Friday, December 16, 2011

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது  தமிழகத்தின் இந்த ஒற்றுமை பொதுப் பிரச்சினைகளிலும் தொடரட்டும்!!  தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை
தமிழ்நாடு சட்டப் பேரவையில் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் உட்பட ஒரு மனதாக நின்று தீர்மானம் நிறை வேற்றியதற்குப் பாராட்டுத் தெரி வித்து இந்த நிலை அனைத்துப் பொதுப் பிரச்சினைகளிலும் தொடரவேண்டும் என்று திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை யில் கூறியுள்ளார் அவரது அறிக்கை வருமாறு:
நேற்று டிசம்பர் 15ஆம் தேதி சட்டமன்ற சிறப்புக்கூட்டம் ஓர் அருமையான, எடுத்துக்காட்டான கூட்டம் ஆகும். முதல் அமைச்சர் அவர்களது முயற்சி, சிறப்பானது. உரையும், தீர்மானமும் தெளி வானவை! ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகளும், அதன் தலைமைகளும் பாராட்டிற்குரியவை.
ஒரு முகமான குரல்!
எதிர்க்கட்சிகள் தி.மு.க. உட்பட அனைத்தும் ஒரு முகமாகக் குரல் எழுப்பி - எவ்வித சுருதி பேதமும் இன்றி - தமிழ்நாட்டின், தமிழர்களின் வாழ்வுரிமையை, கேரள அரசின் அடாவடித்தனத்தை அகிலத்திற்கும் அறிவித்த அருமையான சாதனையாகும்.
தமிழ்நாட்டின் முக்கிய உயிர் நாடியான சமூக நீதி காக்கும் வகையில், 69 விழுக்காட்டினைப் பாதுகாக்க கூட்டப்பட்டு (30,31.12.1993) இதே போல எதிர்ப்பின்றி ஏகமானதாக சட்டம் நிறைவேறியது  - 31சி, 9வது அட்டவணைப் பாதுகாப்பினை உள்ளடக்கியது. (வெளியில் அப்போது சற்று சுருதி பேதம் இருந்தபோதிலும்கூட)  அச்சட்டம் நிறைவேறி, இந்தி யாவிலேயே தமிழ்நாடு சமூக நீதிக்களத்தில் சரித்திர சாதனை பெற்ற மாநிலமாக விளங்குவதற்கு அடிகோலியது. இன்று நிலைத்து விட்டது.
பொதுப் பிரச்சினைகளிலும் இந்த ஒற்றுமை தேவை!
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத் துள்ளதிலும், நமது தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைக் காப்ப திலும், அனைத்து எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியும் ஒரே அணியில் நிற்பது கண்டு மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்.
இந்த ஒற்றுமை, காவிரி நதிநீர்ப் பிரச்சினை, பாலாற்றுப் பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினை, வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் இன்னல்களுக்கு ஆளாகும் பிரச்சினை, தொப்புள் கொடி உறவுகளாக உள்ளவர்களை, ஈழத் தமிழர் போன்றவர்களை ஈவு இரக்கமின்றிக் கொடுமைப்படுத்தி, அவர்கள் வாழ்வுரிமைக்கு எதிரான போர்களை பறிக்கும் மனித உரிமைப் பிரச்சினை போன்ற அத்துணைப் பொதுப் பிரச்சினைகளிலும் எல்லா கட்சிகளும் - பக்கத்திலுள்ள கருநாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் எப்படி கட்சி வேறு பாடின்றி, மாச்சரியங்களை மறந்து ஒன்றாக குரல் கொடுக்கின்றனரோ - அதுபோல - ஒன்றுபட்டு உரிமை முழக்கம் எழுப்ப வேண்டும்.
தேர்தல் நேரத்தில் கட்சி, போட்டிகள் மற்றும் ஜனநாயக முறைப்படி, எதிர்க்கட்சிகளுக்குள்ள உரிமை களையும் கடமைகளையும் தொடரலாம்.
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்!
அனைத்துக் கட்சி தலைவர்களும் நமது மகிழ்ச்சி பொங்கும் நன்றிக்குரியவர்கள்!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள தமிழர் ஒன்றாதல் கண்டே,
என்ற புரட்சிக் கவிஞரின் வரிகள்தான், பொதுப் பிரச்சினைகளிலும்  தமிழர்களுக்கு - தமிழ் நாட்டவருக்கு- வழிகாட்டும் கலங்கரை வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதே நமது அன்பு வேண்டுகோளாகும் - அனைத்துக் கட்சியினருக்கும்; ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

கி. வீரமணி
தலைவர்
16.12.2011  திராவிடர் கழகம்


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...