ஈபுரூ இலக்கியத்திலும் கிரேக்க இலக்கியத்திலும் காணப்படும் தமிழ்ச் சொல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழ்ச் செல்வாக்கு மூவாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததென அறுதியிட்டனர். இப்போது மண்பாண்டச் சில்லுகளில் தொல்தமிழ் வரிவடிவங்கள் காணப்பெறும் சூழலில் இன்னும் முற்பட்ட காலத்திற்குத் தமிழின் தொன்மையை அறுதியிடச் சான்றுகள் காட்ட வியலும் எனும் உறுதியைப் பெற்றுள்ளோம். இவ்வளவு தொன்மை வாய்ந்ததென நாம் மகிழ்வு கொண்டபோதிலும் தமிழின் வளர்ச்சி ஒரு தொடர்ச்சியுடன் அமைந்துள்ளதெனக் கூற இயலவில்லை.
சங்க இலக்கியத்திற்குப் பின் அமைந்துள்ள இலக்கியங்களில் வடமொழியின் செல்வாக்கு படிப்படியாக மிகுந்து ஏறுமுகமாகக் காணப்படுவதனையும் வடமொழி மட்டுமன்றி ஆரியரின் நால்வருணப் பாகுபாட்டுமுறையும் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் ஆழ்ந்த தாக்கத்தைச் செலுத்தி வந்தமையையும், தமிழ் வரலாறு காட்டுகிறது. வேற்றவர் படையெடுப்பும் வந்தேறிகளின் வல்லாண்மையும் தமிழில் பிறமொழிச் சொல்லாட்சிக்கு வித்திட்டன. எனினும் இத்தகைய கடன் சொல்லாட்சிகள் எளிதில் களைந்து விடக்கூடிய களைகளாக இருந்தன. ஆனால் ஆரியரின் ஊடுருவல் இலக்கியப் படைப்பிலும் அமைப்பிலும் இலக்கணப் போக்கிலும் கருத்துருவாக்கத்திலும் ஆழப் பதிந்து தலைமுறையாகத் தமிழினத்தை அடிமைத்தளையிட்டு வைத்திருக்கும் ஆற்றல் பெற்று விளங்கியது. தமிழனின் தன்னாண்மையையும் தறுகண்மையையும் எடுத்துரைக்கும் சான்றாக விளங்கும் சங்க இலக்கியங்களைவிடப் புளுகுப் புராணங்களும், வழுநிறைந்த இதிகாசங்களும் பெருமை வாய்ந்தவையெனத் தமிழ்ப்புலவர்களே தலையில் வைத்துக் கொண்டாடும் மனப்போக்கு வேரூன்றிவிட்டது. இப் பொருந்தாப் போக்கு ஏட்டுப் படிப்பில் மட்டுமில்லாமல் நாட்டுப்புற நம்பிக்கைகளிலும் நஞ்சு கலந்தது.
பெண்பிள்ளை சிரிச்சால் போச்சு புகையிலை விரிச்சால் போச்சு என்றும், கார்த்திகைக்குப் பிந்திய மழையுமில்லை, கர்ணனுக்கு மிஞ்சிய கொடையுமில்லலை என்றும் கற்றறியா மக்கள் வழக்கிலும் இதிகாசப் பொய்ம்மைகள் நிலை நிறுத்தப்பட்டன.
சாப்பாடு என்பது இழிந்தோர் வழக்கு எனவும் போஜனம் என்பதே உயர்ந்தோர் பயன்படுத்தத்தக்கதெனவும் மகாமகோபாத்தியாயர்கள் விளக்கிக் கொண்டிருந்த சூழல் தமிழக வரலாற்றில் தமிழன் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தமைக்குச் சான்றாகும்.
சாப்பாடு என்பது இழிந்தோர் வழக்கு எனவும் போஜனம் என்பதே உயர்ந்தோர் பயன்படுத்தத்தக்கதெனவும் மகாமகோபாத்தியாயர்கள் விளக்கிக் கொண்டிருந்த சூழல் தமிழக வரலாற்றில் தமிழன் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தமைக்குச் சான்றாகும்.
தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள் என வள்ளலார், மாயூரம் மேதை வேதநாயகர், மனோன்மணீயம் சுந்தரனார் ஆகிய மூவரையும் குறிப்பிட வேண்டும்.
