Wednesday, December 21, 2011

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னி குயிக்கும், பத்மநாபசுவாமியும்



- பொறியாளர் பி.கோவிந்தராசன்
1. பத்மநாபசாமியின் தங்கப் புதையல்
பாடுபட்டுத் தேடிய பணத்தையும், பொன்னையும், மணியையும், பயன்படுத் தாமல் மண்ணில் புதைக்கும் மனிதர் களை அறிவிலிகள் என்றார் புலவர். இது மனிதர்களுக்கு மட்டும் சொல்லப் பட்டதல்ல. திருநீற்றைக் கொடுத்துத் தங்கத்தைச் சேர்க்கும் கடவுள்களுக்கும், மதவாதிகளுக்கும்,  சாமியார்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் தங்கப் புதையல்களை பெட்டி பெட்டியாகச் சேர்த்து வைத்து, திறப்பதற்கு பிரசன்னம் பார்க்கும் பத்மநாபசுவாமிக்கும், திருவாங் கூர் சமஸ்தான் மன்னர் பரம்பரைக்கும் பொருந்தும். கடவுள்களுக்கு எதற்காக, ஆராதனையும் அபிஷேகமும் செய்யப் படுகின்றது? மக்களின் நலன்களுக்காக அருள் பாலிப்பதற்காக கடவுள்களுக்கு, கோவில்களும், அர்ச்சனைகளும் செய்யப்படுகின்றன. கடவுள்கள் தங்கள் கடமைகளை செய்யத் தவறும்போது மக்கள் மூட நம்பிக்கையில் இருந்து விடுபட்டு, மக்கள் நலனுக்காக பாடுபட சில மனிதர்கள் முன் வருகிறார்கள். ஆண்டவன் கைவிட்டும், ஆளுகின்ற ஆங்கிலேய இந்திய அரசு கைவிட்டும், தன் சொந்த நகைகளையும், சொத்துக் களையும் விற்று முல்லைப் பெரியாற்றில் அணை கட்டிய பென்னி குயிக், கடவுள் களைவிட பன்மடங்கு உயர்ந்தவர். பென்னி குயிக் மதம், மொழி, நாடு, குடும்பம் ஆகியவற்றைக் கடந்து, மக்கள் நலனைப் போற்றியதால் தங்கப் புதை யலை வைத்துக் கொண்டு, நீதிமன்றத் தீர்ப்புகளுக்காகக் காத்திருக்கும் மற்றும் பிரசன்னம் பார்க்கும் மந்திர தந்திர வாதிகளுக்கு கட்டுப்படும், பத்ம நாபசு வாமியை விட பன்மடங்கு உயர்ந்தவர். ஆம், மனிதன் கடவுள்களை விட உயர்ந் தவன் என்ற தந்தை பெரியாரின் கொள் கைகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
2.முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை 1886 இல் கட்டிய போது, கேரள மாநிலம் உருவாகவில்லை. இடுக்கி அணை கட்டப்படவில்லை. அப்போது திருவாங் கூர் சமஸ்தானம் இருந்தது. பிரிட்டிஷ் இந்திய அரசின் கீழ் இருந்த மெட்ராஸ் பிரஸிடென்ஸி, 999 ஆண்டுகளுக்கு திருவாங்கூர் மன்னர் (கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிக்கு மன்னர்) உடன் ஒப்பந்தம் போட்டனர். இதன்படி திருவாங் கூர் மன்னர், அணை கட்டுவதற்கான நிலத்தைத் தந்தார். 1440 அடி நீளமும், 158 அடி உயரமும் கொண்ட அணை கட்டப்பட்டது. தேக்கிய நீரை, மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு, பாறைகளை வெட்டி கால்வாய் மற்றும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்திற்கு குகையமைப்பு   (Tunnel) மூலம், அப்போதைய சென்னை ராஜதானியைச் சேர்ந்த மாவட்டங் களுக்கு, சுமார் 2 லட்சம் ஏக்கர் நிலங் களுக்கு இதனால் பாசன வசதி கிட்டியது. அதே சமயம் இடுக்கி, கோட் டயம், எர்ணாகுளம் போன்ற மாவட் டங்கள் வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றப்பட்டன.
