சென்னை, ஆக. 16- ஒரு மனிதனுக்கு கடைசி வரை வருவது பணம், பதவி அல்ல. கடைசி வரை வருவது சந்தோசம் மட்டுமே என்று சென்னை விஜிபி சந்தோசம் 75ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டு விளக்கவுரையாற்றினார்.
வி.ஜி.பி. நிறுவனங்களின் தலைவரான வி.ஜி.பி.சந் தோஷத்தின் 75ஆவது பிறந்தநாள் பவளவிழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்டில் நேற்று (15.8.2011) மாலை நடைபெற்றது. இந்த விழாவுக்கு தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் தலைமை தாங்கினார்.
விழாவுக்கு வந்தவர்களை வி.ஜி.பி. நிறுவனங்கள் குழுமத்தின் துணை தலைவர் டாக்டர் வி.ஜி.செல்வ ராஜ் வரவேற்றார். விழாவில், சிறப்பு விருந்தினர் களாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, முன் னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர், பேராயர்கள் எஸ்றா சற்குணம், எம்.பிரகாஷ், பத்திரிகையாளர் லேனா தமிழ்வாணன், செயின்ட் ஜான்ஸ் சர்வதேச பள்ளியின் மூத்த முதல்வர் ஆர்.கிஷோர்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
தமிழர் தலைவர் கி.வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தமது பாராட்டு உரையில் கூறியதாவது: வாழ்க்கையில் கடைசி வரை வருவது, பணம், பதவி கிடையாது. சந்தோஷம் மட்டும்தான். அப்படி வளர்ந்து வி.ஜி. சந்தோஷம் இன்று வெளிச்சம் காட்டி கொண்டி ருக்கிறார். இவ்வளவு உயர்ந்தாலும், அவரது உருவ அமைப்பு, அன்பு, உபசரிப்பு, ஊக்கம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. உடற்கூறு வயதில் அவர் இன்னும் இளைஞராகவே உள்ளார். பெரியார் உறுப்புக்கு வயது 95 இருக்கும்போது, உணர்வால் 25 வயதாகவே தெரிந்தார். அந்த வயதை வி.ஜி.சந் தோஷம் பெற்றுள்ளார். தமிழகம், தமிழ் சமுதாயத் திற்காக அவர் பல்லாண்டு வாழ வேண்டும்.
தமிழன் ஒருவன் பத்திரிகை தொடங்க முடியுமா? என்ற காலத்தில், சி.பா.ஆதித்தனார் தினத்தந்தியை தொடங்கினார். அன்று செடியாக இருந்ததை இன்று தனது உழைப்பால், பா.சிவந்திஆதித்தன் ஆல மரமாக மாற்றியிருக்கிறார். வி.ஜி.பி. சந்தோசம் செய்தது சமூக புரட்சியாகும். வணிகம், தமிழ் தொண்டு, சமூக புரட்சி, நம்பிக்கையுள்ளவர்களுக்கு நல்ல செய்தி என பல்கலை கொள்கலனான சந்தோ சம் சந்தோசத் தோடும், அனைவரையும் சந்தோச படுத்தியும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி பேசினார்.