புராணப் பொய்ம்மைகளைப் புறந்தள்ளி வைதிகத்தின் நச்சுப் பிடியிலிருந்து தமிழர் சமயத்தை விடுவிக்க முனைந்த வள்ளலார், பயிற்சி மொழியாகவும் வழக்குமன்ற மொழியாகவும் தமிழ் விளங்க வேண்டுமெனவும், ஜாதிப் பாகுபாடுகளையும் ஆண்-பெண் பாகுபாடுகளையும் வேரறுத்து, கல்வி வாய்ப்பு அனைவர்க்கும் வழங்கப்பட வேண்டுமென வாதாடிய வேதநாயகர், தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தியும் அறிவியற் கலைச் சொல்லாக்கம் தமிழில் வளர்ந்தோங்கவும் பாடுபட்ட சுந்தரனார் ஆகியோர் காட்டிய வழிமுறைகளே பாரதியார், மறைமலையடிகள் ஆகியோர்க்கு முன்னோடியாக அமைந்தன. எனினும் இவர்கள் காட்டிய வழிமுறைகள் தமிழனின் அடிமைத்தளையைக் கட்டறுக்கப் போதுமானவையாக விளங்கவில்லை. முறையான தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்பற்ற, ஏட்டுப்படிப்பை என்றும் போற்றாத பெரியார் அவர்களே தமிழின் விடுதலைக்கும் தமிழின விடுதலைக்கும் தக்க வழிமுறையைக் கண்டார்.
தமிழ்ச் சங்கங்களைப் பற்றிய கட்டுக்கதைகளையும், புலவர்களைப் பற்றிய பொருந்தாப் புளுகுகளையும் பற்றி நின்ற தமிழறிஞர்களுக்கு, அவர்களின் தவறான நிலைப்பாட்டை யுணர்த்தித் தமிழ் ஆராய்ச்சியைச் சரியான தளத்திற்குக் கொணர்ந்தவர் தந்தை பெரியார் அவர்களே.
தொல்காப்பியரின் இயற்பெயர் திரணதூமாக்கினி எனவும், அவர் அகத்தியரின் மாணவர் எனவும், அகத்தியரின் மனைவி உலோபாமுத்திரையை ஆற்றில் மூழ்கிவிடாமல் காப்பாற்றும் பொருட்டுத் தொட்டுத் தூக்கிவிட்ட காரணத்தால் அகத்தியரால் சாபமிடப்பட்டவர் எனவும் நிலவிய கதைகளைப் பெரியாருக்கு முன்னர் எந்தப் புலவரும் மறுக்க முற்படவில்லை.
மறைமலையடிகளும், சோமசுந்தரபாரதியாரும் பா.வே.மாணிக்க நாயகரும் நேரிய பாதையில் சீரிய ஆய்வு நிகழ்த்திடப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே தக்க பின்புலம் அமைத்தது என்பதே தமிழாராய்ச்சி வரலாறு காட்டும் உண்மையாகும்.
தந்தை பெரியார் பற்றி தமிழர்களில் புரியாதவர்களும், பார்ப்பனர்கள் திட்டமிட்டும் ஒரு பிரச்சாரத்தைச் செய்வதுண்டு. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் பெரியார் என்பதுதான் அந்தப் பிரச்சாரம். வெறும் சொற்களின் மீதான பார்வையால் மட்டும் சொல்லப்படும் குற்றச்சாற்று இது. ஆனால், தமிழ் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தந்தை பெரியார் பாடுபட்டது போலவும், கருத்துகளைச் சொன்னது போலவும் - ஆக்க ரீதியாக இன்னொருவர் செய்தார்; சொன்னார் என்று கூறிட முடியாது. என்னும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கருத்து தந்தை பெரியார் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்கு ஒரு சுருக்கமான அறிமுகம் என்று கூறத்தக்கது.
ஆராய்ச்சிக்குரிய படிப்பும், சுயமான கண்ணோட்டமும் ஈ.வெ.ராவுக்கு இல்லை. அவர் சங்க இலக்கியம் பற்றி, காப்பியங்கள் பற்றி ஏன் தமிழ் மொழி பற்றிச் சொல்லி இன்று அச்சில் கிடைக்கும் விஷயங்களையே பாருங்கள். அவற்றை இன்று ஈ.வெ.ராவை ஆதரிப்பவர்கள் எவராவது ஏற்றுக் கொள்வார்களா? தமிழரின் தொன்மை, நாகரிக வெற்றி எதுவுமே அவர் கண்ணுக்குப் படவில்லை. பெரும்பாலும் அய்ரோப்பியப் பகுத்தறிவு நோக்கில் அவற்றையெல்லாம் தூக்கி வீசுபவராகவே அவர் இருந்திருக்கிறார்.- என்னும் எழுத்தாளர் செயமோகனின் கூற்று நகைப்பிற்கிடமானது. வடமொழி வல்லாண்மையையும் இந்தியின் கொடுங்கோலாதிக்கத்தையும் அஞ்சாது நின்று எதிர்த்த போராளியாகிய பெரியாரின் மேலுள்ள காழ்ப்பும் பகைமையுமே இக்கூற்றுக்கு அடித்தளமெனல் மிகையன்று.
