Monday, January 3, 2011

18 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியார்-அண்ணா சந்திப்பும்-நெகிழ்வும்!

தமிழர் தலைவரின் விளக்கமான உரை


அண்ணா முதல்வர் ஆகிறார் என்ற நிலையில் சென்னையில் இருந்து கார்மூலம் சென்று திருச்சியில் பெரியாரை சந்தித்தார் என்ற உணர்ச்சிகரமான சம்பவத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி விளக்கினார். அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங் கத்தில் 25.12.2010 அன்று மாலை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய முன்னாள் தொடர்ச்சி வருமாறு:

புத்தகக் கடையில் அண்ணா

ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடையில் உள்ள நூல்களை அண்ணா அவர்கள் பார்ப்பார். அவரால் வாங்க முடியாது. ஹிக்கின் பாதம்ஸ் லைபரரி அல்ல உட்கார்ந்து படிப்பதற்கு. முதல்நாள் செல்லும்பொழுது எந்தப் புத்தகத்தை அண்ணா விரும்புகிறாரோ அதில் முதலில் ஒரு பத்து பக்கத்தைப் படித்து விடுவார். அடுத்த நாள் இடைவெளிவிட்டு மீண்டும் ஈரோடு ரயில்வே ஜங்சன் ஹிக்கின் பாதம்ஸ் கடைக்குப் போவார்கள். அதே புத்தகத்தை எடுக்கச் சொல்லி என்ன விலை என்பதை எல்லாம் கேட்டுவிட்டு, மீண்டும் ஒரு பத்து பக்கத்தைப் படித்துவிடுவார். புத்தகத்தின் விலை நூறு ரூபாயாக இருந்தால் அண்ணா அவர்கள் அந்தப் புத்தகத்தைப் படித்ததை வைத்துக்கொண்டே சில நேரங்களில் கட்டுரை எழுதிவிடுவார்.

சந்தானம், சண்முகவேலாயுதம் இவர்கள் அய்யா அவர்களிடம் சொல்லுவார்கள். அண்ணா அவர்கள் ரொம்பநேரம் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் அய்யா என்று சொல்லுவார்கள்.

ஒரு புத்தகம் அல்ல, இரண்டு வாங்குங்கள்!

ஏங்க, என்ன? என்று அய்யா அவர்கள் அண்ணா அவர்களிடம் கேட்பார். அய்யா, புத்தகத்தின் விலை அதிகம் அதனால் ஓரளவுக்குப் படித்துவிட்டு வந்துவிட்டேன் என்று அண்ணா சொல்லுவார். இல்லிங்க புத்தகத்தையே வாங்கிவிடலாமே என்று அய்யா அவர்கள் சொல்லுவார்.

இந்தத் தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சிக்கனத்திற்குப் பெயர் போன பெரியார். புத்தகத்தின் விலை அதிகம் என்றாலும் வாங்க அண்ணாதுரை, அந்த புத்தகத்தை வாங்குங்கள். நீங்கள் படித்துவிட்டால் உடனே எழுதுவீர்கள். இந்தாங்க எவ்வளவு ரூபாய்? என்றுகேட்டு உடனே அய்யா அவர்கள் பணத்தை எடுத்துக் கொடுப்பார்.

ஒரு நூல் அல்ல; இரண்டு நூல் வாங்குங்கள். ஒரு நூல் போனாலும் இன்னொரு நூல் இருக்கும் என்று சொல்லுவார். ரொம்ப முக்கியமான நூல் என்றால் இரண்டு வாங்குங்கள் என்று சொல்லுவார்.

கஞ்சன் அல்ல; சிக்கனவாதி!

பெரியாரைப் பொறுத்த வரையிலே அவர் கஞ்சன் அல்லர்; சிக்கனவாதி. அண்ணா அவர்களும் கஞ்சன் அல்லர்; சிக்கனவாதி (கைதட்டல்). இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

அடுத்த வாரம் அண்ணா எழுதுவார். இந்தியாவின் தீர்ப்பு என்பதைப் பற்றி எழுதுவார். அதே போல மேயோவின்கூற்று என்று எழுதுவார். அதுமாதிரி இப்படி வரிசையாகச் செய்திகள் வரும்.

எனவே, இவ்வளவு பெரிய அறிஞர் இரவெல்லாம் உழைத்து மிகப்பெரிய அளவுக்குப் பல பணிகளை ஆற்றியவர்.

