Tuesday, December 20, 2011

முல்லைப் பெரியாறு : முடக்குவது ஏன்?


முல்லைப் பெரியாறு : முடக்குவது ஏன்?


குளிர்ந்த நிலப்பகுதியான தமிழக - கேரள எல்லை தகித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக இருக்கும் கேரள அரசியல்வாதி களின் வாய்ச் சவடால்களையும், அநாவசிய வழக்குகளையும், மூன்று நாட்களுக்கும் மேல் மலையாளிகளின் வன்முறையையும் பொறுத்துக் கொண்டிருந்த தமிழகம் பதில் உணர்வைக் காட்டத் தொடங்கியதும் பதறிப்போயிருக் கிறார்கள் தேசியவியாதிகள்.
தனது உணவுத் தேவை முதற்கொண்டு அன்றாடத் தேவைகள் பலவற்றிற்கும் தமிழகத்தை எதிர்நோக்கும் கேரளா,
அங்கிருந்து தமிழகத் துக்கு உரிமையான தண்ணீரைத் தர மறுப்பதற் கான நடவடிக்கை களில் இறங்கிக் கொண்டிருக் கிறது.


தமிழ்நாட்டிலிருந்து சென்ற வாகனங்களும், அய்யப்பன் கோவிலுக்குச் சென்றவர்களும், கேரளாவில் பணியாற்றும் தமிழர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டுவந்த நிலையில் தமிழகத்திலும் ஆங்காங்கே பதில் நடவடிக்கைகள் வன்முறை வடிவில் நடைபெறத் தொடங்கி யிருக்கிறது. இது முற்றிலும் ஆபத்தான போக்காகும்.
இந்த நிலைக்கு கேரளமே முழுப் பொறுப்பு!
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டு தமிழக அரசுக்கு பலமாக நிற்கிறார்கள். இதில் காங்கிரஸ், பா.ஜ.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற தேசியக் கட்சிகள் இரட்டை நிலைப்பட்டுடன் நடந்துவருகின்றன என்பதைத் தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். 1976-ஆம் ஆண்டு முதல் மெல்ல மெல்ல எழுப்பப்பட்ட இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வெடித்திருப்பதற்கு கேரளாவின் அரசியல் போட்டியே மூலகாரணம்! ஏற்கெனவே ஆட்சி செய்த இடதுசாரிகளும், இப்போது ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரசும் தங்களுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டிக்கு தமிழக- கேரள உறவைப் பணயம் வைத்துள்ளார்கள். இடதுசாரிகளிடமிருந்து மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கும் காங்கிரசு அதைத் தக்க வைத்துக் கொள்ளவும், விட்டதைப் பிடிக்க இடதுசாரி களும் ஆடும் அரசியல் சதிராட்டத்தில் இப்போது பகடைக் காயாக உருட்டிவிடப் பட்டிருப்பது மக்களின் அமைதியான இயல்பு வாழ்க்கை. இந்த சந்தில் சிந்து பாடுவதற்குத் தயாராகக் கடப்பாறை, மண்வெட்டி சகிதம் தனது கட்சியின் ஆஸ்தான தளவாடங்களுடன் களம் இறங்கியிருக்கிறது கேரள பாரதிய ஜனதா கட்சி.
இத்தகைய அரசியல் கட்சிகளின் பின்னால் அணிதிரண்டு நிற்கும் கேரள மக்கள் திட்டமிட்ட வகையில் உணர்ச்சிமயப் படுத்தப்பட்டுள்ளனர்; அச்சுறுத்தப்பட்டுள்ளனர். முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும்; 35 லட்சம் மக்கள் பாய்ந்து வரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போவார்கள்; வீடுகள் இடிந்து தரை மட்ட மாகும்; மாபெரும் பேரழிவு நடக்கும் என்கிற ரீதியில் வாய்மொழியாகவும், ஊடகங்களைப் பயன்படுத்தியும், வீடுவீடாக குறுந்தகடுகள் தயாரித்து விநியோகித்தும் பயமுறுத்தியிருக் கிறார்கள். அண்மையில் டேம் 999 என்ற படம் சீனாவில் அணை உடைந்து நடந்த விபத்தை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று சொல்லி, இந்தியா முழுக்க முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பயத்தை உருவாக்க நடந்த சதியாகும்.
உண்மை நிலை என்ன?
லட்சக்கணக்கான மக்கள் இறந்தாலும் பரவாயில்லை என்று இடிந்துபோகும் நிலையில் உள்ள அணைக்கட்டையா தமிழர்கள் பாதுகாக்கத் துடிக்கிறார்கள்?,
காலங்காலமாக உறவுகொண்டு பழகிவரும் கேரள மக்கள் மடிந்துபோனாலும் எங்களுக்கு அணையின் மீதான உரிமை வேண்டுமென்றா நினைக்கிறார்கள்?,
உண்மையில் முல்லைப் பெரியாறு அணை இடிந்து போகும் நிலையில் இருக்கிறதா?,
வெறும் சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்ட நூறாண்டுகளுக்கும் மேல் பழமையான அணை எப்படி பாதுகாப்பாக இருக்கும்?
