Thursday, September 20, 2018

தந்தை பெரியார் சிலைமீது செருப்பு வீச்சா? எத்தனையோ செருப்புத் தோரண வரவேற்புகளை சந்தித்தவர் பெரியார்

 தூண்டிய குற்றவாளிகளை விட்டுவிட்டு
வெற்று அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை!



தந்தை பெரியார் சிலைமீது செருப்பை வீசிட தூண்டுகோலாக இருப்பவர்கள் தண்டிக்கப் படவேண்டும் - எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை என்று திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தந்தை பெரியார் அவர்களது 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை அகிலமே கொண்டாடி, அவர்தம் சிலைகளுக்கு மட்டுமல்ல, அவர் தந்த சுயமரியாதை - பகுத்தறிவு என்ற சீலத்திற்கும் - கொள்கை லட்சியங் களுக்கும் மாலை போட்டு வரவேற்று, பெரியார் ஓர் மாமருந்து என்பதை உணர்ந்து கொண்டாடுகிறார்கள்!

தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன! அவர் வாழும்போது சந்தித்த காட்டுமிராண்டிகளின் எதிர்ப்பு- இன்னமும் தொடர்கிறது என்பதற்குச் சரியான அடையாளமாக அவரது சிலை மீது செருப்பு வீசுவதுபோன்ற கீழ்த்தர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. காவிகள் இந்த கயமைச் செயல்களில் ஈடுபட்டு ஓடி ஒளிகின்றன.

செருப்புத் தோரண வரவேற்புகள்

தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே செருப்புத் தோரணங்களின் ‘‘வரவேற்பை''ச் சந்தித்து வந்தார்! (சிவகங்கையில்).

கடலூரில் இன்று கம்பீரமாக நிற்கும் சிலை எழுப்பப் பட்ட இடம்- அவர்மீது 1944 இல் செருப்பு வீசப்பட்ட அதே இடம்!

எந்த எதிர்ப்பையும், எதிரிகளின், அநாகரிக காட்டு மிராண்டித்தன எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்தித்த அவர், நமது கொள்கை வயலில் பயிர் வளர போடப்படும் ‘உரங்கள்' என்று சொல்லி எதிர் கொண்டவர்!

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இராமனைக் கும்பிடுவோர், அவர்களின் இராமாயணத்தில் 14 ஆண்டுகள் சிம்மா சனத்தில் இருந்து ஆண்ட இராமனின் ஒரு ஜோடி (இரண்டு) செருப்புகளுக்கு ‘‘செருப்புக் காதலர்களாகி'' - ‘‘திராவிட'' நெருப்புடன் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத் தலைவர்கள் கண்டனம்

செருப்பு வீசியவர்களை தமிழக அரசு உடனடியாகக் கைது செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்புள்ள கட்சித் தலைவர்கள், தி.மு.க. தலைவர் தளபதி சகோதரர் மு.க.ஸ்டாலின், காங் கிரசு கட்சியின் தமிழகத் தலைவர் சு.திருநாவுக்கரசர், மேனாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் சகோதரர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமா வளவன், தமிழ் மாநில காங்கிரசு கட்சித் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் போன்ற பல தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, காவல் துறை - இத்தகைய கயவர்கள்மீது கடுந் தண்டனை தரும் சட்டங்கள் பாய்ந்து, தமிழ்நாடு கலவர பூமியாகிவிடாமல் தடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

‘‘எய்தவனிருக்க அம்பை நோவது சரிதானா?'' என்ற பழமொழிக்கொப்ப இந்த முயற்சிகளை தொடங்கி வைத்தவர், ஒரு காலிப் பயல்கூடப் பயன்படுத்த அஞ்சும் பண்பற்ற கொச்சை சொற்களை தந்தை பெரியார் மீதும் (அன்று), நேற்று உயர்நீதிமன்றத்தின்மீதும், காவல்துறை மீதும் (இன்று) வீசியுள்ள நபர் இன்னமும் போலீஸ் பாதுகாப்புடன் மேடைகளில் ஏறி, புஸ்வாணம் விட்டுள்ளார்.

இது வடநாடு அல்ல- பெரியார் மண்!

தூத்துக்குடி மாணவியின்மீது உடனடியாகப் பாய்ந்த தமிழக காவல்துறையின் நடவடிக்கை, இத்தகைய காவி, காலி இராஜாக்கள்மீதும், நடவடிக்கை எடுத்து பாயத் தயாராகவில்லையே, ஏன்? இந்த இரட்டை அளவுகோல் ஏன்? மனு ஆட்சியா? ஜனநாயகமா? என்ன இங்கே நடைபெறுகிறது?

விஷமக்கார வீணர்களே, கலவரங்களைத் தூண்டி  இந்துத்துவா வாக்கு வங்கியை ஒருமுனைப்படுத்திடும் தேர்தல் செப்படி வித்தைகளுக்கு இது ஒன்றும் வடநாடு அல்ல!

பெரியார் மண்! திராவிட பூமி! இங்கு மக்களின் எதிர்வினைகள் அரசியல் ரீதியாக, ஜனநாயக வழிமுறைகளையொட்டியே வருமே தவிர, கலவரங்கள்மூலம் ஏற்படும் என்று கனவு கண்டு தூண்டிலைத் தூக்க நினையாதீர்!

காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்யும் புத்தி கெட்ட புல்லர்கள் நீங்கள் என்பதை விரைவில் உணர்வீர்கள்!

‘‘மத்தியில் எங்கள் ஆட்சி, மாநிலத்தில் எங்களுக்கு - தோப்புக்கரணம் போடும் ஒரு முதுகெலும்பற்றவர்கள் ஆட்சி'' என்பதால்தானே, இந்த வாய்க் கொழுப்பு, வக்கணை, வன்செயல், தரங்கெட்ட தறுதலைத்தனம்! எவ்வளவு காலம் இந்தக் கோலம் - பார்ப்போம்!

