Sunday, August 14, 2011

சிந்துவெளியில் கல்வி நிலை

அறிமுகம்: (ஆரியர் இந்த நாட்டிற்கு வருவதற்கு முன்னே, இங்கே வாழ்ந்த இனத்துக்கு - திராவிட இனத்துக்கு _ கலை கிடையாது; இலக்கியம் கிடையாது; பண்பாடு கிடையாது, பகுத்தறிவு கிடையாது என்றெல்லாம் இங்கேயுள்ள சில விழிக் குருடர்கள் பேசியும் எழுதியும் வந்தனர்; வருகின்றனர். அவர்கள் யாரப்பா இங்கு வாழ்ந்தார்கள்? என்று கேட்டால், பாரப்பா இங்கு வாழ்ந்த பழந்தமிழர் பெருமை என்று காட்டும் ஹரப்பா, மொஹஞ்சதாரோக்கள் இங்கு உண்டு; ஆனால் அவ்விடங்களிலே கண்டெடுக் கப்பட்டவற்றைத் தக்க முறையில் ஆராய்ந்து வெளியிட நாதியில்லை சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங் களிலே சென்று ஆராய்ச்சி நிகழ்த் தினார். ஹீராஸ் என்னும் ஸ்விட்ஜர் லாந்துப் பாதிரியார். அவை திராவிட நாகரிக மேம்பாட்டின் சின்னங்கள்தாம் என்று கண்டு கண்டதனை நாடறியப் பல மேடைகளில் பேசி வந்தார். வயிற்றெரிச்சல் பொறுக்க முடியாத வக்கிர புத்திரக்காரர் - வையமறிந்த மேதை ஒருவர், பாதிரியாரை அனுப்பிய மதச் சபைக்கு, மதத்தைப் பரப்ப நீங்கள் அனுப்பிய பாதிரி, எம்நாட்டு மக்களுள் என்றுமில்லாத ஆரிய திராவிட பேதத்தை விளைக்கிறார் பாரீர்! அவரைத் திருப்பி அழைத்துக் கொள் வீர்! என்று புகார் செய்ய, ஆராய்ச்சி அக்காலக் கல்வி நிலை பற்றி ஒரு கட்டுரை தீட்டியிருக்கிறார். ‘Education in the Indus Valley’ என்ற அக்கட்டுரை, இந்திய அரசியலாரின் கல்வித் துறை யிரா நடத்தப் பெறும் ‘The Education Quarterly’ என்ற பத்திரிகையின் டிசம்பர் (1953) இதழில் வெளியாகி யிருக்கிறது.

சிந்துவெளியில் நிலவும் தமிழ்

கட்டுரையில் சிந்துவெளி மக்களின் சொற்களாக வழங்கப்பட்டவையனைத் தும் தூய தமிழ் வேர்ச் சொற்கள்; பாதிரி யார் அவற்றை ஆங்கில எழுத்துக்களில் வெளியிட்டிருக்கிறார். அய்யர்களின் புகைச்சலுக்கு அஞ்சியோ என்னவோ ஒரே ஒரு இடம் நீங்கலாக எஞ்சிய இடங்களில் எல்லாம் திராவிட இனத்தை Proto Indians என்றும் Mohenjo Darians என்றும் Indus Valley people என்றும் குறிக்கிறார். என்றாலும், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த இனம் திராவிட இனம்; அறிவே கடவுள் என்றும் ஆன்றகொள்கையுடையது திராவிட இனம்; வானநூற்புலமை வாய்ந்தது திராவிட இனம்; உள நூலறிவு உடை யது திராவிட இனம் என்பதனைக் கட்டுரை விளக்குகிறது. அதன் தமிழாக்கத்தை கீழே தருகிறேன்.

சிந்துவெளியிலே முத்திரைகளும் பாத்திரங்களும் போன்ற பல பொருள் கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பொறிக்கப்பட்ட எழுத் துக்கள், அங்கு வாழ்ந்த மக்களின் அறிவு நிலைக்குச் சான்று பகர்கின்றன. அங்கே வாழ்ந்தவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியும் என்பது மட்டுமல்ல; சிறந்ததோர் எழுத்து முறையை உருவாக்கிய பெருமை அவர்களுக்கே உரியது என்று நாம் அறுதியிட்டுக் கூற முடியும். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்டீஃபன், லாங்டன், மனிதனின் முதல் எழுத்து முறை பெரும்பாலும் ஓவிய எழுத்து முறையாகவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிந்துவெளியில் காணப் படும் எழுத்துமுறையும் மிகப் பழங் காலத்தைச் சேர்ந்த ஓவிய எழுத்து முறையாகவே காணப்படுகிறது. அம்முறையினின்றும் வளர்ச்சி பெற்ற மற்றோர் எழுத்து முறையும் உடன் காணப்படுகிறது. எனவே சிந்துவெளி எழுத்துமுறை மிகவும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்றும், இவ்வெளியில் வாழ்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட இம்முறைதான் பிற்காலத்தில் சுமேரியா, எகிப்து முதலிய நாடுகளுக்கும் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் சென்று வளர்ச்சி பெற்றது என்றும் நாம் துணிந்து கூறலாம்.

