அண்ணா நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் விளக்கம்
சென்னை, டிச.30- அண்ணா அமெரிக்காவுக்குச் செல்ல பழைய கோட்டை இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களிடம் கேட்டார் என்னும் வரலாற்று சம்பவத்தை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கிக் கூறினார்.
அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் எனும் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கத் தில் 25.12.2010 அன்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
பெரியாரின் தலைமகன் அண்ணா
தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் குடும்பத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றிலே அவருடைய சாதனைகளிலே சிறப்பான அம்சங்களை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் அவர்களோடு அன்றாடம் பழகிய வர்கள், நேரத்தை செலவிட்டவர்கள்? நல்ல கருத்துகளைத் திரட்டி ஒரு சுவையான நூலை ஒரு வார ஏடு நல்ல பணியை - பெருமைக்குரிய இந்தப் பணியை செய்திருக்கிறது.
அண்ணா 100 அரிய தருணங்கள்
இதை அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் என்ற தலைப்பில் நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்கள். அண்ணாவின் குடும்பம் இங்கே வந்திருக்கிறது. ரத்த சம்பந்தமுள்ள குடும்பம். நாமும் அண்ணாவின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்தான். பிரித்துக்காட்ட முடியாது.
அந்த வகையிலே அண்ணா அவர்களின் மகன் ராஜேந்திரன் வந்திருக்கிறார். அண்ணா அவர் களுடைய மருமகள் இங்கே வந்திருக்கின்றார்.
வடக்கத்தியர் தயாரித்த நூல்
எனவே இந்தக்கூட்டம் ஒரு சிறப்பு வாய்ந்த கூட்டம். அதுவும் ஒரு வார ஏடு. ஆக்க ரீதியான பணியை அற்புதமாக இதைச் செய்திருக்கிறது. 14 மொழிகளிலே வரக்கூடிய வார ஏடு. அது மட்டுமல்ல. அந்த வார ஏட்டின் தரம் பாராட்டக் கூடிய அளவிலே இருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் படிக்கக் கூடியவன் என்ற முறையிலே சொல்லுகின்றேன். ஒரு காலத்திலே திராவிடர் இயக்கம் என்று சொன்னால் ஏன் இன்றைக்குக்கூட சிலருக்கு அந்த மயக்கம் இருக்கிறது. தயக்கம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் மயக்கமோ, தயக்கமோ இல்லாமல் வடக்கே இருந்து வந்தவர்கள் இப்படி ஓர் அற்புதமான நூலை தமிழகத்திற்குத் தந்திருக் கிறார்கள் என்று சொன்னால் பெரியார் வென்றி ருக்கிறார்.அண்ணா வென்றிருக்கிறார். கலைஞர் வென்றிருக்கிறார். திராவிடர் இயக்கம் வென்றிருக் கிறது. (பலத்த கைதட்டல்).
போரில்லாமல் வென்றிருக்கிறது. இரத்தம் சிந்தாமல் வென்றிருக்கிறது. அமைதிப் புரட்சியி னாலே வென்றியிருக்கிறது என்பதற்கு இதுதான் அடையாளம். எனவே முதலில் புத்தகத்தைப் பாராட்டுவதை விட, அவர்களுடைய துணிச்சலை யும், செயலையும் அனைத்துத் தமிழர்கள் சார்பாக பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றோம் (கைதட்டல்).
அண்ணா மாபெரும் கடல்
அவர்கள் சொன்னதைப்போல அண்ணா அவர்கள் ஒரு மாபெரும் கடல். இமயம் போன்ற வர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலே பார்க்கக்கூடிய அளவிற்கு அத்துணைபேருக்கும் பொது மனிதராகக் காட்சியளிக்கக்கூடிய ஆற்றல் அண்ணா அவர்களிடம் உண்டு.
அவரை எழுத்தாளராகப் பார்த்து சுவைக்கின்ற வர்கள் சிலர். அவரைப் பேச்சாளராகக் கேட்டு பன்மடங்கு அதை நினைவூட்டிக்கொள்ளக் கூடியவர்கள் பலர். அண்ணா அவர்களுடைய நாடகங்களைப் பார்த்தவர்கள் பலர். அவருடைய திரைக்காவியங்களைப் பார்த்து நினைவிலே வைத்துக்கொண்டவர்கள் பலர்.