தூண்டியவர்களை விட்டுவிட்டு அம்புகளைத் தண்டித்துப் பயனில்லை!

அந்த ஆணவத்திற்கு வரும் தேர்தல்கள் மூலமும், மற்ற ஜனநாயக வழியில், அறப்போர்களின்மூலமும் விரைவில் இதன் தாக்கத்தை உணர்வீர்கள். இறுதியில் சிரிப்பவர்களே வெற்றி பெற்றவர்கள்!

அணையப் போகும் விளக்கு சற்று வெளிச்சம் காட்டுவது வழமைதானே!

தூண்டியவர்களை விட்டு, அம்புகளுக்குத் தண்டனை கொடுத்துப் பயனில்லை!








தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

சென்னையில் தமிழர் தலைவர் பேட்டி

தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே

மதச்சார்பின்மை - சமூகநீதி - சம வாய்ப்பு - பெண்ணடிமை ஒழிப்பு கொள்கைகளுக்கு வெற்றி!


சென்னை, செப்.17   தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே, மதச்சார்பின்மை - சமூகநீதி - சம வாய்ப்பு - பெண்ணடிமை ஒழிப்பு கொள்கைகளுக்கு வெற்றி கிட்டியது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (17.9.2018) காலை சென்னை பெரியார் திடலில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இணையற்ற அறிவுப் புரட்சி

20 ஆம் நூற்றாண்டில் பிறந்து, 21 ஆம் நூற்றாண்டிலும், இனி வரக்கூடிய நூற்றாண்டிலும் இணையற்ற அறிவுப் புரட்சியை நிகழ்த்தும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுடைய 140 ஆம் ஆண்டு பிறந்த நாளாகும் இன்று. அவர் கண்ட வெற்றிகளையெல்லாம் ஒன்று திரட்டி, இப்பொழுது தோன்றியிருக்கக்கூடிய அறைகூவல்களையெல்லாம் சந்திக்கக்கூடிய சூளுரை நாளாக இந்த நாளை திராவிடர் கழகம், திராவிடர் இயக்கம் ஏற்கிறது.

மதச்சார்பின்மை, சமூகநீதி, சமவாய்ப்பு, பெண்ணடிமை ஒழிப்பு இத்தகைய கொள்கைகள் இன்றைக்கு ஆழமாக மக்கள் மத்தியில் பரவியிருக்கின்ற இந்தக் கொள்கைகளுக்கு தந்தை பெரியாருடைய 80 ஆண்டுகால தொண்டினாலே, மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்பை உருவாக்கிய அந்த சூழல் இன்றைக்கு மாற்றப்பட்டு விடுமோ என்கிற அச்சம் பல நேரங்களில் இந்தியா முழுவதும் இருக்கிறது. காரணம், மத்தியில் உள்ள காவி ஆட்சி, மதச்சார்பின்மையையும், ஜனநாயகத்தையும் குழிதோண்டி ஒரு பாசிசத்தை இன்றைக்கு வளர்த்துக் கொண்டிருக்கலாம். மாற்றுக் கருத்துக்கே இடமில்லை என்கிற நிலை இருக்கிறது. ஜனநாயகம் என்பதே, ஆரோக்கியத்திற்கு அடையாளமே மாற்றுக் கருத்துதான்.

தந்தை பெரியார் என்கிற ஓர் ஆயுதம்தான்

எனவே, அப்படிப்பட்டவர்கள் தங்களுடைய வரம்பு மீறி நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், அதற்கு ஒரே தடுப்பு தந்தை பெரியார் என்கிற ஓர் ஆயுதம்தான்.

எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் மறைந்து உருவத்தால், உடலால் 45 ஆண்டுகள் ஓடிய நிலையிலும், இன்றைக்குப் பெரியார் தத்துவம் ஜீவ நதியாக உலகம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கின்றது. பெரியார் என்கிற மாமருந்து, இன்றைக்கும், நாளைக்கும் வருகின்ற நோய்களுக்கெல்லாம், மூடநம்பிக்கை நோய்களுக்கெல்லாம் ஜாதி நோய்க்கெல்லாம், தீண்டாமை நோய்க்கெல்லாம், மதவெறி நோய்க்கெல்லாம், பெண்ணடிமை நோய்க்கெல்லாம் அதுதான் ஒரே மாமருந்து என்று கருதுகின்ற காரணத்தினாலே, அந்தப் பணியை நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இன்றைக்கு கிழக்கும் - மேற்கும் ஏந்தி அதை செய்து கொண்டிருக்கின்றது.

பெரியார் உலகத் தலைவராக உயர்ந்து காணப்படுகிறார்

பெரியார் உலகப் பெரியாராக - உலகத் தலைவராக இன் றைக்கு உயர்ந்து காணப்படுகிறார்.

பெரியார் வாழ்க! பெரியார் கொள்கை வெல்க!

பிள்ளையார் ஊர்வலம் என்பதே கலவரத்திற்காகத்தான்!

செய்தியாளர்: நேற்றைய தினம் விநாயகர் சதுர்த்தியின் ஊர்வலம் போது பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பதே  ஆங்காங்கே கூலிப்படைகளை தயாரித்து, ஆங்காங்கே பிள்ளையாரை நட்டு வைத்து, பிறகு கடலில் கரைப்பது என்பது இருக்கிறதே, இதற்கு முன்னால் இருந்ததைவிட இந்த ஆண்டு குறைந்திருக்கிறது என்பது அவர்களே ஒப்புக்கொண்ட ஒரு செய்தி.

இந்தப் பிள்ளையார் ஊர்வலம் என்பதே கலவரத்திற் காகத்தான் அதற்கு முன்பெல்லாம் பிள்ளையாரை கும்பிடுகிற மக்கள், வீட்டிற்குள் பிள்ளையாரை வைத்துக் கும்பிட்டுவிட்டு, கிணற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள்.

பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று, ஆட்டம் பாட்டம் என்று நடத்தி, காவல்துறையினரை தாக்குவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, உயர்நீதிமன்றத்தைப்பற்றி தாறுமாறாக கொச்சையாகப் பேசுவது இப்படிப்பட்டவற்றை நடத்தி, கலவர பூமியாக தமிழ்நாட்டை ஆக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இது பெரியார் மண்- திராவிட மண்!

ஒருபோதும் அவர்கள் வெற்றி பெற முடியாது. காரணம், இது பெரியார் மண்; திராவிட மண். இங்கே மனிதநேயம்தான் தழைக்குமே தவிர, மதவெறி ஒரு போதும் தழைக்காது.

இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.
எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது?

பெரியார் சிலை மீது செருப்பு வீசியவர்கள்

அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள்?



சென்னை, செப்.17   எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது? என்றும், பெரியார் சிலைமீது செருப்பு வீசியவர்கள் அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள்?  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (17.9.2018) காலை சென்னை பெரியார் திடலில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

மக்கள் மன்றம் தண்டனை வழங்கும்!

செய்தியாளர்: எச்.இராஜா அவர்கள் நீதிமன்றம் குறித்து தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: அவர் தரக்குறைவான வார்த்தை களைப் பேசுவது இது முதன்முறையல்ல. எல்லோரையும் தரக்குறைவாகப் பேசுவதற்குப் பெயர்தான் எச்.இராஜா என்பது. இதுவரையில் பலமுறை அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையும், அரசும் சும்மா இருந்த தினுடைய விளைவு, அவர் நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால், நீதிமன்றத்தையே மிகவும் தரக்குறைவாகப் பேசுவது, காவல்துறையை இன்னும் அசிங்கமாகப் பேசியிருக்கிறார் என்று அவர்மீது வழக்குப் பதிவு செய்துவிட்டோம் என்பது பயனளிக்காது.

ஏற்கெனவே ஒரு மாணவி, ‘‘பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக!'' என்று உணர்ச்சிவயப்பட்டு எங்கோ ஓரிடத்தில் சொன்னதை, உலகம் முழுவதும் அதைப் பிரபலப்படுத்தி கைது செய்தார்கள்.

எச்.இராஜா விஷயத்தில் சட்டம் என்ன செய்யப் போகிறது?

ஏற்கெனவே பெண் பத்திரிகை செய்தியாளர்களைக் கொச்சைப்படுத்திய எஸ்.வி.சேகர் போன்றவர்கள் இன்னமும் வெளியில்தான் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவேதான், சட்டம்- ஒழுங்கு தூங்கிக் கொண்டிருக் கின்றபொழுது, குறட்டை விட்டுக் கொண்டிருக்கின்றபொழுது, இவர்களுக்கெல்லாம் அந்தத் துணிச்சல் ஏற்படுகிறது.

எப்படியென்றாலும், அதனுடைய விளைவுகளிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.

நீதிமன்றங்கள், காவல்துறை, அரசு எல்லாவற்றையும் தாண்டி, மக்கள் மன்றம் அதற்கான தண்டனையை வழங்குவார்கள்.

பெரியார் பிறந்த நாள் சூளுரை

செய்தியாளர்: சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கும், திருப்பூரில் உள்ள பெரியார் சிலைக்கும் செருப்பு மாலை போட்டிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: பெரியாரைப் பொருத்தவரையில், ஒரு செருப்பு போட்டால், இன்னொரு செருப்பு எங்கே என்று கேட்டு பழக்கப்பட்ட ஒரு தலைவர். எனவே, இந்த சலசலப்புகளால் அவரை அவமானப்படுத்தி விட முடியாது.

அதேநேரத்தில், செருப்பைத் தூக்கியவர்கள், அடுத்து எதைத் தூக்கப் போகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.

இதையெல்லாம் ஏன் இந்த அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது. இதை அரசு அனுமதித்தால், மக்கள் பதில் கூற ஆரம்பித்தால், நாட்டில் கலவரங்கள் வெடிக்கும். கலவரங்கள் வெடிக்காமல், கொள்கை ரீதியான விடை இதற்குக் கிடைக்கவேண்டுமானால், இத்தகைய ஆட்சிகளுக்கு விடை கொடுப்பதுதான் ஒரே ஒரு வழி. அதுதான் பெரியார் பிறந்த நாள் சூளுரையாகும்.

இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.

தந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி


சென்னை, செப்.17 திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழா இன்று (17.9.2018) சென்னை பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது.

பெரியார் திடலில் பெருந்திரளாக கூடிய கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஊர்வல மாக சென்று பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம் மையார் சிலைக்கு மாலை அணிவித்தார்கள். பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர பெரியார் சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெரியார் நினைவிடத்தில் கழகத் தோழர்கள் புடைசூழ தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் உறுதிமொழியை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சொல்ல, அவரைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் உறுதி மொழி கூறி சூளுரை ஏற்றனர்.

அன்னை மணியம்மையார் நினைவிடம், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப் பட்டது.

கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், சட்டத்துறைத் தலைவர் வழக்கு ரைஞர் த.வீரசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி இரா.பரஞ்ஜோதி, பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர்  தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.ரத்தினசாமி, செயலாளர் தே.செ.கோபால், திராவிடர் வரலாற்று  ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன், திருமதி ராஜம்மாள், கவிஞர் அரிமா,  வரியியல் வல்லுநர் ச.ராசரத் தினம், ஆடிட்டர் ராமச்சந்திரன், டாக்டர் இராஜ சேகரன், வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, திருமதி. மோகனா அம்மாள், பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, மயிலை சேதுராமன், பெரியார் திடல் பொது மேலாளர் ப.சீதாராமன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் டி.கே.நடராஜன், விடுதலை அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் உள்ளிட்ட கழகப்பொறுப் பாளர்கள் கலந்துகொண்டனர்.