3. மாநிலங்களும், நதிகளும்
நாடு சுதந்திரம் அடைந்தது 1947 இல் திருவாங்கூர் சமஸ்தானம் B பிரிவு மாநிலமாக மாறியது. மன்னர்கள் ராஜப் பிரமுகர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதே நிலை 1950 இல், இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோதும் நீடித்தது. பின்னர் 1956 இல் மொழிவாரி மாநிலங் கள் அமைக்கப்பட்டபோது, திருவாங்கூர் சமஸ்தானத்துடன் மதராஸ் ராஜ தானியைச் சேர்ந்த சிறிய பகுதிகளை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கப் பட்டது. பின்னர் திருவாங்கூர் சமஸ் தானப் பகுதியைச் சேர்ந்த கன்னியா குமரி மாவட்டம், தமிழ்நாட்டுடன் சேர்க்கப் பட்டது. இதனால் முல்லைப் பெரியாறு அணை கட்ட ஒப்பந்தம் செய்த திரு வாங்கூர் சமஸ்தான மக்களின் ஒரு பகுதி தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார்கள் என அறியலாம்.
இவ்வாறு கேரள மாநிலம் உருவான பின்பு, கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழ்ப் பகுதியில், இடுக்கி அணை (கொள்ளளவு 7.1  Tmc) புனல் மின்சாரம் தயாரிக்கக் கட்டப்பட்டது. இந்த அணைக்கும் போதிய நீர்வரத்து கிடைக்கவில்லை. இதனால் இடுக்கி அணை முழுப்பயன் தரவில்லை.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி முடிந்து, தி.மு.க. ஆட்சி முடிந்து, புதிய ஆட்சி வந்தபோது 1979 இல் கேரள அரசு, அணையில் கசிவு ஏற்பட்டது எனக் கூறி அணை உடையும் ஆபத்து உள்ளதாகப் பிரச்சாரம், கேரளாவில் ஏற்படுத்தப் பட்டது. இதன் பேரில் மத்திய நீராதாரக் குழு (Central Water Commission)  மத்திய அரசால் அணையை பார்வையிட அனுப்பப்பட்டது. இந்தக் குழு அணை பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தது. தமிழ்நாடு அரசினை அணையை வலுப் படுத்த அறிவுறுத்தியது. அதுவரை அணையின் உயரத்தை 136 அடி ஆகப் பயன்படுத்தலாம் என தெரிவித்தது. எனவே அணை பன்மடங்கு வலுத்தப்பட் டது. உச்சநீதிமன்றமும் 2006 இல் 142 அடிவரை  நீரை தேக்கி வைக்கலாம்   என அறிவித்தது.
4. இந்திய அரசும், நதிகளும்:
மக்களுக்குத் தேவையான உணவும், நீரும் நதிகள் மூலம் கிடைப்பதனால் நதிகளை தெய்வமாக வணங்கினார்கள். இந்த நதிகளை மொழிவாரி மாநிலங்கள் 1956 இல் அமைக்கப்பட்டபோது மாநிலங்கள் பங்கு போட்டுக் கொண்டன. இது குறித்து இந்திய அரசியல் சட்டம் Article - 262  பிரிவில், மத்திய அரசுக் குத் தேவையான சட்டங்களை இயற்ற அதிகாரம் அளித்துள்ளது. இவ்வாறு மத்திய அரசுக்குத்தான் மாநிலங்களுக்கு இடையேயான நதிகளுக்கு நதிநீர் சிக்கல்களுக்கு முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நதிகளுக்கு நதிநீர் சிக்கல்களுக்கு முடிவு எடுக்க அதிகாரம் உள்ளது. மாநிலங் களுக்கு சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை. மத்திய அரசு 1956 இல் பல மாநிலத்தைச் சேர்ந்த ஆறுகள் குறித்து நதிநீர்ச் சிக்கல்களைத் தீர்க்க சட்டம் இயற்றியது. இதன்படி மாநிலங்களின் கோரிக்கைகளின் பேரில் சிவில் (குற்றம் சாராத) நீதிமன்ற நடைமுறை 108 பிரிவில் சொல்லப்பட்டவாறு நதிகள் தீர்ப்பாயம்  (Tribunal) அமைக்க வழிவகை செய்யப் பட்டது. மேலே சொல்லப்பட்ட சட்டங்கள் அனைத்தும் போதிய தீர்வு தரவில்லை. எனவே கீழ்க்கண்டவாறு பரிந்துரைகள் செய்யப்பட்டன.
