Monday, November 30, 2009

நாத்திகர் ஆனாரா தாக்கரே?


நாத்திகர் ஆனாரா தாக்கரே?

மும்பை சிவசேனா வீரர் பால்தாக்கரே நாத்திகர் ஆகிவிட்டாராம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
தம் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான “சமானா" வில் எழுத்து வடிவத்தில் இதனைத் தெரிவித்துள்ளார் என்பதால் இதனை அலட்சியப்படுத்தவும் முடியாது.

பொதுவாக சங்பரிவார்க் கூட்டம் ஒன்றை முதலில் சொல்லும்; அது குறித்து பிரச்சினை வெடித்தால் “அய்யய்யோ நான் அப்படி சொல்லவேயில்லையே!” என்று சத்தியம் செய்யும்.

ஆனால் பால்தாக்கரே இப்பொழுது தன் கட்சியின் ஏட்டிலேயே வெளிப்படையாக எழுதி விட்டாரே!

பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படையிலா? பொருள் முதல்வாதம், எண்ண முதல்வாதம் என்ற அடிப்படையில் ஆழச் சிந்தித்து ஆத்திகத்தை ஆயிரம் அடியின் கீழ் புதைந்து விட்டு, நாத்திகராகக் கம்பீரமாக வெளிவந்துள்ளாரா என்ற கேள்விக்கு விடை கூறுதல் கடினம்தான்.

நடைபெற்ற மராட்டிய மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மண் கவ்வியதால் ஏற்பட்ட தோல்வியின் சம்மட்டி அடியால் துவண்டு போன மனிதன், தோல்வி ஜன்னியில் இப்படி உளறுகிறாரா என்ற கேள்வியிலும் அர்த்தம் உண்டு.

“மராட்டியர்கள்தான் என் முதுகில் குத்தி விட்டனர். வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. ஒரு தீய சக்தியானது மராத்தி மக்களிடம் இருந்து என்னைப் பிரித்து விட்டது. எனக்கு மராட்டியர்கள் மீதும், கடவுள் மீதும், ஏன் எல்லா வற்றிலுமே நம்பிக்கை போய்விட்டது. இதைச் சொல்வதற்காக மிகுந்த வேதனைப்படுகிறேன். அதே சமயம் உண்மையை மறைக்கவோ, அல்லது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதையோ நான் விரும்பவில்லை’’ என்று மாரடித்து ஒப்பாரி வைத்துள்ளார்.

அடேயப்பா! எவ்வளவு பெரிய “வீராதி வீரர்” “சூராதி சூரர்!’’ அவர் வாய் திறந்தால் மராட்டிய மண்டலமே ஒடுங்கி நடுங்குமே வெளி மாநிலத்தவர்கள் வெலவெலத்துப் போய் விடுவார்களே, தமிழர்களை என்ன பாடுபடுத்தினார்?

அந்த சூரர்தான் இப்பொழுது சுருங்கிப் போய் சோணகிரியாகி விட்டார். உருட்டல், மிரட்டலால் ஓங்கி வளர்ந்து பெரிய மனுஷனாகப் பவனி வந்தவர் படுக்கையில் வீழ்ந்த நோயாளியாகி விட்டாரே!

மும்பை தொலைப்பேசி முகவரி புத்தகத்தில் உள்ள வெளி மாநிலத்தவர்களைக் கணக்கெடுத்தார். இனி மும்பைக்கு வர வேண்டுமானால் “விசா” வாங்கிக் கொண்டுதான் வர வேண்டும் என்று வீராவேசம் பேசிய “வேங்கைப்புலி” இப்பொழுது விலா ஒடிந்து போன பூனையாக “மியாவ் மியாவ்” என்று ஈனக் குரலில் கத்துகிறதே! இப்பொழுது மட்டுமல்ல; 1995 இல் அவரின் மனைவி மரணம் அடைந்தபோதுகூட மனுஷன் மாரடித்துப் புலம்பியவர் தான்.
1993 செப்டம்பர் 6 அந்த நாளை தாக்கரேயால் மறக்கவே முடியாது. அந்த நிலைப்பற்றி ‘வீக்’ (The Week November 19-1995) இதழ் வெளிப்படுத்துகிறது.

I don’t know if death had arranged the trap, “Says thackeray. ‘That night the lights went out, the hotline was gone, the telephone was dead and the medicine could not be found. she was breathing with great difficulty and I watched helplessly as she died gasping. I lost her on Ganesh Chaturthi. And she had been so religious and had done puja for your siddhi vinayaka.’’
Your Siddhi Vinayaka! These words of the champion of Hindutva are soaked in bitterness and tears, tears that he tries to hide behind his new dark glasses, a bitterness that has turned him into a blasphemer. Thackeray, 68, is like a rebelious boy who has lost his favourite little treasure. “I don’t believe in God any longer,” he says in deliance.

அந்த இரவில் மின்சாரம் இல்லை, விளக்குகள் இல்லை; தொலைப்பேசி வேலை செய்யவில்லை; என் மனைவி மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவள் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஏதும் செய்ய முடியாதவனாக நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் அன்று விநாயகர் சதுர்த்தி. அவள் மத ஆச்சாரங்களில், ஆன்மிகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவள். சித்தி வினாயகனை அவள் தொழுது கொண்டிருந்தார். ஆனாலும் அவளை எந்தக் கடவுளும் காப்பாற்றவில்லை.

கடவுள்மீது இனி நம்பிக்கை வைக்க மாட்டேன் ஒரு போதும் இனியில்லை’’ - என்று அன்றும்கூட இப்படித்தான் எகிறிக் குதித்தார்.

மாதுங்காவில் அவர் பங்களாவில் இருந்த கடவுள் படங்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டன. கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த உத்திராட்ச மாலைகளை எல்லாம் உருவி எறிந்தார். கையில் எப்பொழுதும் இருக்கும் ஜெபமாலைக்குக் கல்தா கொடுக்கப்பட்டது. இப்பொழுது 14 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மனநிலையில் மனிதன் சித்தப்பிரமை பிடித்து செதிர் காயாக உடைந்து கிடக்கிறார்.

கடவுள் நம்பிக்கை போய் விட்டது என்று தாக்கரே கூறியுள்ளாரே - சங்பரிவார் வட்டாரம் மூச்சு விடவில்லையே - ஏன் முணுமுணுப்பைக்கூட வெளிப்படுத்தவில்லையே! இந்தச் செய்தி வெளியில் பரவிவிடக் கூடாது என்பதில் தான் அவர்கள் அக்கறை செதுத்துபவர்கள் என்பது நமக்குத் தெரியும்.

பால்தாக்கரேயே பாதை மாறி விட்டாரா? - ‘பகவான் மீது அவர் வைத்திருந்த அபார நம்பிக்கை நாசமாயிற்றா?’ என்று பாமர மக்களும் பேச ஆரம்பித்து விடுவார்களேவிளைவு என்ன? சாதாரணமாக மிக பக்திக்கு ஹானி விளைந்தால் பார்ப்பனியத்தின் பல் பிடுங்கப்பட்டு விடுமே, ஆரியத்தின் அஸ்திவாரம் நொறுங்கிப் போய் விடுமே. அதன்பின் பிழைப்பு என்னாவது, ஆதிக்கம்தான் என்னாவது என்ற பயத்தில் தாக்கரே விஷயத்தை மூடி மறைத்து விட்டார்கள்.
ஒன்று மட்டும் உண்மை. ஏதோ ஒரு பிரச்சனையில் தோல்வி ஏற்பட்டு விட்டதாலோ, இழப்பு ஏற்பட்டு விட்டதாலோ அந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிக் கொந்தளிப்பில் “கடவுள் நம்பிக்கை எனக்கு போய் விட்டது’ என்று கூறுவதையெல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது.

