எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.இ. அ.தி.மு.க. ஆட்சி 1984 ஆம் ஆண்டில் நுழைவுத் தேர்வை நுழைத்தது என்றாலும், அதற்கான பல்லவியை 1982 ஆம் ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சராக இருந்த எச்.வி. ஹண்டே சட்ட மேலவையில் கோடிட்டுக் காட்டினார்.
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் களைச் சேர்ப்பதற்கு நுழைவுத் தேர்வு நடத்தும் யோசனைபற்றி தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்றார்.
ஹண்டே அறிவித்ததுதான் தாமதம். நச்சு விதையை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், அது ஆலகாலமரமாகி மக்களைக் கொன்று தீர்த்துவிடுமே.
- எம்.ஜி.ஆரால் நுழைவுத் தேர்வு அறிமுகம்!
- மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரவேற்பு
- திராவிடர் கழகத்தின் எதிர்ப்புப் புயல்!
- நுழைவுத் தேர்வு ஆணை எரிப்பு!
செய்தி வந்த அன்றே கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர் கள் நுழைவுத் தேர்வு: ஆபத்தான யோசனை என்று கண்டித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். (விடுதலை, 23.3.1982).
காமராசர் அவர்கள் முதல்வராக இருந்தபோதும், பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதும், கலைஞர் அவர்கள் முதலமைச் சராக இருந்தபோதும் - ஏற்கப்படவில்லை இந்த யோசனை. செயல்படுத்த முனைய வில்லை அன்றைய அரசுகள் என்றால், அதற்குத் தெளிவான, திட்டவட்டமான காரணங்கள் இருந்தே தீரவேண்டும் என்பதை இன்றைய முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் உணர்வார் என்று நம்புகிறோம்.
அ.தி.மு.க. ஆட்சி வகுப்புரிமையை அடிக்கடி புதைகுழிக்கு அனுப்ப முயற்சிக் கும் ஓர் ஆட்சி என்ற கெட்ட பெயர் தமிழர்கள் மத்தியில் - கட்சி வேறு பாடின்றி பெற்ற ஒரு கட்சியாக ஏற் கெனவே 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணை, பொருளாதார அடிப்படையில் சலுகை தேவை என்ற பேச்சு; என் ஜினீயரிங், மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களைத் தேர்ந் தெடுக்க இன்டர்வியூ மார்க்குகள் 75 ஆக இருந்ததை 30 ஆகக் குறைத்த நடவடிக்கை போன்ற பலவகை முறை களால் இந்த அரசுக்கு ஏற்பட்டிருக் கிறது.
இப்போது புதிய கேடு ஒன்றினைத் தொடங்கி வைக்கும் திருப்பணியையும் வரும் கல்வி ஆண்டிலிருந்து செய்ய முனைகிறார்கள் என்றால், தமிழர்களுக் குப் பேரபாயமான ஒரு புதிய ஏற்பாடும் தயாராகி வருகிறது என்றே அதற்குப் பொருள். (விடுதலை, 23.3.1982) என்று அறிவித்த கழகப் பொதுச்செய லாளர் அந்த அறிக்கையின் இறுதியில் கிளர்ச்சிகள் வெடிக்க வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார். தமிழ்நாடெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நுழைவுத் தேர்வு ஆணை கொளுத்தவும் பட்டது (17.6.1984).
நுழைவுத் தேர்வைக் கொண்டு வந் தால் என்ன ஆகும்? அந்த அறிக்கையி லேயே அதற்கும் விடையளித்திருந்தார்.
நுழைவுத் தேர்வு என்று வைத்தால், பார்ப்பனர்களும், பணக்காரர்களும்தான் அதனால் பலன் பெறுவார்கள் டம்மி நெம்பர் வைத்தால்கூட அதற்கும் லஞ்சம் கொடுத்து தெரிந்துகொண்டு, மார்க் வேட்டை ஆடிவிடுவார்கள். பதவியில் உள்ளவர்கள் வீட்டுப் பிள்ளைகளும், பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளும், பணக் கார சீமான் வீட்டுப் பிள்ளைகளும், பட் டணத்துப் பிள்ளைகளும்தான் இதன் மூலம் பயன் அடைவார்களே தவிர, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களும், பட்டிக்காட்டுப் பிள்ளை களும், ஏழைகளும் இதனால் பாதிக்கப் படவே செய்வார்கள்.
மேற்காட்டிய முதல் ரக பிரிவினர்க்கு மார்க் வாங்கும் ரகசியம் தெரியும். ஆனால், அடுத்த பிரிவில் உள்ளவர் களுக்குத் தெரியாது என்று நடைமுறை உண்மையை - தோலை உரித்து சுளையை முழுமையாகக் காட்டினார் கழகப் பொதுச்செயலாளர்.
