Saturday, December 17, 2011

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை: அப்பாவி மக்கள் தாக்கப்படக் கூடாது!


முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை: அப்பாவி மக்கள் தாக்கப்படக் கூடாது!
கலவரங்களுக்குக் காரணம் கேரள அரசியல்வாதிகளே!
பகுத்தறிவுக்கு முன்னுரிமை தந்து தீர்வு காண்பீர்!
தமிழர் தலைவரின் முக்கிய வேண்டுகோள்

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மக்களைத் தூண்டி கலவரங்களில் ஈடுபடுமாறு செய்வதற்கு மூலகாரணம் கேரள மாநில அரசியல்வாதிகள்தான்; அப்பாவி மக்கள் எந்தத் தரப்பிலும் தாக்கப்படக்கூடாது;  பகுத்தறிவுக்கு முன்னுரிமை தந்து, மனிதநேயத்துடன் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர்  கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை வருமாறு:
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை திடீரென்று இப்படி பேருருவம் (விஸ்வரூபம்) எடுத்ததற்குக் காரணம் என்ன? ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு, இரு மாநில அரசுகள் சார்பிலும் உள்ளது. அணைக்கு ஆபத்தில்லை, பலமாகவே உள்ளது; கொள்ளளவு உயரத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்பதுபோன்ற ஆய்வு அறிக்கையைத் தந்ததை யும் கேரள அரசு ஆட்சேபித்ததால் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தால்.
மூல காரணம் எங்கிருந்து?
இரு மாநில அரசுகளின் வாதங்களை அக்கமிட்டிமுன் எடுத்து வைக்க, ஓய்வு பெற்ற இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதி களே அரசுகளின் சார்பில் நியமிக்கப்பட்டு, வரும் பிப்ரவரியில் ஆனந்த் குழு அறிக்கை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படி ஒரு திடீர்க் கலவரம் வெடிப்பதற்கு மூல காரணம் எங்கிருந்து, யாரால் தொடங்கப்பட்டது என்பது ஆய்வுக்குரிய முக்கிய கேள்வியாகும்.
1. டேம் 999 என்று தேவையற்ற ஒரு திரைப்படத்தை கேரளத்தவர் ஒருவர் தயாரித்து கேரள மக்களின் பயத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டிவிட்டது.
இடைத்தேர்தலே காரணம்
2. கேரளத்தில் ஆளுங்கட்சி (உம்மன்சாண்டி) காங்கிரஸ் கூட்டணி மிகவும் சொற்ப பலத்தில் உள்ளது. (இரண்டு இடங்களே) எதிர்க்கட்சி கூட்டணி (வி.எஸ். அச்சுதானந்தன்) தலைமையில் உள்ள இடதுசாரி முன்னணிக்கும் - ஒரு அமைச்சர் மறைவால் ஏற்பட்டுள்ள இடைத்தேர்தல் அந்த ஆட்சியின் ஆயுளை நிர்ணயிக்கக் கூடியது என்பதால், அதில் வெற்றி பெறப் போவதற்குரிய அரசியல் மூலதனத்தை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைமூலம் தீயைக் கொளுத்தி அப்பாவி மக்களைத் (கேரளப் பொது மக்கள் பலரும் நல்லவர்கள்தான்) தூண்டும் வேலை நடைபெறுகிறது.
அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்புதான் நிரந்தரம்; இந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அல்ல என்பதை தற்காலி கமாக மறந்து, ஆவேசக் கும்பலாக சிற்சில இடங்களில் நடந்து கொள்கிறார்கள் - பதிலுக்குப் பதில் என்று நடந்துகொள்வது பரிகாரமாகாது! பிரச்சினைக்குச் சம்பந்தமில்லாத பொது மக்கள் பாதிக்கப்படுவது எந்த வகையிலும் சரியல்ல- நியாய மும் அல்ல!
மத்திய அரசு உடனடியாக தன்னிடம் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படைகளை அனுப்பி எல்லைப்புறங்களில் பாதுகாப்பை மேற்கொண்டு அணையையும் அவர்கள் மேற்பார்வையில் எடுத்துக் கொண்டிருந்தால், தேவையின்றி ரத்தம் சிந்தும் நிலை; சொந்த நாட்டு அகதிகளாக புது அகதிகள் தோன்றும் நிலையும் தவிர்க்கப்பட்டிருக்குமே!
எதையும் முளையிலேயே கிள்ளி எரியும் பழக்கம் நமது மத்திய அரசுக்குக் கிடையாது; வளரவிட்டு கோடரி தூக்குவது தான் அதன் வாடிக்கையான வேடிக்கை!
இந்தப் பாழாய்ப்போன இடைத்தேர்தல்தான் இந்த திடீர் வன்முறை வெடிப்புகள் - ஆவேசங்களுக்குக் காரணம்.
கேரளத்தில் ஆளுவது காங்கிரஸ் கூட்டணியாக இருப்ப தால், மத்திய அரசும் அதன் தலைமையும் இருதலைக் கொள்ளி எறும்பாக உள்ளதுபோலும்!
ஓய்வு பெற்ற முதியவர் ஜஸ்டிஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி நாராயண குரு போன்ற நீதியரசர்கள்கூட தங்களை முதலில் மலையாளி, பிறகு தான் மனிதர் என்று கருதும் நிலையினைப் புரிந்து, அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளும், ஞானசூன்ய வழக்குரைஞர்களும் இதன்மூலம் கண் திறந்தால் நல்லது!
கேரள அரசியல்வாதிகளே முழுக் காரணம்!
எய்தவனிருக்க, அம்பை நோவதில் பயனில்லை; கேரளத்து அரசியல்வாதிகளே முழு முதற் காரணம். கேரள சகோதரர்களே, புரிந்துகொண்டு சமூக நல்லிணக்கத்துடன் வாழும் நிலையை பகுத்தறிவு கண்கொண்டு சிந்தித்து அமைதி காக்க முன்வாருங்கள். நோய் நாடி நோய் முதல் நாடுங்கள்.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களே, நமக்கு எதிரிகள் கேரள வெகுஜன மக்கள் அல்ல; எரியும் வீட்டில் ஆதாயம் தேடும் கேரள அரசியல்வாதிகள்தான் - வீட்டை எரிய வைத்ததே அவர்கள்தான் என்பதை உணர்ந்து, வெறும் உணர்ச்சியைத் தூண்டாமல், பகுத்தறிவுக்கு முன்னுரிமை தந்து மனித நேயத்துடன் உரிமைப் பிரச்சினைகளை அணுகி விடை காணுவோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

1 comment:

Samy said...

very responsive statement. samy

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...