அரசியலில் அண்ணா பதித்த முத்திரை
அவருடைய ஆற்றலைப் பார்த்து, அவருடைய ஆங்கிலப் பேச்சைக் கேட்டு அதற்கு அடிமையான வர்கள் பலருண்டு. அவர்கள் அரசியலுக்கு வந்து அவர் பதித்த முத்திரை இன்னமும் அவரு டையதாகவே இருக்கிறதே தவிர, அதை வெல்லு வதற்கு யாரும் வரவில்லை. அதைப் புரிந்து கொண்டு. அண்ணாவின் தலைசிறந்த தம்பியாக இருந்து அய்ந்தாவது முறையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றார் முதல்வர் கலைஞர்.
அண்ணாவின் இதயம்
அவர் மிகச்சிறப்பாக அண்ணா அவர்களைப் புரிந்து கொண்டார் என்பதற்கு அடையாளம்தான் அண்ணாவின் இதயத்தை இரவல் வாங்கினார். எனவேதான் இத்துணை சாதனைகளையும் மனிதநேயத்தோடு நடத்தக்கூடிய இத்தனை சாதனைகளையும் செய்திருக்கிறார். எனவே அண்ணாவின் மூளையைவிட, அண்ணா வின் சிந்தனையைவிட, அண்ணாவின் மற்ற, மற்ற ஆற்றலைவிட அவருடைய இதயம் இருக்கிறதே-அதுதான் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடிய அளவிலே சிறப்பாக இருக்கிறது என்று இப்படி ஒரு தனித்தன்மையோடு அண்ணா அவர்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்திலே பார்க்கக் கூடிய ஒரு பல்கலைக் கொள்கலன் என்று பார்க்க வேண்டும். அவ்வளவு ஆற்றல் மிகுந்தவர்கள். எனவே எதைச் சொல்லுவது, எதை விடுவது என்பதி ருக்கிறது.
இதுவரையிலே வெளிவராத செய்திகள்
சிறு புத்தகத்தை அண்ணாவின் 100 அரிய தருணங்கள் என்று காட்டியிருக்கின்றார்கள். தனித்த சுவையான சம்பவங்கள் இதிலே இடம் பெற்றிருக்கின்றன.
இந்தப் புத்தகத்திலே நம்முடைய இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.அவர்கள், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராசாமி அவர்கள், அவருடைய வாழ் விணையர் கல்யாணி அம்மாள் அவர்கள் இப்படி பலரை அவர்கள் தேர்வு செய்து, தனிப்பட்ட முறையிலே கேட்டு, இதுவரையிலே வராத செய்திகளை எல்லாம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
இது தமிழிலே ஒரு நல்ல முயற்சி. பொதுவாக ஆங்கில நூல்களிலேதான் ஒரு தலைவரைப் பற்றி எழுதும்பொழுது அந்தத் தலைவருடைய சிறப்பை மற்றவர்களிடமிருந்து கேட்டு எழுவதைவிட இன்னொரு முறையைக் கையாளுவார்கள்.
உதவியாளரால் அற்புதமான செய்திகள்
யார் உதவியாளராக இருந்தார்களோ அந்த உதவியாளரே புத்தகத்தை எழுதக்கூடிய அளவுக்கு செய்வார்கள். அதில் அற்புதான பல்வேறு கிடைக்காத செய்திகள் அதன் மூலம் வெளி வருவதைக் காணலாம்.
வின்ஸ்டன் சர்ச்சில் எவ்வளவு பெரிய இரும்பு மனிதர் என்பது எல்லோருக்கும் தெரியும். சர்ச்சில் அவர் எவ்வளவு துணிச்சலோடு இருந்தார். லண்டன் நகரில் குண்டு விழுந்தபொழுது அவர் எப்படி செயல்பட்டார் என்பது இவை எல்லாம் வரலாற்றுச் செய்திகள். போரின்பொழுது சர்ச்சிலின் நிலை
ஆனால் சர்ச்சில் அந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்தார். எப்படி நடந்துக்கொண்டார்? மனிதராக எப்படி அந்தப் பிரச்சினைகளை அணுகினார் என்பதைப்பற்றி எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பெரிய தலைவர்களிடமிருந்து இதுபோன்ற செய்தி களைத் தெரிந்துகொள்ள முடியாது.
