Thursday, August 11, 2011

கம்பன் விழாவாம்!

சென்னையில் கம்பனுக்கு விழா எடுக்கிறார்களாம் எடுப்பவர்கள் வரிசையில் எவரும் பார்ப்பனர் அல்லர்; நாடறிந்த தமிழர்கள்தாம்.

எந்தப் பார்ப்பானாவது திருவள்ளுவருக்கு விழா எடுக்கிறானா? இந்தப் பாழாய்ப் போன தமிழனுக்கு மட்டும் ஏன் இந்த விபீடணத்தனம்?

திராவிட இயக்கத்தில் பிறந்தேன், வளர்ந்தேன் என்று பெருமை பேசும் திரு ஆர்.எம். வீரப்பன் போன்றவர்கள் தலைமை தாங்குவது திராவிட இயக்கத்தைப்பற்றித் தவறாக விமர்சனம் செய்பவர்களுக்குத் தான் இடம் கொடுக்கும்.

இவர்கள் எல்லாம் எதற்காக பெரியார், அண்ணா பெயர்களை உச்சரிக்கிறார்கள்?

வால்மீகிகூட யோக்கியன்; ஆனால் கம்பன் அப்படிப்பட்டவன் அல்லன் என்றார் தந்தை பெரியார்.

வால்மீகி சூர்ப்பனகை எனும் தமிழ்ப் பெண்ணின் மூக்கையும், காதையும் மாத்திரம் இலட்சுமணன் அறுத்ததாக எழுதியிருக்கிறான். ஆனால் கம்பனோ மூக்கு, காது, முலை ஆகிய மூன்று உறுப்புகளையும் இலட்சுமணன் அறுத்தான் என்று எழுதியிருக்கிறான் (விடுதலை 15.4.1970) என்று சினம் கொண்டவர் சிந்தனைச் சிற்பியான தந்தை பெரியார்.

கம்பன் காதை எப்படி இருந்தாலும் அவனின் காவிய நயத்துக்காகவாவது கசிந்துருக வேண்டாமா என்று கேட்டவர்கள் உண்டு. தந்தை பெரியார் அவர்களின் அருமருந்தன்ன நண்பர் தமிழ்த் தென்றல் திரு.வி.க.கூட கேட்டதுண்டு.

இராமாயணத்தில் புரட்டுகளை நீர் உண்மையாக உணர்ந்து, அதனை வெளிப்படுத்த வேண்டியிருந் தாலும், அக்காவியத்தின் கவிச்சுவையைக் கண்டாவது அதனைவிட்டு விடுதல் நன்மையா யிருக்கும் என்றார். அதற்குத் தந்தை பெரியார் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா?

நீவீர் எழுதிய கருத்தினை உணர்ந்தேன். உம்முடைய வீட்டில் இயற்கையில் நடக்காத இழி செயலை உணர்த்தும்படி மிகச் சாமர்த்தியமுள்ள ஓவியக்காரன் ஒருவனால் எழுதப்பட்டிருக்கும் படமொன்றினை சித்திரக்காரனின் வேலை திறத் திற்காவது மகிழ்ந்து அதனை மாட்டி வைத்திருக்க விரும்புவீர்களா? என்ற வினாவை விடுத்தபின் வாய்மூடிக் கொண்டாரே வண்டமிழ்த் தேனை குடித்துக் களித்த திரு.வி.க.!

அறிஞர் அண்ணா என்ன சொன்னார்?

ஆரியக் கலை வேறு; திராவிடக் கலை வேறு; ஆரியக் கலை நம்பவொணா கருத்துகளும், ஆபாசமும் நிரம்பியதுடன், திராவிட இனத்தை அடக்கவும், பண்பை அழிக்கவும் பயன்பட்டுப் பாமரரின் மனத்தைப் பாழாக்குகிறது என்ற குற்றச்சாற்றுகளைக்கூறி கம்பராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் கண்டிக்கிறோம்; கொளுத் துகிறோம் என்று சென்னையிலும், சேலத்திலும் தன்னை எதிர்த்து விவாதம் புரிந்த டாக்டர் இரா.பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோரை நோக்கிக் கருத்துக் கணைகளை சுனையாக, சுவையாக முன் வைத்தாரே அறிஞர் அண்ணா - இன்றுவரை பதில் உண்டா?

பெரியாரும் அண்ணாவும் சொல்வதைக்கூட ஏற்க வேண்டாம். தமிழ்க்கடல் மறைமலைஅடிகளார் என்ன திராவிட இயக்கச் சிந்தனையாளரா?

தமிழ்ப் புலவர் சிலர் ஆரியர் கொணர்ந்த பொய் வழக்கினைப் பருகி அறிவு மயங்கி, அப்பொய்யினை மெய்யாகப் பிறழ் கொண்டு பாரதம், இராமாயணம் முதலிய பொய் நூல்கள் ஆக்கினர். கம்பரது இராமாயணம் வடமொழி வால்மீகி இராமாயணத்தைப் பார்க்க பொய்மை நிறைந்ததாய் பழைய தமிழாசிரியர் கைக்கொண்ட இயற்கை வழக்கொடு மாறுபட்டதாய் உள்ளது (முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் - பக்கம் 148-149).

இராமனது கணை பெரிய மாமரங்களையும் துளைத்துச் சென்று, பின்புறமுள்ள மலையைத் துளைத்துப் போய் அதனாறுந்தன் விசையடங்காமல் மரத்தினையும் நிலத்தினையும் துளைத்தேகியது இது இயற்கை நிகழ்ச்சியிற் காணப்படாத கருதுதற்குங் கூடாத பெரும் பொய்யாய் யிருக்கின்றதல்லவா? (மேற்கண்ட நூல் பக்கம் 156).

இதற்கு மேலும் கம்பன் விழாவை நடத்த சில தமிழர்கள் முனைப்பாக நிற்கின்றனர் என்றால் இந்த இழிவை என்னென்று சொல்வது!

அண்ணனைக் காட்டிக் கொடுத்தவனுக்குத் தானே ஆழ்வார் பட்டம் - இராமாயணத்தில்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...