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளான இன்று (17.9.2018) பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கும், பெரியார் நினைவிடம், அன்னை மணியம் மையார் நினைவிடம் மற்றும் பெரியார் சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடம் ஆகிய இடங்களில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, திராவிட தொழிலாளரணி, பெரியார் மருத்துவமனை, திராவிடன் நலநிதி, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பு, அகில இந்திய பிற்படுப்பட்டோர் பணியாளர் நலச்சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பெரியார் திடல் அனைத்து துறை பணி தோழர்கள் மற்றும் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கழகத் தோழர், தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

மதிமுக சார்பில் நினைவிடத்தில் மரியாதை

பெரியார் திடலுக்கு வருகைதந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வர வேற்றார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மதிமுக பொறுப்பாளர்கள் மல்லை சத்யா, செங்குட்டுவன் மற்றும் மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் வருகை தந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பெரியார் நினைவிடத் தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத் தினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி (ஏஅய்ஓபிசி), வாய்ஸ் ஆப் ஓபிசி ஆசிரியர் ஜெ.பார்த்தசாரதி மற்றும் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கும், நினை விடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இலவச மருத்துவ முகாம்

தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாளை யொட்டி சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.

அன்னை நாகம்மையார் அரங்கம் திறப்பு

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் 90 வயதை கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு இன்று(17.9.2018) காலை பெரியார் திடலில் பாராட்டு, வாழ்த்து, விருதளிப்பு விழாவிற்கு வருகை தந்த திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் விழா தொடங்குவதற்கு முன்பு பெரியார் திடலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள அன்னை நாகம்மையார் அரங்கத்தை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிஅவர்களின் முன்னிலையில் திறந்து வைத்தார்.

தொண்டறச் செம்மல்களுக்குப்

பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு

இதையடுத்து தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவையொட்டி, தொண்ணூறு வயதைக் கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு! காலை 10.30 மணியளவில் நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் இனமான பேரா சிரியர் க.அன்பழகன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் சங்கரய்யா அவர்களின் சார்பில் தோழர் சுகந்தி அவர்களும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லக்கண்ணு ஆகியோர் சிந்தனைசார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.

ஏன் அவர் பெரியார்? கருத்தரங்கம்

தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்பு கருத்தரங்கம், திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி   தலைமையில் நடைபெற்றது. பொறியாளர் இ.ச.இன்பக்கனி வரவேற்றார். வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அறிமுக  உரையாற்றினார். பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பார்வையில்... வழக்குரைஞர் கிருபா முனுசாமி, பயன்பெற்றோர் பார்வையில்... ஊடக வியலாளர் கவிதா சொர்ணவல்லி, பெரியாருக்கு பட்டம் அளித்த போராளிகள் பற்றி... எழுத்தாளர் ஓவியா ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றினார்.

பெரியார் நினைவிடத்தில் தோழர்கள் உறுதிமொழி

கடவுள் இல்லை கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி

ஜாதியை கடவுள் உருவாக்கினார், மதத்தை கடவுள்பரப்பியிருக்கிறார்,  பெண்ணடிமையை கடவுள் பாதுகாத்துக்கொண்டிருக்கிறார் என்பதற்காக கடவுள் மறுப்பை, மனித நேயத்தை அனைவருக்கும் அனைத் தும் என்ற சமூக நீதியை காப்பதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் 95ஆண்டு காலம் வாழ்ந்த பெரியார் மறைந்த பிறகும், உடலால் மறைந்த பிறகும், தத்துவமாக, உலகத் தத்துவமாக உயர்ந்து நிற்கிறார்.

வெல்லும் வழி- அவர் சொல்லும் முறை எல்லா வற்றிலும், உலகளாவிய சிந்தனையாளராக நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்து ஈரோட்டுப் பெரியாராகி, உலகத் தலைவராக, கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும், மேலும் கீழும் அய்யிரண்டு பத்துதிசையிலும் வெல்லக்கூடிய நம் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய 140ஆவது ஆண்டு பிறந்த நாளாகிய இன்று அவர் இட்ட பணிகளை அவர்கள் போட்டுத்தந்த பாதையில், எந்தவித சபலத்திற்கும் ஆளா காமல், செய்து முடிப்போம் என்று அவருக்குப் பிறகு தலைமையேற்ற அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையில் உறுதியேற்ற நாம், இந்நாளில் அதை மேலும் புதுப்பித்துக்கொண்டு, பெரியார் பாதையில் ஆயிரம் எதிர்ப்புகள், பல்லாயிரம் ஏளனங்கள், எத்த னையோ கண்டனங்கள், அடக்குமுறைகள் எதுவந் தாலும் எதிர்நீச்சல் அடித்து அவைகளைத் துச்சமெனக் கருதி  வெற்றி பெறுவோம், பயணத்தைத் தொடர்வோம், சூளுரைப்போம், சுயமரியாதை வாழ்வு வாழ்வோம்.

Tuesday, August 28, 2018

திமுக தலைவர், பொருளாளர் ஆகியோருக்கு பெரியார் திடலில் வரவேற்பு

 

சென்னை, ஆக.28 இன்று (28.8.2018) பிற்பகல் 2.30 மணியளவில் சென்னை பெரியார் திடலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தாய்க் கழகத்தின் சார்பில் வரவேற்று சிறப்பு செய்தார். திமுக தலைவராகப் பொறுப்பேற்றதை யடுத்து, பெரியார் திடலுக்கு வருகைபுரிந்த தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து,  பாராட்டி இயக்க வெளியீடுகளை வழங்கி, பயனாடை அணிவித்து சிறப்பு செய் தார். திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு  பயனாடை அணிவித்தும், இயக்க வெளியீடு களை வழங்கியும் சிறப்பு செய்தார்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதை சுடரொளிகள் நினைவிடங்களில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். தந்தை பெரியார் அருங்காட்சியகத்துக்கு வருகைதந்த திமுக தலைவர், பொருளாளர் ஆகியோரை  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வரவேற்று உபசரித்தார். சிறிது நேரம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அளவளாவினர்.

மேனாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு,  ஆ.இராசா,  மேனாள் அமைச்சர்கள் க.பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பி னர்கள் பி.கே.சேகர்பாபு, தாயகம் கவி, எழும்பூர் கே.ஆர்.இரவிச்சந்திரன், புரசை ரங்கநாதன், டி.ஆர்.பி. ராஜா, மகேஷ் பொய்யாமொழி மற்றும் உதயநிதி ஸ்டாலின், எழும்பூர் ஏகப்பன், திமுக பேச்சாளர் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா உள்ளிட்ட திமுக பொறுப்பாளர்கள் ஏராளமான வர்கள் வருகை தந்தனர்.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன்,  கழக சட்ட துறைத் தலைவர் த. வீரசேகரன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் உடனிருந்தார்கள்.

திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களே, வெற்றிப் பயணம் தொடர்க - தாய்க் கழகத்தின் துணையுண்டு - வாழ்த்துகள்!

உச்சிமோந்து வாழ்த்துகிறார் தமிழர் தலைவர்



திமுக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி.

1944 ஆகஸ்டு 27ஆம் தேதி சேலம் மாநகரில் திராவிடர் கழகம் பிறந்தது. கிட்டதட்ட அதே கால கட்ட நாளில் திமுகவின் தலைவராக பாசமிகு சகோதரர் தளபதி மானமிகு மு.க ஸ்டாலின்  அவர்கள் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டது - எத்தகைய வரலாற்றுப் பொருத்தம்!

'மானமிகு சுயமரியாதைக்காரன்' என்பதையே தனது பெருமித அடையாளமாகக் காட்டிக் கொண்ட, நமது இனமானத் தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரை தமது வாழ்நாள்  வழிகாட்டிகளாகவும், லட்சிய கலங்கரை விளக்கங்களாகவும் கொண்டு இறுதி மூச்சடங்கும் வரை 94 ஆண்டுகள் வாழ்ந்து "வரலாறாகி" விட்டார்!

மறைந்தார் என்பதைவிட நம் நெஞ்சங்களில் நிறைந்தார்; அவரது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளின் உணர்வில் கலந்து, ரத்த நாளங்களில் உறைந்தார் என்பது வரலாறு.

அறிஞர் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்து தலைமை தாங்கி நடத்திய நிலையில், அவரது மறைவு மிகப் பெரிய சோகத்தை 1969இல் ஏற்படுத்தியது; 'இனி என்னவாகுமோ' என்ற அச்சத்தை திராவிடர் இயக்கத்தின் எதிர்காலம் குறித்து உருவாக்கியது.

சோதனைகளை வென்று சாதனைகளாக்கும், ஆற்றல், பொறுப்பேற்று நடத்தும் அளப்பரிய தகுதி மானமிகு கலைஞருக்கே உண்டு என்று தொலைநோக்கோடு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்  கணித்து 'கட்டளை' இட்டு, அவரை முதல் அமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தார்! அந்தக் கணிப்பு சரியானது என்பதை வரலாற்றில் வைர வரிகளாக எழுதினார் மானமிகு கலைஞர். அண்ணா வழியில் அயராது உழைத்தார்; அய்யாவின் வழிகாட்டுதலை ஏற்றார்; உழைப்பின் உருவமானார்; அரை நூற்றாண்டில்  தமிழ்நாட்டையே 'புதிய தமிழ்' நாடாக்கி, வரலாறு படைத்த பின்பே வரலாறானார்; இன்று  அவர் திராவிடர் இயக்க லட்சிய பாடமானார் -  வெற்று இடமில்லை இங்கு! கற்றுப் பயன் பெறுவோர் ஏராளம்!

களத்தில் 14 வயது முதலே இளைஞர் அணியிலிருந்து, செதுக்கப்பட்டவரும், சிறை வாழ்க்கை, தியாகத் தழும்புகளோடு, பல பதவிகளையும் பொறுப்புகளாகப் பார்த்து, 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று வாழ்ந்து காட்டி வருபவருமான எம் அரும் சகோதரர் மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் கலைஞர் வகித்த பொறுப்புக்கு ஒரு மனதாக தி.மு.கழகத்தின் தலைவராக அடலேறுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதும், அதுபோலவே அவர் வகித்த பொருளாளர் பதவிக்கு அக்கட்சியில் 40 ஆண்டுகளாக கலைஞரின் நிழல் போல திகழ்ந்த அவரது அரசியல் மாணவர் அருமைச் சகோதரர் மானமிகு துரைமுருகன் அவர்களும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குரியது! அவர்களுக்குப் பெருங் குடையாக மூத்த நம் இனமானப் பேராசிரியர் (க. அன்பழகன்) அவர்களின் ஆசியோடு பொறுப்பேற்றுள்ள திராவிடர் இயக்கத்தின் 4ஆவது தலைமுறை நாயகர் தளபதி, நான்காம் அத்தியாயத்தைத் துவக்குகிறார்!

கோபாலபுரம் மாணவர் கழகப் பொறுப்பாளராக, திமுகவின் இளைஞரணி மாநில செயலாளராக, மாநிலப் பொருளாளராக, செயல் தலைவராக ஒளி வீசி, இன்று திமுகவின் தலைவராக  கட்சி நீரோட்டத்திலும், சென்னை மாநகர வணக்கத்துக்குரிய மேயராக, சட்டப் பேரவை உறுப்பினராக, அமைச்சராக, துணை முதல் அமைச்சராக, ஆற்றல்மிகு எதிர்க்கட்சித் தலைவராக இயற்கையில் நிகழும் முறையான பரிணாம வளர்ச்சி பெற்றவர் அருமைச் சகோதரர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆவார்!

