Monday, December 19, 2011

மரணத்தில் போதித்த மாவீரனின் தத்துவம்!


மாவீரன் அலெக்சாண்டர் தனது 33 வயதிலேயே உலக நாடுகள் பலவற்றை வென்று, மகா அலெக்சாண்டராக, முடி சூடிக் கொண்டவன்.
கிரேக்கத்து சாக்ரட்டீசின் மாணவர்; சிந்தனையாளர் பிளேட்டோ.
பிளேட்டோவின் சீடர் மாணவர், அரசியல் அறிஞர் அரிஸ்ட்டாடில்.
அரிஸ்டாட்டிலிடம் அரசியல் தத்துவம் பயின்ற மாணவன் அலெக்சாண்டர்.
இந்த அலெக்சாண்டர்பற்றி, சில நாள்களுக்குமுன் திருச்சி வானொலி நிலையத்தார் ஏற்பாட்டில், ஒலிபரப்பாகிய   நாடகம் ஒன்றினை, காரில் பயணித்துக் கொண்டே வரும்போது கேட்டேன். சுவைத்தேன்.
தொலைக்காட்சிகள் பலவும் தொல்லைக்காட்சிகளாக அமைந்துள்ள நிலையில், வானொலி இன்னமும் தரம் மிக்க சுவையான கருத்துக் கதிர்மணி களை தனது அரிய விளைச்சலாகத் தருவது தொடர்வது எம்மைப் போன்ற நேயர்களுக்கு மிகப் பெரிய இலக்கிய ஆறுதலாகும்.
அரிய செய்திகள், கருத்துகளின் களஞ்சியம்போல் வாரி வாரி - குறுகிய கால அளவில் - வானொலி அதன் பயனுறு பணியைச் செவ்வனே செய் கிறது. (சில புராணக் குப்பைகளும் அங்கே உண்டு - அது சிலருக்கு; அல்லது அரசு அமைப்பின் காரண மாகவும் இருக்கலாம்)
இந்த நாடகம் மாவீரன் அலெக் சாண்டர் என்ற மாமன்னன்  நாடுகளை வென்றெடுத்துத் திரும்பியவுடன், அவனைக் கண்டும் எழுந்திராது - தன் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத ஒரு தத்துவ ஞானியின் மாணவனைச் சந்திக்கும் சூழ்நிலையில் தன்னைக் கண்டு மரியாதை செலுத்தவில்லையே இவன் என்று மனதிற்குள் எண்ணி, யாரென்று வினவ அவனை அறிந்து கொள்கிறான்.
அப்போது ஓர் உரையாடல் சுவையாக  மாமன்னனே நீங்கள் என்ன செய் கிறீர்கள்?
பற்பல நாடுகளை வென்று என் காலடியில் கொண்டு வந்துள்ளேன்.
அப்படியா? அதன் பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?
பிறகு வந்து அமர்ந்து (ஓய்வு) இருப்பேன்!
அதைத்தான் நான் (தத்துவ ஞானி யின் மாணவன்) இப்போது செய்து கொண்டுள்ளேன். சற்று யோசித்துக் கொண்டே விடை பெறுகிறான் அலெக் சாண்டர்.
அரண்மனையில் தங்கி உள்ள அலெக் சாண்டருக்கு உடம்பெல்லாம் வலிக்கிறது.
வலிமையாகப் போரிட்டு வென்றவன்தான். உடலோ வலியைத்தருகிறது. வலி தாங்க முடியவில்லை; அருகில் அமைச்சர் மருத் துவரை அழைத்து சிகிச்சை அளிக்கச் செய்கிறார்; பலனில்லை என்பதை உணர்ந்த மாமன்னன், தனது காய்ச்சல் தன்னை மரணத்தை நோக்கி விரையச் செய்கிறது என்று புரிந்து கொண்டான்.
இதற்கிடையில் அவனது எளிய பழைய நண்பன் பார்க்க நுழைந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டான் அமைச்சர் சகாக் களால்; பிறகு அவனையும் அழைத்துப் பேசுகிறார்.
தனது இறுதியை உணர்ந்தவுடன் அரண்மனையின் மற்றொரு பகுதிக்கு தன்னை அழைத்துச் செல்லச் சொல்லி அங்கே அவரது தாயாரைப் பார்த்து விட்டு திரும்புகிறார்.
மதி அமைச்சரிடம் பிறகு கூறுகிறார்:
நான் இறக்கப் போகும் தருணம் நெருங்குகிறது. நான் கொணர்ந்த வைரம், வைடூரியம், முத்து போன்றவை எல்லாம் கருவூலத்தில் பத்திரமாக இருக்கிறதா?
ஆம் அரசே எல்லாம் அப்படியே பத்திரமாக பூட்டப்பட்டு இருக்கிறது
சரி நான் இறந்த பிறகு நீங்கள் செய்ய வேண்டிய செயல்கள் மூன்று (இரண்டு முக்கியமாக குறிப்பிட்டதில்)
1. என்னுடைய சவ ஊர்வலம் செல் லும்போது அவற்றை வாரி இறைத்துக் கொண்டே செல்லுங்கள்.
2. எனது சவப் பெட்டிக்கு வெளியில் ஓட்டை போட்டு எனது இரண்டு கைகளை யும் வெளியே தொங்க விடுங்கள்.
செய்வீர்களா அமைச்சர் பெரு மக்களே? நிச்சயமாக மன்னா செய்வோம்; உங்கள் இறுதி ஆணையை நிறைவேற் றுவோம் உறுதியாக!
கைபிசைந்த அமைச்சர் வினவுகிறார். மன்னா ஒரு அய்யத்தைக் கேட்டு அறிந்து கொள்ளலாமா தங்களிடம்?
சரி   - கேளுங்கள்
எதற்காக இப்படி மூன்று நிபந் தனைகள்? நாங்கள் அறிந்து கொள்ள லாமா?
விளக்குகிறேன்; கேளுங்கள்
மாவீரன் அலெக்சாண்டர் எவ்வ ளவோ செல்வங்களையும் சேர்த்தும்கூட, இறுதியில் தன்னுடன் அவன் எடுத்துக் கொண்டு போனது எதுவும் இல்லை என்பதைப் புரிய வைக்கவே வாரி வாரி இறைக்கவும், இரு கைகளையும் சவப் பெட்டிக்கு வெளியே தெரியும்படிச் செய்தது ஏன்? இறுதியில் போகும்போது ஒன்றும் கொண்டு போகவில்லை; எல்லாம் திறந்த நிலைதான் என்று நம் மக்கள் அறிந்து கொள்ளட்டும் என்று சொல்கிறார் அலெக்சாண்டர்.
மரணம் மாவீரனைத் தழுவுகிறது. (மிகவும் சுவைபடச் சொன்னதை நான் சுருக்கி விட்டேன்) ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா என்று சீர்காழியார் பாட்டு ஒலிக்கிறது.
இப்போது ஆறடி நிலம் கூடத் தேவை யில்லை; மின்சார சுடுகாட்டில்  பிடி சாம்பல் தயார் நிலையில்!
பின் ஏன் மனிதர்கள் கோடிக்காக அலைகிறார்கள்?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...