இந்திய நாட்டுப் பிற எம் மொழியையும்விட தமிழ், நாகரிகம் பெற்று விளங்குகிறது. தூய தமிழ் பேசுதல் மற்ற வேறுமொழிச் சொற்களை நீக்கிப் பேசுவதால் நம்மிடையேயுள்ள இழிவுகள் நீங்குவதோடு மேலும் மேலும் நன்மையடைவோம் என்பதோடு நம் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நம் மொழி அமைந்திருக்கிறது.
வேறு மொழியைப் புகுத்திக் கொள்வதன் மூலம் நம் அமைப்புக் கெடுவதோடு, அம்மொழியமைப்பிலுள்ள நம் நலனுக்குப் புறம்பான கருத்துகள், கேடு பயக்கும் கருத்துகள், நம்மிடைப் புகுந்து, நம்மை இழிவடையச் செய்கின்றன என்பதால்தான், வடமொழியில் நம்மை மேலும் மேலும் அடிமையாக்கும் தன்மை அமைந்திருப்பதால்தான், அதையும் கூடாதென்கிறேன். நமது மேன்மைக்கு, நமது தகுதிக்கு, நமது முற்போக்குக்கு ஏற்ற மொழி, தமிழைவிட மேலான ஒரு மொழி இந்நாட்டிலில்லை என்பதற்காகவே தமிழை விரும்புகிறேனே தவிர, அது அற்புத அதிசயங்களை விளைவிக்கக் கூடியது என்பதற்காக அல்ல என்னும் தந்தை பெரியாரின் அழுத்தம் திருத்தமான விளக்கம் மொழிக்கலப்புக்கும் வேற்றுமொழி மேலாண்மைக்கும் எதிரான போர்முரசமாக விளங்குகிறது.
தந்தை பெரியாரின் நிலைப்பாடு முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த ஒன்று. இதனைத் தெரிந்து கொண்டவர்களே அவரது பல கருத்துகளையும் உரியமுறையில் புரிந்து கொள்ளமுடியும். தமிழை வழிபட்டு நின்றவர்களிடமிருந்து அவர் விலகி நிற்கிறார். தமிழில் வழிபாடு வேண்டுமென்று அவர் குரல் கொடுத்தாரெனினும் தமிழை வழிபாடு செய்வதனை முற்றிலும் எதிர்த்தார். தமிழைப் போற்றிக் கொண்டாடுவதன் மூலம் அதனைத் தக்க கருத்து வெளிப்பாட்டுக் கருவியாக்கி விட முடியாது என்பது அவர் கருத்து.
தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கின்றேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கிலமொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பில்லை (விடுதலை, 1.12.1970) என்று தெளிவாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார். தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்... என்னும் பெரியாரின் கருத்து செயமோகன் போன்ற போலி முற்போக்காளர்களை எரிச்சலடையச் செய்திருக்கும்.
தமிழ் மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றிய என்னுடைய கருத்தைப் பலமுறை சொல்லியிருக்கின்றேன். ஆங்கிலம் வளர்ந்த மொழி என்பதும், தமிழ் வளர்ச்சி அடையாத பழங்கால மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம் தமிழ்மொழி - ஆங்கிலமொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ்மீது எனக்குத் தனி வெறுப்பில்லை (விடுதலை, 1.12.1970) என்று தெளிவாகத் தம் கருத்தினை வெளிப்படுத்தியவர் தந்தை பெரியார். தமிழ் முன்னேற்றமடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும் மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும் கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தைக் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்... என்னும் பெரியாரின் கருத்து செயமோகன் போன்ற போலி முற்போக்காளர்களை எரிச்சலடையச் செய்திருக்கும்.
தமிழ் இலக்கியங்களைப் பற்றிய பெரியாரின் ஆய்வு, பெரியாரியத் திறனாய்வுமுறை என்னும் புதிய ஆய்வுமுறைக்கு வித்திட்டுள்ளது. இனிமேலாவது பல்கலைக்கழக ஆய் வாளர்கள் இத் திறனாய்வுமுறையின் நலன்களை மனத்துட்கொண்டு ஆய்வு மாணவர்களை இத் திசையில் வழி நடத்தினால் தமிழ் விரிவும் வளர்ச்சியும் பெறுதற்குரிய வழிமுறைகள் வழிமுறைகள் மலரும் எனதில் எள்ளளவும் அய்யமில்லை.
(24.12.2010 அன்று சென்னை-பெரியார் திடலில் நடைபெற்ற தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கில் வழங்கப்பட்ட எழுத்துரை)
No comments:
Post a Comment