1. 1983 இல் பிரதமர் இந்திரா காந்தியால் அமைக்கப்பட்ட சர்க்காரியா குழு எடுத்த முடிவு - நடைமுறையில் உள்ள பல மாநில ஆறுகள் நீர்ப்பங்கீட்டு சட்டம் 1956 அய் நதிநீர்ச் சிக்கலை விரைவாகத் தீர்க்கும் வகையில் திருத்தப் பட வேண்டும். இந்த பரிந்துரைகள்மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
2. நாடாளுமன்ற நிலைக்குழு 1998 இல் அமைச்சர் திரு. எர்ரான் நாயுடு தலைமையில், எடுத்த முடிவு - மாநில அதிகார வரம்பில் உள்ள நதிநீர் என்ற பொருளினை மாநிலத்துக்கும், மத்திய அரசுக்கும் பொது வரைவுப் பட்டியலில் மாற்றி சேர்க்கலாம். இந்தப் பரிந்துரைகள் மீது மத்திய அரசால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
5. முடிவுரை
1. நிருவாக வசதிக்காக ஏற்படுத்தப் பட்ட மாநில எல்லைக் கோடுகள் மக்கள் மனங்களைப் பிரிப்பதற்காக அல்ல; மனித பண்பாடுகளைப் பிரிப்பதற்கு அல்ல; இயற்கை வளங்களைப் பிரிப்பதற்கு அல்ல. எனவே, 1956 இல் ஏற்பட்ட மொழிவாரி மாநிலங்களால் ஏற்பட்ட பாதகங்களை நீக்குவதற்கு, சுமார் 55 ஆண்டுகள் கடந்த பின்னராவது சரியான சட்டங்களையும், நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும்.
2. கி.பி. 400 இல் தோன்றிய கணித மேதை ஆரியபட்டருக்கு முன்பேயே, கணித அறிவைப் பயன்படுத்தி கல்லணை கட்டினார் கரிகாலர்; மன்னர் இராசராசன் பெரிய கோவிலைக் கட்டினார். மன்னர் சரபோசி சரஸ்வதி மஹால் நூலகம் அமைத்தார். சுதந்திரம் பெற்ற பின்பு 1970-களில், கடலின் குறுக்கே 2345 மீட்டர் நீளம் உள்ள பாம்பன் பாலம் கட்டப்பட்டது. சமீபத்தில் சூயஸ் கால்வாய்க்கும், பனாமா கால்வாய்க்கும் இணையாக சேது சமுத் திரக் கால்வாய்த் திட்டம் துவங்கப்பட்டது. இவை தமிழர்கள் கட்டடங்களையும், கோவில்களையும், பாலங்களையும், நூலகங்களையும் கட்டி பராமரிக்கும் பாரம்பரியம் கொண்டவர்கள் என்பதை நினைவில் கொள்ளப் பயன்படும். இத்தகைய பாரம்பரியத்தைக் கொண்ட திராவிடர்கள் வழிவந்த கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை எப்படி உடைக்கலாம் அல்லது முடக்கலாம் என்று சிந்திப்பதை விட்டு எப்படி அணையை வலுப்படுத்தலாம் என சிந்திக்கலாம்.
3. முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட ஒதுக்கியுள்ள பணத்தை, ஒரு பயனுள்ள புதிய திட்டங்களை உரு வாக்குவதில் தங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவழிக்கலாம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...