பகுத்தறிவுவாதியாக நாத்திகராக மலர்வதற்கு ஆழ்ந்த சிந்தனையும், துணிவும் தேவைப்படும்.
தன் மனைவி இறந்த போது (1995இல்) தனக்குக் கடவுள் நம்பிக்கை போய்விட்டது என்று சொன்னது உண்மையாக இருந்திருக்குமேயானால், 2009இல் ஒரு தேர்தல் முடிவை முன் வைத்து இப்படி ஒரு கருத்தைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காதே!
ஒரு கருத்தை வேண்டுமானால் முன் வைக்கலாம் - கடவுள் நம்பிக்கை என்பது ஒரு சந்தர்ப்பவாதம் என்பதுதான் அது!

--மின்சாரம் 

Tuesday, November 17, 2009

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

பொது அறிவு எனும் பட்டறிவு-மரணக் குறிப்பு (Obituary)

படிப்பறிவு வேறு; பகுத்தறிவு வேறு, பட்டறிவு (Comman sense) வேறு. இம்மூன்றும் வெவ்-வேறானவை! ஆனால் ஒன்றுக்கொன்று நெருங்கிய உறவுள்ளவை!

மனிதகுலம் தழைத்தோங்க, இவை ஆற்றிய, ஆற்றி வரும் தொண்டு வார்த்தைகளால் வருணிக்க முடியாத மலையளவு ஆகும்!


இங்கிலாந்தின் ‘லண்டன் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான ஒரு சிறந்த சிந்தனைச் சிதறல்தான் மேலே காட்டியுள்ள தலைப்புடன் வெளிவந்துள்ள இந்தக் குறிப்புரையாகும்!

ஆங்கிலத்தில் உள்ள அதன் சுவையோடு அப்படியே என்னால் தரமுடியாது என்றாலும் கூடுமான வரை முயன்று வெற்றி பெற்றிருப்பதாகவே கருதுகிறேன்; எனவேதான் நமது வாசக நேயர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்று நமது மிகப் பெரும், பழம்-பெரும் நண்பரான பட்டறிவு (Comman sense) மறைவுற்றமைக்காக இரங்கல் தெரிவிக்க அனைவருமே கூடியுள்ளோம்!

அவர் எவ்வளவு நீண்ட காலமாக நம்முடைய நண்பராக இருந்து வழிகாட்டினார் என்பதை சரியாக நினைவு கூர முடியவில்லை. காரணம் நீண்ட காலத்திற்கு முன்பே இந்த அதிகாரிகள் வர்க்கத்தின் சிகப்பு நாடாவால் காணாமற் போகும்படி செய்யப்பட்டு விட்டார்! எனவே சரியான வயது கூட ஆதாரங்களுடன் நாம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பில்லை.

ஆனால் அவரை நாம் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கும் வண்ணம் நமக்கு மிக அருமையான பல பாடங்களை அவர் கற்றுக் கொடுத்துள்ளார். அவற்றின் மதிப்பினை நாம் இப்போதும், எப்போதும் உணர்ந்து கொண்டே இருப்போம் என்பது உறுதி.

மழையிலிருந்து எப்படி தப்பித்து வரமுடிகிறது; வாழ்க்கை என்பது எப்போதுமே ஒரு நியாயமாக நடப்பது அல்ல; அது போல சில நேரங்களில் நாம் நம்மை நொந்து கொள்ளும் நிலையில் அது என் தவறாகக் கூட இருக்கலாம் என்பது போன்ற பட்டறிவுச் சிந்தனைகளையொட்டிய பழக்க வழக்கங்களை நாம் பெற்றுள்ளோம்!

பொருளாதாரத்தில் சம்பாதிப்பதற்கு உட்பட்டு செலவழித்தல், நம்பக் கூடிய காரண காரியங்கள் அவர்கள் குழந்தைகள் அல்லர், வயது வந்தவர்கள் என்று உணர்ந்து அதற்கேற்ப நமது அணுகுமுறைகள் என்ற நடைமுறை வாழ்க்கைமூலம் பட்டறிவின் வாழ்வு நீண்டு வளர்ந்து வந்தது.

ஆனால் அவரது உடல் நலம் திடீரென்று கெட ஆரம்பித்தது எப்போது என்றால், திட்டமிட்டே, நல்ல எண்ணத்தோடு அவை இருந்த போதிலும் கூட சமூகம் சுமக்கமுடியாத கட்டுப்பாடுகளை அவரது இடத்தில் அமர்த்தி வைத்தபோதுதான்! 6 வயது பெண்ணின் கன்னத்தில் பாலுணர்வு உந்துதலால் முத்தம் கொடுத்த குற்றத்தை ஒரு சிறுவன் இழைத்தான் என்றும், மதிய உணவுக்குப் பின் வளர் இளம் பிராயத்தினர் (Teen agers) வாய் கொப்பளிக்க மவுத் வாஷ் திரவத்தைப் பயன்படுத்தினர் என்றும், வகுப்பில் அடங்காப் பிடாரியாக நடந்த ஒரு மாணவனைப் பள்ளியை விட்டு வெளியே அனுப்பினர் என்பது போன்ற (பட்டறிவுக்கு முரணான கொள்கைகளால்) (அவரது) பட்டறிவின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமாகியது!

அவரது வாழ்வு மிகவும் பிடிமானமற்றதாக ஆனது எப்போது தெரியுமா?

வீட்டில் ஒழுங்காக வளர்க்கத் தவறிய பெற்றோர்களின் குழந்தைகளை ஆசிரியர்கள் தங்களது வகுப்பறைகளில் ஒழுங்கீனத்தைக் கண்டித்து தண்டித்து முறைப்படுத்திய ஒரே காரணத்திற்காக, பெற்றோர்களால் ஆசிரியர்கள் தாக்கப்பட்டபோது!

அதன் உடல் நிலை மேலும் மோசமானதாக ஆனதற்கு முக்கிய காரணம், மாணவர்கள் வெப்பத்தினால் தாக்கப்பட்டு (தோல் வியாதி வராமல் தடுக்க)விடக்கூடாது என்பதால் சூரிய ஒளி படும்படி மாணவர்களின் உடலில் மருந்து திரவம் தடவவும், ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையை (இது இதய நோய் தடுப்பு - இதய ரத்தக்குழாய்கள் அடைபடாமல் தடுக்க அவசர சிகிச்சைக்கான அவசர முதல் உதவி) ஆசிரியர்கள் தாங்களே செய்யாமல், பெற்றோர்கள் அனுமதி பெற்ற பிறகே செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டபோதும், ஒரு மாணவி, கருத் தரித்துள்ள செய்தியையோ, அல்லது அவளுக்கு நடந்த கருச்சிதைவு (Abortion) பற்றியோ ஆசிரியர்கள் உடனே பெற்றோர்களுக்குத் தகவல் அறிவிக்க முடியாமல் இருந்தபோதும்தான். (இவை இங்கிலாந்தில் சர்வ-சாதாரணமான நிகழ்வுகளாகிவிட்டன.)

பட்டறிவு என்ற மனிதருக்கு இனியும் நாம் வாழ வேண்டுவது அவசியம்தான் என்ற மன உறுதி பறந்தோடி விட்டது எப்போது தெரியுமா?

