Friday, August 19, 2011

தமிழர் தலைவர் விடுத்துள்ள சமூகநீதிக்கான அறிக்கை




தமிழர் தலைவர் விடுத்துள்ள சமூகநீதிக்கான அறிக்கை

மத்திய பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான கட் ஆஃப் மார்க் குறித்த உச்சநீதிமன்ற நீதிபதி களின் தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களால் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு முதன் முதலாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது (7.8.1990) - மண்டல் பரிந்துரையை ஏற்று.

அதற்காகவே அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. கல்வியிலும், மத்திய கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம்.

3 ஆண்டுகளில் நிறைவேற்றம்

கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது மிகுந்த முயற்சிகளுக்கிடையே, கல்வியில் 27 சதவிகித இடஒதுக்கீடுக்குச் சட்டம் இயற்றப்பட்டது. 27 சதவிகித இடங்களையும் உடனடியாக அளிக்க மனம் இல்லாமல், ஆண்டு ஒன்றுக்கு 9 சதவிகிதம் என்ற ரீதியில் மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று சாக்குப் போக்கு காட்டினர். இப்பொழுது ஆறு ஆண்டு களில் அளிக்கப்படும் என்று கூறி ஏமாற்றப்படுகிறோம் நாம்! என்னே கொடுமை!!

எந்த விதத்திலாவது பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அதிகாரத்தில் உள்ள பார்ப்பனர்கள்- உயர் ஜாதியினர் மிகவும் விழிப்பாக இருந்து வருகின்றனர்.

கடைசி நேர சூழ்ச்சி

எந்தவித சந்தடியும் இல்லாமல் கடந்த 2009இல் நாடாளுமன்றத்தில் இறுதிக் கூட்டத்தில் மாநிலங்கள வையில் எந்தவித விவாதங்களுக்கும் இடம் அளிக்காமல், 47 கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வியில் இடஒதுக்கீடு கிடையாது என்று கூறி, ஒரு சட்டத்தையும் அவசர அவசரமாக நிறைவேற்றிக் கொண்டார்கள் என்றால் - இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும் - அதனை எதிர்த்து திராவிடர் கழகம் தான் அந்த நேரத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியது (24.2.2009).

மத்தியப் பல்கலைக் கழகங்களின் அளவுகோல்கள்!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை நிர்ணயம் செய்வதில் டில்லி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகிய இரு பல்கலைக்கழகங்களில் - பிற்படுத்தப் பட்டோருக்கு பாதகமான அளவுகோலைப் பின்பற்றினார்கள்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான தகுதி மதிப்பெண் பற்றியது அது. திறந்த போட்டியில் மாணவர் பெறும் கடைசி மதிப்பெண்களிலிருந்து 10 சதவிகிதம் குறைவான மதிப்பெண்தான் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான விண்ணப்பிப்பதற்கான மதிப்பெண் என்றும் அவர்களாகவே ஒரு அளவுகோலை ஏற்படுத்திக் கொண் டனர். இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப் பங்களே போட முடியாத அளவுக்கு, கதவு சாத்தப்பட்டு விட்டது!

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு

இது தொடர்பான வழக்கில்தான் நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.வி. இரவீந்திரன், ஏ.கே. பட்னாய்க் ஆகியோரின் அமர்வு சமூக நீதியின் அடிப்படைக்குக் குந்தகம் ஏற்படாத ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான நுழைவுத் தகுதி மதிப்பெண் பற்றித் தெளிவாக வரை யறுத்து தீர்ப்புக் கூறிவிட்டனர்.

உயர் ஜாதியினர் விண்ணப்பிக்க தகுதி மதிப்பெண் 50 என்றால், அதில் 10 சதவிகிதம் குறைக்கப்பட்டு, அதாவது 45 மதிப்பெண்கள், பெற்றிருந்தாலே பிற்படுத்தப்பட்டவர் கள் விண்ணப்பிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட் டுள்ளது.

ஆயிரக்கணக்கான இடங்கள் காலி!

இடைக் காலத்தில் மத்திய பல்கலைக் கழகங்கள் அநீதியாக, சட்ட விரோதமாக பின்பற்றிய அளவுகோல் களால் ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட மாணவர் களுக்கான இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகின. அவற்றை முன்னேறிய ஜாதியினர் கபளீகரம் செய்து கொண்டு விட்டனர்.

இந்த ஆண்டு அந்த நிலைக்குப் பிற்படுத்தப்பட்டோர் ஆளாகாமல், பல்கலைக் கழகங்களில் விண்ணப்பிப்ப தற்கான காலக் கெடுவையும் இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த வழக்கை பொறுத்தவரையில் உயர்ஜாதிக்காரர்கள் மேற்கொண்ட சூழ்ச்சிகள் சாதாரணமானவையல்ல.