சிந்துவெளி திராவிடர்

இவ்வெளியில் கண்டெடுக்கப்பட்ட பாண்டங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் சொற்களைக் கொண்டு நாம் இங்கு வாழ்ந்தவர்களின் கலையையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் அறிந்து கொள்ள முடியும். சிந்துவெளி மக்கள் இறைவன் உண்டென்று நம்பினர். ஆயினும் இறைவனை அறிவொளியாக, அறிமுன் வடிவமாகவே கருதினர். ஆண்டவனைக் குறிக்க அவர்கள் வழங்கிய சொற்கள் விடுகண் மீன்கண் என்பன. விடுகண் என்றால் எப்பொ ழுதும் திறந்த கண்களையுடையவன், என்பது பொருளாகும். அறிவு பெரும் கருவியாக கண் கருதப்படுகிற காரணத் தால், அளவற்ற அறிவுடைய ஆண்ட வனைக் குறிக்கச் சிந்துவெளி மக்கள் விடுகண் என்ற சொல்லைப் பயன்படுத் தினர். அவர்களால் வழங்கப்பட்ட மற்றொரு சொல்லாகிய மீன் கண் என் பதற்கு மீன் போன்ற கண்களையுடைய வன் என்பது பொருளாகும்; இச்சொல் லும் வரம்பில்லாத அறிவுடையவன் கடவுள் என்றே குறிக்கிறது.

கடவுள் ஆராய்ச்சி

எவ்வாறென்றால் சொல்வேன்; கண்ணிமையில்லாத காரணத்தால் மீன் கண்மூடுதல் இல்லை; அவ்வாறே இறைவனும் கண்மூடாமல் உலகையும் உயிர்களையும் கவனித்து வருகிறான் என்பது கருத்து. இந்த இடத்தில் ஒரு செய்தி குறிப்பிடத்தக்கது; காட்டிலே யுதிஷ்டிரர் அலைந்த பொழுது, திறந்த கண்களோடு துயில்வார் யார் என்று ஒரு குரல் கேட்டதாகவும், அவர் மீன் என்று விடை பகர்ந்ததாகவும் மகாபாரத்தில் கூறப்பட்டுள்ளது.

இவற்றால் உயர்ந்த அறிவு நிரம்பப் பெற்றவனே கடவுள் என்று சிந்துவெளி மக்கள் கருதினர் என்பது விளங்கும். அன்றியும் மற்றொன்றும் இதனைத் துணிவாக்குகிறது. இறந்த ஒரு மனிதனுடன் புதைக்கப்பட்ட பாத்திரம் ஒன்றில் வான் தேர் ஓர் மீன்கண் வாழ் என்ற சொற்றொடர் காணப் பெறுகிறது மீன் கண்ணுடைய இவன் வானுலகில் சென்று இன்பமாக வாழ்க என்பது இதன் பொருளாகும். எனவே மீன் கண் (அறிவு) உடையவனாக ஒருவன் இருந்தால் அவன் மறுமையில் மகிழ்ச்சியோடு வாழ்வான் என்று சிந்துவெளித் திராவிடர் கருதினர் என்பது தெளிவாகிறது. அறிவே அறிவற்ற இன்பம் பயக்கும் என்ற இக்கருத்துத்தான் பலப்பல உபநி ஷத்துக்களில் காணப்படும் பலப்பல கூற்றுக்களுக்கு ஆதாரமாகும். யாக யக்ஞங்களைவிட அறிவே மேலானது என்றும் தீங்கிலிருந்து உயிரை விடு விப்பது அறிவே என்றும் பிரஹ தாரண்யக உபநிஷத்திலும் அழியாப் பேரின்பத்தை கொடுக்கவல்லது அறிவே என்று சந்தோய உபநிஷத்திலும் ஆசைகளெல்லாவற்றையும் நிறைவேற் றுவது அறிவே என்று தைத்திரிய உபநிஷத்திலும் அடிமைத்தளையி லிருந்து மனிதனை விடுவிக்க வல்லது அறிவே என்று நைத்ரி உபநிஷத்திலும் கூறப்பட்டுள்ளது. சிந்துவெளி மக்கள் கருத்தை உபநிஷத்துக்கள் இவ்வாறு உடன்பாட்டு மொழியிலே கூறின என்றால் புத்தர் அதனையே எதிர்மறை வாய்ப்பாட்டிலே கூறியிருக்கிறார். அறி வின்மையே மனிதனின் தொல்லை களுக்குக் காரணம் என்பது புத்தர் கூற்று.

