Wednesday, December 21, 2011

திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்தும் போக்கு!


நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று, தி.மு.க. தோல்வியுற்ற நிலையில் தமிழகத்தில் நடைபெறும் பார்ப்பன ஏடுகள், ஊடகங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமல்ல, பொதுவாக திராவிட இயக்கத்தையே கொச்சைப்படுத்தி எழுதத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக நாளேடுகளில் தினமலர், தினமணி, இதழ்களில் துக்ளக், தமிழக அரசியல் போன்றவை.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு, திராவிட இயக்கங்களை ஒழிப்பதே எம் முதல் பணி என்று சூளுரைத்துக் கொண்டுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க.விலும் திராவிடம் இருக்கிறது. அதனை இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாதது ஏன்? அதற்கு விடையை  துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ. ராமசாமி கொடுத்துள்ளார்.
இரண்டு திராவிட அரசியல் கட்சிகளில் ஒன்றுக்குத் தலைமையேற்கும் ஜெயலலிதா யார்? திராவிடப் பாரம் பரியத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாதவர். அந்தப் பாரம் பரியத்தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமையாகவும், கேவலமாகவும் எதிர்க்கப்பட்டதோ, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர். சரி இப்படிப்பட்ட பாரம்பரியத்திற்குத் தலைமை ஏற்பதற்காக தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொண் டாரா என்று கேட்டால் கிடையாது. தன்னுடைய நம்பிக்கை களை அந்தப் பாரம்பரியம் ஏற்கும்படிச் செய்தார் என்று சோ குறிப்பிட்டுள்ளார். (துக்ளக், 21.9.2005)
இந்த நிலையில் திராவிடக் கட்சிகளைத் தாக்கி னால் அ.இ.அ.இ.தி.மு.க.வுக்குப் பாதிப்பு ஏற்பட்டு விடாது என்று உறுதியாக பார்ப்பனர்கள் நம்புகிறார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கலாச் சாரம் தொடர்பானவற்றில் கவனம் செலுத்துகிறது.
அண்ணா முதல் அமைச்சராக வந்தார் என்றால் சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம் கொடுத்தார். சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். இந்திக்கு இடமில்லை என்ற ஒரு நிலையை, சட்ட ரீதியாக ஏற்பாடு செய்துவிட்டார். அரசு அலுவலகங்களில் எந்த மதக் கடவுள் படங்களும் இடம் பெறக்கூடாது என்று ஆணை பிறப்பித்தார்.
ஸ்ரீயை திரு என மாற்றினார்.
கலைஞர் ஆட்சிக்கு வந்தார் என்றால், பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உண்டாக்குகிறார், தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றுகிறார். தமிழ் செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறார். தீட்சதர்கள் ஆதிக்கத்தில் பல நூற்றாண்டு காலமாக இருந்த சிதம்பரம் நடராசன் கோவிலை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறார். வடலூர் இராமலிங்கனாரின் சத்திய ஞானசபையிலிருந்து அவர் கொள்கைக்கு மாறுபாடாக உருவ வழிபாடுகளை நடத்தி வந்த பார்ப்பன அர்ச்சகரை வெளியேற்றுகிறார். இவையெல்லாம் பார்ப்பனப் பண்பாட்டு ஆதிக்கத்தை, படையெடுப்பை நொறுங்கச் செய்யும் பாதுகாப்பான சட்ட ஏற்பாடுகளாகும்.
இடைஇடையே தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தந்தை பெரியார் கருத்துகளைப் பளிச்சென்று தெரி விக்கிறார். பார்ப்பன விஷமங்களைத் தோலுரிக்கிறார்.
இவையெல்லாம் பார்ப்பனர்களின் கண்களை உறுத்துகின்றன. ஜெயலலிதா திராவிட இயக்கத்தின் பெயரால் உள்ள ஒரு கட்சிக்குப் பொதுச் செயலாளர் என்றாலும், அந்தப் போர்வையில் பார்ப்பனப் பண்பாட்டு நிலையைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுகிறார். எடுத்துக் காட்டு - தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தை ரத்து செய்ததாகும்.
பார்ப்பன ஊடகங்கள் இந்தக் கண்ணோட்டத்தில் தான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கங்களை இழிவுபடுத்தி, உண்மைக்கு மாறான தகவல்களை உலவ விடுகின்றன.
தமிழக எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்? இந்த ஆட்சியின் பின்னணியில் நிகழும் பார்ப்பனீயத்தின் போக்குகளைப் பற்றி எழுதுவது கிடையாது. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற சட்டத்தை ரத்து செய்த முதல் அமைச்சரின் அந்தப் போக்குகளைப் பற்றிக் கண்டிப்பதும் கிடையாது. மாறாக திராவிட இயக்கக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் கட்சியின் பழைய தளபதிகளை மறந்து விட்டார்கள். கே.வி.கே. சாமியை மறந்துவிட்டார்கள்! ஏ.வி.பி. ஆசைத்தம்பி எப்படிப்பட்டவர் தெரியுமா? அவர்கள் எல்லாம் முன்னிறுத்தப்படுவதில்லை என்கிற போக்கில் தமிழக எழுத்தாளர்கள் தங்கள் பங்குக்கு திராவிட இயக்கத்தினைப் பலகீனப்படுத்தும் சக்திகளுக்குத் துணை போகிறார்கள்.
இப்படியெல்லாம் எழுதக்கூடாது என்று கூடச் சொல்லவில்லை. கண்டிப்பாக எழுதட்டும். அதனைச் சொல்லும் முறை எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
எதிரிகள் திட்டமிட்டு எழுதுகோல் பிடிக்கிறார்கள். தமிழர்களோ தங்களது மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்வதற்காக சமூகப் பொறுப்புணர்ச்சியின்றி எழுதுகோல் பிடிக்கிறார்கள். இந்தச் சூழலை உண்மைத் திராவிட இயக்கத் தீரர்கள், தலைவர்கள் அம்பலப்படுத்த வேண்டியது மிகவும் அவசர - அவசியமாகும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...