பா.சிவந்தி ஆதித்தனர்
விழாவுக்கு தலைமைதாங்கி, தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் பேசியதாவது:
லட்சியத்தில் உறுதியும், கடும் உழைப்பும், சோதனைகளைக் கண்டு அஞ்சாமல் எதிர் நீச்சல் போடும் துணிவும் இருந்தால், வாழ்க்கையில் உயரலாம் வெற்றிச் சிகரத்தை அடையலாம் என்பதற்கு, வி.ஜி.பி. சகோதரர்கள் எடுத்துக்காட் டாக திகழ்கின்றனர். சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்னால், ஏழை எளிய மக்களின் இல்லங்களில் ரேடியோ, தையல் மிஷின், மிக்சி போன்ற பொருட் களைக் காண முடியாது. அப்போது, தவணை முறைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, சாதாரண மக்களும் இப்பொருட்களை வாங்க வி.ஜி.பி. சகோதரர்கள் உதவினார்கள். ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல், ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்கும் நரிக்குறவர்கள் மீது கூட நம்பிக்கை வைத்து, தவணை முறையில் பொருட்களைக் கொடுத் தார்கள். எளிய மக்களை வி.ஜி.பி. நிறுவனம் உயரச் செய்தது; வி.ஜி.பி. நிறுவனத்தை எளிய மக்கள் வளரச் செய்தனர். ஏழை, நடுத்தர மக்களும் சொந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், வீடுகளையும், வீட்டு மனைகளையும் குறைந்த விலைக்கு அதுவும் தவணை முறையில் விற்பனை செய்தார்கள். அன்று சில ஆயிரங்கள் கொடுத்து வீடு வாங்கியவர்கள், இன்று பல லட்சம் மதிப்புள்ள வீடுகளுக்கு சொந்தக்காரர்களாக விளங்குகிறார்கள். வெற்றிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருந்த வேளையில், வி.ஜி.பி. நிறுவனத்தின் தலைவர் சகோதரர்களில் மூத்தவர் வி.ஜி.பன்னீர்தாஸ் சற்றும் எதிர்பாராதவிதமாக திடீரென காலமானார்.
சோதனை மிக்க அத்தருணத்தில், நிறுவனத்தைக் கட்டிக் காத்த பெருமை செவாலியர் வி.ஜி.சந் தோஷத்தையே சாரும். வி.ஜி.சந்தோஷம் தொழில் அதிபர் மட்டுமல்ல. சிறந்த எழுத்தாளர்; கவிஞர். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்கத்தை நிறுவி, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். இன்று அகில இந்திய ரீதியில் புகழ்பெற்று விளங்கும் நிறுவனங்களில் ஒன்றாக வி.ஜி.பி. நிறுவனம் திகழ்கிறது. அதற்கு செவாலியர் சந்தோஷத்தின் கடும் உழைப்பு, வகுத்த வியூகங்கள் ஆகியவையே முக்கிய காரணங்கள் என்று கூறலாம். 75 வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள அவர் பல்லாண்டுகள் வாழ்ந்து, மேலும் பல சாதனைகள் புரிந்து, சமுதாயத்துக்கு அரும்பணி ஆற்றிட வேண் டும் என்று இந்த நல்ல நாளிலே வாழ்த்துகிறேன். இவ்வாறு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் தமது உரையில்: மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைக்கும் சிறந்த மனிதர், வி.ஜி.சந்தோஷம். சோதனை வந்தபோதெல்லாம் துவண்டுவிடாமல் உழைப்பு, உழைப்பு என்று இருந்து இன்று உலகம் போற்ற உயர்ந்துள்ளார். என்றார். கிஷோர்குமார் தமது உரையில்: சிறிய அளவில் இருந்து, உழைப்பால் உயர்ந்துள்ள வி.ஜி.சந்தோஷம் வெறும் வார்த்தை அளவில் அல்ல, வரலாறாக திகழ்கிறார். தொழில் மூலம் தமிழகத்தின் சாதாரண மக்களின் இதயத்தையும் அவர் வென்றுள்ளார். மர்பி டிரான்சிஸ்டர் வாங்கும் வாடிக்கையாளராக போன நாங்கள், தற்போது அவரது குடும்ப நண்பர்களாக உள்ளோம். இதுதான் அவரது வெற்றி.
தொழிலில் நெம்புகோலாகவும், குடும்பத்தை ஒருங்கிணைத்து காப்பாற்றுவதில் நங்கூரமாகவும், சமுதாயத்தை இழுப்பதில் காந்தமாகவும் விளங்கு பவர் வி.ஜி.சந்தோஷம். உலகில் எந்தப் பகுதிக்கு போனாலும் ஏதாவது ஒரு இடத்தில் வி.ஜி.பி.யின் தொழில் குறியீடு இருக்கும் என கூறினார்.