மத அமைப்புகள் வெறும் பொருள் சம்பாதிக்கும் வணிக மய்யங்களாகி வருவதாலும், குற்றம் புரிந்த கிரிமினல்கள் அவர்களால் பாதிக்கப் பட்டவர்களை விட நல்ல முறையில் நடத்தப்பட்ட போதும்!

பட்டறிவுக்கு சரியான அடி, உதை, குத்து கிடைத்தது_ ஏனெனில் கொள்ளைக்காரர்களிடம் இருந்து அவர் (பட்டறிவு) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளமுடியவில்லை_ அதுவும் சொந்த வீட்டிலேயே.

அதோடு மட்டுமா? அந்தக் கொள்ளைக்காரன் அடி வாங்கிய இவர் மீதே தன்னைத் தாக்கி காயப் படுத்திவிட்டான் என்று (பொய்) வழக்கைப் போட்ட போது, பட்டறிவு தன்னம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டது!

அதை விடக் கொடுமை, பட்டறிவு இறுதி வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து இனி நாம் வாழ்வது அர்த்தமற்றது என்ற எண்ணத்தைத் தனக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டது எப்போது தெரியுமா?

கொதிக்கும் காபி ஒரு கப் வாங்கி (அவரது கவனக் குறைவால்) தனது தொடை மீதுள்ள துணியின் மேல் ஊற்றி தொடையில் காயமேற்படுத்திக் கொண்டமைக்காக, ஆடை மீது வழக்குப் போட்டு பெரும் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்ற (நியாயமற்ற) போக்கினைக் கண்டபோது! பட்டறிவு என்னும் இவரது தாய்தந்தையர் இவருக்கு முன்பே மரணமடைந்துவிட்டனர். அவர்களின் பெயர் உண்மை மற்றும் நம்பிக்கை என்பவை ஆகும். இவருக்கு தனது துணைவியார் (Discretion) யுக்தானுச்சாரம் நிலைமைக்கேற்ப நடக்கும் தன்மையர் என்பவர் மூலம் பொறுப்பு (Responsibility) என்ற ஒரு மகளும், பகுத்தறிவு (Reason) என்ற ஒரு மகனும் உண்டு.

பட்டறிவின் மற்றொரு துணைவியார் நான்கு பிள்ளைகளைப் பெற்றதால்_ மேற்கூறிய ‘பொறுப்பு’ என்ற மகளுக்கும் ‘பகுத்தறிவு’ என்ற மகனுக்கும் நான்கு (வேறுதாய் வயிற்று) (Step Brothers) சகோதரர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் பட்டியல் இதோ.

1. “எனது உரிமைகள் எனக்குத் தெரியும்’’ என்று கூறுவோர்.

2. “இப்போதே அது எனக்கு வேண்டும்’’ என்று (அடம் பிடிக்கும்) கூறும் நிலையோர்.

3. “என்னைக் குற்றம் சொல்லாதீர்; வேறு சிலரைத்தான் நீங்கள் குறை கூறவேண்டும்’’ (கடமை தவறியதைச் சுட்டிக் காட்டும்போது) என்று கூறுவோர்.

4. “என்ன செய்வது? நான்தான் பாதிக்கப்பட்டவன்’’ என்று (குற்றம் சாற்றப்படும்போது) கூறுபவர்.

பட்டறிவின் இறுதி ஊர்வலத்தின் போது அதிகமானோர் கலந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர் மரணம் அடைந்து-விட்டார் என்பதே பலருக்குத் தெரியாது!

நீங்கள் அவரை இன்னமும் நினைத் திருக்கிறீர்கள் என்றால் அருள் கூர்ந்து இதை மற்றவர்களுக்குக் கூறுங்கள்.

இல்லையெனில் அவர் இறந்து-விட்டதை அறியாத பெரும்பான்மையில் நீங்களும் ஒருவராகி விட்டு, ஒன்றும் செய்யாமல் கைகட்டி வாய் பொத்தி வாழும் வாழ்க்கை வாழுங்கள்!

சிங்கப்பூர் பெரியார் சேவை மன்றத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரும், சிறந்த பகுத்தறிவுப் பேராசிரியருமான டாக்டர் ரத்தினகுமார் அவர்கள், நேற்று அவருக்கொரு நண்பர் லண்டனிலிருந்து அனுப்பினார் என்று கூறி இந்த அற்புத சிந்தனை ஓவியக்கட்டுரையை (ஆங்கில நகலை) தந்ததைப் படித்தேன்; சுவைத்தேன். அத்தேனை நீங்களும் பருகிப் பயன்பட தந்துள்ளேன். படித்துப் பயனடையுங்கள்!

Friday, November 13, 2009

"நடந்த கதை’ திரையிடல் -இன்று


பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை
இரண்டாம் ஆண்டு தொடக்க விழா

நாள்: 13.11.2009 வெள்ளி மாலை 6.30 மணி
அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், சென்னை-7;

தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

முன்னிலை: வீ.குமரேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

வாழ்த்துரை: ப. திருநாவுக்கரசு (ஆசிரியர், ‘நிழல்’) அஜயன் பாலா (எழுத்தாளர்) மீரா.கதிரவன் (திரைப்பட இயக்குநர் - 'அவள் பெயர் தமிழரசி')

திரையிடல்: 'நடந்த கதை’

இயக்கம் : பொன்.சுதா (குறும்படம் -21 நிமிடங்கள்)
கதை : அழகிய பெரியவன்
ஒளிப்பதிவு: இராசாமதி

அனைவரும் வாரீர்!




Monday, October 26, 2009

விசித்திர மூடத்தனம் இன்றும் தேவையா?-கி.வீரமணி

நோபல் பரிசு போல, நம் நாட்டில் சிறந்த ஒரு ஏற்பாடு செய்யவேண்டுமானால், தலைசிறந்த மூட நம்பிக்கையாளர்களைத் தேர்வு செய்து அவர்களுக்குத் தனிப் பரிசளிக்கலாம்!

நேரிடையாக அவர்களுக்கு அழைப்புக் கொடுத்து நடத்துவதற்குப் பதிலாக, ரொம்ப விசித்திரமான மூட நம்பிக்கையாளர்பற்றி ஏடுகளில் குறைந்தபட்சம் விடுதலை போன்ற பகுத்தறிவு நாளேடுகளிலாவது அதுபற்றி முழுத்தகவல்களைத் தந்து, பகுத்தறிவை வளர்க்கும் நூல்களைப் பரிசாக அளிக்கலாம்; இல்லையேல் இருட்டில் இருக்கும் இவர்களை வெளிச்சத்திற்கு வர அடையாளச் சின்னமாய் டார்ச்லைட்டினையோ, மற்ற சில வெளிச்சம் தரும் பொருள்களையோ பரிசளிக்கலாம்.

இதோ இன்று ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியான சுவையான மூட நம்பிக்கையின் உச்சமான செய்தி:

பாட்டியாலாவில் (பஞ்சாப்) உள்ள கான்பூரில் ஒரு கோயில் இருக்கிறது. அதில் விசித்திரமான வகையில் வழிபாடு நடக்கிறது, நாய்களுக்கு.

சீ நாயே! என்று யாரும் அங்கே திட்ட முடியாது; பயபக்தியுடன் கும்பிட்டு வழிபடல் வேண்டும். அந்நாய்கள் உண்ட பிறகே அங்கே உள்ள கிராமப்புற மக்களுக்கு ஊரில் சாப்பிட உரிமையாம். உணவு பொது சமையல் கூடத்திலிருந்து பரிமாறப்பட்டு, சாப்பிட அனுமதியாம்!