மாண்புமிகு நாவலர் இரா. நெடுஞ் செழியன் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்தநேரத்தில் (1972 இல்) நுழைவுத் தேர்வு என்று தன்னிச்சையாக ஒரு பேச்சை ஆரம்பித்தார். அவ்வளவுதான்! தந்தை பெரியார் அவர்களிடம் சரியாக வாங்கிக் கட்டிக்கொண்டார் (17.7.1972).
அதற்குப் பின் அதுபற்றிய பேச்சே இல்லை. கப்-சிப் என்று பிறந்த தரு ணத்திலேயே மரணக் குழிக்குப் போய் விட்டது. முதலமைச்சர் மானமிகு கலை ஞர் ஆயிற்றே - அதற்குமேல் அனுமதிப் பாரா? நுழைவுத் தேர்வைத்தான் ஏற்றுக் கொள்வாரா?
இதில் இன்னொன்றையும் இந்த நேரத்தில் நினைவூட்டுவது மிகமிக முக்கியமாகும். நுழைவுத் தேர்வு விடயத் தில் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க் சிஸ்ட்) கட்சி எப்படி பார்ப்பனத்தனமாக நடந்துகொண்டது என்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி அது.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் திரு. நல்லசிவன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் நுழைவுத் தேர்வை ஆதரித்துப் பேசினார். இதகுறித்து அவர் கட்சியின் நிலைப்பாடாக அறிக்கை கொடுத்ததும் உண்டு.
வானொலிப் பெட்டிகளும், தொலைக்காட்சிப் பெட்டிகளும் கிராமப்புற மக்களிடையும் பரவலாகிவரும் இன்றைய சூழ்நிலையில், நுழைவுத் தேர்வில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற பயம் தேவையற்றது. மேலும் நுழைவுத் தேர்வில் கேட்கப்படும் மாதிரிக் கேள்விகள் - அவற்றிற்கான மாதிரிப் பதில்கள் அவற்றை உடனுக்குடன் அச்சிட்டு விநியோகிக்க ஏராளமான நூல் நிறுவனங்கள் முன்வரும்போது கிராமப்புற மாணவர்களும் அந்த அறிவைப் பெறுவதில் பின் தங்கிவிட மாட்டார்கள்.
நவீன போக்குவரத்துச் சாதனங்களும், தகவல் தொடர்பு அமைப்புகளும் வளர்ச்சி அடைந்துவரும் இந்தக் காலத்தில் கிராமப்புற மாணவர்கள், பின் தங்கி விடுவார்கள் என்று பயப்படத் தேவையில்லை என்றும் சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிக்கையையே வெளியிட்டார். இதனை மறுத்தும், கண்டித்தும் அப்பொழுதே திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள்.
இந்து ஏட்டின் கருத்துதான், பா.ஜ.க.வின் கருத்துதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தா என்ற வினாவையும் அந்த அறிக்கையில் எழுப்பியிருந்தார். (விடுதலை, 23.3.1982). கண்ணீர் மல்கும் கிராமப்புறங்களும், களைகட்டி நிற்கும் நகரப்புறங்களும் ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் சம நிலையில் இருப்பதாகச் சொன்ன சொல் - என்றும் நின்று அவர்களை வினாக் கணைகளால் துளைத்துக் கொண்டே இருக்கும். பொருளாதாரப் பார்வையில் பார்த்தாலும், கிராமப் பொருளாதாரமும், நகரப் பொருளாதாரமும் சம தட்டில் நிற்கின்றனவா என்று சாதாரண மனிதன்கூட போகிற போக்கில் கேட்டுவிட்டுப் போவானே!
கல்விக் கூடங்கள் அதன் கட்டமைப்புகள், உபகரண வசதி வாய்ப்புகள், சோதனைக் கூடங்கள் (லேபரட்டரீஸ்), நூலகம் என்று வரிசைப்படுத்திப் பார்த்தாலும் - ஏணி வைத்தாலும் எட்டாத வறிய கோலத்தில்தான் கிராமப் பள்ளிகள் இருக்கின்றன என்பதை மார்க்சிஸ்ட்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் கடமையையும் பெரியாரியல், அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தான் செய்தது.
காலந்தாழ்ந்தாலும் சி.பி.எம். இப்பொழுது அந்த முடிவை மாற்றிக் கொண்டு நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பாக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். 20.12.2010 அன்று சென்னையில் கூடிய சி.பி.எம். மாநிலக் குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொது மருத்துவ நுழைவுத் தேர்வை அகில இந்திய அளவில் மருத்துவக் கவுன்சிலே நடத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் இட ஒதுக்கீடு, மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவிகிதம் என்பது இல்லாமல் போய், ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனி ஆகிவிடும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு பொது மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல் முறையீடு செய்யவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இந்தத் தீர்மானத்தை கை ஒலி எழுப்பி வரவேற்கிறோம். கிராமப்புற மாணவர்களின் நிலையை 28 ஆண்டுகளுக்குப் பிறகாவது சரியாகப் புரிந்துகொண்டிருப்பது நல்ல வகையான மாற்றம்தானே!
No comments:
Post a Comment