Tuesday, May 17, 2011

ஆட்சி மாற்றம் என்பது முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியே! தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை


கலைஞர் செயல்படுத்திய இலவசத் திட்டங்களை ஒட்டியே பல திட்டங்கள்! தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ரூ.1000 கோடி செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மாற்றுவது விரும்பத்தக்கதல்ல! பழி வாங்கும் மனப்பான்மையை விட்டு ஆக்க ரீதியாகச் செயல்படட்டும்!

ஆட்சிகள் மாறி மாறி வருவது இயல்பே - அதற்காக முந்தைய ஆட்சியின் முக்கிய திட்டங்களை மாற்றுவது என்பது கூடாது - புதிய ஆட்சி என்பது முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியே; இந்நிலையில் ரூ.1000 கோடி செலவில் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவது என்பது விரும்பத்தக்கதல்ல. அது ஒரு பழி வாங்கும் செயலாகவே கருதப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

வரவேற்கத்தக்கது

நேற்று அ.தி.மு.க. அரசு - செல்வி ஜெயலலிதா அவர்களை  முதல் அமைச்சராகக் கொண்ட அரசு - தனது 33 அமைச்சர்களுடன் பதவி ஏற்றுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைச்சரவைக்கு நமது வாழ்த்துகள்.
பதவி ஏற்ற நிலையில், முதல் ஏழு கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டு துவக்கியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை  செயல்படுத்துபவைகளாக அவை இருப்பது வரவேற்கத்தக்கது.

நலத்திட்டங்களை புறந்தள்ள வேண்டிய அவசியமில்லை

முந்தைய தி.மு.க. அரசின் இலவசத் திட்டங்களின் விரிவாக்கங்களாகவே அவை அமைந்துள்ளன. காரணம் அரசுகள் என்பவை மாறி மாறி வந்தாலும் - மக்களாட்சியின் மாண்பே அரசுகள் என்பவை ஒரு தொடர்ச்சி என்பதேயாகும்.
ஆட்சிகள் மாறும் போது சில திட்டங்கள், சட்டங்கள் மாறலாமே தவிர, அடிப்படையில் முந்தைய ஆட்சி செய்த மக்கள் நலத் திட்டங்களையெல்லாம் புறந்தள்ள வேண்டும் என்பது ஓர் ஆட்சி மாற்றத்தின் நெறிமுறை யாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

புதிய அரசின் நல்ல முயற்சி

காமராசர் ஆட்சியின் இலவசக் கல்வித் திட்டம், பகல் உணவுத் திட்டம், அண்ணா ஆட்சியில் தொடர்ந்தது; அண்ணா ஆட்சிக்குப் பின் கலைஞர் ஆட்சியில் விரிவடைந்தது.  கலைஞர் ஆட்சிக்குப்பின் எம்.ஜி.ஆர். ஆட்சியில் (அதிமுக) பகல் உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. பிறகு கலைஞர் ஆட்சியில் ஒரு முட்டை  வாரத்தில் 3 முட்டைகளாக விரிவடைந்தது. மாற்றாக வாழைப் பழங்களும் அளிக்கப்பட்டன.

ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்குப் பதில் ரேஷனில் 20 கிலோ அரிசி இலவசம் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் என்றும் மற்றும் மகளிருக்கான  இலவசத் திட்டங்கள் சில விரிவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.

முந்தைய கலைஞர் அரசு இலவசங் களால் நாட்டைக் கெடுத்து விட்டது என்பதுபோன்ற பிரச்சாரம் செய்தது தவறு என்பது இதன்மூலம் புதிய அரசால் பிரகடனப்படுத்தப்படுவதோடு, மேலும் பல இலவசங்களை செயல்படுத்த தனியே ஒரு துறையே புதிதாக உருவாக்கப்பட்டிருக் கிறது - நல்ல முயற்சிதான்!

இது எவ்வகையில் நியாயம்?