அதுவும் எப்படி தெரியுமா?

நீண்டகால பாரம்பரிய பழக்கவழக்கத்தையொட்டி கோயில், நாய்களுக்கு மூன்று வேளை உணவு! முக்கால பூஜை நடத்திய பிறகே _ அதாவது பைரவமூர்த்தி (நாய்)க்கு உணவு படைத்துச் சாப்பிட வைத்த பின்பே ஊர் மக்களுக்குச் சாப்பிடும் உரிமையும், அனுமதியும் உண்டாம்!

ஆனந்தகிரி என்ற தலைமை அர்ச்சகர் மூன்று காலமும் கோயிலுக்குள் வருவார்; நுழைந்தவுடன் நாய்போல் குரைப்பாராம்! உடனே குரல் கேட்டு, நாய் பகவான்கள் மூவர் வந்தவுடன் மிகுந்த மரியாதை, பயபக்தியுடன் அவர்களுக்கு உணவு பரிமாறப்படுமாம்.

அதுவும்கூட சமைத்துள்ளவைகளில் எவை மிகச் சிறந்தவையோ அவைகளை அவர்களுக்கு அமுது படைக்கப்படுமாம்! ஊர்க்காரர்கள், மக்கள் அதன் பிறகே சாப்பிடவேண்டுமாம்! இது அரச கட்டளை!

இந்த நாய்க் கடவுள்கள் பூஜை எப்படி வந்தது என்பதும் மிகுந்த சுவையான கதையாகவல்லவா இருக்கிறது!

அக்கால மாதம் மும்மாரி பொழிகிறதா? என்று கேட்கும் நமது தெருக்கூத்து ராஜாவைவிட, மிகவும் கேவலமாக இருக்கிறது!

முன்பொரு காலத்தில் பாட்டியாலாவின் மகாராஜா அப்போது அரச குடும்பத்தைச் சேர்ந்த_ கேப்டன் அமீரீண்ட சிங் அவர்களின் முன்னோர்களில் ஒருவரான ஆலா (கிறீணீணீ) சிங் என்ற ராஜா, தாசிகளிடையே ஒரு வகையான விசித்திரமான போட்டியை தர்பாரில் நடத்தினாராம்!

ஒரு விலைமாது அப்போட்டியில் 50 கிலோ கஞ்சாவை உட்கொண்ட பின்பும் ஸ்டெடி(ஷிமீணீபீஹ்)யாக ஆடாமல், அசையாமல் அப்படியே சிலை போல் நின்றாராம்; இதனைப் பார்த்த ராஜா, வியந்து பரிசு அளித்தாராம்!

1695_1765 என்ற காலகட்டத்தில் வாழ்ந்த அந்த மகாராஜா இந்த விலைமகளான பெண்ணுக்கு 150 ஏக்கர் பிகா எஸ்டேட்டினை பரிசாக வழங்கினாராம்.

இந்த விசித்திர குணாதிசயம், ரசனைமிக்க அந்த ராஜா, மற்றொரு அரசு ஆணையையும் போராட்டாராம்!

நாய்கள் சக்தி வாய்ந்த கடவுள்கள் ஆகும். எனவே, கான்பூர் கோயிலில் உள்ள சாமிக்கு பூஜை செய்து முதல் கவளம் உணவை இந்த இரண்டு, மூன்று நாய்களுக்குப் படைக்கவேண்டும் அந்தக் கோயில் அர்ச்சகர்.

அதற்குமுன் காலையிலும், மாலையிலும் அமுது படைக்கும் முன்பு கோயில் அர்ச்சகர் நாய் மாதிரி குரைப்பாராம்! சத்தமாக குரைத்தவுடன், நாய்கள் ஓடோடி வந்து, உடனே அந்த கவள உணவையும், மற்றதையும் சேர்த்து சாப்பிடுமாம்!

அதன் பின்னரே, அந்தக் கோயில் மணி ஓசை வந்த பிறகே, ஊர்ப் பொதுமக்கள் உணவு உண்பார்களாம். இன்றுவரை இந்த மூடப்பழக்கம் (பஞ்சாப்) பாட்டியாலாவில் நீடிக்கிறதாம்! அர்ச்சகர் குரைக்க, நாய்கள் ஓடோடி வந்து உணவு உண்ட பின்பு, ஊர் மக்கள் சாப்பிட வேண்டும் என்கிற வழக்கம் தொடருகிறதாம், இன்றைக்கும்!

வயதான முதியவர்களிடம் இதுபற்றி எந்த எதிர்ப்பும் இல்லையாம்! ஆனால், படித்த இளவட்டங்கள் இதனைப் பரிகசித்து எதிர்க்குரல் கொடுத்து கலகம் செய்யத் தொடங்கிவிட்டனராம்!

ஆனந்தகிரி என்ற அர்ச்சகர் அய்யர் குரைத்து, நாய்களை அழைப்பது 16 ஆம் நூற்றாண்டிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுவரை நீடிக்கிறதாம்!

என்னே மடமை!

பக்தி வந்தால் புத்தி போகும் என்று எவ்வளவு அழகாகச் சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்!

பரவாயில்லை, நம் நாட்டில், எச்சில் இலையில் உள்ள மிச்ச உணவுக்கு நாய்களுடன் போட்டியிட்டு மனிதன் சாப்பிடும் கொடுமையான காட்சி அங்கில்லை என்றுகூட புது வியாக்கியானம் கூறி புகழும் மனிதர்களும் இருப்பார்கள்!

மேலை நாடுகளின் அமெரிக்கா, இங்கிலாந்தில் நாயாகப் பிறப்பது _ மனிதனைவிட _ அரிய வாய்ப்பு ஆகும்; காரணம் அவ்வளவு கவனிப்பு பாசப் பொழிவு எல்லாம் நாய்களுக்குக் கிடைக்கும்.

தாய், தந்தையை விட்டுவிட்டு வாழும் அவர்கள் நாய்களையே மிகவும் விரும்பி நேசிக்கிறார்கள்; அங்கே ஒரு நாயைத் திட்டினாலும் அதன் எஜமானர் நீதிமன்றம், வழக்கு என்றுகூடப் போய்விடுகிறார்கள்! அவர்களை வைதால்கூட மறந்து மன்னித்து விடுவார்கள்!

நாய்க்கு உயில் எழுதி வைப்பவர்கள் பலர் அங்கே உண்டு!

நன்றிக்கு நாயைச் சொன்னாலும் இப்படியா? கொடுமை! கொடுமை!! காரணம் நாய் பைரவர்; கடவுளின் வாகனம் என்று குத்தப்பட்ட மூட நம்பிக்கையே!

பக்தி முற்றிய பலர், அதிக அடக்கத்துடன் நாயடியேன் என்று தங்களை அழைத்துக் கொண்டது இம்மாதிரி அந்தஸ்து அடுத்த உலகிலாவது கிடைக்கும் என்பதாலா?

மூட நம்பிக்கையின் தொட்டில் இல்லையா, இது?

