Monday, August 5, 2013

அடுத்த கட்டப் பணி நோக்கி டெசோ!

ஈழத் தமிழினம் மானமும், அறிவும், உரிமையும் பெற்றிட
8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை
எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அழைப்பு - அறிக்கை!


ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சி யுடன் நடத்திட அணி வகுத்து அனைவரும் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த 16.7.2013 அன்று டெசோ கூட்டம் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பாதுகாப்புக்காக 4 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய மாநில அரசுகளுக்கும், இலங்கை சிங்களப் பேரினவாத அரசுக்கும் தமிழர்களின் உரிமைக் குரலைப் புரிய வைத்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள்
இக்கோரிக்கைகளை வற்புறுத்திடும் வகையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை 8.8.2013 அன்று நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
1) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும்.
2) இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும்,
3) தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும்,
4) இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும்,
நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நான்கு தீர்மானங் களையும் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அரசுகளுக்கு அழுத்தம் தரவும்.
ஆகஸ்ட் 8இல் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்ற அறப் போராட்டம் நடைபெறவிருக்கிறது!
டெசோவின் உறுப்புகளான தி.மு.க., தி.க. விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும், தமிழ் இனவுணர் வாளர்கள், பற்றாளர்கள் அனைவரும் பல லட்சக் கணக்கில் திரண்டு இந்த அறப்போராட்டத்தின் மூலம் உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை களுக்கு உணர்த்திடும் அரிய வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்!
கடந்த ஆண்டு டெசோ மாநாடு!
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டைடெசோ சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தியதிலிருந்து ஓராண்டு காலத்தில் - அடுக்கடுக்காக அதன் செயல்பாடுகள் உலக அய்.நா. மன்றம் தொடங்கி, உள்ளூர் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வடிவம் கொடுத்தது வரை, செய்து வரும் சாதனைகள் அடை மழை போன்ற அடுக்கடுக்கான அறப் போராட்டங்கள்!
என்றாலும் நமது ஈழத் தொப்புள் கொடி உறவுகள் உண்மையான விடுதலையையும், சமத்துவ சம வாழ்வுரிமையையும் பெறும்வரை, நம் பணி தொடர் பணியாகவே இருக்கும் இருந்தே தீரும்!
கட்சியில்லை - ஜாதியில்லை!
தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒரு தனி வரலாறு படைக்கும் வண்ணம் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டும்!
இதில் கட்சியில்லை,
இதில் ஜாதியில்லை,
இதில் மதமில்லை,
இதில் மனிதநேயம் உண்டு.
மனித உரிமைப் போர்க் குரல் உண்டு,
நாதியில்லாதவர்கள் அல்ல எம் ஈழத்துத் தமிழ்ச் சொந்தங்கள் - அறுபடாத பந்தங்கள்
அவர்கள் உரிமைகளை பெறும் வரை
நம் பணி ஓயாத பணி; ஒழியாத பணி!
90 வயதிலும் களத்தில் கலைஞர்
சென்னையில் இந்த 90 வயதிலும் களம் காணுகிறார் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கழகத்தில் வற்புறுத்தும் நம் இனத்தின் ஒப்பற்ற பாதுகாவலர் மானமிகு கலைஞர் அவர்கள்!
சென்னையில் அவருடன் சகோதரர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் மற்றும் கழகச் செயல் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.
திருச்சியில் தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளிவீசும், செயல் வீரர் தளபதி செம்மல்  மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்கிறார்.
திருவள்ளூரில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்கிறார்.
மதுரை மாநகரில் என்னைக் கலந்து கொள்ள டெசோ பணித்துள்ளது. அதன்படி பங்கேற்க விருக்கிறேன்.
எச்சரிக்கை ஒலி!
தோழியர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை பெருநகரில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இப்படி தமிழ்ப் பூமியே குலுங்கும் வண்ணம் எழுச்சி முரசு கொட்ட கழகத்தவர்கள் ஆயத்தமாகி நிற்கின்றனர்!
மக்கள் கடல் பொங்குமாங்கடலென பொங்கிக் காட்டி, பொல்லாங்கு மனம் படைத்த சிங்கள இனவெறித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முனைப்புடன் அறவழியில் களங்கண்டு தமிழர் பெருந்திரள் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலித்திடுவீர்!
வாரீர்! வாரீர்!!
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்! குடும்பம் குடும்பமாக அணி வகுத்துப் பணி முடிக்க ஆயத்தமாவீர்!
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று இன எதிரிகளுக்குக் காட்டி, எம் இனம் மானமும், அறிவும், உரிமையும் பெற, நாளும்  போராடுவோம் வாரீர்! வாரீர்!!
வெற்றி பெறுவோம் வாரீர்! வாரீர்!!

கி.வீரமணிதலைவர், திராவிடர் கழகம்
சென்னை   
5.8.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

1 comment:

ப.கந்தசாமி said...

//தமிழ்ப் பூமியே குலுங்கும் வண்ணம் எழுச்சி//

இக்காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...