Tuesday, December 13, 2011

தோழர்களே, தோழர்களே!


தோழர்களே, கழகத் தோழர்களே!  திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் (11.9.2011) நாம் ஒரு தீர்மானத்தை பீறிடும் உற்சாக வெள்ளத்தில் நிறைவேற்றினோம்!  

நமது அருமைத் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலை நாளேட்டின்  ஆசிரியராகப் பொறுப்பேற்று 50 ஆம் ஆண்டில் (1962-2012) அடி எடுத்து வைக்கிறார்.

உலக வரலாற்றில் இது ஓர் அரிய சாதனை!   இதனை வாண வேடிக்கைத் திருவிழாவாகக் கொண்டாட நாம் முடிவு செய்யவில்லை.

எந்த விடுதலை ஏட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று அதன் பொன்விழாவை - 50ஆம் ஆண்டைக் காண்கிறாரோ, அந்தப் புரட்சிகரமான விடுதலை ஏட்டுக்கு 50 ஆயிரம் சந்தாக்களைச் சேர்ப்பது என்பதுதான் அந்த முடிவு.

இப்படி ஒரு முடிவு எடுப்பதில் கூட கொள்கை சார்ந்த உணர்வுதான் நம்மிடை கோலோச்சியது. இதுவும் ஒரு தனித்தன்மையான நமக்கே உரித்தான சிந்தனை நீரோட்டமாகும்.

தந்தை பெரியார் நினைவு நாளில் சந்தாக்களை நமது ஆசிரியர் அவர்களிடம் அளித்தால், ஒரு வரலாற்று முக்கியத்துவம் கிடைத்துவிடும் அல்லவா!  தமிழர் தலைவர் தலைமையில் தலைமைக் கழகத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதும், சிறப்புக்கு இன்னொரு முக்கியமான இணைப்பே!  தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலி.பூங்குன்றன், சு.அறிவுக்கரசு, இரா.குணசேகரன், துரை.சந்திரசேகரன், மருத்துவர் பிறைநுதல் செல்வி, தஞ்சை இரா. செயக்குமார் ஆகியோர் தமிழ்நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட சுற்றுப் பயணத்தில் (டிசம்பர் 8,9,10) கிடைத்த அனுபவங்கள் மிகுந்த உற்சாகத்தை ஊட்டுகின்றன.

விடுதலைக்குச் சந்தா சேர்த்தல் - அதுவும் நமது தலைவர் அவர்களின் 50 ஆண்டுகள் விடுதலையின் மகத்தான பணியை உள்ளடக்கிய பணியில் நமது கறுப்புச் சட்டைத் தோழர்கள், பொறுப்பாளர்கள் மேற்கொண்டுள்ள பணி, முயற்சி மெய்ச் சிலிர்க்க வைக்கின்றன. ஒரு சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் இப்பணி மெச்சத் தகுந்த அளவிலேயே உள்ளன.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த பொதுமக்களை அணுகியபோது, தடை சொல்லாமல் சந்தாக்களை அகம் முகம் மலர்ந்து அளித்த பாங்கினை கழகத் தோழர்கள் எடுத்துக் கூறினர்.

எந்த மாவட்டத்திலாவது இந்தப் பணியில் சற்றுச் சுணக்கம் இருக்குமேயானால், அது கழகத் தோழர்களின் போதுமான முயற்சி இல்லாததுதான் காரணமாக இருக்க முடியுமே தவிர பொதுமக்களோ, பிரமுகர்களோ தமிழ், இனமான, பகுத்தறிவு உணர்வாளர்களோ காரணமல்ல என்பதை இந்த விடுதலை சந்தா சேர்ப்பு இயக்கத்தில் நாம் கற்றுக் கொண்டிருக்கும் தங்கமான பாடமாகும்; துல்லியமான கணிப்பாகும்.

இந்தப் பணியில்  கழகப் பொறுப்பாளர்களுடன் கழகத் தோழர்கள் ஒத்துழைப்பை அளிக்க முன்வர வேண்டும். ஒவ்வொரு கழகத் தோழரும் விடுதலை சந்தாதாரராக ஆகவேண்டும். அவரவர்களின் பங்களிப்பாக ஒரு தோழர் அய்ந்து சந்தாக்களைச் சேர்ப்பது என்று முடிவெடுத்து முனைந்தாலே முடிந்தது நமது திட்டம்!

50 ஆயிரம் விடுதலை நமது தமிழ் மக்களிடத்தில், குறிப்பாக நமது இளைஞர்களின் கரங்களில் தவழுமே யானால், மண்ணின் மனப்பான்மையிலேயே கூட மகத்தான மாற்றம் மலர்ந்து மணம் வீசும் என்பதில் அய்யமில்லை.

இதில் நேரடியாக திராவிடர் கழகத்தில் இல்லாத வர்கள் கூட அக்கறை காட்டக் கடமைப்பட்டு உள்ளார்கள். கலாச்சாரச் சீரழிவுகள் இளைஞர்களை மிகவும் மோசமான திசை நோக்கி சுனாமி போல் இழுத்துச் செல்லுகின்றன.

கல்வி, வேலைவாய்ப்பு இவற்றில் - திராவிட இயக்கத்தின்அரிய சாதனைகளால் வளர்ச்சி அடைந்து வரும் ஒரு கால கட்டத்தில்,  திருவிழா காலத்தில் கிளுகிளுப்பையைக் காட்டிக் குழந்தைகளைக் களவாடும் திருடர்கள் போல, இந்த நாட்டில் இருக்கும் ஊடகங்கள் இவற்றை உருக்குலைக்கும் ஆபத்தான வேலைகளில் திட்டமிட்டு இறங்கிவிட்டன.

சினிமா நடிகை இல்லாத அட்டைப் படங்கள் உண்டா? தொலைக்காட்சிகள் என்றால் முழுக்க முழுக்க பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வக்கிரங்கள்.

விஞ்ஞானக் கருவிகள் அஞ்ஞானக் கிருமிகளைத் தொற்றச் செய்யும் குப்பை மேடுகளாக வலம் வருகின்றன. இந்த நிலையில் பகுத்தறிவையும், ஒழுக்கத்தையும், தொண்டுள்ளத்தையும் போதிக்கக் கூடிய நம் ஆசானாக - பகுத்தறிவு ஆசான் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட விடுதலை ஒன்றே ஒன்றுதானே ஒற்றை மனிதனாகக் களத்தில் நின்று வீரசாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது?

இந்தப் பகுத்தறிவுத் தாய்ப்பாலை, சமூகத்தின் ஆணிவேரை, சமத்துவத்தின் அடிக்கட்டுமானத்தை, சமூக நீதியின் சூரியக் கதிரை, தன்மான உணர்வின் உயிர்க் காற்றை தமிழர்கள் பற்றிக் கொள்ள வேண்டாமா?  பற்றிக் கொள்ளச் செய்ய வேண்டாமா?

தோழர்களே! கழகத் தோழர்களே! இடையில் பத்தே நாள்கள்தான். பம்பரமாகச் சுழலுவீர்! நம்மால் முடியாதது மற்றவர்களால் முடியாது; மற்றவர்களால் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதைச் செயலில் காட்டும் சந்தர்ப்பம்! சுழலுவீர்! சூறாவளியாகச் சுழலுவீர்! செயல் முடிப்பீர்!  முடிப்பீர்!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...