Saturday, October 10, 2009

இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம்


பிற இதழ்களிலிருந்து
ஒற்றுமையாக இருக்கவேண்டுமா? ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா? இந்தித் திணிப்பை எதிர்த்து ராஜ்யசபையில் அறிஞர் அண்ணா முழக்கம்
(இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஒரே ஆட்சி மொழியாக இருக்கும் என்ற அரசமைப்புச் சட்டப் பிரிவினை எதிர்த்து தமிழகத்தில் 1965 இல் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தி மொழி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை, ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்று பிரதமர் நேரு அவர்கள் அளித்த வாக்குறுதி இப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தது. இவ்வாறு ஓய்ந்து போயிருக்கும் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையை மறுபடியும் மத்திய மனித வள-மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் எழுப்பத் துணிந்திருக்கிறார். நாடு மு

ழுவதிலும் ஒரே மாதிரியான பாடத்-திட்டம் வேண்டும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேவையில்லை என்பது போன்ற அரைவேக்காட்டுத்தனமாக கருத்துகளை அள்ளித் தெளித்த அவர் இப்போது மொழிப் பிரச்சினையைத் தேவையற்ற நிலையில் எழுப்புகிறார். மத்திய அரசின் ஆட்சி பொறுப்பில் தலைமை ஏற்றிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தி.மு.க.வுக்கும் இடையே சுமுகமான நல்லுறவும், ஒத்துழைப்பும் நிலவி வரும் இன்றைய சூழ்நிலையில் அதனைக் குலைக்கும் வகையில் பேசி வரும் கபில் சிபலை காங்கிரஸ் தலைமை கட்டுப்படுத்தும் என்று நம்புகிறோம்.


இந்த சூழ்நிலையில் அன்று மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா இப் பிரச்சினை பற்றி பேசியதை இங்கு வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறோம்.)
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 343 ஆவது பிரிவின்படி 1965 ஜனவரி 26 முதல் இந்திய நாட்டின் ஆட்சிமொழியாக இந்தி ஆகவேண்டும்.

இந்தித் திணிப்பிற்கு எதிரான தங்களுடைய பலத்த எதிர்ப்பைத் தெரிவிக்க 1965 ஜனவரி 26 அன்று ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த தமிழ்நாட்டு மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர். இப்போராட்டத்தின் விளைவாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகும் என்று அப்போதைய சென்னை மாநில முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் கருதினார். 1965 ஜனவரி 25 அன்று இரவு அண்ணாவும் அவரது கட்சியைச் சேர்ந்த 3000 தொண்டர்களும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 1965 பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்றுதான் விடுதலை செய்யப்-பட்டனர். இந்த இடைப்பட்ட ஒரு வார காலத்தில் பொதுமக்கள் கடுங்-கோபத்தில் வெகுண்டெழுந்தபோது, மாநிலத்தின் பல பகுதிகளில் மாநில வரலாற்றில் இதுவரை காணாத அளவில் வன்முறை வெடித்தது. திரு சி.சுப்பிரமணியம் மற்றும் திரு ஓ.வி.-அழகேசன் என்ற இரு காங்கிரஸ்-காரர்கள், மொழிப் பிரச்சினை காரண-மாக தங்களின் மத்திய அமைச்சர் பதவியைத் துறந்தார்கள். அண்ணாவும் தி.மு.கழகத்தின் இதர தலைவர்களும் கைது செய்யப்பட்ட பிறகு, இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தலைமையை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சிறையில் இருந்து விடுதலை பெற்ற பின், அண்ணா அவர்கள் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்-கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களுக்கு தங்களின் தி.மு.-கழகத்திற்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று ஆணித்தரமாக வலியுறுத்து-வதற்கு அந்த வாய்ப்பை அண்ணா பயன்படுத்திக் கொண்டார்.
இந்தி எப்போதுமே ஆட்சி மொழி-யாக வரக் கூடாது என்று பிடிவாதமாக அண்ணா கூறவில்லை. நம்மிடையே குறிப்பிட்ட அளவுக்கு உணர்ச்சிப் பெருக்கு நிலவுவதால், இப்பிரச்-சினைக்குத் தீர்வு காண்பதற்கு, சரியான ஆட்கள் நாம் இல்லை என்று ஒரு பெரிய பொறுப்புமிக்க அரசியல் தலைவர் நிலையில் அண்ணா பேசினார்.
1965 ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும், மாநிலங்களவையில் அண்ணா பேசியது போன்று அரசியல் தலைவர்கள் விடுத்த நம்பிக்கை மிகுந்த வேண்டுகோள்களும் இணைந்து, நாட்டில் இந்தியைத் திணிக்கவேண்டும் என்ற வேகம் குறைந்தது.

டிடிடி அண்ணா அவர்களின் பேச்சு
நான் கூற விரும்புவது இதுதான். காலப் போக்கில் இந்தி மொழியை நாட்டின் சட்டப்படியான இணைப்பு மொழியாக ஆக்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், உண்மையிலான இணைப்பு மொழியாக இந்தியை ஆக்கும் வழியில் நீங்கள் செயல்-படவேண்டும். எனதருமை நண்பர் வாஜ்பேயி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருக்கும் தமிழ் இலக்கியத் தேனை ஆழ்ந்து பருகினா-ரானால், நிச்சயம் அவர் தமிழ் மொழி-யைத்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாகத் தேர்ந்தெடுப்பார் என்று கூறிக்கொள்கிறேன்.


அனைத்து தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்
அதனால், நமது பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழியாக ஆக இயன்ற நேரம் வரும் வரை, இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் தற்போதைய நிலையே தொடருவதற்கு நாம் எந்த விதத்திலும் குந்தகம் விளைவித்து விடக்கூடாது. இந்தியாவை ஒற்றுமையாக ஒரே நாடாக வைத்திருப்பதற்காக பலமொழி என்ற விலையை நாம் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இந்தி மொழியைத் திணிப்பதன் மூலம் உங்களால் இந்தியாவைப் பிளவு படச் செய்துவிட முடியும். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் மனநிறைவுடன் வாழும் ஒரு இந்தியாவை நீங்கள் காண விரும்-பினால், நாட்டின் ஒரு பகுதி மற்றொரு பகுதி மீது ஆதிக்கம் செலுத்துகிறது என்று மக்கள் கருதாத ஒரு இந்தி-யாவை நீங்கள் காண விரும்பினால், கோடிக் கணக்கான மக்களின் மனதில் நியாயமான அச்சங்கள் தோன்றக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், நாம் ஒவ்வொருவரும் பெருமைப்-பட்டுக் கொள்ள இயன்ற இந்தியாவைக் காண நீங்கள் விரும்பினால், அனைத்து தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்கும் பிரச்சினையை நீங்கள் கட்டாயமாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். சுவிட்சர்லாந்து 4 மொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டிருக்கும்போது நம்மால் ஏன் 14 மொழிகளை வைத்துக் கொள்ள முடியாது?

