இன்று ஆகஸ்ட் 14!
இந்நாள் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல -ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில், சமூகநீதி தேவைப்பட்ட பெரும்பான்மை மக்களின் வாழ்வில் மறக்க முடியாத - மறக்கவே கூடாத ஒப்பற்ற ஒரு பெரும் நாள்!
சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் 1921 இல் உருவாக் கப்பட்டு, 1922, 1924 ஆம் ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்டு 1928 இல் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள் அமைச்சராகயிருந்த காலத்தில் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி ஒதுக்கீடுச் சட்டம் பார்ப்பனர்களின் தொடர் முயற்சியால் செல்லாது என்று சென்னை - உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது (28.7.1950).
உச்சநீதிமன்றமும் 1950 செப்டம்பரில் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.வகுப்புவாரி உரிமை நாள்!தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார்; போர்ப்பறை கொட்டினார். நாலாத் திசைகளிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகக் கிளம்பி மாணவர்களை, ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பினார்.ஆகஸ்ட் 14 ஆம் தேதியை வகுப்புரிமை நாளென்று அறிவித்தார். தந்தை பெரியார் வேண்டுகோள்படி அன்று தமிழ்நாடெங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மாணவர்கள் கல்வி நிறுவனங்களைப் புறக்கணித்தனர்.கல்வித் துறையில் பார்ப்பனர் ஆதிக்கம்!
தமிழ்மண் - தன்மான மண் - சமூகநீதி மண் என்ற உண்மை மத்தியில் ஆட்சியில் இருந்தோர்க்கு மிகத் தெளிவாக உணர்த்தப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் எப்படி இருந்தது?மக்கள் தொகையில் 2.7 சதவிகிதமாக இருந்த பார்ப்பனர்கள்பற்றிய புள்ளிவிவரம் இதோ:
இண்டர் மீடியட் 33.8 சதவிகிதம்
பி.ஏ.; பி.காம் 33.6 சதவிகிதம்;
பி.எஸ்ஸி., 46.6 சதவிகிதம்;
பி.ஏ. ஆனர்ஸ் 48.5 சதவிகிதம்
என்று நூற்றுக்கு மூன்று சதவிகிதம்கூட முழுசாக இல்லாத பார்ப்பனர்கள் இந்த அளவுக்கு அவர்களின் விகிதாச்சாரத்துக்கு மேலாக இருபது மடங்கு அனுபவித்து வந்தனர்.வகுப்புவாரி உரிமையும் செல்லாது என்று ஆக்கப்பட்டு விட்டதால் இந்த ஆதிக்கம் இன்னும் பன்மடங்கு உயர்ந்து, பார்ப்பனர் அல்லாத மக்கள் படுகுழியில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டு விடாதா?முதல் சட்டத் திருத்தம்அந்த நியாயமான கோபம்தான் தந்தை பெரியார் அவர்களைத் தணலாகக் கொதிக்கச் செய்தது; எரிமலையாக வெடிக்கச் செய்தது.
சென்னை மாகாணத்தில் தந்தை பெரியார் தலைமையில் மக்கள் கொதி நிலையை அடைந்ததைக் கண்ட பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலாகத் திருத்த முன்வந்தார்.தமிழ்நாட்டில் நடக்கும் வகுப்புரிமைக்கான போராட்டம்தான் சட்டத் திருத்தத்துக்குக் காரணம் என்பதை நாடாளுமன்றத்திலேயே பிரதமர் நேரு அவர்கள் அறிவு நாணயத்தோடு ஒப்புக்கொண்டார்.
அதன்படி 1951 பிப்ரவரியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் (15(4)) கொண்டு வரப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் `பால் வார்க்கப்பட்டது.இன்றைக்கு தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு என்றால், இதற்கு அஸ்திவாரக் கல் அதுதான். இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது என்றால், அதற்கான மூலம் - அதுதான் என்பதை மிகுந்த நன்றி உணர்ச்சியோடு நினைவு கூரவேண்டும்.
1950 இல் சென்னை மாநிலத்தில் இருந்த அதே நிலைதான் இன்றைக்கு இந்தியா முழுமையும் உருவாகியிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.கல்வியில் இட ஒதுக்கீடு கானல் நீரா?
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு மண்டல் குழுப் பரிந்துரையின் காரணமாக -சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது 1990 இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதுவும் எளிதில் கிடைத்துவிட வில்லை. சட்ட ரீதியாகக் கிடைக்கவேண்டிய அந்த உரிமைக்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தவேண்டியிருந்தது.
மண்டல் குழுப் பரிந்துரைகளில் கூறப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இதுவரை கானல் நீராகவே இருந்து வருகிறது.வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பது எப்பொழுது அமலுக்கு வந்ததோ, அப்பொழுதே கல்வியிலும் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்பது சொல்லாமலேயே அமலுக்கு வரத் தகுதி படைத்ததாகத்தான் பொருள்.
