Thursday, December 22, 2011

உணவுப் பாதுகாப்பு மசோதா

நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வந்த உணவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் மட்டுமே வருமானம் உள்ள மக்கள் இந்தியாவில் 77 விழுக்காடு என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மூன்று வேளை சாப்பாடுஎங்கிருந்து கிடைக்கப் போகிறது?
வறுமைக் கோட்டுக்கும்கீழ் உள்ள மக்கள் இந்தியாவில் 27 விழுக்காடாம். நாள் ஒன்றுக்கு 2400 கலோரி சத்துள்ள உணவு கிடைக்காதவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வரக் கூடியவர்கள் என்ற ஒரு கணக்கு இருக்கிறது.
இந்தியாவில் 50 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் அல்லல்படுவதாகவும் கூறப்படு கிறது.
உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள்தான் தற்கொலைப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்கள். பன்னாட்டுப் பட்டினிப் பட்டியலில் இந்தியாவுக்கான இடம் 66 ஆகும்.
இப்படிப்பட்ட ஒரு நாட்டில் இத்தகு சட்டம் தேவையானதே.
கிராமப்புறங்களில் 75 விழுக்காடு குடும்பங்களில் 46 விழுக்காடு குடும்பங்களுக்கும், நகரப்புறங்களில் 50 விழுக்காடு குடும்பங்களில் 28 விழுக்காடு குடும்பங்களுக்கும் மலிவு விலையில் உணவு தானியம் வழங்கப்படும். இதற்காக அரசுக்கு ஆகக் கூடிய செலவு ரூபாய் ஒன்றரை லட்சம் கோடியாம்.
64 ஆண்டு சுதந்திரத்தில் இன்னும் வறுமைக் கோடு பற்றியும், பட்டினிச் சாவு பற்றியும், மலிவு விலையில் உணவுப் பொருள்கள் வழங்குவது பற்றியும் பேசிக் கொண்டு இருப்பது பெருமைக்குரியதல்ல; என்றாலும் கொடுமையில் முதல் இடத்தில் இருப்பது பட்டினி என்பதாகும். அதனைப் போக்க வேண்டியது ஒரு நல்லாட்சியின் முதல் கடமையாகும்.
அப்படிப் பார்க்கப் போனால் கிலோ ஒன்று ஒரு ரூபாய் என்ற விலையில் ஏழை மக்களுக்கு வழங்கிய சாதனையைச் செய்தது இந்தியத் துணைக் கண்டத்திலேயே கலைஞர் தலைமையில் அமைந்த தி.மு.க. ஆட்சியில்தான் (2006-2011).
புதிதாக வரும் உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு இது முன்னோடித் திட்டம் என்று கூடச் சொல்லலாம்.
இந்தச் சட்டம் வரும் இந்த நேரத்தில் இன்னொன் றையும் நினைத்துப் பார்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அரசுக் கிடங்குகளில் பல லட்சம் டன் அரிசி இருப்பில் இருந்தும் அதனை ஏழை - எளிய மக்களுக்கு எடுத்து வழங்காமல் பாழாக்கப்பட்டது மன்னிக்கப்படக் கூடியது தானா? உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும்கூட அரசு அசைந்து கொடுக்க வில்லையே? இதில் என்ன பொருளாதாரம் குடி கொண்டு இருக்கிறதோ தெரியவில்லை. இவ்வளவுக் கும் பிரதமரும், திட்டக் குழுத் துணைத் தலைவரும் பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்தவர்கள்தான்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உணவு பாழாவது 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாம்.
பொருளாதாரத்தில் நோபெல் பரிசு பெற்றவரான அமர்த்தியா சென் ஒரு முறை சொன்னார் (2009 ஏப்ரலில்) அப்பொழுது மத்தியில் பி.ஜே.பி. ஆளும் பொறுப்பில் இருந்தது.
உணவுக் கிடங்குகளில் அப்பொழுது தேங்கி யிருந்த உணவு  6 கோடி டன் ஆகும். அதுபற்றி உருவகமாக அமர்த்தியசென் சொன்னார்.
இந்த ஆறு கோடி டன் தானிய மூட்டைகளை வரிசையாக அடுக்கினால் பூமியிலிருந்து நிலவுக்குச் சென்றுவிட்டு, பூமிக்கே திரும்பும் தூரம் என்றார்.
இவ்வளவு தானியம் இருந்தும் - இந்தத் தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டினி - விவசாயிகள் தற்கொலை.
இந்தியாவில் விவசாயம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் முக்கியமான தொழில். இது உயர்ஜாதி மக்களின் தொழிலாக இருந்திருந்தால் இந்த அவலம் ஏற்பட்டு இருக்காது.
வருணாசிரமக் கண்ணோட்டத்தோடு விவசாயம் என்பது பாவத் தொழில் என்கிறதே மனுதர்மம் (அத்தியாயம் 10 சுலோகம் 84).
நாடு வறுமைப்பட்டதற்கும், உழைப்பாளி ஏழையாக இருப்பதற்கும் இந்த இந்து மனப்பான்மையும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது - மலிவு விலையில் வழங்குவது தற்காலிகமாகவே இருக் கட்டும்!
சொந்தக் காலில் மக்களை நிற்க வைப்பதே ஒரு மக்கள் அரசுக்கு நல்லதும் - மரியாதையும் ஆகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...