இதை நான் கூறும்போது, இது நடைமுறை சாத்தியமற்றது என்று எனது நண்பர் திரு. அக்பர் அலி கான் கூறினார். அது சிக்கலானதுதான்; எளி-தானது அல்ல என்பது உண்மைதான். ஆனால் அதில் உள்ள இடையூறுகள் கடக்க இயலாதவை அல்ல. நான்கு மொழிகளை ஆட்சி மொழியாக சுவிட்சர்லாந்து நாட்டினால் வைத்துக் கொள்ள முடியுமானால், நம்மாலும் பதினான்கு மொழிகளை ஆட்சி மொழி-களாக வைத்துக் கொள்ள முடியும். இந்த விஷயத்தில் எதிர்கொண்ட இடையூறுகளை சுவிட்சர்லாந்து கடந்து இருக்கிறது. அத்தகைய வழி முறை-களைக் கண்டு பின்பற்ற இயலாத அளவுக்கு அறிவுப் பஞ்சம் கொண்ட-வர்களா நாம்? எந்த இடையூறையும், சிக்கலையும் வென்று கடந்து செல்ல இயன்ற ஆற்றல் மிகு மக்களை நான் இங்கு காண்கிறேன். அந்த இடையூறுகளைக் கடக்க எங்கள் கட்சியின் உதவி தேவை எனில், அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் உதவி உங்களுக்குத் தேவைப்-படாது என்று கருதுகிறேன். ஆனால், தேவை என்று நீங்கள் பாவனை காட்டினாலும் போதும், உதவ நாங்கள் தயார். பன்மொழிக் கருத்து என்பது வெறும் மயக்க உணர்வு அல்ல; தி.மு.க. நிறைவேற்றியுள்ள தீர்மானம் அது. அதைப் பற்றி நான் அஞ்சவில்லை. வெறுக்கத்தக்கதுஅது என்று கருதாதீர்கள். முன்னர் சென்னையின் ஆளுநராக இருந்த சிறீ பிரகாசா அவர்கள் கடந்த வாரம் பன்மொழிக் கருத்துக்கு ஆதரவாகப் பேசியதுடன் பொருத்தமான ஒரு வாதத்தையும் முன்வைத்தார். மொழிவாரியான மாநிலங்-களை உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்த பிறகு, அதன் விளைவாக ஏற்படும் பல ஆட்சி மொழி எனும் கருத்தை ஏற்பதில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முடியாது என்று அவர் கூறினார். நாங்கள் ஆங்கில மொழி மோகம் கொண்டிருக்கவில்லை


அனைத்து மொழிகளும் அந்த நிலைக்கு உயரும் வரை நாம் பலமொழிகளை ஆட்சி மொழிகளாகக் கொண்டிருப்போம். தமிழ் மொழி ஏற்கெ-னவே அந்த நிலையை எட்டிவிட்டது என்று நான் இங்கு அறிவிக்கிறேன். வங்காள மொழியும் அந்த நிலைக்கு வளர்ந்து விட்டது என்று எனது நண்பர் பூபேஷ் குப்தா கூறக்கூடும். நமது தேசிய மொழிகள் அனைத்-தும் அந்த நிலையை எப்போது எட்டுகின்-றனவோ, அது 1970 ஆக இருக்கட்டும் அல்லது 1980 ஆக இருக்-கட்டும், அப்-போது நாம் ஆங்கிலத்தைக் கைவிடு-வோம். அதனால், ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்று தி.மு.க. வாதிடுவது , ஆங்கில மொழி மீது நாங்கள் கொண்டிருக்கும் மோகத்-தின் காரணமாக அல்ல. எங்கள் மொழி-யைப் பொறுத்தவரை நாங்கள் கர்வம் மிகுந்த மக்களாவோம். தமிழ் மொழிக்கு இணையாக எந்த மொழி-யா-லும் நிற்கமுடியாது என்று நினைப்ப-வர்கள் நாங்கள். அப்போது மேற்கு வங்க உறுப்பினர் டி.எல். சென் குறுக் கிட்டு, வங்காள மொழி தவிர என்று கூறினார்.


(தொடரும்)
(திரு. எஸ். ராமச்சந்திரன் அவர்கள் தொகுத்த அண்ணாவின் ராஜ்யசபை பேச்சுகள் என்ற ஆங்கில நூலிலிருந்து தமிழில்: த.க.பாலகிருட்டிணன். )

Monday, September 14, 2009

வடசென்னை- புதுவண்ணை ஜாதி ஒழிப்பு மாநாடு

வடசென்னை- புதுவண்ணை ஜாதி ஒழிப்பு மாநாடு
ஜாதி ஒழிய பாடுபடும் தி..விற்கு துணை நிற்போம் மத்திய அமைச்சர் . இராசா

தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்ற இடத்தில் ஜாதி ஒழிக்கப்பட்டது என்று மாற்றுக! அரசியல் சட்டத்தை திருத்த தமிழர் தலைவர் முக்கிய வேண்டுகோள்

சென்னை, செப். 14_ வடசென்னை மாவட்டம் புதுவண்ணையில் வரலாற்றில் நிலைபெறக் கூடிய அளவுக்கு ஜாதி ஒழிப்பு மாநாட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழகத் தோழர்-கள் ஏற்பாடு செய்திருந்-தனர். இம்மாநாட்டில் எதிர்கால வரலாற்றில் முக்கியத்துவம் பெறத்தக்க தீர்மானம் நிறைவேற்றப்-பட்டது.

மத்திய அமைச்சர் . இராசா, திராவிடர் கழகம் நடத்தும் ஜாதி ஒழிப்புப் பணிக்குத் துணை நிற்போம் என்-றார். அரசியல் சட்டத்-தில் தீண்டாமை ஒழிக்-கப்பட்டது என்ற இடத்-தில் ஜாதி ஒழிக்கப்பட்-டது என்று இருக்கவேண்-டும் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டுகோள் விடுத்தார் தமிழர் தலை-வர் கி.வீரமணி அவர்கள்.
http://www.viduthalai.com/

Monday, August 31, 2009

அத்வானி முகமூடி கிழிந்தது- அரசியல் வாழ்வும் முடிகிறது



- சிறப்புப் பார்வை

ஒரு தலைவருக்கு இருக்க வேண்-டிய முக்கியப் பண்பு, தான் எடுத்த முடிவின் காரணமாக ஏற்படும் விளை-வுகளுக்கு துணிந்து பொறுப்பேற்பதே என்று கூறுவார்கள். அந்த நேர்மையும், துணிவும் நம் நாட்டின் விடுதலைக்குப் பின்னான அரசியலில் நமது தலைவர்கள் பெரும்பான்மையினரிடம் காண முடியாத ஒன்றாகிவிட்டது.

வெள்ளைய காலனி ஆட்சியை எதிர்த்து சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலம் நடந்த இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கிடையிலான கொள்கை மாறுபாடுகள் எத்தகையதாயினும் அவர்கள் அனைவரிடமும் நேர்மை இருந்தது. அவர்களின் முடிவுகளும் பார்வைகளும் அவர்கள் வாழ்ந்த காலத்திலும், மறைந்துவிட்ட பின்னரும் விமர்சனத்திற்கும், விவாதத்திற்கும் உட்பட்டதாகவே இருந்தது_ இருக்கிறது. ஆனால் அவர்களின் கொள்கையிலும் பார்வையிலும், போராட்டத்திலும் இல்லாதது சுய நலமும், அயோக்கியத்-தனமும்தான். இந்த குண வலிமை இந்தியா விடுதலை பெற்றதற்குப் பிறகு அதன் தலைவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி, சில பத்தாண்டுகளில் தலைமையின் தனித்-தன்மையே சுய நலமும், தன்னைத் தாண்டி மற்ற அனைவரையும் ஏமாற்றும் அயோக்கியத்தனமுமே என்றாகிவிட்டது. அதன் வெளிப்-பாடுகளே எமர்ஜென்சியில் இருந்து பாபர் மசூதி இடிப்பு, காந்தஹாருக்கு விமானக் கடத்தல், இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், தமிழருக்கு எதிராக இலங்கை அரசிற்கு உதவுதல் என்று தொடர்ந்து கொண்டு-தானிருக்கிறது.