ஆனாலும், நீதிமன்றங்கள் அன்று முதல் இன்றுவரை எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் நடந்துவருவதைப் பார்க்கிறோம்.வெட்கப்படவேண்டிய ஒன்றுபிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கான சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தச் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது (29.3.2007) எந்த வகையில் நியாயம்? அந்தத் தடை ஆணையை நீக்கக் கோரி மத்திய அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது (7.8.2007).
மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஜனநாயகத்தின் கெதி இந்த நிலையில்தானிருக்கிறது என்பது வெட்கப்படவேண்டிய ஒன்றல்லவா?பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் (அரசமைப்புச் சட்டம் 340 ஆவது பிரிவின்படி) அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் தரும் பரிந்துரை களை அமல்படுத்தவேண்டும் என்று உள்ளதே அது வெறும் ``ஏட்டுச் சுரைக்காய்தானா?
1950- அதே நிலைதான் இன்றும்!1950 இல் வகுப்புவாரி உரிமைக்குக் கத்தி தீட்டப்பட்டபோது எழுந்த அதே கொந்தளிப்பு அதைவிடவும் அதிகமாக இப்பொழுது ஏற்பட்டாக வேண்டும். இதில் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டம் தேவையில்லை! ஓரணியில் அனைவரும் திரளவேண்டும். தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்புக் கேட்டை பிற்படுத்தப்பட்ட மக்கள் போதிய அளவுக்கு உணர்ந்ததாகத் தெரியவில்லை என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.தந்தை பெரியார் 1950 இல் அறிவித்த இந்த வகுப்புரிமை நாளில் மக்களைத் திரட்ட உறுதிகொள்வோம் - திட்டங்களை வகுப்போம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம்!
சென்னை
14.8.2007
தலைவர்,திராவிடர் கழகம்.
3 comments:
பதிவுக்கு மிக்க நன்றி. வரலாறுகளை விரும்பிப் படிப்பவன் எனும் முறையில் இந்த வரலாற்றுப் பதிவின் மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டேன்.
இன்று மட்டும் என்ன வாழ்கின்றது?தமிழ் நாட்டில் அரசு தலைமை அதிகாரி,தலைமை காவல் துறை அதிகாரி,எத்தனை மாவட்ட ஆளுநர்கள் இப்படி இன்னும் அந்த 3 விழுக்காடுதான் எல்லாவற்றிலும்.திறமையாவது வெங்காயமாவது!எல்லாம் தில்லு முல்லுதான்.
உயர் பதவிகளை விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருப்பவர்கள்தான் திறமை என்றும்,கிரீமி லேயர் என்றும் எத்துனை தில்லு முல்லு உண்டோ அத்துனையையும் ஒவ்வொரு படிக்கட்டிலும்,உச்ச அநீதி மன்றம் வரை தடைக்கல்லாக வைக்கின்றனர்.
60 ஆண்டிலே ஒரே ஒரு ரெத்தினவேல் பாண்டியன் அவர்கள் மட்டுந்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகி இருந்தார் என்றால் அது எதனைக் காட்டுகிறது?
ஆயிரக்கணக்கில் வேண்டுமென்றே அரசு துறைகளில் அதிகாரிகள் பதவிகள் தாழ்த்தப் பட்டவர்களுக்குப் போய்ச் சேர வேண்டியது நிரப்பப் படாமலேயே இருக்கிறது என்றால் அது என்ன சூழ்ச்சி?
பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப் பட்டோர்,தாழ்த்தப் பட்டோர் பொதுவில் தேர்ந்தெடுக்கப் படாமல் இட ஒதுக்கீட்டுப் பகுதியில் தேர்ந்தெடுக்கப் படும் தில்லு முல்லு எவ்வளவு காலமாக நடந்து கொண்டிருக்கிறது?
பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து படித்து வந்தவர்கள் வெட்கப் படாமல் இது நம் உரிமை என்பதை பலருக்கும் எடுத்துச் சொல்லிப் போராட வேண்டும்.
இன்றைய ஏழை நாளைய பணக்காரன்,இன்றைய பணக்காரன் நாளை ஏழையாகலாம்.யாராவது சாதி மாற முடியுமா?சாதியை ஒழித்து விட்டு பின்னர் இட ஒதுக்கீடு பற்றிப் பேசுங்கள்.
// பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப் பட்டோர்,தாழ்த்தப் பட்டோர் பொதுவில் தேர்ந்தெடுக்கப் படாமல் இட ஒதுக்கீட்டுப் பகுதியில் தேர்ந்தெடுக்கப் படும் தில்லு முல்லு எவ்வளவு காலமாக நடந்து கொண்டிருக்கிறது? //
இப்படி ஒன்று நடப்பதே பல பேருக்கு தெரிவதில்லை. என்னத சொல்ல..நம் மக்களின் அறிவை!
கலைஞர் ஆட்சியிலும் இது தொடர்வது இன்னும் வருத்தத்தை அதிகரிக்கிறது.
இதை சரி செய்ய அரசாங்கம் முன் வரவேண்டும்.
Post a Comment