அவர்களுக்கு உதவியாளர்கள் இருக் கிறார்கள் அல்லவா? அவரை வைத்தே ஒரு புத்தகம் எழுதி வாங்கியிருக்கிறார்கள்.
நீண்ட காலத்துக்கு முன்னாலே அந்தப் புத்தகம் வெளிவந்தது. சர்ச்சில் என்னென்ன செய்வார்? எப்படி எல்லாம் செயல்படுவார்? வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இப்படிப்பட்ட ஆற்றல் எப்படி எல்லாம் வந்தது என்று தெரிந்து கொள்ளக் கூடிய சுவையான அம்சங்கள் இருக்கும்.
அதேபோல இந்த நூலிலே அறிஞர் அண்ணா 100 அரிய தருணங்கள் என்ற இந்த நூலிலே பல அரிய தகவல்கள் அடங்கியிருக் கின்றன. நூலின் விலை 75 ரூபாய். நல்ல வாய்ப்பாக இன்றைக்கு மட்டும் 50 ரூபாய்க்குத் தருகிறார்கள். நீங்கள் அனைவரும் அந்த நூலை வாங்கிப் படிக்க வேண்டும். விலை கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும். அப்படி வாங்கிப் படித்தால் ஒரு பதிப்பு அல்ல. பல பதிப்பு வந்தது என்பதை இந்த பதிப்பாளர்களுக்குக் காட்ட வேண்டும்.
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்
இந்தப் புத்தகத்திலிருந்து ஒன்றிரண்டு செய்தியை சொல்லிவிட்டு, மற்ற செய்திகளை சொல்லுகிறேன். குறிப்பாக இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் இந்த இயக்கத்திலே கொள்கை ரீதியாக வளர்ந்தவர். இன்றைக்கும் அவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருக்கக்கூடியவர். அரசியலிலே அவருடைய நிலைப்பாடுகள், வண்ணங்கள் மாறியிருக்க லாம். ஆனால் அடிப்படையிலே அவருடைய எண்ணங்கள் என்றைக்கும் மாறியதாக நாம் கொள்ள முடியாது.
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் அண்ணா அவர்களுடன் தனக் கேற்பட்ட ஒரு சம்பவத்தை சொல்லியிருக் கிறார். அதை இந்த நூலிலே எடுத்துப் போட்டி ருக்கின்றார்கள்.
இதை வைத்து எனக்கு வேறு செய்தி நினைவுக்கு வந்தது. அந்த செய்தியையும் இதோடு இணைத்துச் சொல்ல வேண்டுமென்று விரும்புகின்றேன்.
அண்ணா அவர்கள் எளிமையானவர்
அண்ணா அவர்களுடைய எளிமையை இங்கே சொன்னார்கள். எளிமையாகப் பொது வாழ்க்கையில் இருந்தால் பிரச்சினையே இல்லை என்று வேலூர் வி.அய்.டி. பல்கலைக் கழக வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் அழகாகச் சொன்னார். ரொம்பவும் அடிப்படையான தேவையான அறிவுரை. இன்றைக்கு பல சிக்கல்களுக்கே காரணம் அந்த எளிமையை விட்டுவிட்டு ஆடம்பரமாக எல்லாம் இருக்க வேண்டும் என்று நினைப்பதன் கோளாறுகள் ஏராளம். அந்த வகையிலே அண்ணா அவர்கள் அவ்வளவு எளிமையானவர்.
அண்ணா முதலமைச்சரான நிலையில்...
அவ்வளவு சிக்கனம். காரணம் அண்ணா அவர்கள் பயின்ற குருகுலம். தந்தை பெரியாரிடத்திலே அவர்கள் பயின்ற காரணத்தினாலே பெரியார் அவர்களிடத்திலே இருந்த எளிமை. அந்த சிக்கனம் அண்ணா அவர்களுக்கு இயல்பாகவே ஆகிவிட்டது.