ஆனால் அதே நேரத்தில், புதிய தலைமைச் செயலகத்தை, கலைஞர் அரசு ஓமாந்தூரார் தோட்டத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் செலவழித்து - (மக்கள் வரிப் பணம் தான் அது) கட்டி ஏற்கெனவே இருமுறைக்கு மேல் சட்டப் பேரவைக் கூட்டங்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், பல துறைகள் மாற்றம் எல்லாம் நிகழ்ந்த பிறகும் புதிதாகப் பொறுப்பேற்ற நிலையில், முதல் அமைச்சர் அவர்கள், பழைய கட்டடத்திற்கே அவசர அவசரமாக செல்ல வேண்டும்; புதிய கட்டடத்தை தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தக்கூடாது என்று முடிவு எடுத்திருப்பது எவ்வகையில் நியாய மானது?

ஒரு புல்லை வெட்டக்கூட அனுமதி தேவை

அவரே, முன்பு இருந்த கோட்டை மழைக் காலங்களில் ஒழுகுகிறது; கோப்புகள் நனைகின்றன. வேறு இடம் தேவை என்று கூறி, இராணிமேரி கல்லூரியை இடித்துப் புதியகட்டடம் கட்டவும், புராதன அய்.ஜி. அலுவலகக் கட்டடம், அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சில பள்ளிக் கட்டடங்களை எல்லாம் கையகப்படுத்தி, தற்போது அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்துள்ள கோட்டூர் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் கட்டிட கால்கோள் விழா நடக்கவில்லையா?  புதிய கட்டடத்திற்கு முயற்சிக்க வில்லையா?

ஏற்கெனவே தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்த கோட்டைப் பகுதி, மத்திய அரசு இராணுவத் துறையின்கீழ் உள்ளது. குத்தகைக்கு உள்ள பகுதியும் கூட. மத்திய அரசின் இராணுவத் துறையின் அனுமதி பெற்றே ஒரு புல்லைக் கூட வெட்டவேண்டும் என்ற நிலைதானே!

கலைஞர் கட்டியதால் என்பதுதானா?

கலைஞர் ஆட்சியில் புதிதாக  கட்டப்பட்டது - முழுக்க முழுக்க தமிழக அரசின் இடம் - நகரின் மய்யப் பகுதி.  மாநில அரசின் சொந்த சொத்து. அதை விரிவுபடுத்தவோ, மேலும் பல கட்டடங்களை (விடுதிகள் உட்பட) கட்ட அரசினர் தோட்டம் வசதியாக உள்ள பகுதி யல்லவா? இதனைப் புறக்கணிப்பது ஏனோ? கலைஞர் அரசு கட்டியது என்பதுதானா? அவரது சொந்தக் கட்டடம் அல்லவே அது.

கலைஞர் அரசு காலத்தில் கட்டப்பட்ட மேம்பாலங்களை புதிய அரசினர் பயன்படுத்த மாட்டோம் என்று கூறிட முடியுமா?

கோயம்பேடு பேருந்து நிலையம், ஒரு ஆட்சி முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டு, மற்றொரு ஆட்சி முதல்வரால் திறக்கப்பட்டது என்பதால் அதை புழங்கவிடக் கூடாது என்று கூறினால் ஏற்க முடியுமா?

பழி வாங்கும் மனப்பான்மை கூடாது

புதிய ஆட்சிக்கும் முதல் அமைச்சருக்கும் அறிவுரை கூறிய பல இங்கிலீஷ், தமிழ் நாளேடுகள் (அவர் வர வேண்டும் என்று விரும்பிய அவரது ஆதரவு ஏடுகள்கூட) - இவர் பழிவாங்கும் மனப்பான்மையுடன் (Vendetta) செயல்படக் கூடாது என்றும், எதிர் மறையான விஷயங்களில் கவனஞ் செலுத்து வதைவிட ஆக்க பூர்வமான காரியங்களில் ஆட்சியை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனவே!

முதலமைச்சர் சிந்திக்க வேண்டும்!

எனவே இதுபோன்ற 1000 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணம் செலவு செய்து கட்டப்பட்டு அவரது கட்சியினர் உள்பட பலரும் ஏற்கெனவே சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றுவிட்ட நிலையில், இதில் வறட்டுப் பிடிவாதம் காட்டுவது  விரும்பத்தக்கதோ, யாராலும் நியாயப்படுத்தவோ முடியாது!
ஆட்சி மாற்றம் தான் ஏற்பட்டுள்ளதே தவிர, அவருக்கு மன மாற்றம் ஏற்படவில்லை என்று தானே நடுநிலையினர், பொது நிலையினர் எண்ணுவர்? புதிய முதல் அமைச்சர் அவர்கள் மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...