அண்ணா தன்னுடைய தலைவர் தந்தை பெரியார் அவர்களை கடைசி வரைக்கும் எவ்வளவு மதித்தார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்ணா அவர்கள் முதலமைச்சரான பெரிய நிலைக்குப் போனபொழுதுகூட அய்யா அவர்களைப் பார்க்கிறார். தி.மு.கவை எதிர்த்து பெரியார் பிரச்சாரம்

1967 தேர்தலிலே அண்ணா வெற்றி பெறுகிறார். முதல்நாள் வரையிலே அண்ணா அவர்களை எதிர்த்து பெரியார் பிரச்சாரம் செய்கிறார். தி.மு.க பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்தது. நாங்கள் எல்லோரும் பிரச்சாரம் செய்தோம்.

அய்யா அவர்களுக்கு முன்னாலே தேர்தல் கூட்டங்களில் நான் முதலில் பேசுவேன். அடுத்து அய்யா அவர்கள் பேசுவார். ரொம்ப கடுமையாகப் பேசுவார்.
ஆனால், பெரியாரின் கடுமை ஒரு தந்தையின் கடுமை என்றுதான் அண்ணா நினைத்தாரே தவிர, அதற்கு மேல் இல்லை. அண்ணா அவர்கள் அதை ஒரு சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.

அண்ணாவின் பெருந்தன்மை

அண்ணாவினுடைய பெருந்தன்மையைப் பாருங்கள். 1967தேர்தலிலே வெற்றிபெற்றவுடன் நேராக அண்ணா பெரியாரை சந்திக்கப் புறப் பட்டார். அண்ணா, கலைஞர், நாவலர் ஆகியோர் ஒரு காரில் சென்னையிலிருந்து புறப்பட்டனர். அதில்கூட போகவேண்டுமா? வேண்டாமா? என்று ஒரு கருத்து வந்தது. இல்லை, கட்டாயம் பெரியாரிடம் செல்ல வேண்டும் என்று சொன்னார்.

அண்ணா அவர்கள் முதலில் எங்கே போகிறோம் என்று ஓட்டுநருக்குக்கூட சொல்லவில்லை. திருச்சிக்கு அன்பில்தர்மலிங்கம் அவர்களிடம் மட்டும் தகவல் சொல்லிவிட்டார்கள்.

அண்ணா, வேகமாக விடு காரை! என்றார். அண்ணா அவர்களுடைய ஓட்டுநர் சண்முகம் என்பது பலருக்குத் தெரியும். அவர் மன்னார்குடி உள்ளிக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர். அவரே பல தகவல்களைச் சொல்லியிருக்கிறார்.

அண்ணாதான் முதல்வர் என்று ஆகிவிட்டது. அப்பொழுது அரசு கார் இவருக்குக் கிடையாது. இன்னும் பதவி ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தச் சூழ்நிலையில் செங்கல்பட்டைத் தாண்டி வண்டி சென்று கொண்டிருக்கிறது. எங்கே போகிறோம் என்று டிரைவருக்குத் தெரியாது. அண்ணா திருச்சிக்குப் போய் சேருகிறவரையிலே அது யாருக்கும் தெரியாது. தன்னுடைய தொண்டரான அண்ணாவை பெரியார் சந்திக்கிறார்.

பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறார்

அய்யா எழுதியிருப்பதைப் பார்க்க வேண்டும். பல கூட்டங்களில் இந்தச் சம்பவத்தை அய்யா அவர்களே விளக்கியிருக்கின்றார்.

ஒரு தலைவனுக்கும் தொண்டனுக்கும் இது மாதிரி ஒரு வரலாறு கிடையாது. ஒரு இயக்க வரலாற்றில் தனது தொண்டர் வெற்றி பெற்று, தனது கொள்கையாளரே ஆட்சி அமைத்து, அந்தக் கொள்கையை உருவாக்கிய தலைவனுக்கே தன்னுடைய ஆட்சியைக் காணிக்கையாக்கிய மிகப்பெரிய வாய்ப்பு உலக வரலாற்றில் இந்த இயக்கத்தில் இந்தத் தலைவரைத் தவிர வேறு எந்தத் தலைவருக்கும் கிடையாது.

அண்ணா மாப்பிள்ளைபோல் வந்தார்

அய்யா அவர்கள் கொஞ்சம் சலிப்படைந்த நிலையில் எழுதிய செய்தியைப் பார்த்துவிட்டு அண்ணா, அமெரிக்காவிலிருந்து அய்யாவுக்கு எழுதினார். நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? என்று எழுதினார்.

