது என்றே கூற வேண்டும். உண்மையைக் கூறுவதானால், அனைத்து விளையாட்டு சங்கங்களையும் விளையாட்டுக்குத் தொடர்பற்ற அரசியல் வாதிகள் கைப்பற்றி, தங்களது அதிகார நிலையைப் பயன்படுத்தி புரவலர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டு, தங்கள் பைகளை நிரப்பிக் கொள்கின்றனர்.
பாரத ரத்னா பட்டமா?
தனது விளையாட்டுத் திறமைக்காவும், அடக்க உணர்வுக்காகவும், விரும்பத்தகுந்த பண்பாட்டுக்காவும் சச்சின் டெண்டுல்கர் மக்களின் அன்பைப் பெற்றுள் ளார். ஆனால் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல்வதிகளும் கோருவதில் ஒரு இழிவின் சாயல் தெரிகிறது. அதுவும் நடக்கலாம். விளையாட்டு என்பது மற்ற எந்தத் துறையையும் விடக் குறைந்து போனது இல்லை. ஆனால் இது போன்ற ஆதரவுக் குரல்கள் தவிர்க்கப் படுவதுதான் நல்லது. அப்போதுதான் நாட்டின் மிகப் பெரிய விருதுகள் பற்றிய மதிப்பு புகழுக்கான போட்டிகளாலும், நவீன அழகுப் போட்டிகளாலும் குறைந்து போகாமல் இருக்கும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...