2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையால் உருப்படியான பலன் உண்டா? தேர்தல் - அரசியல் லாபத்துக்காக எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் யுக்தி இது - மக்கள் ஏமாற மாட்டார்கள்!
தமிழர் தலைவரின் விளக்க அறிக்கை
2ஜி அலைக்கற்றை தொடர்பான பிரச்சினையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு தேவை என்று எதிர்க்கட்சிகள் கூக்குரல் போடுவது அரசியல் பிரச்சார நோக்கத்துக் காகவும், நடக்கவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் களை மனதில் வைத்துமே - இதில் பொதுமக்கள் ஏமாற மாட்டார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
மத்தியில் தற்போது ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசுக்கு மக்கள் வாக்களித்து 5 ஆண்டுகள் ஆள ஆணை பிறப்பித்துள்ளார்கள் - 2009 இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்மூலம். குறுக்கு வழியில் ஆட்சியைக் கவிழ்க்க எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும், அதன் சுற்றுக் கிரகங்களும், 2ஜி அலைவரிசையைக் (2ஜி ஸ்பெக்ட்ரம்) கையில் எடுத்து, இதன்மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் தாம் ஆட்சிக்கு வர முடியுமா என்பதற்காக ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்!
நாடாளுமன்றம் 23 நாள்கள் முடக்கம்
23 நாள்கள் நாடாளுமன்றத்தினை முடக்கி, மக்களது வரிப்பணம் ரூ.146 கோடியை விரயமாக்கினர் எதிர்க்கட்சி யினர்! காலமும் வீணாகியது. ஜே.பி.சி. (JPC) கூட்டு நாடாளுமன்ற விசாரணைக் குழுவை நியமித்தால் ஒழிய நாங்கள் வேறெதற்கும் சம்மதியோம் என்று முதலைப் பிடிவாதத்தைக் காட்டுகின்றனர்!
சட்ட வழமைக்கு மாறாக - உச்சநீதிமன்ற கண் காணிப்பு - மேற்பார்வையோடு மத்திய தனிப்பெரும் புலனாய்வுத் துறை (சி.பி.அய்.) விசாரித்து பிப்ரவரி இறு திக்குள் - முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்; முடிவில் அதன்மீது தங்கள் (உச்சநீதிமன்றம்) தீர்ப்பு இப்பிரச்சினையில் கூறுவோம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
வாஜ்பேயி காலத்திலிருந்தே விசாரணை!
இதற்கிடையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் பற்றிய விசாரணை 2001 ஆம் ஆண்டிலிருந்தே (அதாவது வாஜ்பேயி பிரத மராக இருந்த காலத்திலிருந்தே) நடைபெறவேண்டும் என்று கூறியதை பா.ஜ.க. ஏற்கவில்லை; வேறு வழியின்றி நாங்கள் சந்திப்போம் என்கின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் அவர்கள் ஒரு நபர் விசாரணைக் கமிஷனாகப் பொறுப்பேற்று 2001 முதல் 2010 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு நடைபெற்றதைப்பற்றி பிப்ரவரிக்குள் முடித்துத் தர தொடர்ந்து, ஆய்வு நடத்துகிறார்.
பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான முரளிமனோகர் ஜோஷி தலைமையில் பொதுக் கணக்குக் குழு விசாரணை பார்லிமெண்டரி முறைப்படி நடைபெற்றுவருகிறது.
இவர் ஞஹஊ தலைவர் - எதிர்க்கட்சித் தலைவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் இழப்புப்பற்றி ஆராய்கிறது! பிரதமர் மன் மோகன்சிங்தான் அதன்முன் ஆஜராகி சந்தேகங் களுக்குப் பதில் அளிக்கிறேன் என்கிறார்!
ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை தந்தவரை நேற்று அழைத்து விசாரித்துள்ளார். ஆடிட்டர் ஜெனரலும் இந்த இழப்புத் தொகை ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பது வெறும் யூகம், அனுமானத்தின் அடிப்படையில்தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இப்பொதுக் கணக்குக் குழுவில் பா.ஜ.க.வினர், யஷ்வந்த் சின்கா, முன்னாள் நிதியமைச்சர் போன்றவர்களும், தம்பிதுரை, மைத்ரேயன் போன்ற அ.தி.மு.க.வினரும்கூட இடம் பெற்றுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கோஷ்டி கானம்!
ஜே.பி.சி. (JPC) வேண்டும் என்று அடாவடித்தனமாக எதிர்க்கட்சியின் கோஷ்டி கானம் பாடுகிறார்களே! அது எதனால்? மேற்காட்டியுள்ளதைவிட, தண்டிக்கக் கூடிய அளவுக்கு அதற்கு அதிகாரம் உண்டா?
உச்சநீதிமன்றமே மேற்கொள்கையில், இவர்கள் நியாயமாக வரவேற்று இருக்கவேண்டுமே!
அதைவிடுத்து, வம்பு, வல்லடிகளைத் தொடர்ந்து இந்தப் பிரச்சாரத்தைச் செய்வது - 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களையும், அதைத் தாண்டியும், மத்திய ஆட்சியை இடையில் கவிழ்க்கவும்தானே இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடுகிறார்கள்?
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவால்
பயன் உண்டா?
பயன் உண்டா?
1. ஜே.பி.சி. என்ற கூட்டுக் குழு விசாரணைக் குழுவில், ஆளுங்கட்சியினர்தான் அதிகம் இருப்பர்.
2. கால நிர்ணயம் ஏதும் கிடையாது. (எவ்வளவு காலத்திற்கும் இழுத்துப் பிரச்சாரம் செய்யலாம் - ஊழல், ஊழல் என்று கோயபெல்ஸ் பிரச்சார பாணியில் ஈடுபடலாம் என்பதற்கே இக்கோரிக்கை).
3. நிறைய அதிகாரங்கள் இந்தக் குழுவிற்கு என இருந்தாலும்கூட, விசாரணையின் முடிவில் தண்டனை வழங்கும் அதிகாரமோ அல்லது தீர்ப்பு எழுதும் அதிகாரமோ இதற்குக் கிடையாது!
இந்தக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசாங்கம் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடை யாது! அந்தக் கூட்டுக் குழுவின் அறிக்கையை நிராகரிக் கவும்கூட அரசாங்கத்திற்கு உரிமை சட்டப்படி உண்டே!
இதற்குமுன் நான்கு முறை கூட்டுக் குழு விசாரணை (JPC) நடந்துள்ளதே, போஃபர்ஸ் பீரங்கி ஊழல், ஹர்ஷத் மேத்தா ஊழல், கோகோகோலா ஊழல், பங்கு மார்க் கெட்கள், இதனால் விளைந்த பலன் என்ன? தண்டிக்கப் பட்டவர்கள் எவராவது உண்டா?
எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைத்ததுண்டா?
எனவே, இதை எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிகளுக்கு (குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க.விற்கு) எதிராகப் பயன்படுத்த ஒரு பிரச்சார யுக்தியாக செயல்படத் துடிக்கின்றனர். அப்பாவி வாக்காளர்களை ஏமாற்ற - ஊடகங்கள் உதவுவதால் - இதில் வெற்றி பெற முடியுமா என்ற டெஸ்ட் செய்து பார்க்கின்றனர்!
மக்கள் ஏமாளிகள் அல்ல!
மக்கள் ஏமாளிகள் அல்ல; 2ஜி ஸ்பெக்ட்ரத்தினைப்பற்றி உண்மை, பனி விலகுவதுபோல், பலூனில் காற்று இறங்குவதுபோல் நாளுக்கு நாள் இறங்கி, உண்மைகள் உலகிற்கு வெளிச்சமாய்த் தெரியத் தொடங்கிவிட்டது!
No comments:
Post a Comment