Monday, December 12, 2011

முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்போம்! வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைத் தடுப்போம்!


மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் டிச.17இல் ஆர்ப்பாட்டம்!



முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்போம்!
வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைத் தடுப்போம்!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் உரிமையைக் காப்பாற்றுவது, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் படையெடுப்பினைத் தடுப்பது எனும் இரு முக்கியப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், வரும் 17ஆம் தேதி மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அறிவித்து, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை முற்றி தமிழ்நாடெங்கும் கிளர்ச்சி மனப்பான்மை நிலவி வருகிறது. கேரள எல்லையை நோக்கி 20 ஆயிரம் தமிழக விவசாயிகள் பேரணி நடத்தும் அளவுக்குத் தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி கொதி நிலையை எட்டியுள்ளது.

கேரளாவே பொறுப்பு!

இதற்கான பொறுப்பை கேரள மாநில அரசும், அம்மாநில அனைத்து அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும்தான் ஏற்க வேண்டும்.

சட்ட ரீதியாக அணுக வேண்டிய ஒரு பிரச்சினையை வீதிக்குக் கொண்டு வந்தது கேரள மாநில அரசேயாகும்.

சட்ட ரீதியாக அவர்கள் வெற்றி பெற முடியாத நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பும் அவர்களுக்குச் சாதகமற்றதாக இருக்கும்  சூழ்நிலையில், இந்தப் பிரச்சினையை கேரள மாநில மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் திசை திருப்பி விடப்பட்டுள்ளது.

இரு மாநில மக்களை மோத விடுவதா?

அதன் விளைவுதான் தமிழர்கள் தாக்கப்படுவது, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் அய்யப்பப் பக்தர்கள் அடிக்கப்படுவது, விரட்டப்படுவது, தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பேருந்துகளும், வாகனங்களும் தடுக்கப்படுவது உள்ளிட்டவையாகும்.

சட்ட ரீதியாகத் தீர்வு காண வேண்டிய ஒன்றில் இரு மாநில மக்கள் மோதும் பிரச்சினையாக மாற்றுவது கண்டிக்கத்தக்கதும்.  பொறுப்பற்றதுமாகும். கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் ஒரு வேலையைக் கேரளம்  உடனடியாக நிறுத்த வேண்டும்; குறிப்பாக கேரள மாநில அரசு எதிர் விளைவுகளால் ஏற்படக் கூடிய பார தூர விளைவுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் 43 லட்சம் மலையாளிகள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 43 லட்சம் மலையாளிகள் வாழ்ந்து வருவதாக தமிழ்நாடு மலையாளிகள் சங்கம் 2007இல் அறிவித்தது. இப்பொழுது அந்தத் தொகை மேலும் அதிகரித்திருக்கக் கூடும். தேனீர்க்கடை முதல் பல்வேறு தொழில்களை நடத்தித் தமிழ்நாட்டில் சுமுகமான ஒரு சூழ்நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நல்லுறவைப் பாதிக்கச் செய்யும் ஒரு வேலையில் கேரளம் நடந்து கொள்ளப் போகிறதா என்று தெரியவில்லை.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்து விட்டது. 136 அடி உயரத்திலிருந்து 142 அடி உயரம் வரை முல்லைப் பெரியாறு அணையில் நீர்த்தேக்கிக் கொள்ளலாம் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மிட்டல் தலைமையில் அமைந்த எழுவரைக் கொண்ட நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் அந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அணை பலமாக இருக்கிறதா - இல்லையா என்பதை அது தொடர்பான தொழில் நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள் சொல்ல வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளால் முடிவு செய்யப்படக் கூடிய ஒன்றல்ல!

கேரள அரசியல்வாதிகளுக்கு ஏதோ ஒரு பிரச்சினை தேவைப்படுகிறது. அதற்குக் கிடைத்ததுதான் உணர்ச்சி சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சினை என்று தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களைப் பொருத்தவரை, கட்சிகள் அமைப்புகளைப் பொருத்தவரை அவரவர்களுக்கு உகந்த முறையில் தங்களின் எதிர்ப்புணர்வுகளைக் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம்!

கேரள மாநில அரசு செய்ததுபோல, தமிழ்நாடு அரசும் சட்டப் பேரவையைக் கூட்டியுள்ளது. (15.12.2011)

வேறு பிரச்சினைகளில் சட்டப் பேரவையில் தேவை இல்லாத பிரச்சினைகளை ஆளும் கட்சித் தரப்பிலேயே எழுப்பி, அதன் காரணமாக வாத - பிரதிவாதங்களும், வெளிநடப்புகளும் இடம் பெற்றது போல இந்தப் பிரச்சினையிலும் நடந்து கொள்ளக் கூடாது. இந்தப் பிரச்சினையில் கேரளாவைப் பார்த்தாவது நமது அரசியல் கட்சிகள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

ஆளும் கட்சியின் பொறுப்பு

அனைத்துக் கட்சிகளையும் அரவணைக்கும் தன்மையிலும், ஒருங்கிணைக்கும் தகைமையிலும் இது தொடர்பான சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவதில் அதிமுக அரசு அக்கறை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மற்ற கட்சி சட்டப் பேரவை உறுப்பினர்களும் அதற்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்பதில் அய்யமில்லை.

தமிழர் உரிமைகளுக்காகப் போராடும் திராவிடர் கழகம்

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமாக இருந்தாலும் சரி, கச்சத் தீவு பிரச்சினையாக இருந்தாலும் சரி, காவிரி நீர்ப் பிரச்சினையாக  இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையாக இருந்தாலும் சரி, தமிழ்நாடு வஞ்சிக்கப்படும் நிலையிலிருந்து காப்பாற்றப்படுவதில் முதன்மையான நிலையில், முக்கியத்துவம் கொடுத்துக் குரல் கொடுத்து வருவது, போராடுவது தமிழ்நாடு அறிந்த ஒன்றே!

தேவையான பிரச்சாரப் போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் படையெடுப்பு!

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையோடு கல்வித் துறையில் முக்கியமான ஆபத்தினை எதிர் கொள்ளும் ஒரு நிலையில் நாடு உள்ளது. அதுதான் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களின் படையெடுப்பு! இதுகுறித்து கடந்த 9ஆம் தேதி விடுதலையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளேன்.

1) முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமை காப்பு!

2) வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் நுழையும் ஆபத்துத் தடுக்கப்படுதல்.

மதுரையில் 17ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

இவ்விரண்டையும் முன்னிறுத்தி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வரும் 17ஆம் தேதி சனியன்று மாலை 4 மணிக்கு மதுரை மாநகரில் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார் தலைமை வகிப்பார்.  (விவரம்)

தென் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பாக, மதுரை, மதுரை புறநகர், திண்டுக்கல், பழனி, தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி கழக மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், இப்பிரச்சினைகளில் அக்கறை உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பெரும் அளவில் பங்கேற்று, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கழகப் பொறுப்பாளர்கள் இதற்கான ஆயத்தப் பணியில் உடனடியாக ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...