கட்சியைக் கட்டமைப்பது, ஆட்சி நிருவாகத்தை ஆற்றுலுடன் நிர்வகிப்பது என்பதெல்லாம் அவருக்குக் கைவந்த கலையாக இருப்பதைக் கடந்த காலத்தில் நாடே பார்த்து வியந்திருக்கிறது.

அவரின் அடுத்தகட்ட நகர்வினை நாடே ஆர்வமுடனும், நம்பிக்கையுடனும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அவர் மிகுந்த தன்னடக்கமும், தளரா உழைப்பும், உடன் பிறப்புகளின் உணர்வுகளை உணர்ந்து அரவணைத்துச் செயல்படும் பண்பாட்டையும் பெற்றுள்ளவர்!

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் திராவிடர்  இயக்க சித்தாந்தம் - பகுத்தறிவு சுயமரியாதைக் கொள்கைகளை கட்டிக் காப்பேன் என்று உறுதி கூறியிருப்பதன் மூலம் - திமுகவின் தலைவராகப் பொறுப்பேற்க  முழுத் தகுதி உடையவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

திமுகவின் சொத்துக்கள் பற்றி சில ஏடுகள் கணக்கெடுக்கின்றன. உண்மையில் திராவிடர் இயக்கங்களைப் பொறுத்தவரையில், ஏராளமான அசையாச் சொத்துகளும் அசையும் சொத்துகளும்  உண்டு என்பது நமக்கு என்றும் பெருமையானது!

ஆம்! ஏராளமான அசையா சொத்துகள்;

அசையும் சொத்துக்கள் உண்டு, உண்டு!


எவராலும் அழிக்க முடியாத "ஆயிரங்காலத்துப் பயிரான" அந்த திராவிடத்து அசையா சொத்துகள் - கொள்கைகள்! லட்சியங்கள்! சித்தாந்தங்கள்!

அசையும் சொத்துகள் இலட்சோபலட்சம் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளான கடமை வீரர்களும், காணக் கிடைக்காத கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவருமே!

இந்த 'சொத்துகள்' பறிபோகாமல் பாதுகாக்கும் காவலராக, லட்சியப் பணியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து, பதவிகளால் அளக்கப்படுவதைவிட, பணிகளின் சிறப்பால் தூய தொண்டறத்தால் மதிக்கப்படும் தலைமைக்கு இவரன்றோ எடுத்துக்காட்டு என்று, தமது தந்தை - தலைவரை மிஞ்சும் சாதனை வீரராகத் திகழ்ந்து சரித்திரமான 4ஆம் அத்தியாயம் எனும் புதிய பொன்னேட்டை இணைத்திடும் இனமானம் காக்கும் இணையற்ற வீரராக என்றும் திகழ்ந்து, ஆட்சி என்பது காட்சிக்காக அல்ல. இன மீட்சிக்காக என்பதை அகிலத்திற்கு உணர்த்திடும் அரும்பெரும் வீரராக உயர்வார் எனத் தாய் கழகம், உச்சி மோந்து வாழ்த்துகிறது! தாய்க் கழகத்தின் துணையும், அரவணைப்பும் உண்டு - புது வரலாறு படைத்திடுக!



கி.வீரமணி,

திராவிடர் கழகம் தலைவர்

சென்னை

28.8.2018

Thursday, August 23, 2018

ஆளுநர்களை ஆள்பவர்கள் யார்? (2)


* அணுசிறீ

20.8.2018 அன்றைய தொடர்ச்சி....

ஆளுநர்களின் தவறான செயல்பாடுகளுக்கு நீதிமன்றக் கண்டனங்கள்


கூட்டாட்சிக் கட்டமைப்பு பாதுகாக்கப்படுவதை பல நேரங்களில் நீதிமன்ற குறுக்கீடுகள் உறுதிப்படுத்தி யுள்ளன. தங்களது அரசமைப்பு சட்டப்படியான கடமை களை நிறைவேற்றத் தவறியதற்காக ஆளுநர்களை  பல நேரங்களில் நீதிபதிகள் கண்டித்துள்ளனர். பூட்டாசிங்கின் செயலை தீய நோக்கம் கொண்டது என்று கண்டித்த உச்ச நீதிமன்றம், அருணாச்சலப் பிரதேச ஆளுநரின் செயல் அரசமைப்பு சட்டத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு சவுக்கடி என்றும் அரசாட்சியின் மீதான ஒரு பேரிடி என்று கண்டித்துள்ளது. எஸ்.ஆர்.பொம்மை மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிகுந்தது.

மாநில அரசுகளை கலைக்கச் செய்யும் மத்திய அரசின் அரசமைப்பு சட்ட  அதிகாரத்தை அந்தத் தீர்ப்பு கட்டுப்படுத்தி இருந்தது. மாநில அரசின் பலத்தை மதிப்பிடுவதற்கான ஒரே வழி, சட்டப் பேரவை உறுப் பினர்களிடையே, சட்டப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்துவதுதான் என்றும், ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ தங்களது தனிப்பட்ட கருத்தின் அடிப் படையில் முடிவு செய்யப்பட இயன்ற விவகாரம் அல்ல என்றும்  ஒன்பது நீதிபதிகள் கொண்ட  அரசமைப்பு  சட்ட அமர்வு உறுதிபடத் தீர்ப்பளித்துள்ளது. 

மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்படி நெருக்கடி நிலை அறிவிக்கப்படுவது,  மாநிலத்தில் அரசமைப்புச் சட்ட இயந்திரம் (நிர்வாக இயந்திரம்அல்ல) செயல்பட இயலாத நிலையில் மட்டுமே நியாயப்படுத் தப்பட இயலும் என்றும், அத்தகைய அறிவிப்பு நீதிமன்ற பரிசீலனைக்கு அப்பாற்பட்டது அல்ல என்றும் அந்த அமர்வு அறிவித்துள்ளது.

மத்திய மாநில உறவுகள், அதிகாரங்கள் பற்றி ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ஆணையங்கள்

மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும், செல்வாக்கு மிகுந்த மாநிலத் தலைவர்கள் உருவானதும், மாநில அரசுகளின் தேவைகளை உணர இயன்ற ஒரு கூட்டாட்சித் தத்துவத்தின் தேவையைத் தூண்டியுள்ளன. அதனை ஒட்டி,  மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை இணக்கமாக்கு வதற்குத் தேவையான செயல்பாடுகளை ஆராய்ந்து பரிந்துரைப்பதற்கு 1966 இல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், 1969 இல் ராஜமன்னார் கமிட்டி, 1983இல்  சர்க்காரியா ஆணையம், 2000 இல் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாட்டை மறு ஆய்வு செய்வதற்கான தேசிய ஆணையம், 2007 இல் பூஞ்சி ஆணையம் என்று பல குழுக்களும், ஆணையங்களும் நியமிக்கப் பட்டன.

ஆளுநர் அலுவலகம் பற்றி நிர்வாக சீர்திருத்த ஆணையம் கூறியதாவது: சாமானியமான நடுத்தரப் பிரிவினருக்கு, போதிய வேலை வாய்ப்பு இல்லாத நிலையிலும் அதிக சம்பளம் அளிப்பது அல்லது சில நேரங்களில் செயல்பாடற்ற காலாவதியான அரசியல்வாதிகளுக்கு ஓர் ஆறுதல் பரிசு வழங்குவதாகக் கருதப்படுவதாக ஆகிவிட்டது ஆளுநரின் பதவி. அதற்கு மாறாக, இந்திய நிர்வாகம் என்னும் கூட்டாட்சி கட்டமைப்பின் மிக முக்கியமான அலுவலகங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட வேண் டும்.

முந்தைய மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களைப் பதவி நீக்கம் செய்வது என்ற பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, தவறாக நடந்து கொண்டார் என்று மெய்ப்பிக்கப்பட்ட போதும்,  உச்சநீதிமன்ற விசாரணை ஒன்றில் ஆற்றல் அற்றவர் என்று கருதப் பட்டாலன்றி ஆளுநர்கள் பதவியில் இருந்து நீக்கப் படக்கூடாது என்று ராஜமன்னார் கமிட்டி ஆலோசனை கூறியிருந்தது. அரசமைப்புச் சட்டத்தின் 263ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் கூட்டமைப்பு ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்று அது ஆலோசனை தெரிவித்தது.

என்றாலும், இத்தகைய அனைத்து ஆணையங் களிலும், மத்திய-மாநில அரசுகளின் உறவு பற்றி சர்க்காரியா ஆணையம் மிக விரிவான 21 அத்தியாயங்கள் கொண்ட  பரிந்துரைகளை அளித்திருந்தது. நெருக்கடி நிலை அறிவிக்கப்படும் அரசமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவு மிகமிக அரிதாகவும், மிகமிக இன்றியமையாத வழக்குகளிலும், இருக்கக் கூடிய மற்ற அனைத்து மாற்று வழிகளும் பயனளிக்காமல் போன பிறகு இறுதி  நடவடிக்கையாக  மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று சர்க்காரியா ஆணையம் எச்சரித் திருந்தது. மேலும்,  அரசமைப்புச் சட்டத்தின் 356 ஆவது பிரிவின்படி நெருக்கடி நிலை அறிமுகப்படுத்தப்பட்ட அறிவிப்பு நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு வைக்கப் படுவதற்கு முன்பாக, சட்டப் பேரவை கலைக்கப் படக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மாநில அரசுகளை  தேவையற்ற ஒரு தலை சார்பான செயல் பாடுகளிலிருந்து தவிர்ப்பதற்காக மாநிலத்திற்கு நியமிக்கப்படும் ஆளுநர்  வெளி மாநிலத்தைச் சேர்ந்த உயர்பண்பு கொண்டவராக இருப்பதுடன், தீவிர அரசியல் தொடர்புகளற்று தனித்து நிற்பவராகவும்,  அண்மைக் காலத்தில் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

பொருளாதாரக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பொறுத்த வரையில், கார்ப்பரேட் வரிகளை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும்,  வரி விதிப்பதற்காக உள்ள வாய்ப்புகளைப் பற்றி மறு ஆய்வு செய்வதற்காக அரசமைப்புச் சட்ட 269 ஆவது பிரிவின்படி ஒரு வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. சட்டப் பேரவையில் எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாமல் போகும் நேரங்களில்,  முதலமைச்சர்களை எவ்வாறு நியமிப்பது என்பதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளையும் தயாரித்தளித்தது,  தேர்தலுக்கு முன் கூட்டணி அமைக்கப்படாதபோது,  தனிப்பெரும் கட்சியின் தலைவரை அரசு அமைக்க அழைக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்தது. இந்த பரிந் துரைகள் எல்லாம் பல நேரங்களில் காற்றில் பறக்க விடப்பட்டன. இதற்கு அண்மைக் கால எடுத்துக் காட்டுகளாக கர்நாடக, கோவா, உத்தரகண்ட் மாநி லங்களில் ஆளுநர்கள் தங்களது சுயேச்சையான அதிகாரத்தைப் பயன்படுத்தி, யதேச்சதிகாரமாக அரசு அமைக்க பா.ஜ. கட்சியை அழைத்த நிகழ்வுகளைக் காட்டலாம். அத்தகைய யதேச்சதிகாரம், 1952 இல் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவியேற்க சட்டப் பேரவை, சட்ட மேலவை இரண்டிலும் உறுப்பினர் அல்லாத ராஜகோபாலாச்சாரியை ஆளுநர் பிரகாசா அழைத்ததை நினைவுபடுத்துகிறது. மேலும், சர்க்காரியா ஆணையத் திற்குப் பிறகு, ஆளுநர்கள் எல்லாம் மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி அரசியலில் தீவிரமாக ஈடுபடும் அரசியல் விசுவாசிகளாகவே இருந்து வருகின்றனர்.

