Friday, December 16, 2011

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி


நாளை நமதா - பிறருடையதா?
நேற்று முன்னாள் (14-12-2011) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை இன்றுபோய், நாளைவா - பழசல்ல, புதியது - என்ற கட்டுரை முடிவில் என்ன பாடத்தைக் கற்றுக் கொண்டோம் நாம் இதன் மூலம்? என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது!
வாசக நேயர்கள் அசை போட் டீர்களா? ஆழமாகச் சிந்தித்தீர்களா?
படிப்பதின் பயன், வாழ்வில் நாம் அதன்படி கற்று, நிற்க வேண்டிய தல்லவா முக்கியம்!
கசடறக் கற்றபின், அதற்குத் தக நின்று ஒழுக வேண்டும் என்பதுதானே வள்ளுவர் போன்ற ஞானசூரியன்கள் நமக்குப் போதிக்கும் பாடம்?
பாடம்  1: பிள்ளைகளை வளர்க்கும் போது பாசம், பரிவு காட்டுவது, அன்பைப் பொழிவது, செல்லங் கொடுத்தல் - எல்லாம் தேவைதான்; ஆனால் அவை அளவுக்கு மீறினால் அதன் விளைவு அவர்களை நாமே - நமது அளவுக்கு மீறிய அன்பால், பாசத்தால் கெடுக் கிறோம்; சரியாக வளராமல் தடுக்கிறோம் என்பதேயாகும்.
அவளோ, அவனோ நன்றாகப் படிக்க வேண்டும் என்பதால் அளவுக்கு மீறி, அவர்களைப் பாதுகாப்பது போன்ற பெற்றோர்களது நடவடிக்கை, அவர்களது மனதில் தாங்கள் கேட்கும் எல்லாவற்றையும் உடனே கொடுக்க வேண்டியதுதான் பெற்றோர் கடமை என்ற ஓர் உரிமை மனப்பான்மையை (Entitlement Mentality) அவர்களுக்குள் உருவாக்கி விடுகிறது. பிடிவாதம் தானே எரு போட்டு வளர்க்கப்படுகிறது. பெற் றோர்களின் நிலைபற்றி ஏதும் அறியாத வர்களாகவே அப்படிப்பட்ட உரிமை மனப்பான்மை பிள்ளைகள் வளர்ந்து விடுகிறார்கள்!
யாராக இருந்தாலும் தன் சொற்படி தான் கேட்க வேண்டும் என்ற எஜ மானத்துவ மனப்போக்கில்தான் எப் போதும் இருப்பார்கள்; அப்படிப்பட்ட வர்கள், நிருவாகப் பொறுப்பில் அமர்த் தப்பட்டாலும் அவர்கள் அடுத்தவர்கள் கஷ்ட, நஷ்டங்களை அறவே அறியாமல், ஒரு சர்வாதிகாரியாகவே நிருவாகத்தை நடத்தி, தன் சக ஊழியர்களுக்கு மிகப் பெரிய மன உளைச்சலை உருவாக்கி, அவர்களை சதா குற்றவாளிக் கூண் டிலேயே வைப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு, முன்பு நேர்காணலில் பெற்ற அனுபவ பாடங் களை வளர்ந்த இளைஞர் போன்றவர்கள் அவர்களைத் திருத்திக் கொண்டு, சரியான பாதையில் செல்ல அது வழி காட்டும் அல்லவா?
மற்றவர் இன்னல்கள், இடுக்கண்கள், துன்பங்கள், துயரங்களை உணர்ந்து, நல்ல தலைமைத்துவப் பண்புடன், ஒரு கூட்டுக்குழு மனப்பான்மையோடு எதை யும் செய்து வெற்றி பெறுபவராக வெளியே வரமுடியும்.
எனவே,
1. நீங்கள் ஓர் அன்பு காட்டும் பெற்றோராக இருந்தால் அதை அளவுடன் செய்யுங்கள்.
2. அன்பு காட்டுகிறேன் என்ற பெயரால் அந்தப் பிஞ்சுகளை- நாசமாக்கி விடாதீர்கள் - வளரும் செடிக்குக்கூட அதிகமாக தண்ணீர் ஊற்றினால் அது வளருமா? அழுகுமா?
பயிர் நட்ட விவசாயி மழையை எதிர்பார்க்கிறார் - ஆனால் அதே மழை, அளவுக்கு அதிகமாகப் பெய்து பயிர்கள் நீரில் மூழ்கினால் அழுகிவிடுமே தவிர வளரவா செய்யும்?
குழந்தை வளர்ப்பிலும், செல்லம் காட்டுவதிலும்கூட, அளவான நீரைப் பாய்ச்சப் பழக வேண்டும் பெற்றோர்கள்.
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் அவர்கள் விரும்பும் வசதிகளையெல்லாம் செய்துத் தருவதில் தவறில்லை.
பெரிய வீடு, நல்ல (அவர்களின் சுவை) சாப்பாடு, பியானோ, கைத்தொலை பேசி, i-phone, i-pod   டி.வி. கேம்ஸ் எல்லாம் தரலாம்.
நீங்கள் வீட்டு வேலை செய்யும்போது, தூய்மைப் படுத்தும்போது, (மேலை நாடுகளில் புல் வெட்டுதல், பனிக்கட்டிகள் விழும்போது, வீட்டு முன்பும், பின்பும் பனிக் கட்டிகள் எடுக்க வசதி செய்தல், நடுத்தர குடும்பங்களிலும்கூட) வீட்டைத் தூய்மைப் படுத்தல், அம்மா, அப்பாவுக்கு வீட்டுப் பணிகளில் உதவுதல் - இவற்றிலும் ஈடுபடும்படிச் செய்தால்தான் உங்கள் கஷ்டம், அதில் உள்ள பிரச்சினை - சிக்கல் கள் - சிரமங்களை- அப்பிள்ளைகள் உணர முடியும்!
அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையாது என்பதைவிட, அய்ம்பதைக் கூட மகிழ்ச்சியுடன் அது காணாது என்ற நிலையே வரும், மறவாதீர்!
நாளைக்கு நீங்களும் பெற்றோர்களாக நரைத்த முடியுடன் வருவீர்கள் - அப்போது நீங்கள் எங்களுக்கு உதவுவதுபோல உங்கள் மகன் உங்களுக்கு உதவுவான் என்று கூறி உணர்த்துங்கள் - அவர் களுக்கு.
நாங்கள் உங்களுடனா இருக்கப் போகிறோம்; உங்களை முதியோர் இல்லத் துக்கு அல்லவா அனுப்பி விட்டு நாங்கள் ஜாலியாக வாழுவோம் என்று மனதிற்குள் நினைக்கும் பிள்ளைகளும் உள்ளனரே என்கிறீர்களா - அதுவும் சரியே!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...