இந்திய அரசியலை கவ்வியுள்ள அந்த குறைப்பாட்டிற்கு அப்பாற்பட்ட-தல்ல பாரதிய ஜனதா கட்சி. அதுவே இன்றைக்கு அந்தக் கட்சிக்குள் ஏற்-பட்டுள்ள உள் யுத்தத்திற்குக் காரண-மாகவுள்ளது. பாரதிய ஜனதாக் கட்சித் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் பிரதமர் பதவிக்கான தங்களின் வேட்பாளர் இவரே என்று அறிவிக்கப்பட்ட லால் கிஷன் அத்வானி, அக்கட்சித் தலைமையிலான கூட்டணி தேர்தலில் தோல்வி கண்ட 3 மாதத்திலேயே அரசியல் வாழ்வின் அஸ்தமன காலத்திற்கு தள்ளப்பட்-டுள்ளது சற்றும் எதிர்பாராததுதான்.

புதுடில்லியில் முகாமிட்டுள்ள ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கின் தலை-வர் மோகன் பகவத், பாரதிய ஜனதாக் கட்சிக்குள் உருவான அத்வானி எதிர்ப்பு எனும் புயலை அடக்க ஒரு சமரசத் திட்டத்தை வகுத்துவிட்டார் என்றும், அதன்படி அத்வானி வகித்துவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சுஷ்மா சுவராஜிடம் அளிக்கப்படவுள்ளது என்றும் வரும் செய்திகள், 60 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட அத்வானியின் அரசியல் வாழ்-வின் முடிவையே பறைசாற்று-கின்றன.

அத்வானியின் அரசியல் வாழ்வின் இந்த திடீர் முடிவை நிர்ணயித்தது, தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு உண்மையை அவர் மறைத்தது மட்டு-மின்றி, அதன் விளைவில் பங்கேற்கும் துணிவின்றி, தனது சகா ஒருவர் மீது அதனை சுமத்தியதால் வந்த வினை என்பது செய்திகளை தொடர்ந்து படித்துவருபவர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.

1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி நேபாளத் தலைநகர் காட்மாண்டுவிலுள்ள திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு டெல்லி நோக்கிப் பறந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் அய்.சி.814 விமானத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடத்தினர். 176 பயணிகளுடன் டெல்லியில் தரையிறங்க வேண்டிய விமானத்தை பாகிஸ்தானிற்கு கடத்துமாறு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருந்த தீவிரவாதிகள் கட்டளையிட்டனர், பாகிஸ்தான் அந்த விமானத்தை லாகூர் விமான நிலை-யத்தில் தரையிறங்க அனுமதிக்காததால், அது பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது, அங்கு விமானத்தை முடக்கி நிறுத்திவிட மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அறிந்த கடத்தல்காரர்கள் விமானத்தை உடனே கிளப்புமாறு உத்தரவிட, அந்த விமானி படாத பாடு-பட்டு லாகூரில் விமானத்தை இறக்கினார். அங்கு எரிவாயு நிரப்பிக் கொண்டு அது துபாய்க்கு பறந்து, அங்கு 27 பயணிகளை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு, ஆஃப்கானிஸ்-தானின் காந்தஹாருக்கு கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட அந்த விமானத்தில் இருந்த 149 பயணிகளையும், விமானி-கள், விமான பணியாளர்களை மீட்க-வும் கடத்தல்காரர்களுடன் இந்தியாவின் ஆஃப்கானிஸ்தான் தூதரக அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். பயணி-களையும், விமான ஊழியர்களையும் விடுவிக்க வேண்டுமெனில் தங்களுக்கு 200 மில்லியன் டாலர் பணம் கொடுக்க வேண்டும் என்றும், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 35 இஸ்லாமிய தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கடத்தல்காரர்கள் நிபந்தனை விதித்தனர்.

அத்வானி பொய்யர்

ஒரு வார காலம் பேரம் நடந்தது. இறுதியில் மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க இந்தியா ஒப்புக் கொண்டது. அவர்கள்: 1. மௌலானா மசூத் அசார் (பின்னாளில் ஜெய்ஸ் இ மொஹம்மது இயக்கத்தை தோற்றுவித்தவர், இந்த இயக்கம் இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலில் தொடர்பு-டையது), 2. அஹம்மது உமர் சயீது சேக் (பின்னாளில் அமெரிக்க பத்திரி-கையாளர் டானியல் பியர்லை கடத்தி படுகொலை செய்த பயங்கரவாதி), 3. முஸ்டாக் அஹம்மது ஜர்கார் (பாகிஸ்-தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்-மீரில் இன்றுவரை தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாகக் கூறப்-படுபவர்). இவர்களுடன் காந்தஹார் புறப்பட்டுச் சென்ற அன்றைய அய-லுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங், தீவிரவாதிகளை ஒப்படைத்துவிட்டு, விமானத்துடன் பயணிகளையும் மீட்டுத் திரும்பினார். கடத்தல்காரர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைத்த தலிபான்-களுக்கும் தனியாக பணம் கொடுத்த-தாகவும் கூறப்பட்டது. ஆனால் உறுதி-படுத்தப்படவில்லை.

இப்படி தீவிரவாதிகளை விடுவித்து, கடத்தல்காரர்களிடமிருந்து பயணிகள் மீட்கப்பட்ட விவகாரம் தனக்குத் தெரியாது என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது அத்வானி பேசினார். அப்போது உள்துறை அமைச்சராகவும், பிரதமர் வாஜ்பேயிக்கு அடுத்த நிலையில் இருந்த மூத்த அமைச்சர் என்ற வகையிலும் அத்வானிக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க முடியாது என்பதால், அவர் பொய்யுரைக்கிறார் என்று குற்றம் சாற்றப்பட்டது.

தீவிரவாதிகளை விடுவித்துதான் பயணிகள் மீட்கப்பட்டனர் என்பது அத்வானிக்குத் தெரியும் என்று ஜஸ்வந்த் சிங் கூறினார். இது தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதா கட்சிக்-குள்ளேயே சர்ச்சையானது. இன்று மொஹம்மது அலி ஜின்னா - இந்தியா, பிரிவினை, விடுதலை என்ற தலைப்பில் ஜஸ்வந்த் சிங் எழுதி வெளியிட்ட புத்தகம், தங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிரானது என்று கூறி, விளக்கம் கோராமலேயே ஜஸ்வந்த் சிங் வெளி-யேற்றப்பட்டதும், காந்தஹார் கடத்தல் மீண்டும் வெடித்தது. தனக்குத் தெரியாது என்று அத்வானி கூறியது அப்பட்ட-மான பொய் என்றும், தீவிரவாதிகளை விடுவித்து பயணிகளை மீட்பது என்று வாஜ்பாய் தலைமையில் நடந்த அமைச்-சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்-பட்டபோது அதில் அத்வானியும் கலந்து கொண்டார் என்றும் குட்டை உடைத்த ஜஸ்வந்த் சிங், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே அத்வானி பொய்யுரைக்-கிறார் என்று பகிரங்க-மாகவே குற்றம் சாற்றினார்.

அதுமட்டுமின்றி, கடத்தப்பட்ட விமானம், லாகூருக்குக் கடத்தப்படுவ-தற்கு முன்னர் அரை மணி நேரம் இந்திய மண்ணில் இருந்தபோது உள்துறை அமைச்சரான அத்வானி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது-தானே என்றும் ஜஸ்வந்த் சிங் கேள்வி எழுப்பினார். இதற்கெல்லாம் அத்வானியால் பதில் சொல்ல முடியாத நிலையில், அவரது அரசியலால் பாதிக்கப்பட்ட மற்ற தலைவர்களும் அவருக்கு எதிராக திரும்பினர். யஷ்-வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பேயியின் ஆலோசகராக இருந்த பிரிஜேஷ் மிஸ்ரா, முன்னாள் அமைச்-சர் அருண் ஷோரி ஆகியோரும் ஊடகங்களில் பேட்டியளித்து பிரச்-சனையை தீவிரப்படுத்தினர்.