அய்யா அவர்களை அண்ணா அவர்கள் 18 ஆண்டுகளுக்குப்பிறகு திருச்சியில் சந்திக்கின்றார். அய்யாவே சொல்லுகிறார். அண்ணா எப்படி வந்தார் என்றால்-ஒரு கம்பீரமான வெற்றிகரமான ஒரு நல்ல மணமகன் மாதிரி வந்தார். அவர் முதலமைச்சராக வெற்றி பெற்ற பிறகு என்னைப் பார்க்க வருகிறார். நானோ தலைகுனிந்த மணப்பெண் போல இருந்தேன்.

ஏனென்றால் நேற்றுவரையிலே அவர் வரக்கூடாது-வெற்றி பெறக்கூடாது என்று பிரச்சாரம் செய்திருக்கிறோமே, நானே கூச்சத் தோடுதான் உட்கார்ந்திருக்கின்றேன் என்று சொல்லுகின்றார்.

எங்களை வழி நடத்தவேண்டும்!

அண்ணா அவர்கள் வந்தவுடனே, வாங்க! வாங்க!! என்று அழைக்கின்றார். அய்யா அவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் சொல்லுவார். எழுந்து நின்று எல்லோரையும் வரவேற்றுவிட்டு உடனே உட்கார வைத்தார்.

அண்ணா அய்யா அவர்களைப் பார்த்து, அய்யா எங்களை வழிநடத்த வேண்டும் என்று சொன்னார். அதற்கென்னங்க, அதற்கென்னங்க என்றே பெரியார் சொல்லுகிறார். வாயில்வேறு வார்த்தையே வரவில்லை.

இந்தக் காட்சி பெரியார் திரைப்படத்தில் ரொம்ப சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அன்னை மணியம்மையார் அவர்கள் உடனடியாக வந்து அவர்கள் எப்படி உபசரித்தார்கள் என்ற செய்தி எல்லாம் அந்தத் திரைப்படத்தில் வந்திருக்கிறது.

எல்லாவற்றையும் விட அண்ணா அவர்களுக்கு இருந்த பாசம் சாதாரணமானதல்ல. தருமபுரி மாவட்டம் நாகரசம்பட்டியில் ஒரு பள்ளிக்கூடம் திறப்பு விழா. விடுதலை ஆசிரியர் என்ற முறையில் அந்தக் கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன்.

அய்யா-அண்ணா கலந்துகொண்ட விழா

அண்ணா முதலமைச்சராகி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றார். பெரியார் முன்னிலையில் அண்ணா அந்தப் பள்ளிக்கூடத்தைத் திறக்கிறார். பெரியார் ராமசாமி கல்வி நிலையம் என்று அந்தக் கல்வி நிலையத்திற்குப் பெயர்.

அந்தக் காட்சிகள் உணர்ச்சிபூர்வமான காட்சிகள்! அய்யா அவர்கள் கையில் பொன்னாடை கொடுத்து அண்ணா அவர்களுக்கு அதை போர்த்தச் சொல்லுகின்றோம்.

அய்யா அந்தப் பொன்னாடையை அண்ணா அவர்களுக்குப் போர்த்தி, கட்டித் தழுவினார். அந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சி. அவர் சொன்னமாதிரி அய்யா அவர்களும், அண்ணா அவர்களும் 18 ஆண்டுகள் பிரிந்திருக்கின்றார்கள்.

அவருடைய உள்ளத்தில்நான் இருப்பேன்

க.ராஜாராம் பேசும்பொழுது என்ன சொன்னார் என்றால், இதே மாதிரி நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் இதே மாதிரி இருக்க வேண்டும் என்று மூன்று முறை சொல்லிவிட்டார். அடுத்து அண்ணா அவர்கள் பேசும்பொழுது சொன்னார்: நாங்கள் இரண்டு பேருமே பிரியாதவர்கள் என்று ஆரம்பித்தார். மேலும் சொன்னார்: அவரைவிட்டு நான் பிரிந்ததில்லை;
என்னைவிட்டு அவர் பிரிந்ததில்லை. அவருடைய உள்ளத்தில் நான் இருப்பேன். என்னுடைய உள்ளத்தில் அவர் இருப்பார் என்று அண்ணா அவர்கள் சொன்னார். (பலத்த கைதட்டல்).

அந்த வசந்தம்!

இப்படி-சொன்னது மட்டுமல்ல. விடுதலை மலருக்கு அந்த வசந்தம் என்று அண்ணா அவர்கள் எழுதிய அந்தக் கட்டுரையிலேயே ரொம்ப அழகாக எழுதினார்.
நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான்! என்று எழுதினார். (கைதட்டல்). அண்ணா கையாண்ட சொல் இருக்கிறது பாருங்கள் மிக முக்கியம். கண்டதும் என்று போடுவது சாதாரணம். ஆனால், நான் கொண்டதும் என்று சொன்னால் இதைவிட உண்மையான தலைமைக்கு வேறு உதாரணம் இருக்கவே முடியாது.

ஆகவே, அப்படிப்பட்ட நிலையிலே அண்ணா அவர்களுக்கு அய்யா பொன்னாடை போர்த்துகிறார். அய்யா கட்டித் தழுவுகிறார். அண்ணா உணர்ச்சி பூர்வமாக இருந்தார். அய்யா அவர்களிடமும் அந்த உணர்ச்சிபூர்வமான காட்சியைக் காண முடிந்தது.

அடுத்து அண்ணா அவர்கள் பேசும்பொழுது சொன்னார், நான் பதவிக்கு வந்த பிற்பாடு எத்தனையோ பொன்னாடைகள் எனக்குப் போர்த்தப் பட்டன. இன்றைக்கு என்னுடைய தலைவர் எனக்குப் பொன்னாடை போர்த்தியிருக்கின்றார். இது முதல் முறையல்ல. ஏற்கெனவே அவர் தலைமை வகித்த ஈரோடு நகராட்சிக்கே என்னை அழைத்து வரவேற்பு கொடுக்கச் செய்து அப்பொழுது எனக்குச் சால்வை போர்த்தினார்.

இது இரண்டாவது முறையாக அய்யா அவர்கள் எனக்குப் பொன்னாடை போர்த்துகிறார். நான் பதவிக்கு வந்த பிற்பாடு ஏராளமான பேர் எனக்குப் பொன்னாடை போர்த்தியிருக்கிறார்கள்.

இதுதான் எனக்குப் போர்த்திய பொன்னாடை!

ஆனால், ஒன்றை உங்களுக்குச் சொல்லுகின்றேன். பெரியார் அவர்கள் போர்த்திய பொன்னாடை இது எனக்குப் போர்த்திய பொன்னாடை மற்றவைகள் எல்லாம் என் பதவிக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடைகள் என்று ரொம்ப உணர்ச்சிபூர்வமாக அண்ணா அவர்கள் சொன்னார்கள்.

ஆகவே, அய்யா அண்ணா பிரிந்திருந்தார்கள் என்று சொல்லுகின்ற அந்த வாய்ப்பே கிடையாது. இப்படி எத்தனையோ சம்பவங்களை எடுத்துச் சொல்லிக்கொண்டே போகலாம். அண்ணா அவர்கள் மருத்துவமனைக்குப் போகிறார். சங்கடத்தோடு உட்கார்ந்திருக்கிறார்.

அண்ணாவுக்கு அய்யா பணம்....

அண்ணா அவர்கள் அமெரிக்காவுக்குப் போக வேண்டும் என்று ஏற்பாடு ஆகிறது. அண்ணா அவர்களைப் பார்க்க வந்த அய்யா கையில் பணத்தை எடுத்துக்கொண்டு வருகின்றார்.

எங்களுக்குக்கூடத் தெரியாது. அண்ணா அவர்கள் மருத்துவமனையில் உட்கார்ந்திருக்கின்றார். பக்கத்தில் வேறு யாரும் இல்லை. குன்றக்குடி அடிகளார் வந்தார்; கொஞ்ச நேரம் இருந்து பார்த்துவிட்டுப் போய் விட்டார், சென்னை அரசு பொது மருத்துவமனையில். அய்யா அண்ணா அவர்களிடம் சொல்லுகின்றார், பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. பணம் நான் கொண்டு வந்திருக்கின்றேன். நீங்கள் எடுத்துக்கொண்டு போங்கள் அதாவது, இங்கிருந்தே பணத்தை எடுத்துக்கொண்டு போகிற மாதிரி அய்யா அவர்கள் நினைத்துக்கொண்டு பணத்தைத் தருகிறேன் என்று கொடுத்தார்.

-தொடரும்.


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...