Thursday, July 26, 2012

தமிழக மீனவர் பாதுகாப்பு மாநாடும் - கச்சத் தீவு மீட்பு மாநாடும்




இன்றைக்குச் சரியாக 15 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில்தான் (1997) இரோமேசுவரத்தில் தமிழக மீனவர் பாதுகாப்பு மாநாடும் - கச்சத் தீவு மீட்பு மாநாடும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சமதா கட்சித் தலைவர்  ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறப்புரையாற்றினார். தமிழக மீனவர்களை இலங்கைக் கப்பல் படை சுட்டுக் கொல்லுவதை எதிர்த்து உலக நீதிமன்றத்தில் வழக்குத்  தொடரலாம் என்றார் பெர்னாண்டஸ். மாநாட்டில் மருத்துவர் இராமதாசு, பழ. நெடுமாறன், கா. காளிமுத்து, பொன். முத்துராலிங்கம், இரா. சனார்த்தனம், கா. ஜெகவீரபாண்டியன் முதலி யோர் பங்கேற்றனர்.
தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழர்களுக்குச் சொந்தமான கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும் என்றும் அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலேயே இலங் கைக்குக் கச்சத் தீவைத் தாரை வார்த்த இந்திய அரசு, கசப்பான அனுபவங்களுக்குப் பிறகாவது கச்சத் தீவை மீட்டிட மீசையை முறுக்க வேண்டாமா?
நமக்குச் சொந்தமான கச்சத்தீவு அருகில் நம் தமிழர்கள் மீன் பிடிக்கச் சென்றால் குற்றமாம்! இரவ லாகப் பெற்றவர்கள் தீட்டிய மரத்தில் கூர்ப் பாய்ச்சுவது போல நம் மக்களையே சுட்டுக் கொல்லுவதா? இதனைத் தட்டிக் கேட்கா விட்டால் நம் நாட்டுக்கே சுயமரியாதை இல்லை என்று பொருளாகி விடாதா?
கொடுக்கத் தெரிந்தவர்கள்தான் மீட்டுக் கொடுப்பதற் குமான பொறுப்பை ஏற்க வேண்டும் - அதுதான் அறிவு நாணயமும் தன்மானமும் ஆகும்.
ஈழத்திலே தமிழர்களைக் கொல்லுவது மட்டுமல்ல.  இந்தியாவில் இருக்கும் தமிழர்களான மீனவர்களையும் படுகொலை செய்கிறது என்றால் இதனைத் தடுத்து நிறுத்திட இந்தியாவுக்குக் கடமை இருக்கவில்லையா?
இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் சரி, இந் தியத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும் சரி - கொல்லப் படுவது தமிழர்கள் என்றால், எங்கள் நிலை இதுதான் என்று இந்தியா சொல்லுவதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ!
கடல் எல்லையைத் தாண்டாதீர்கள் - தாண்டினால் இலங்கைக் கடற்படை சுடத்தான் செய்யும் என்று 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் சொல்லுவதற்குக் கூச்சப்பட வேண்டாமா?
வேலியில் ஓடும் ஒணானை எடுத்துக் காதில் விட்டுக் கொண்ட கதையாக அல்லவா இருக்கிறது.
யாரைக் கேட்டு கச்சத் தீவைத் தூக்கிக் கொடுத் தார்கள்! 1974இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் காணப்பட்ட மீன்பிடிக்கும் உரிமை கவட்டுத்தனமாக விட்டுக் கொடுக்கப்பட்டது எப்படி?
இந்திய ஜனநாயக நாடு தானே! நாட்டு மக்களுக்குத் தெரியாமல் நடு ராத்திரியில் ஒப்பந்தங்கள் மாற்றப்படு கின்றனவா?
இந்த ஒப்பந்தத்திற்கு மட்டும் கறார் பேசும் இந்திய அரசு, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி இலங்கை யின் வடக்கு - கிழக்கு மாவட்டம் இணைக்கப்படுவதில் - தம் சூரத்தனத்தை இந்தியா காட்டாதது ஏன்?
ஒப்பந்தம் காப்பாற்றப்படுவதாக இருந்தாலும் சரி, மீறப்படுவதாக இருந்தாலும் சரி, அங்குப் பாதிக்கப் படுபவர்கள் தமிழர்கள் மட்டும் என்பது தான் எழுதப்படாத ஒப்பந்தமா?
டெசோ மாநாடு இந்த உணர்வுகளின் கொந் தளிப்புக்கிடையேதான் நடைபெறுகிறது.
அதே கச்சத் தீவு மாநாட்டில் தான் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். கச்சத்தீவு மீட்கப்படுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
தமிழர் தலைவரின் அந்த ரிட் மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  ஜெயசிம்மபாபு அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு (29.7.1997) இன்று வரை நிலுவையில் உள்ளது.
திராவிடர் இயக்கத்தில் இந்தத் தொடர் செயல் பாடுகள் எல்லாம் தமிழ்த் தேசிய குருட்டுக் கண்களுக் குத் தெரியாது. செவிட்டுக் காதுகளிலும் விழாது! எல் லோருக்கும் சென்னை டெசோ மாநாட்டில் (12.8.2012) புரிய வைப்போம் வாரீர்!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

JULY 16-31

1 comment:

சதீஷ் செல்லதுரை said...

நண்பர்களே இந்த கொடுமையை பாருங்கள் http://tamilmottu.blogspot.in/2012/07/blog-post_25.html

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...