Saturday, December 17, 2011

பூமியை முதன்முதலாக சுற்றி வந்தவர் யார்?


ஹென்றி என்ற கருப்பர்தான் (Henry the black)  முதன் முதலாக பூமியைச் சுற்றி வந்த மனிதராவார்.
இந்தப் பெயர் எவருக்கும் புதியதாகவே தோன்றும். என்ரிக் டி மலாகா (EndriQue de Malaca)   என்னும் இவர் மேகல்லனின் (Magellan)  அடிமையும் மொழி பெயர்ப்பாளரும் ஆவார். பூமியைச் சுற்றும் தனது பயணத்தை பெர்டினான்ட் மெக்கலன் முடிக்கவே இல்லை. தனது பயணத்தில் பாதி தூரம் கடந்த நிலையில் பிலிப்பைன்சில் 1521 இல் அவர் கொல்லப்பட்டார்.
போர்ச்சுகல் நாட்டிலிருந்து இந்தியப் பெருங்கடல் வழியாக தூரகிழக்கு நாடுகளுக்கு மெகல்லன் முதன் முதலாக 1511 இல் சென்றார். 1511 இல் மலேயா அடிமைச் சந்தை ஒன்றில் அவர் ஹென்றியைக் கண்டு, அவரை அழைத்துக் கொண்டு தான் வந்த வழியிலேயே திரும்பி லிஸ்பனுக்குச் சென்றார்.
அதன் பிறகு,  1519 இல் பூமியைச் சுற்றி வரவேண்டும் என்ற நோக்கத்தில் மெக்கல்லன் மேற்கொண்ட பயணம் உள்ளிட்ட  அனைத்துப் பயணங்களின் போதும்,   ஹென்றி அவருடன் சென்றார். இம்முறை முன்னர் சென்ற திசைக்கு மாறாக அட்லாண்டிக்  மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் வழியாக பயணம் மேற்கொள்ளப்பட்டது. தூரகிழக்கு நாட்டை அவர்கள் 1521 இல் அடைந்தபோது, உலகைச் சுற்றி வரும் இப்பயணம் முழுவதிலும் ஹென்றிதான் மெக்கல்லனின் வலது கை போன்று விளங்கினார். ஹென்றி எங்கே பிறந்தவர் என்பது எவருக்கும் தெரியவில்லை. ஒரு வேளை அவர் குழந்தையாக இருந்த போது சுமத்ரா கொள்ளைக்காரர்களால் அடிமையாகப் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அவர் பிலிப்பைன்சை அடைந்தபோது, அங்கிருந்த உள்ளூர் மக்கள் தனது தாய் மொழியைப் பேசுவதைக் கண்டார்.
மெக்கல்லன் இறந்த பிறகு, இந்தப் பயணக்குழு தொடர்ந்து தனது பயணத்தை கப்பலின் இரண்டாவது தலைவராக இருந்த பாஸ்கு இனத்தைச் சேர்ந்த ஜூவான் செபாஸ்டியன் எல்கானோ (Juan Sebastian Elcano)  என்பவரின் தலைமையில் மேற்கொண்டு, வெற்றிகரமாக பயணத்தை முடித்தது. ஹென்றி அவர்களுடன் இருக்கவில்லை. அடிமைத் தளையில் இருந்து ஹென்றியை விடுவிப்பது என்று மெக்கல்லன் தனது உயிலில் அளிதித்திருந்த உறுதி மொழியைக் காப்பாற்ற எல்கானோ மறுத்துவிட்டார். அதனால் தப்பித்துச் சென்ற ஹென்றி மறுபடியும் காணப்படவேயில்லை.
ஒரே கப்பலில் உலகை முதன் முதலாகச் சுற்றி வந்தவர் என்ற பெருமையை எல்கானோ பெற்றார். 1522 இல்வ அவர் செவில்லிக்குத் திரும்பி வந்தார். அதற்கு முன்னர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அய்ந்து கப்பல்கள் பயணப்பட்டன; ஆனால் விக்டோரியான என்ற ஒரே ஒரு கப்பல்தான் திரும்பிச் சென்றது. அது முழுவதும் வாசனைத் திரவியங்களால் நிரம்பியிருந்தது. ஆனால் புறப்பட்ட 264 மாலுமிகளில் 18 பேர் மட்டுமே உயிர் பிழைத்திருந்தனர். ஸ்கர்வி நோய், சத்துணவின்மை, உள்நாட்டு மக்களுடனான சண்டை சச்சரவுகள் ஆகியவை காரணமாக மற்றவர்கள் அனைவரும் இறந்து போயினர்.உலகம் உருண்டை வடிவம் கொண்ட ஒரு நினைவுச் சின்னத்தை எல்கானோவுக்கு அளித்து ஸ்பெயின் நாட்டு மன்னர் அவரைப் பெருமைப்படுத்தினார்.  அந்த நினைவுச் சின்னத்தில், நீதான் முதன் முதலாக என்னைச் சுற்றி வந்தாய் என்றுபொறிக்கப்பட்டிருந்தது.
பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஹென்றி இன்றும் ஒரு தேசிய வீரனாகப் போற்றப்படுகிறார்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)

1 comment:

கோவி said...

நல்ல தகவல்.. வாழ்த்துகள்..

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...