நாகை, ஜூன் 8-நாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் மாதம் 13அன்று திராவிடர் மாணவர் கழக மாநாடு நடைபெறும் என்று திருச்சியில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. திருச்சி-பெரியார் மாளிகையில் 7.6.2011 அன்று மாலை 5மணிக்கு திராவிடர் மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் தஞ்சை மாவட்ட மாணவரணி தலைவர் அஜிதன் கடவுள் மறுப்புக் கூறினார். தலைவரை முன்மொழிந்து மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் பேசினார். அனைவரையும் வரவேற்று திருச்சி மாவட்ட மாணவரணி தலைவர் பொறியாளர் பாலகிருஷ்ணன் பேசினார்.
தொடக்கத்தில் திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் துரை.சந்திர சேகரன், உரத்தநாடு இரா.குணசேகரன், டாக்டர் பிறைநுதல் செல்வி ஆகியோர் உரையாற்றினர். அடுத்து சேலம் மண்டல மாணவரணி செயலாளர் வா.தமிழ் பிரபாகரன், திருவாரூர் மண்டல மாணவரணி செயலாளர் சுரேஷ், கடலூர் மண்டல மாணவரணி செயலாளர் பெரியார்செல்வம், தஞ்சை மண்டல மாணவரணி செயலாளர் இரா.மோகன்தாஸ், திருச்சி மண்டல மாணவரணி செயலாளர் சண்முகம் ஆகியோர் உரையாற்றினர். மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக் குமார் உரைக்குப்பின் தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் உரையாற்றினார். நிறைவாக கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மாநில மாணவரணி துணைச் செயலாளர் த.சீ.இளந்திரையன் முன்மொழிய, அனைவரும் வழிமொழிந்தனர். நிகழ்வினை ஒருங்கிணைத்து மாநில மாணவரணி செயலாளர் ரெ.ரஞ்சித்குமார் உரையாற்றினார். இதில் திருச்சி மாவட்ட தலைவர் மு.சேகர், மாவட்ட செயலாளர் செந்தமிழ் இனியன், வடசென்னை மாவட்ட மாணவரணி செயலாளர் பா.மணியம்மை, தாம்பரம் மாவட்ட மாணவரணி செயலாளர் தே.சுரேஷ், தஞ்சை மாவட்ட மாணவரணி செயலாளர் சவுந்தரராஜன், பட்டுக்கோட்டை மாணவரணி துணைத் தலைவர் நா.அழகிரி, விருதுநகர் மாவட்ட மாணவரணி தலைவர் கு.கணேசமூர்த்தி, பழனி மாவட்ட மாணவரணி தலைவர் தே.பெரியார்சுரேசு, காஞ்சிபுரம் மாவட்ட மாணவரணி செயலாளர் மு.அருண்குமார், ஓமலூர் இரா.செயபிரகாஷ், கரூர் மாவட்ட மாணவரணி தலைவர் அலெக்ஸ், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆனந்த், திருத்துறைப்பூண்டி செம்மொழிமணி, பழனி காவியா, உள்ளிட்ட ஏராளமான மாணவரணி தோழர்கள், தோழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் ம.திராவிட எழில் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
1. ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கைது செய்து பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் இம்மாதம் 25ஆம் தேதி முதல் ஜூலை 2ஆம் தேதிவரை கீழ்க்கண்ட ஊர்களில் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
நடைபெறும் இடங்கள்:
பொன்னேரி, சென்னை, தாம்பரம், திருப்பத்தூர், ஆவடி, ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், கோவை-சுந்தராபுரம், தாராபுரம், பழனி, திண்டுக்கல், திருச்சி, லால்குடி, அரியலூர், விருத்தாசலம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம், திருவாரூர் (நன்னிலம்), நாகை, தஞ்சாவூர், உரத்தநாடு, ஆவணம் கைகாட்டி, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகாசி, கீழப்பாவூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், ஆரல்வாய்மொழி, உசிலம்பட்டி, போடி, கல்லக்குறிச்சி, மேட்டூர், தூத்துக்குடி, வேதாரண்யம், ஈரோடு, கோபி, ப.குமாரபாளையம், கிருஷ்ணகிரி.
2. அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட மானமிகு தமிழர் தலைவர் அவர்களை ஆசிரியராகக் கொண்டு தமிழர்களின் அறிவாயுதமாக, வாழ்வுரிமை ஏடாக, எழுபத்துஎட்டு ஆண்டுகளாக வெளிவரும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலை ஏட்டினை நூலகங்களுக்குப் பெற்றதை நிறுத்தியதற்கு தமிழ்நாடு அரசினை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிப்பதுடன், தமிழர் தலைவர் அவர்களின் கட்டளைப்படி விடுதலைக்கு சந்தா சேர்த்து அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
3. தந்தை பெரியாரின் கருத்துக்கருவூலமான குடிஅரசு நூல் அறிமுக விழாவினை மாவட்ட தலைநகரங்களில் நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.
4. சமத்துவ சமுதாயம் படைத்திட, எதிர்வரும் தலைமுறையைக் கருத்தில் கொண்டு வலிமையான தமிழகத்தை உருவாக்கிட, தலைசிறந்த கல்வியா ளர்கள், வல்லுநர்களின் வழிகாட்டுதலில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியினை செயல்படுத்திட உரிய வழிவகை செய்திட வேண்டுமென தமிழ்நாடு அரசினை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
5. மதுபோதை, பான்பராக் போன்ற பல்வேறு போதைகளில் சிக்கி, சீரழிவுப்பாதையில் செல்லும் மாணவர் சமுதாயத்தை மீட்டெடுக்கும் வகையில் பான்பராக் போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்ய தடை செய்யவேண்டுமென தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. இதனை விளக்கி தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
6. தமிழர் தலைவர் அவர்களின் கட்டளைப்படி திராவிடர் மாணவர் கழக மாநில மாநாட்டை ஆகஸ்ட் திங்கள் 13இல் நாகப்பட்டினத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
7. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடி நிலை காலத்தில் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக இந்தித் திணிப்பு, நுழைவுத்தேர்வு உள்பட மாநிலங்களில் திணிக்கும் ஆபத்து இருந்து வருவதால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக்கொண்டு வரவேண்டுமாய் மத்திய அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளைக் கடந்து ஒருமித்த குரலை எழுப்புமாறு இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment