அரசு நூலகங்களில் விடுதலைக்குத் தடை கழகத் தோழர்களே, இன உணர்வாளர்களே உங்கள் கடமை என்ன?
இன்று காலை (22-5-2011) தாம்பரத்தில் தமிழர் தலைவர் அவர்களால் நடத்தி வைக்கப்பட்ட, ரேவதி (M.E.) - காஜா பஷீர் அகமது (B.E.) ஆகியோரது வாழ்க்கை ஒப்பந்தத்தின்போது ஏராளமான கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தலைவருக்கு சால்வையும், துண்டுகளையும் அணிவித்தனர்.
அதுபற்றி அப்போது கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்ட முக்கிய கருத்து:
ஏற்கெனவே நான் பலமுறை கமிட்டிகளிலும், விழாக்களிலும் கூறியுள்ளேன்.
சால்வைகளுக்குப் பதில் நமது ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, ஆகியவற்றிற்கு சந்தாக்களாக வழங்குங்கள் - கொள்கை பரப்ப துணை புரிந்ததாக ஆகும் அது என்று கூறியுள்ளேன்.
கடந்த 16 ஆம் தேதியிட்டு (அன்றுதான் அ.தி.மு.க. முதல்வர் பதவியேற்றார்) அரசு நூலகங்களுக்கு அனுப்பப் பட்ட, பொது மக்கள் படித்து வந்த விடுதலையை உடனடியாக நிறுத்திவிடக் கூறி அந்தந்த மாவட்ட நூலக ஆணைக்குழு அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர். முந்தைய ஆணைப்படி 31-3-2012 வரை வழங்கப்பட வேண்டியவைகள் இடையில் உடனே நிறுத்தும்படி தாக்கீது வருகிறது. இது முதல்வர் ஆணையா? அல்லது இராஜாவை மிஞ்சும் இராஜ விசுவாச அதிகாரிகளின் வேலையா? என்பது தெரியவில்லை!
அய்யா பெரியார் துவக்கிய பவளவிழா தாண்டிய சமூகப் புரட்சி நாளிதழ் விடுதலை; அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்த நாளேடு விடுதலை; உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இது.
அய்யா பெரியார் துவக்கிய பவளவிழா தாண்டிய சமூகப் புரட்சி நாளிதழ் விடுதலை; அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்த நாளேடு விடுதலை; உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு இது.
இதனை உடனே அரசு நூலகங்களில் நிறுத்த வேண்டும் என்றால் விடுதலையை மக்கள் படிக்கக் கூடாது என்பதுதானே நோக்கம்?
இதற்கு அமைதி வழியில் ஒரு சந்தா இயக்கம் வெகு வேகமாக இனி நாடு தழுவிய அளவில் நடைபெறட்டும்!
பல்லாயிரக்கணக்கில் சந்தாக்கள் நாள்தோறும் விடுதலைக்குக் குவிந்து கொண்டே இருக்க வேண்டும். தமிழர் தலைவருக்கு சால்வை, துண்டுக்குப் பதில் இனி, சந்தாக்களை மட்டும்தான் வழங்க முன்வரவேண்டும்.
விடுதலை சந்தித்த அடக்குமுறைப் பாணங்கள் ஏராளம். சுமார் 80 ஆண்டு வரலாற்றில் எத்தனை எத்தனையோ உண்டு!
கழகத் தோழர்களே, தமிழ் இன உணர்வாளர்களே, சால்வைகளையோ, துண்டுகளையோ அணிவிக்காதீர்! சந்தாக்களையே தாருங்கள். விடுதலை சந்தாக்கள் குவியட்டும்.
குறிப்பு: இது பற்றிய தமிழர் தலைவர் எழுதும் விரிவான அறிக்கை நாளை வெளிவருகிறது
No comments:
Post a Comment