இருவேறு இந்தியாக்கள் இருப்பது ஏன் என்று உச்ச நீதிமன்றம் அர்த்தம் மிக்க வினா ஒன்றை எழுப்பியுள்ளது.
நாட்டில் 36 சதவீதத்தினர் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர். இவர்களுக்குத்தான் நியாய விலைப் பொருட்கள் அளிக்கப்படவேண்டும் என ஏழைகள் எண்ணிக்கை விவரத்தை திட்டக் குழு குறைத்து பட்டியலிட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். நாட்டில் பட்டினி சாவுகள் அதிகரித்து வரும் நிலையில் ஏழைகள் எண்ணிக்கையைக் குறைத்து மதிப்பிடுவதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். இதே கேள்வியை உச்ச நீதிமன்றமும் எழுப்பியுள்ளது.
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 36 சதவீதம் பேர்தான் வறுமையில் வாடும் ஏழைகள் என திட்டக் குழு எவ்வாறு கணக்கிட்டது என உச்சநீதிமன்ற அமர்வாய நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் திட்டக் குழுவை விளக்குமாறு கேட்டனர்.
ஏழை இந்தியர்கள், பணக்கார இந்தியர்கள் என இரண்டு இந்தியாவாக பிரிக்கமுடியாது. சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது என நீங்கள் கூறுகிறீர்கள். அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவுகள் ஏற்படுகின்றன. ஊட்டச் சத்துக் குறைபாடு முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என அமர்வாயம் அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரனிடம் கூறியது.
நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் இறந்து கொண்டிருக்கும் போது போதிய அளவு உணவுப் பொருள்கள் தொகுப்பில் உள்ளது என மத்திய அரசு கூறுவது வேடிக்கையாகவும் உள்ளது என அமர்வாயம் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. இந்திய அரசு ஊட்டச் சத்துக்குறைபாட்டைக் குறைக்கவும் பொது விநியோக முறையை சீரமைக்கவும் உறுதி கொண்டுள்ளது என பராசரன் விளக்கியபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு எதனைக் குறிக்கிறது;
அந்தக் குறைபாடு முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று நீதிபதிகள் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியான பயிர் விளைச்சல் அமோகம், தானியக் கிடங்குகள் நிரம்பி வழிகின்றன என்ற செய்தியைக் குறிப்பிட்டனர். அதிக பயிர் உற்பத்தி மகிழ்ச்சியான விஷயம். அதனால் மக்கள் பயன் அடையவில்லை என்றால் அதனால் என்ன பயன் என்று அமர்வாயம் கூறியது. 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு விவரத்தை வைத்துக் கொண்டு 2011 ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள 36 சதவீதம் பேர் ஏழைகள் என எப்படி முடிவு செய்ய முடியும் என்று நீதிமன்றம் கேட்டது.
இது ஒரு நியாயப் பூர்வமான வினாதான். பணக்காரர்கள் பட்டியல் ஒரு பக்கத்தில் வளர்ந்து கொண்டே போகிறது. இன்னொரு பக்கத்தில் ஏழைகளின் எண்ணிக்கை - வறுமைக் கோட்டுக்கு கீழே உழலும் மக்களும் வளர்ந்து கொண்டே போகின்றனர்.
நாள் ஒன்றுக்கு வெறும் 20 ரூபாய் வருவாய் ஈட்டக் கூடியவர்கள் 77 விழுக்காடு என்று கூறப்படுவது - ஆரோக்கியமான பொருளாதார நிலையாக இருக்க முடியுமா?
பன்னாட்டு பட்டினி அட்டவணையில் இந்தியா 66 ஆவது இடத்தில் இடம் பிடித்திருப்பது பெருமைக்கு உரியதுதானா?
50 சதவிகித மக்கள் இங்கு ஊட்டச் சத்துக் குறைவு உடையவர்களாக இருக்கின்றனர் என்று தேசிய மனித உரிமை ஆணைய தலைவராக இருந்த நீதிபதி ராஜேந்திரபாபு கூறினார்.
பத்தாண்டுகளுக்குள் 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்று கூறப்பட்டது - எத்தனைப் பத்தாண்டுகள் உருண்டோடிவிட்டன.
உயிருள்ள மனிதன் உணவுக்கு அழுகிறான்; குந்த வீடில்லை. ஆனால் குழவிக் கல்லைக் குந்த வைத்து அதற்கு கோபுரங்களை எழுப்பி கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவித்துக் கொண்டே இருக் கிறார்களே.
மக்களிடத்திலே மூடநம்பிக்கை மூலம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களைச் சுரண்டினரே இது பற்றியெல்லாம் நீதிபதிகள் வழிகாட்டும் தீர்ப்புகளை ஏன் சொல்லுவதில்லை.
இந்தியா வறுமையான நாடல்ல - வளங்கள் நிறைந்த நாடுதான். மக்கள் அறிவு மதக் குட்டையில் காய்ந்துகிடக்கிறது. அதைச் சரி செய்தால் நொடிப் பொழுதில் வளமைப் பூத்துக் குலுங்கும்.
No comments:
Post a Comment