கேரள அரசால் புதிய அணை கட்டப்படுவதால் என்ன நட்டம்? இன்னும் பாதுகாப்பு தானே!,
அதுதான் தமிழர்களுக்கு உரிய அளவு தண்ணீரைத் தருவதற்கு எழுத்துமூலம் ஒப்புதல் தரவும், ஆண்டுக்காண்டு குறிப்பிட்ட டி.எம்.சி தண்ணீரைத் தரவும் தயார் என்று கேரள அரசு உறுதி கூறுகிறதே? என்பன போன்ற கேள்விகள் பலருக்கும் எழாமல் இல்லை. ஆனால் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடிச் சென்றால் இன்னும் கோபம் அதிகமாகும் கேரள அராஜகவாதிகள் மீது!
வீணாகக் கடலில் கலக்கும் நீரைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிலவிய வறட்சிப் பஞ்சத்தைப் போக்கத் திட்டமிட்டது அன்றைய ஆங்கில அரசு. அதன் காரணமாக முல்லைப் பெரியாறு பகுதியில் அணைகட்டத் தீர்மானிக்கப்பட்டது. அவ்விடம் பூனையாறு தமிழ் சமஸ்தானத்துக்குச் சொந்தமான இப்பகுதியை திருவாங்கூர் சமஸ்தானத்தினுடையது என்று கருதி அணை கட்டவும், அதற்கான அனைத்து உரிமைகள் உள்ளிட்டவறிற்குமாக திருவாங்கூருடன் ஆங்கில அரசு 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டது.
கர்னல் பென்னிகுயிக் என்பவரின் தளராத தன்னலமற்ற முயற்சியால் புவியீர்ப்பின் அடிப்படையில் கட்டிமுடிக்கப்பட்ட இவ்வணை இன்றும் நல்ல பாதுகாப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் பேரியாறு (இது தான் உண்மையான பெயர்) மலைகளின் ஊடாகப் பாய்ந்து இவ்வழியே செல்கிறது. இதனைத் தேக்கி மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட பாதை வழியாகத் தான் தமிழகத்திற்கு நீர் திருப்பிவிடப்படுகிறது. இதில் மொத்தம் தேக்கமுடிந்த நீரின் அளவு 15.66 டி.எம்.சி. மொத்தம் 176 அடி உயரம் கொண்டது. அதிகபட்சமாக தேக்கப்படும் 156 அடியில் 104 அடி நீர் அணையின் அடியிலேயே இருக்கும். அதற்கு மேல் தேங்கும் 10 டி.எம்.சி நீரைத் தான் நம்மால் பயன்படுத்தமுடியும். இடையில் 1976-ஆம் ஆண்டு இடுக்கியில் மிகப்பெரிய நீர்மின்திட்டத்திற்காக கேரள அரசு கட்டிய இடுக்கி அணை 70 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்டது. அதன்பின் தான் மெல்ல கேரளம் முல்லைப் பெரியாறு அணை குறித்த தனது போக்கை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது. அப்பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக 1979-இல் மலையாள மனோரமா ஏடு புரளி கிளப்பியது. அப்போதிலிருந்து இப்போதுவரை ஊடகங்களை மிகச் சரியாக கேரளா பயன்படுத்தி வருகிறது.
அணை உடையுமா?
1979 முதல் இன்றுவரை முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும்; மக்கள் மாய்ந்து போவார்கள் என்று 32 ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கேரள அரசியல்வாதிகள். ஆனால் அவர்கள் அனை வருக்கும் உறுதியாக நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது முல்லைப் பெரியாறு அணை. இதே போல புவியீர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட அணைதான் கரிகாலன் கட்டிய கல்லணை. அதுவும் காலம்தோறும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சரியாகப் பராமரிக்கப்படுவதால், 1800 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நின்றுவருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் ஆபத்து என்று கேரளா சொன்ன பிறகு, மத்தியக் குழு ஆய்வு செய்து அணையின் உறுதித் தன்மையை உறுதிப்படுத்தியது. இருப்பினும் பலப்படுத்து வதற்கு வழங்கிய யோசனைகளின்படி, அணையின் மேற்பகுதி முழுக்க கான்கிரீட்டும், உள்பகுதியில் துளையிட்டு கனமான கம்பிகளைச் செலுத்தி அதற்குள் தரமான கான்கிரிட்டும், அணையின் சாய்வுப்பகுதி அடி முதல் நுனிவரை பலமான கான்கிரீட்டும் போடப்பட்டு புதிதினும் புதிதாய்த் திகழ்கிறது. இதனை ஆய்வு செய்தபின் அணை வலுவுள்ள தாக இருக்கிறது என்பதோடு தமிழகம் தனக்குத் தேவையான 142 அடி வரை நீரைத் தேக்கிக் கொள்ள அனுமதியளித்து உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பின்னரும் தான் அடம்பிடிக்கிறார்கள் கேரளர்கள்.