அண்ணா முதலமைச்சராகி பெரிய நிலைக்கு வந்துவிட்டார்.இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சொல்லுகிறார்: அண்ணா அவர்கள் முதன்முதலாக அமெரிக்காவுக்குப் போகிறார்.
பழைய கோட்டு கொண்டு வா!
அந்த சமயத்தில் என்னை கூப்பிட்டனுப்பினார். நீ சினிமாவில் கோட்டெல்லாம் போட்டு நடிச்சிருப்ப. அதிலே ஒன்றை எடுத்துக்கொண்டு வா. என் சைசுக்கு ஆல்ட்டர் செய்து தைத்துக்கொள்ளலாம் (சிரிப்பு-கைதட்டல்). அண்ணா நினைத்தால் ஆயிரம் பேர் அவருக்கு சூட்டு கோட்டு தைத்துக்கொடுப்பதற்கு தையல்காரர்களே தயாராக இருப்பார்கள். மற்றவர்கள் தரவேண்டிய அவசியம் இல்லை.
ஆனால் அண்ணா அவர்களுக்கு இருந்த சிந்தனை பாருங்கள். இதிலே இருக்கிற தத்துவம் மிக முக்கியம். இந்த சம்பவத்தை விட இந்தத் தத்துவம் மிக முக்கியம்.
பழசெல்லாம் எதற்கு?
பழசெல்லாம் எதற்கு, புதுசாவே தைத்துவிடலாம் என்று சொன்னேன். வேண்டாம்பா. அமெரிக்கா போய்விட்டு வந்தவுடன் அப்புறம் எதுக்கு கோட்டு என்று சொன்னார். நான் விடவில்லை. புதிதாகவே தைத்துக் கொடுத்துவிட்டேன் என்று எஸ்.எஸ்.ஆர். (சொல்லுகிறார்.
எதையும் பயன்கருதி செய்பவன்தான் பகுத்தறிவுவாதி அண்ணா ஒரு தலைசிறந்த பகுத்தறிவுவாதி. பகுத்தறிவு எல்லா துறைகளிலும் வாழ்க்கைக்கு முறையாகப் பயன்பட வேண்டும்.
அண்ணா பார்த்தார், ஒருநாள்தானே அதற்குப் பிறகு கோட்டு எனக்குப் பயன்படாதே என்று நினைத்தார்.
அண்ணாவுக்கு இந்த சிந்தனை எப்படி வந்தது?
இந்த சிந்தனை எல்லாம் அண்ணா அவர்களுக்கு எப்படி வந்தது என்று சொன்னால் இன்னொரு சுவையான சம்பவம்.
அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களுடன் வடநாட்டிற்குப் போகிறார். அண்ணா அவர்களுடன் பழகியவர்களைக் கேட்டால் ரொம்பத் தெளிவாகத் தெரியும்.
அண்ணா அவர்களுடைய பொழுது போக்கே கூட, பயணங்கள் செய்யும்பொழுது, காரிலே பயணங்கள் செல்லும்பொழுது அல்லது மற்ற இடங்களிலே இருக்கும்பொழுதெல்லாம் அண்ணா அவர்கள் எப்படி நேரத்தை செலவழிப்பார் என்றால், தனியே இயக்கம் ஆரம்பித்த பிற்பாடுகூட அய்யா அவர்களோடு இருந்த காலத்தில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்பதை இளைய தலைமுறையினருக்கு, நண்பர்களுக்கு வரிசை யாகச் சொல்லுவார்கள்.
பழைய சம்பவங்களைச் சொல்லுவார்கள்
பேராசிரியராக இருக்கலாம், கலைஞராக இருக்க லாம், ராஜாராமாக இருக்கலாம் அல்லது மற்ற நண்பர்களாகக்கூட இருக்கலாம். இவர்களைப் போன்ற வர்களுடன் சென்றால் பழைய நடந்த சம்பவங்களை எடுத்துச்சொல்லுவார்கள்.
பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் கூட அண்ணா அவர்கள் எப்பொழுதும் சொல்லத் தயங்கியதில்லை. அப்பொழுது ஒரு சம்பவத்தை சொன்னார். - (தொடரும்)
No comments:
Post a Comment