பிரதமர் ஆசையால் அத்வானி செய்த தவறுகள்

தனது அரசியல் வாழ்விற்கு முடிவு கட்டும் அளவிற்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்த அத்வானி மீது ஜஸ்வந்த் சிங் வைத்த மிகப் பெரிய குற்றச்சாற்று: பிரதமராக வேண்டும் என்ற ஆசை-யால் பீடிக்கப்பட்ட இந்த மனிதர் பல தவறுகளைச் செய்தார். வாக்கிற்காக பணம் கொடுக்கப்பட்டது என்று கூறி நாடாளுமன்றத்தில் பணம் கொட்டப்-பட்ட நாடகத்தின் மய்யம் அத்வானி-தான் என்று ஜஸ்வந்த் சிங் வீசிய குற்றச்-சாற்றுக்கு இதுவரை அத்வானி பதிலளிக்கவில்லை!

இந்த உண்மையை இன்றைக்கு நாட்டுக்குத் தெரிவிக்கும் ஜஸ்வந்த் சிங் இதுநாள்வரை அதனை அதே பதவி பெறுவதற்குத்தானே (கட்சி நலனைக் காக்க என்று கூறுகிறார்) நாட்டு மக்க-ளிடம் கூறாமல் மறைத்தார்? இப்படி உண்மையை மறைத்து வேறொன்றைச் செய்வது பாரதிய ஜனதா கட்சிக்குப் புதியதல்லவே! மண்டலை எதிர்த்து கமண்டல யாத்திரை! இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்-சிக்கு நிகராக வளர்ந்துள்ளது என்றால் அதற்குக் காரணமும் அத்வானிதான் என்பதை ஜஸ்வந்த் சிங் உட்பட அவர் மீது இன்று குற்றம் சாற்றும் தலைவர்-கள் ஒருவரும் மறுக்க முடியாது.

நமது நாட்டிலுள்ள இதர பிற்படுத்-தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை 1990ஆம் ஆண்டு பிரதமராக இருந்த வி.பி.சிங் பிறப்பித்தபோது - அவரை தலைவராகக் கொண்ட ஜனதா தளத்-தின் உதவியுடன் 88 தொகுதிகளைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க பலத்துடன் இருந்த பாரதிய ஜனதா கட்சி - மண்டல் அறிக்கையை திரும்பப் பெற வேண்டும், இல்லையெனில் ஆட்சிக்கு அளித்து-வரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று அறிவித்தது.

இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஓதுக்கீடு அளிப்பதை சாதி ரீதியாக இந்திய சமூகத்தை பிளக்கிறார் வி.பி.சிங் என்று குற்றம் சாற்றியதோடு நிற்காமல், அயோத்தியில் இராமர் கோயிலை கட்டு-வோம் என்று கூறி, மதப் பிரச்சனையை திடீரென கையிலெடுத்தவர் அத்வானி.
நாட்டை கலவர பூமியாக்கினார்

அயோத்தியில் இராமருக்கு கோயில் கட்ட இரத யாத்திரை என்று தொடங்கி நாட்டை கலவர பூமியாக்கினார். ஆட்சியைப் பிடிக்கும் அரசியலுக்குப் பயன்படுத்தி, அதன் மூலம் மத ரீதியாக இந்திய சமூகத்தில் பிளவை உண்டாக்கிவிட்டவர் அத்வானிதான். மண்டல் அறிக்கைக்கு எதிராக கமண்ட-லம் ஏந்திய அத்வானி, வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் கோயில் கட்டும் முழக்கத்தை - ஆட்-சிக்கு ஆதரவு தரும் கட்சிகளின் நிபந்தனைக்கு உட்பட்டு -தள்ளிவைக்க ஒப்புக்கொண்டார்! ஆக, அத்வானி மட்டுமல்ல, அன்றைக்கு சமூக நீதியை அழிக்க மதவாதத்தை கையிலெடுத்து-தான் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து உ.பி.யிலும், பிறகு மத்தியிலும் ஆட்சியைப் பிடித்தது.

எனவே, அத்வானியை மட்டும் பதவிக்காக எதையும் செய்பவர் என்று பாரதிய ஜனதா கட்சியில் எவரும் குறை சொல்லத் தகுதியற்றவர்களே. அக்கட்சியின் நோக்கும், அதனை இன்றுவரை பின்னிருந்து இயக்கும் ராஷ்ட்ரிய சுயம் சேவக், கட்சிக்கும் பதவியும், அதிகாரமும் கட்டாயத் தேவையாகும். இல்லையென்றால் அப்போது ஜனசங்கமும் இப்போது பாரதிய ஜனதா கட்சியும் இருக்குமா?

இவர்களின் நேர்மையற்ற அரசியல் நடவடிக்கைகளால் இந்த நாட்டின் சமூக ஒற்றுமை பாழ்பட்டுப் போனது. மத நல்லிணக்கம் சீர்குலைந்தது. விடுதலைப் போராட்டத்தினால் வலிமையடைந்த இந்திய நாட்டின் ஒருமைப்பாடு கேள்விக்குறியானது. இந்திய மக்கள் மத்தியிலும், நாடாளுமன்ற அவைகளிலும் இவர்கள் பேசிய எந்தப் பேச்சிலும் நேர்மை-யில்லை. டெல்லியில் ஒருநிகழ்ச்சி-யில் பேசிய அத்வானி இலங்கையில் போரை நிறுத்துமாறு மிகவும் வலியுறுத்திப் பேசினார்.

போர் நிற்கவில்லை. அதன்பிறகு அப்பிரச்சனை தொடர்பாக தனது கட்சியின் தமிழகத் தலைவர்களையும் கூட அழைத்து ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வந்தன. ஆனால் மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் எந்த அறிக்கையும் வரவில்லை.

பாதுகாப்பு வலயப் பகுதியில் தஞ்சமடையந்த அப்பாவி மக்கள் அனைவரையும் கொல்லத் திட்டம் தீட்டி தாக்குதல் நடத்தப்படுகிறது என்பது அத்வானிக்குத் தெரிவிக்கப்-பட்டது. அதனைத் தடுத்து நிறுத்த காட்டமான அறிக்கை வெளியிடுவார் என்று கூறப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் அல்லவா, தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அறிக்கை வெளிவரவில்லை.

இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே படுகொலை செய்யப்பட்ட பின்னர், அங்கு எதுவுமே நடக்காதது-போல் அத்வானியும் அமைதி காத்தார். இவர்களைப் பொறுத்தவரை எல்லாமே வாக்கிற்காகவும் பதவிக்காகவும்தான். எதுவும் மக்களுக்காக அல்ல. அதனால்-தான் மசூதியை இடித்து இரத்த ஆற்றை ஏற்படுத்துகின்றனர். கலவரத்தை உருவாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட வழிவகுக்கின்றனர். இப்-படிப்பட்ட அரசியல் வழிகொண்ட ஒரு தலைவரின் அரசியல் வாழ்வு முடிவிற்கு வருகிறதென்றால் அதற்காக இந்திய மக்கள் கவலைப்பட ஏதுமில்லை. இன்-றைக்கு ஆட்சியிலும் வெளியிலும் உள்ள மற்றத் தலைவர்கள் இவரினும் வேறுபட்டவர்களா என்று மக்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்ப்பது நாட்டை பாதுகாத்துக் கொள்ள நிச்சயம் உதவும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...