Saturday, March 19, 2011

இதற்குப் பெயர்தான் அரசியலா?

அ.இ.அ.தி.மு.க.வுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகள் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளன. எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை எத்தனை இடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டு விட்டன.
ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு எந்தெந்தத் தொகுதிகள் வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எழுதியும் கொடுத்து விட்டன.
இந்த நிலையில் இவற்றையெல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு, தானடித்த மூப்பாக பெரிய அண்ணனாக (அக்காவாக என்றும் சொல்லலாம்) அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா 160 தொகுதிகளுக்கான தங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டார்.
அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் அ.இ.அ.தி.மு.க., தலைமைக் கழக நிருவாகிகளோடு கலந்து பேசி, தங்களுக்குத் தேவைப்படும் தொகுதிகள் பற்றித் தெரிவித்துவிட்டு வந்த ஒரு மணி நேரத்தில் இந்தத் திருக்கூத்து அரங்கேறியது என்பதுதான் வேடிக்கை. அந்தப் பட்டியலைப் பார்த்தவுடன் கூட்டணிக் கட்சிகள் அதிர்ச்சிப் பனியில் உறைந்துபோய் விட்டன. என்ன இது? இப்படிக்கூட நடக்குமா? என்ற ஆச்சரியம் ஒரு பக்கம், அதிர்ச்சி இன்னொரு பக்கம் என்ற இரு முனை தாக்குதலில் சுருண்டு போய் விட்டனர்.
அவசர அவசரமாகக் கூட்டணிக் கட்சிகள் தங்கள் நிருவாகக் குழுவைக் கூட்டின. கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன. அதன்பின் புரட்சியாளர்களான இடதுசாரிகள் ஒரு சினிமா நடிகர் கட்சியின்  அலுவலகத்துக்கு ஓடினார்கள் - ஓடிக்கொண்டே இருந்தார்கள்.
பாரம்பரியம் மிகுந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த நிலை வெகு பரிதாபமாகவே இருந்தது. நடிகர் கட்சியின் அலுவலகத்தில் கூடிப் பேசினார்கள். மூன்றாவது அணி அமைக்கப்படும் என்றனர். இனி அ.தி.மு.க.வோடு கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கர்ச்சித்தனர்.
கோபம் ஒரு பக்கம் இருந்தாலும், ஆசை இன்னொரு பக்கம் இழுத்தது. அதன் விளைவுதான் அ.தி.மு.க. நிருவாகிகளோடு இக்கட்சிகள் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொண்டதாகும்.
இதற்கிடையே இக்கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் ஊருக்கு ஊர் அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கொடும்பாவிகளை எரித்தனர். அதிமுக கொடிகளை அறுத்தனர்.
தொண்டர்கள் சுயமரியாதையோடுதான் நடந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தலைவர்களோ கெஞ்சிக் கூத்தாடி எப்படியோ சமாதானம் செய்து கொண்டார்கள்.
ஓர் இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இப்படியெல்லாம் அந்தர் பல்டி அடிக்கக்கூடிய ஒரே ஒரு இடம் அரசியல் - தேர்தல் களம்தானோ!
அ.தி.மு.க. பட்டியல் மீண்டும் திருத்தி அறிவிக்கும் பொழுது, அதனால் தங்கள் வாய்ப்பை இழந்ததாகக் கருதும் கட்சிக்காரர்கள் எதிர்வினைகளில் கடுமையாக ஈடுபடத்தான் செய்வார்கள். ஏற்கெனவே அது குமரி முதல் நாகை வரை தலைவிரித்து ஆட ஆரம்பித்துவிட்டது.
எப்படி நடந்தது இந்தத் திருவிளையாடல்? ஜோசியர் சொன்னார், அதற்காக அவசர அவசரமாக அந்த நாளில் (மார்ச்சு 16 மாலை) வெளியிட நேர்ந்தது - அதனால் இந்தத் தவறு நேர்ந்து விட்டது என்றெல்லாம் சமாதானம் சொல்கிறாராம். இல்லை இல்லை, ஜெயலலிதா அம்மையாருடைய எண்ணத்துக்கு மாறாக அது வெளியிடப்பட்டது என்று பார்ப்பன ஏடுகளான தினமணியும், தினமலரும் அம்மையாருக்காக வக்காலத்து வாங்கி எழுதின. இது ஜெயலலிதா  அம்மையாரைக் காப்பாற்றவா அல்லது அந்த அம்மையாருக்குச் சுய சிந்தனை கிடையாது; எடுப்பார் கைப்பிள்ளை என்று காட்டுவதற்கா? பார்ப்பனர்களின் புத்திசாலித்தனத்தின் பரிதாபத்தைப் பார்த்தீர்களா?
தொடக்கமே இப்படி இருக்கிறதே - இந்த அம்மையாருடன் எப்படி குப்பை கூட்டுவது என்ற கலக்கம் கூட்டணிக் கட்சியினருக்கு ஏற்படத்தான் செய்யும். அம்மையாரின் போக்குகளை உணர்ந்தவர்களுக்கு நிச்சயம் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தவே ஏற்படுத்தாது.
கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் ஒருமித்துத் தேர்தல் வேலை செய்வது சாத்தியம்தானா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
இன்னும் தேர்தல் நெருங்க நெருங்க என்னென்ன விபரீதங்களோ, யார் கண்டது?
 
சேராத இடம் தனிலே சேர வேண்டாம் என்பது நம் நாட்டுப் பழமொழி.
தேர்தலுக்கு முன்பாகவே இந்தக் கதியென்றால், தேர்தலுக்குப் பிறகு...
நாங்கள் செய்து கொண்டது தொகுதி உடன்பாடுதானே தவிர கொள்கைக் கூட்டணி அல்ல என்ற விளக்கத்தை ஏற்கெனவே தயாராகவே எழுதி வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட கூட்டணியை நம்பி வாக்களிக்கத் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்லர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...