வெள்ளத்தில் மக்கள் மடிவார்கள் என்பது பொய்!
அணை உடைவதற்கான வாய்ப்பே இல்லை என்பதைக் கண்டோம். அப்படியே ஒருவேளை கேரளாக்காரர்கள் சொல்வது போல் அணை உடைபட்டு வெள்ளம் ஏற்பட்டால் 35 லட்சம் மக்கள் மடிந்துபோவார்கள் என்பது உலக மகாப் பொய். ஏனெனில் முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் வெளியேறும் நீர் 45 கிலோமீட்டர் வசிப்பிடமல்லாத மலை, காட்டுப்பகுதியைக் கடந்து, பள்ளத்தாக்குகள் வழியாக மலையின் கீழ்ப்பகுதியில் உள்ள இடுக்கி அணையில் போய்ச் சேரும். முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு அதிகக் கொள்ளளவு கொண்ட இடுக்கி அணையில் இந்த நீரைச் சேமிப்பது எளிது. அப்படியே இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி இருந்தாலும், தேவையான அளவு நீரை விநாடிக்கு 4 லட்சம் கன அடி நீர் என்ற அளவில் வெளியேற்றும் வசதி இடுக்கியில் உண்டு. ஒரு வேளை மொத்த நீரும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேறினாலும் அது இடுக்கி வந்து சேர 4 மணிநேரத்திற்கும் மேல் ஆகும். அதற்குள் எத்தகைய பாதுகாப்பு வசதிகளையும் செய்து கொள்ள முடியும். இடுக்கி அணையைத் தாண்டி தான் மக்கள் வசிப்பிட மாகும். அப்படி இடுக்கி அணை இந்த நீரைத் தாங்காது என்று கருதுவார்களேயானால் முதலில் இடிக்கப்பட வேண்டியது இடுக்கி அணை தான்!
புதிய அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்குமா?
கேரள அரசு கட்டத் திட்டமிட்டிருக்கும் அணை அமையும் பகுதி. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 150 அடி கீழாக உள்ளது. அங்கு அவர்கள் கட்டத் திட்டமிருப்பதே 140 அடி உயர அணைதான். அணை முழுவதும் நிரம்பினாலும், கேரளமே தண்ணீர் தர முழுமனதுடன் ஒப்புக் கொண்டாலும் சர்வநிச்சயமாக ஒரு சொட்டு தண்ணீர்கூடத் தரமுடியாது. எனவே புதிய அணை கட்டி அதே அளவு தண்ணீரைத் தமிழகத்திற்குத் தருகிறோம் என்பது முழுப் பொய்.
இப்படி முழுக்க முழுக்க நடக்காத விசயங்களையே பேசி, தமிழகத்தின் தென் மாவட்டங்களை வஞ்சிக்க நினைக்கும் போக்கைத்தான் கேரள அரசும், அரசியல் வாதிகளும் கடைப்பிடித்துவருகிறார்கள். இப்போதைக்கு முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கும் இடம் மட்டும்தான் கேரளாவில் உள்ளது. அதன் பயன்பாட்டுக்கான உரிமை முழுமையாக தமிழகத்திடம் உள்ளது. தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆற்றிலிருந்து, தமிழகத்திற்கு சொந்தமான, தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணையில் நீர்தேக்கி அதைத் தமிழகத்திற்குக் கொண்டுவருவதற்கே கேரளம் இத்தனை போங்காட்டம் ஆடுகிற தென்றால், முழுக்குடுமியையும் நம்பூதிரிகளிடம் கொடுத்துவிட்டால் நிலைமை என்னவாகும்? தமிழகம் அய்ந்தாம் வகை நிலமான பாலைவன மாகும். அதைத்தான் கேரள அரசியல்வாதிகள் விரும்புகிறார்களா?
கர்நாடகாவிடம் காவிரிக்கும், ஆந்திராவிடம் பாலாற்றுக்கும் போராடும் தமிழன் தன்னிடமும் பெரியாற்றுக்காகக் கெஞ்சி நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது கேரளம்.
பாலம் பாலமாய்
விரிசல்
ஆற்றில் மட்டுமல்ல
இந்திய தேசியத்திலுமே...'' என்றெழுதுகிறார் கவிஞர் மணிவர்மா.
ஆற்றில் நீர்வரத்து இல்லையென்றால் விரிசல் விழத்தான் செய்யும். என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...