Tuesday, December 20, 2011

உதைபட்ட பிறகாவது புத்தி வரவேண்டாமா?



முல்லைப்  பெரியாறு அணைப் பிரச்சினை உணர்ச்சிகளைத் தூண்டி விட்ட பிரச்சினையாகி விட்டது. இதற்கு முதல் காரணம் கேரள மாநில அரசியல்வாதிகளே!

கேரளாவில் நடைபெற உள்ள ஒரு இடைத் தேர்தலை மய்யப்படுத்தி இந்த வேலையை கேரள  அரசியல்வாதிகள் செய்து கொண்டுள்ளனர். இந்த உண்மையை இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவரை அறியாமலேயே போட்டு உடைத்து விட்டார். அரசியல் நிர்பந்தத்தின் காரணமாக அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார் என்பது வேறு பிரச்சினை!
உணர்ச்சி வெறியாகி தமிழ்நாட்டிலிருந்து சபரிமலை சென்ற அய்யப்பப் பக்தர்கள்கூட கேரள மாநில வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளனர். வாகனங்களில் சென்ற பக்தர்களும், அவர்தம் வாகனங்களும் தாக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்யப்பப் பக்தர்கள் உள்ளூர் கோவில்களிலேயே இரு முடிகளை இறக்கி வழிபட்டுத் திரும்பியுள்ளனர்.

தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்துகூட ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார்.

பக்தர்கள் ஏன் வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும்? உள்ளூரில் கோவில்கள் இல்லையா என்ற முறையில் கருத்து ஒன்றினைத் தெரிவித்தார் என்றவுடன், இந்து மதத்துக்கே முழுக் குத்தகை எடுத்துள்ளதாகக் கருதிக் கொண்டு இருக்கும் திருவாளர் இராம. கோபாலர் விட்டேனா பார்! என்று எகிறிக் குதித்துள்ளார். சபரிமலை அய்யப்பன் என்றால் சாதாரண தெய்வமா? அங்கே செல்லுவதைத் தடுக்கலாமா? அதற்கு மாற்றுக் கருத்துக் கூறலாமா என்கிற முறையில் தாண்டிக் குதித்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் ஒன்றும் பகுத்தறிவுவாதியோ, நாத்திகரோ அல்ல. கட்சியைத் தொடங்குவதற்குமுன்பு கூட கட்சியின் கொடியை திருப்பதி ஏழுமலையான் பாதாரவிந்தத்தில் வைத்து வணங்கிதான் எடுத்துக் கொண்டு வந்துள்ளார் (இவர் மட்டும் உள்ளூர் கோவிலை மறந்துவிட்டு, திருப்பதி ஏன் சென்றார் என்று யாரும் கேட்டுவிடக் கூடாது!)

நடிகர் விஜயகாந்துக்கு வந்த திடீர் கோபம் தமிழ்நாட்டுப் பக்தர்கள் கேரளக்காரர்களால் தாக்கப்படுகிறார்களே, அப்படி இருக்கும்போது, ஏன் அங்கு செல்ல வேண்டும் என்ற அர்த்தத்தில்தான் -அதைக் கூடப் பொறுக்க முடியாதவராகத் துள்ளிக் குதிக்கிறார் இந்து முன்னணி மாநில அமைப்பாளர்.

இருவரையுமே நாம் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. உங்கள் மதம் அல்லது உங்கள் பக்தி ஒற்றுமையை வளர்த்திருக்கிறதா? புலிகளின்மீது சவாரி செய்யும் அய்யப்பன் தன்னை நாடிவரும் பக்தர்களைக்கூடக் காப்பாற்ற முடியாத நிலையில் தானே இருக்கிறான்?

அய்யப்பனுக்காக ஒரு மாத காலம் விரதமிருந்து மார்கழி மாதக் குளிரைக் கூடப் பொருட்படுத்தாமல் காலை - மாலை இரு வேளையும் குளிர் தண்ணீரில் குளித்துவிட்டு சுத்த பத்தமாக இருந்து, முகச் சவரம்கூடச் செய்து கொள்ளாமல், இரு முடி தரித்து சபரிமலைக்குச் சென்றால், தங்கள் மாநிலத்திற்கு வரும் பக்தர்கள் என்றுகூடப் பார்க்காமல் மலை யாளிகள் தாக்குகிறார்கள்; விரட்டுகிறார்கள் என்றால், இதன் நிலைமை என்ன?

தம்மை நாடி வரும் பக்தர்களைக் கூடக் காப்பாற்ற முடியாத கடவுள், பக்தர்களின் வேறு எந்தக் குறையைப் போக்கப் போகிறான்? ஒரே ஒரு மணித் துளி கொஞ்சம் சிந்தனையைச் செலவழிக்கக் கூடாதா?

உருவமற்ற கடவுள் என்று  ஒரு பக்கத்தில் உபதேசித்துக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு கோவில்களைக் கட்டி, புதுப்புது கதைகளை ஜோடித்து, தல புராணங்கள் எழுதி, மனதில் தோன்றியதையெல்லாம் உருவங்களாகச் செதுக்கி - இது பெரிய கடவுள் - வல்லமை மிக்க கடவுள் - மற்ற ஊர் கடவுள்களைவிட சக்தி வாய்ந்தவர் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, உண்டியல் வைத்து வசூல் செய்வது என்பது பச்சையான பித்தலாட்ட வியாபாரம் அல்லாமல் வேறு என்னவாம்?

உதைபட்ட பிறகாவது நல்ல புத்தி வர வேண்டாமா? உள்ளூர் கோவிலை மதிக்காமல் வெளி மாநிலக் கோவில்களுக்குச் செல்லுவதன் தாத்பரியம் என்ன? உள்ளூர் கடவுளுக்குப் பவர்கட் என்ற பொருளில் அல்லவா?

பக்தி என்று வந்து விட்டால் புத்தி கெட்டுப் போய் விடுவதால் தானே இவ்வளவு தெருப் புழுதிகளும்?

விரதம் இருந்து இருமுடி தரித்து சபரிமலைக்குச் செல்லும் வழியில் தங்களுக்கு ஏற்பட்ட தாக்கு தலுக்குப் பிறகாவது பக்தர்கள் திருந்த வேண்டும் என்பதே நமது மெய்யான வேண்டுகோள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...