கூட்டாட்சிக் கட்டமைப்பு உருவாக்கம்

ஏழாவது அட்டவணைபடி  மத்திய, மாநில அரசுகளி டையேயான அதிகாரப் பங்கீடு,  நிதி ஆணையம்,  உள்ளாட்சி அமைப்புகள்,  அனைத்திந்திய பணிய மைப்பின் கட்டமைப்பு நிர்வாகம், நதிநீர்த் தீர்ப்பாயங்கள், திட்டக் குழுக்கள்,  நிதி ஆயோக், சுமுகமான மத்திய மாநில உறவுகளுக்குத் தடையாக இருக்கும் ஆளுநர்கள் உள்ளிட்ட  பல அரசமைப்புச் சட்ட விதிகளைச் சுற்றி  கூட்டாட்சிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் நிலையற்ற தன்மை,  உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள், பிரிவினை வாதப் போக்குகள்,  பொருளா தாரப் போட்டி மற்றும் இவற்றைப் போன்றவை நிலவும் இன்றைய  அரசியல் காட்சியில், ஆரோக்கியமான கூட்டாட்சி நடைமுறை தவிர்க்க இயலாத ஒன்றாகவே அமைந்துள்ளது.

உலகமயமாக்கப்பட்ட இந்த காலகட்டத்தில், தங்கள் அரசுக்கு வருவாயை உருவாக்குவதற்காக, தொழில், வணிகக் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தி முதலீடு களைக் கவருவதில் மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும், கட்சி நடைமுறை அனைத்து மாநிலங்களிலும் பரவலாக்கப்பட்டதும், கூட்டணி அரசியல் உருவானதும், ஒன்றிணைந்து செயல்படும் கூட்டாட்சி நடைமுறையை ஓர் அரசியல் தேவையாகவே ஆக்கிவிட்டன.  தேர் தல்கள் தெளிவான தீர்ப்பினை அளிக்காத நிலையில், பலகட்சி ஜனநாயக நடைமுறையிலான இந்தக் காலகட்டத்தில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் எந்த ஒரு கட்சியும், தேர்தல் களத்தில் காணாமல் போவதற்கு விரும்பாது என்பதால்,  மாநிலங்களில் உள்ள எதிர் கட்சிகளுக்கு வருத்தம் உண்டாக்குவதற்கு முன்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது அவசிய மானது.

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு களின் செல்வாக்கைக் குறைப்பதற்காக, ஆளுநர் அலுவலகத்தை எந்த வழியிலாவது தவறாகப் பயன் படுத்துவது, கூட்டாட்சி ஜனநாயக அரசியல் நடைமுறை சுமுகமாக செயல்படுவதற்கு கேடு செய்வதாகவே அமையும். தேசிய ஒற்றுமையையும், அரசியல் நிலைத் தன்மையையும் பேணுவதற்கான அரசமைப்புச் சட்டப் படியான அதிகாரமும்,  கடமையும்  மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமையை சமரசம் செய்து கொள்வதன் மூலம் மத்திய அரசு அதனைச் செய்யக்கூடாது. அதிகப்படியான அதிகாரங்கள் மத்தியில் குவிக்கப் படுவது மத்திய அரசும், மாநில அரசுகளும் தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானதாகும். சர்க் காரியா ஆணையம் எச்சரித்தபடி, அவ்வாறான அதிகாரக் குவிப்பு மத்திய அரசை, ரத்த அழுத்தம் கொண்ட தாகவும், அதனைச் சுற்றியுள்ள மாநில அரசுகளை ரத்தசோகை கொண்டவை களாகவும் ஆக்கி,  அழிவை விளை வித்துவிடும்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக் கிடையேயான பிரச்சினை களைத் தீர்ப்பதற்கு மாநில அரசு களுடன் இணைந்து மத்திய  அரசு, அரசமைப்பு சட்டத்தில் நிர்ணயிக்கப் பட்டுள்ள கூட்டாட்சித் தத்துவ உணர் வுக்கு உண்மையாக  செயலாற்ற வேண்டும்; மாநில ஆளுநர்களும் நல்லிணக்கத்துடன் மாநில அரசு களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆளுநர் பதவியை அரசியல் சாராத பதவியாக மாற்ற வேண்டியதன் அவசர, அவசியத் தேவை, ரோமன்  விமர்சகர் ஜூவினலின்  புகழ் பெற்ற ஒரு பழமொழியை எனக்கு நினைவு படுத்துகிறது. "பாதுகாக்கும் பணியை செய்யும் பாது காவலர்களை யார் பாதுகாப்பார்கள்?" சுயேச்சையான அதிகாரம் யதேச்சதிகாரமாக மாறும்போது, ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் போகும் நிலையில், மக்களின் விருப்பம் என்பது காலடியில் போட்டு மிதிக்கப்படுவதுடன்,  நாகரிக சமூகத்தினர் ஜூவினலின் மேற்குறிப்பிடப்பட்ட கேள்வியை மாற்றி "ஆளுநர்களை ஆளுபவர்கள் யார்?" என்று கேட்கத்தான் தோன்றும்.

 
 (நிறைவு)

நன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 03-08-2018

தமிழில் : த.க. பாலகிருட்டிணன்

இந்தியாவிலேயே மிகச்சிறந்த தனியார் பல்கலைக்கழகம் விருது

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...