Wednesday, November 21, 2012

ஜாதி மறுப்பு இணை தேடல் பெருவிழா


முதல்முறையாக சென்னையில் நடைபெறுகிறது
ஜாதி மறுப்புக் காதலர்களுக்குத் திருமணமும் செய்து வைக்கப்படவுள்ளது


பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு, எண்ணற்ற சுயமரியாதைத் திருமணங்களையும், ஜாதி மறுப்புத் திருமணங்களையும் நடத்தியுள்ளது. மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தோரும் புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் பெரிதும் பயன்பட்டிருக்கிறது.
கட்சி, அமைப்புப் பாகுபாடின்றி, அனைத்துக் கட்சியைச் சார்ந்தவர்களும், எக்கட்சியையும் சாராதவர்களும் இந்நிலையத்தின் உதவியோடு நல்ல வாழ்க்கை இணையரைத் தேர்ந்தெடுத்து சிறப்புற வாழ்ந்துவருகிறார்கள். எனினும், இத்தகைய முயற்சிகளை அறிய வாய்ப்பில்லாத, ஆனால் முற்போக்கு எண்ணமும், ஜாதி மறுக்கும் துணிவும் கொண்ட பலருக்கு தக்க இணையர் தேட வாய்ப்பின்றியிருப்பதை உணர முடிகிறது.
திராவிட இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், ஒடுக்கப்பட்டோர் நலன் காக்கும் இயக்கங்கள், சிறுபான்மை மக்களின் அமைப்புகள் என பல தரப்பினரும் ஜாதி மறுப்பு/மதமறுப்புத் திருமணங்கள் செய்யத் தயாராக இருக்கும் நிலையில், இத்தகைய முற்போக்குச் சிந்தனையுள்ள குடும்பத்தினருக்குப் பயன்படும் வகையில், தமிழகம் தழுவிய அளவில் மாபெரும் ஜாதிமறுப்பு இணை தேடல் பெருவிழாவினை மன்றல் 2012 என்ற பெயரில் நடத்த  பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் திட்டமிட்டுள்ளது. ஜாதி ஒழிப்புக்காகப் போராடிய தந்தை பெரியார், அதற்கான போராட்டத்தை மிகப் பெரிய அளவில் முன்னெடுத்த நவம்பர் மாதத்தில் இந்நிகழ்வு நடப்பது சாலப் பொருத்தமாகும். வருகின்ற 2012 நவம்பர் 25 - ஞாயிற்றுக்கிழமை, சென்னை - பெரியார் திடலில் மன்றல் 2012 நடைபெறவுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக இந்நிக?ழ்ச்சிக்கான பணிகளும், விளம்பரங்களும் தொடர்ந்து செய்யப்பட்டுவருகின்றன. ஜாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெறுவதால், ஜாதிக் கட்டுமானம் உடைகிறது என்று மீண்டும் ஜாதிவெறிக் குரல்கள் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் வேளையில் இந்த முயற்சி மிக இன்றியமையாததும், ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்கள் அனைவரும் இணைந்து நடத்த வேண்டிய ஒன்று என்றும் நாங்கள் கருதுகிறோம். இதனையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோளும் அனுப்பப்பட்டுள்ளது. சமூக சமத்துவத்தில் உறுதி கொண்ட இயக்கங்கள், அமைப்புகள் இணைந்து செயல்படவுள்ளனர்.
அன்றைய நாளில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
1. ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா
2. ஜாதி மறுப்புத் திருமண அரங்கம் 1. ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள ஜாதி ஒழிப்பில் ஈடுபாடு கொண்ட குடும்பத்தினர் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். தாங்கள் விரும்பிய வாழ்க்கைத் துணையை ஜாதி, மதம் தடையில்லாமல் தேர்ந்தெடுக்க இந்நிகழ்ச்சியில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இது மட்டுமில்லாமல், மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தவர்கள் ஆகியோருக்கான தனிப் பிரிவுகளும் உண்டு.
இந்நிகழ்வு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இத்துடன் திருமணத்திற்குத் தயாராதல் குறித்த மருத்துவ, மனநல ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சியும், மருத்துவ முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களும், பல்துறைசார்ந்த முக்கியப் பிரமுகர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவுள்ளனர்.
2. ஜாதி மறுப்புத் திருமண அரங்கம்
முன்பே, ஒருவருக்கொருவர் விரும்பி ஜாதி, மதம் பாராமல் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப் பாதுகாப்போடு இந்நிகழ்விலேயே திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பும் பலர் இதற்காக விண்ணப்பித்துள்ளனர். காதலர்கள் விண்ணப்பிக்கலாம்
ஆண், பெண் இருவரும் 21 வயது நிரம்பியவர்களாகவும், தனித்து வாழ்க்கை மேற்கொள்வதற்கான பொருளாதார வாய்ப்பும் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறு திருமணம் செய்து கொள்ள விரும்புவோரிடம் உரிய அடிப்படை மருத்துவ, மனவளச் சோதனைகளுக்குப் பிறகே அனுமதிக்கப்படுவர். அவ்வாறு விரும்புவோர் வரும் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்று திருமணங்களை நடத்திவைத்து உரையாற்றவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஜாதிக்கான சுயம்வரங்கள் இதுவரை தனித்தனியாக நடைபெற்றிருந்தாலும், முதன்முறையாக ஜாதிமறுப்புக்கென ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இணை தேடல் நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படவுள்ளது.

மேலும் தொடர்புகளுக்கு: 9176757083, 9176757084

- இயக்குநர், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்

1 comment:

semmalai akash said...

அருமையான பதிவு, பெரியாரின் பெயரில் நடத்தும் இந்த நிகழ்ச்சிகள் தொடரட்டும்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...