நீதிபதிகளை மாற்ற மேற்கொண்ட முயற்சி

இந்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று எதிர் தரப்பு வழக்கறிஞர் முறைகேடாக முறை யிட்டார். தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா அவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் அந்த இரு நீதிபதிகளே விசாரிக்க வேண்டும் என்று உறுதியாக ஆணை பிறப்பித்து விட்டார். தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கபாடியா அவர்களும், இந்த இரு நீதியரசர்களும் கோடானு கோடி பிற்படுத்தப்பட் டவர்களின் நன்றிக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள் ஆவார்கள்!

எது தரம்?

நீதிபதி வி.ஆர். இரவீந்திரன் நீதிமன்றத்தில் கூறிய கருத்துகளும் எழுப்பிய வினாக்களும் மிகவும் அர்த்த முள்ளவை.

தரம் பேணப்பட வேண்டும் என்று எதிர் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வலியுறுத்தியபோது பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் மற்ற மாணவர்கள் அளவுக்கு இணையான தரத்தை எட்டும் வகையில் இந்த இடைக்காலத்தில் மக்கள் தொகையில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து தான் இந்தச் சுமையைச் சுமக்க வேண்டும். குறைந்த மதிப்பெண் பெற்ற ஒரு பிற்படுத்தப்பட்ட மாணவனை நீங்கள் சேர்த் துக் கொண்டு, அவனுக்குக் கல்வி கற்பித்து, அவனுக்கு ஒரு வாய்ப்பு அளித்து, அவனை முன்னேற்றுங்கள் என்று நீதிபதிகள் கூறினார்கள்.

ஓர் அம்பேத்கர் கிடைத்திருப்பாரா?

அம்பேத்கர் அவர்கள்கூட வெறும் 37 மதிப்பெண் களைத் தான் பெற்று இருந்தார். மதிப்பெண்களை வைத்து, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு இருந்தால் இந்தியா வுக்கு ஓர் அரசமைப்புச் சட்டம் கிடைத்திருக்குமா என்ற அற்புதமான வினாவையும் நீதிமன்றத்தில் எழுப்பினார் நீதியரசர் வீ.ஆர். இரவீந்திரன்!

“...Pointing out that the procedure adopted by the university has resulted in OBC seats reverting to the GC, the Bench said : “If the total number of seats for the OBCs is 42, all the seats should be filled up with OBC students in the order of merit from the merit list of OBC candidates possessing the minimum eligibility marks prescribed for admission (subject to any requirement for entrance examination.) When an eligible OBC candidate is available, converting an OBC reservation seat to the GC is not permissible.”

பல்கலைக் கழகம் கடைப்பிடித்த நடைமுறையின் விளைவாக, பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் பொதுப் பிரிவுக்கு மாற்றப் பட்டதைச் சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்ற அமர்வு, ஒரு பாடப்பிரிவில் உள்ள மொத்த இடங்கள் 154 என்றும் அவற்றில் பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் 42 என்றும் வைத்துக் கொண்டால், இந்த 42 இடங்கள் அனைத்தும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களைக் கொண்டு, (சேர்க்கைக்குக் குறிப்பிடப் பட்டுள்ள குறைந்த அளவு மதிப்பெண்களை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்; நுழைவுத் தேர்வு ஏதேனும் இருந்தால் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற வழக்கமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு) அவர்களின் தர வரிசைப்பட்டியலில் இருந்து நிரப்பப்படவேண்டும். சேர்க்கைக்குத் தகுதி பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் இருக்கும்போது, பிற்படுத்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட இடம் பொதுப் பிரிவுக்கு மாற்றுவது அனுமதிக்கப்படமாட்டாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பதைபற்றி அந்நாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுப்பாராவ் அவர்கள் அளித்துள்ள தீர்ப்பு வருமாறு:

In Devadasan Vs Union of India, AIR 1964 SC 179, it was held that the principle of equality in Article 14 is equality among equals.

Chief Justice Subba Rao observed (AIR 1964 SC 189) that if equality of opportunity as enunicated in Articles 14 and 16 stood by itself “all the Backward Communities would go to the wall in a society of uneven basic social structure . . . Its strict enforcement brings about the very situation it seeks to avoid.” In order to clarify the situation he gives, the illustration of two horses running a race when one is a first class race horse and the other is an ordinary horse. Theoretically they are given equal opportunity but “in practice, the ordinary horse is not given equal opportunity to compete with a race horse.” Some handicap has to be given.

“Centuries of calculated oppression and habitual submission reduced a considerable section of our community to a life of serfdom. It would be well-nigh impossible to raise the standards if the doctrine of equal opportunity was strictly enforced in their case. They would not have any chance, if they were made to enter the open field of competition without adventitious aids till such time when they could stand on their own legs. That is what the makers of the Constitution introduced in clause 4 in Article 16.”

அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவில் சம வாய்ப்பு என்னும் கொள்கை, சமமான திறன் படைத்தவர் களிடையே அளிக்கப்படும் சமவாய்ப்பையே குறிப்பிடு கிறது என்று உச்சநீதிமன்றம் தேவதாசனுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயான வழக்கில் ((AIR 1964 SC 179) தீர்ப்பு அளித்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16 ஆவது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள சமவாய்ப்பு என்பதற்கு, அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று பொருள் கொண்டால், சமமற்ற அடிப்படை சமூகக் கட்டமைப்பு கொண்ட ஒரு சமூகத்தில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் எந்த விதப் பயனும் கிடைக்காது. சமபோட்டியைஅவ்வாறே கடுமையாக நடைமுறைப் படுத்தினால், எந்த சூழ் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக இந்த பிரிவு சேர்க்கப்பட்டதோ, அந்த சூழ்நிலையையே நிலைப்படுத்தி விடும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சுப்பா ராவ் AIR 1964 SC 189 வழக்கின் தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

இத்தகைய சூழ்நிலையைப் பற்றி விளக்கம் அளிக்க இரண்டு குதிரைகள் ஒரு பந்தயத்தில் ஓடுவது பற்றிய ஓர் எடுத்துக்காட்டை அளிக்கிறார். இரண்டு குதிரைகளில் ஒன்று தரமான பயிற்சி பெற்ற பந்தயக் குதிரையாகும். மற்றொன்று எந்த விதப் பயிற்சியும் அற்ற சாதாரண குதிரையாகும். அதனால் அந்த இரண்டு குதிரைகளுக்கும் சமவாய்ப்பு அளிக்கப் படுவதாகப் பேச்சளவில் கூறலாம். ஆனால் உண்மையில் ஒரு பந்தயக் குதிரையுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓடுவதற்கு அந்த சாதாரணக் குதிரைக்கு வாய்ப்பு அளிக்கப் படவில்லை என்றுதான் கூறவேண்டும்.

அதனால் பந்தயக் குதிரைக்கு நிர்ணயிக்கப்படும் புறப்படும் இடத்திற்கு முன்னால், சில அடி தூரம் வைத்து அதை சாதாரணக் குதிரைக்கா புறப்படம் இடமாக வைக்கப்படவேண்டும். பல நூறாண்டுகாலமாக திட்டமிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டு, இழிவான கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட நமது சமூகத்தின் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் அடிமை வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சமவாய்ப்பு என்னும் கொள்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்தினால், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை எப்போதும் உயர்த்தவே முடியாது. அவர்கள் முன்னேற்றம் அடைந்து தங்களின் சொந்தக் கால்களில் நிற்கும் ஒரு காலம் வரை அவர்களுக்கு கூடுதலான தனிச் சலுகைகள் (Handicap) அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல், பொதுப் போட்டி என்னும் களத்தில், காலம் காலமாகப் படித்து முன்னேறியுள்ள மக்களுடன் அவர்களும் சமமாகப் போட்டியிட வேண்டும் என்றால், முன்னேற்றம் பெறுவதற் கான வாய்ப்பு அவர்களுக்கு எப்போதும் கிடைக்கவே கிடைக்காது. அதனால்தான் நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் பிரிவு 16 இன் கீழ் விதி 4 இனை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

சமூகநீதியின் உரத்த குரல்!

இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, உச்சநீதிமன்றத் தின் வரலாற்றில் என்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் சமூகநீதி யின் உரத்த குரல் - உரத்த கருத்து இது!

இந்த கட் ஆஃப் மார்க் பிரச்சினையைப் போலவே, மற்றொரு அநீதி மத்திய தேர்வாணையத்தால் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். போன்ற தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று திறந்த போட்டியில் இடம் பெற வேண்டியவர்களை, அவர்களின் இடஒதுக்கீடு பிரிவுக்குள் கொண்டு வந்து, திறந்த போட்டியில் உள்ள 50 சதவிகித இடங்களும் உயர் ஜாதிக்காரர்களுக்கே உரியது என்று நடைமுறையில் ஆக்கப்பட்டு விட்டது. இந்தக் கொடுமை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கும் ஒரு முடிவை ஏற்படுத்திட வேண்டும். இடஒதுக் கீட்டில் அடுத்த கட்ட உரிமைகளைப் பெற விடாமல் ஏற்கெனவே உரிமையுள்ள வாய்ப்புகளிலும் குளறுபடிகள் செய்து, நம்மை வேறு ஓர் இடத்தில் நிறுத்தி விடுகிறார்கள். இதற்குப் பெயர்தான் பார்ப்பன சூழ்ச்சி என்பது.

ஒன்றிணைந்து போராடுவோம்!

அதற்கான எந்த விலையையும் கொடுக்க தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து போராடுவோம்!

வெற்றி பெறுவோம்; விடாத விழிப்புணர்வு எப்போதும் தேவை!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...