வி.ஜி.சந்தோஷம் ஏற்புரை
வி.ஜி.பி.சந்தோஷம் தமது ஏற்புரையில் குறிப் பிட்டதாவது: ஊரில் இருந்து சென்னைக்கு வருவதற்கு செலவாகும் பேருந்து கட்டணம் ரூ.4.50 கூட அப்போது எங்களிடம் இல்லை. வீட்டை ரூ.800 க்கு விற்று, கடன் தொகை ரூ.500அய் செலுத்திவிட்டு இங்கு வி.ஜி.பன்னீர்தாசுடன் வந்தோம். தினத்தந்தி பேப்பரை வீடுவீடாக போட்டேன். சுலப தவணை யில் பொருட்கள் வாங்குவது பற்றிய போஸ்டர் களை இரவு நேரத்தில் ஆங்காங்கு ஒட்டிவிட்டு வருவேன்.
இன்று எனக்கே நீண்ட தூரத்துக்கு சாலை ஓரங்களில் எனது பிள்ளைகள் வைத்திருக்கும் போஸ்டரை வியந்து பார்த்தேன். புழுதியில் கிடந்த எங்களை இந்த அளவுக்கு உயர்த்தியது உழைப்பு தான்.
ஆண் பிள்ளைகள் அனைவரும் ஒரே குடும் பத்தில்தான் வசிக்க வேண்டும் என்ற தாயின் கட்ட ளையை ஏற்று இன்னும் நாங்கள் கடைபிடித்து வருவது, நாங்கள் பெற்ற வெற்றிக்கு மற்றொரு காரணம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் பேராயர்கள் மா.பிரகாஷ், எஸ்றா சற்குணம், லேனா தமிழ்வாணன், ஆஸ்தி ரேலியா தொழிலதிபர் மைக் ஹர்ட்டர் ஆகியோரும் பேசினார்கள். விழா மலரை தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் வெளியிட பேராயர் கள் மா.பிரகாஷ், எஸ்றா சற்குணம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பவள விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். நினைவு காதுகேளாதோர் இல்லம் உட்பட 6 தொண்டு நிறுவனங்களுக்கு தலா ரூ.25 ஆயிரத்தை வி.ஜி. சந்தோஷம் வழங்கினார். விழா மேடையில் வி.ஜி. சந்தோஷம் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து கேக் வெட்டி பவள விழாவை கொண்டாடினார். வி.ஜி.பி. நிறுவனங்கள் குழும நிர்வாக இயக்குனர் வி.ஜி.பி. ரவிதாஸ் நன்றி கூறினார்.
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளர் தாமோதரன், சினிமா டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், குமரிமுத்து, இசையமைப் பாளர் சங்கர்கணேஷ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மயிலை சி.பெரியசாமி, தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன், புனித தெரசா தேவாலயத்தின் பங்குகுரு லாரன்ஸ் ராஜ், போரூர் புனித ஜோசப் தேவாலயத்தின் பங்குகுரு ஜெ.அந் தோணிராஜ் தாம்பரம் தி.ரெ.இரத்தினசாமி, நீலாங் கரை வீரபத்திரன், தாம்பரம் முத்தையன், இர.சிவ சாமி, தென்சென்னை வில்வநாதன், வடசென்னை திருவள்ளுவன் உள்பட திராவிடர் கழகத் தோழர் களும் மற்றும் பங்குகுரு பிரான்சிஸ் சேவியர் உள்பட ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.
வரவேற்பு
முன்னதாக நீலாங்கரையில் மண்டல தலைவர் தாம்பரம் மு.இரா.இரத்னசாமி தலைமையில் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், கோவை மண்டல தி.க. தலைவர் வசந்தம் கு.இராமச்சந்திரன், இரா. வில்நாதன், தாம்பரம் முத்தையன், தாம்பரம் இர.சிவசாமி ஆகியோர் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தாம்பரம் ப.முத்தையன் மாலைக்கு பதில் ரூ.100 நன்கொடை வழங்கினார்.
No comments:
Post a Comment