Friday, September 30, 2011

சோதிடப்புரட்டும் கிரகங்களும்


சோதிடத்தில் கிரகங்களின் இருப்பிடத்தை வைத்து பலாபலன் சொல்லப்படுகிறது!
சூரிய வட்டத்தில் எந்தெந்தக் கிரகம் எந்தவிடத்தில் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் சோதிடம் கணிக்கப்பட்டிருக்கிறது. சென்னை, டில்லிக்குப் பக்கத்தில் வடக்கே இருப்பதாகவும், பம்பாய் கன்னியாகுமரிக்குத் தெற்கே இருப்பதாகவும் கூறுவது போலத்தான் சோதிடத்தில் கிரகங்கள் இருக்குமிடம் சொல்லப்பட்டிருக்கிறது!
சூரியனுக்குப் பக்கத்திலே இருக்கும் புதன் கிரகத்தை செவ்வாய் கிரகத்திற்கு பக்கத்தில் இருப்பதாகவும், சூரியனிலிருந்து இரண்டாவதாக இருக்கும் வெள்ளி கிரகத்தை 5ஆவதாக இருக்கும் வியாழன் கிரகத்திற்குப் பக்கத்தில் இருப்பதாகவும் இப்படி ஒரே குழப்பமாக கிரகங்களின் வரிசையை வைத்துக் கொண்டு சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று கூறினால் அதைக் கேட்பவர்கள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா!
அறிவியல்படி சூரியனிலிருந்து கிரகங்கள் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று இருப்பதை சோதிடத்தில் சூரியன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த மிகப் பெரிய தவறை வைத்துக் கொண்டு சோதிடம் அறிவியல் அடிப்படையானது என்று பொய் கூறி வருகின்றனர். ஒரு காலத்தில் நம்பினார்கள் பூமியை மய்யமாக வைத்துத் தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருவதாக! அறிவியல் ஆய்வுக்குப்பின் அது தவறு என்று தெரிந்த பிறகாவது சோதிடர்கள் திருத்திக் கொள்ள வேண்டாமா? எனவே சோதிடம் என்பது தவறான அடிப்படையில் தவறாக கணிக்கப்பட்டு பொய்யும் புரட்டும் இணைக்கப்பட்டு கூறப்படுவதுதான் என்பதை சிந்திப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்!
பூமியின் துணைக் கோள் சந்திரனை சோதிடத்தில் சேர்த்துக் கொண்டவர்கள், செவ்வாய் கிரகத்தின் துணைக்கோள் 2, வியாழனின் துணைக் கோள் 16, சனியின் துணைக்கோள் 22, இவை சோதிடத்தில் சேர்க்கப்படவில்லை! அக்கால சோதிடருக்கு இந்த துணைக்கோள்கள் தெரிந்திருக்கவில்லை! அவர்களுக்கு தெரிந்திருந்த அரைகுறையான வானவியல் அறிவைக் கொண்டு மனித வாழ்க்கையின் முழுமையையும் கூறிட முடியும் என்று நம்ப வைத்து வருகின்றனர்!
ஒரே ஒரு மூலிகையைக் கொண்டு மனிதனின் அத்தனை நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று கூறும் ஏமாற்றுக்காரனைப் போல், அறிவியலுக்குச் சம்பந்தமில்லாத சோதிடத்தால் மனித வாழ்வின் பிரச்சினைகளை எல்லாம் அறிந்து தீர்த்து வைக்க முடியும் என்று சோதிடர்கள் கூறி வருகிறார்கள். இருவரும் ஏமாற்றுக்காரர்களே!
வேத காலத்திலேயே சோதிடம் இருப்பதாகக் கூறுகிறார்களே அவர்கள் இந்த 21ஆம் நூற்றாண்டு வரை கூறி வருவது இந்த சோதிடம் மட்டும்தானே! அன்று சொன்னதைத்தானே  இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்! வேதத்தையும், சோதிடத்தையும் அதன் கணிப்பையும் கொண்டு புதிய கண்டுபிடிப்பு எதையாவது செய்ததுண்டா! பழைய சோதிடத்தை வைத்து ஏமாற்றுவது தானே உங்கள் வேலையாக இருக்கிறது. எவ்வளவு காலம் இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்! மேல் நாட்டினர் புதிது புதிதாக வானவியல் கண்டுபிடிப்புகளைச் செய்து வருகிற போது இந்த வேதகாலச் சோதிடர்கள் ஒரு கண்டுபிடிப்பைக் கூட செய்யவில்லையே!
மேல்நாட்டு விஞ்ஞானிகள் ஹால், கலிலியோ, பர்னால்டு, பெரைன், நிக்கோல்சன், ஹெர்ஷ்செல், கேசினி மற்றும் பல விஞ்ஞானிகள் 1610ஆம் ஆண்டிலிருந்து புதிய துணைக் கோள்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள்.
2008ஆம் ஆண்டில் சனிக்கிரகத்தின் துணைக் கோளில் ஒன்றான டைட்டானில் பூமியில் கிடைக்கும் எண்ணை வளம் போல அங்கு திரவ வடிவமான ஹைட்ரோ கார்ப்பன்கள், மீத்தேன், ஈத்தேன் உருவில் கிடைக்கின்றன! இவ்வாறு வானவியல் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் சோதிடர்கள் மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! அறிவியலை நம்பாத மக்கள் சோதிடத்தை நம்புகிறார்கள். அறிவியலை ஏற்று மக்கள் விழிப்படைய வேண்டும்.
- சோதிட மறுப்பும், வானவியல் சிறப்பும்
கவிஞர் தி.பொன்னுசாமி, தூத்துக்குடி

1 comment:

G.Ravi said...

Fine statement. Let your writings open people's eyes.
ravi, karur.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...