எனவே சிந்துவெளி மக்களும் பேரறிவு வாய்க்கப் பெற்றிருந்த செல் வர்கள் இருந்தனர் என்பது தெளிவு. இந்த அறிஞர்களைக் குறிக்கக் கல்தெரி என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இவ் வறிஞர்கள் குகைகளிலே வாழ்ந்தனர் என்று மார்ஷல் குறிப்பிடுகிறார். அறிவை நாடுபவர்கள் தனி இடத்தைத் தேடிச் செல்வது இயல்வு. அந்த தனியிடம் காடாகவும் இருக்கலாம்; கற்குகையாகவும் இருக்கலாம். அங்கே யிருந்து கொண்டு உயிரைப்பற்றியும் உலகைப்பற்றியும் அறிஞர் சிந்தித் திருக்கலாம்.

இனிச் சிந்துவெளி மக்கள் வான நூற்புலமையிலும் சிறந்திருந்தார்கள். கதிரவனையும் அவன் சுற்றிவரும் வழியையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஞாயிற்றை எல என்றும் அது வரும் வழியை எல்வழி யென்றும் அவர்கள் வழங்கினர். எல்வழியில் காணப் பெறுகின்ற மீனினங்களை ஒவ்வொன் றின் தோற்றத்திற்கேற்பப் பெயரிட்டு எட்டுத் தொகுதிகளாகப் பிரிந்திருந் தனர். இவ்வெட்டும் கதிரவனின் வீடுகள் என்று கருதப்பட்டன. ஒவ் வொன்றும் ஒவ்வொரு மாதத்தைக் குறிக்கும். அக்காலத்தில் ஓர் ஆண்டு எட்டு மாதங்களாகவும் ஒரு மாதம் ஏறத்தாழ 45 நாட்களாகவும் பகுக் கப்பட்டிருந்தன. எட்டுத் திங்களின் பெயர்கள் ஏடு, (எடு - நாடு - ஆடு) கண்டு, தூக்கு (தராசு) அம்மா, கனை, குடம் (நீர்க்குடம்), மீன் என்பன, ஓர் ஆண்டின் துவக்கம் ஏட்டின் துவக்கத் திலிருந்தது.

எனவே நாளாக ஆக ஏடு என்ற சொல் ஓர் ஆண்டையும் குறிக்கப் பயன்படுவதாயிற்று. ஏடு என்பதால் குறிக்கப்பட்ட காலம் குளிர் காலமாகும். குளிர் காலத்தில் பால் குறைவு எனவே ஏடு என்ற வீட்டின் வழியே கதிரவன் பறந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. இக்கருத்தை இன்றைய இலக்கியங்கள் எல்லாவற்றுள்ளும் காணலாம். ரிக் வேதத்திலும் கதிரவன் ஒரு பறவை என்று கூறப்பட்டுள்ளான். வேனிற் காலத்தில் பகற்பொழுது மிகுதி யாதல்பற்றி அக்காலத்திற்குரிய அம்மா என்னும் வீட்டில் ஞாயிறு நுழைந்தால், அஃது எறும்புபோல் ஊர்வதாகச் சிந்துவெளி மக்கள் குறித்துள்ளனர்.

மீன்களிடையே ஞாயிற்றின் இறுக்கத்தைப் பகல் வேளையில் நோக்கும் பொருட்டு மொஹஞ்சதாரோ மக்கள் வானிலை ஆராய்ச்சிசாலை போன்ற ஒன்றை அமைத்திருந்தனர். அதனை அவர்கள் இள்தளில் என்றழைத்தனர். இச்சொற்கு மிக்க ஒளி படைத்த வீடு என்பது பொருளாகும். இவ்வீட்டிலிருந்து கொண்டு விண்மீன்களையும் ஞாயிற்றையும் காண முடியும். இவ்வீட்டின் ஒரு சுவரினூடே இரு நீண்ட குழல்கள் பொருத்தப் பெற்றிருந்தன. இவற்றையன்றி இவ்வீட்டில் வேறு சாரளமேதும் கிடையாது; வீடு இருண்டிருக்கும். இதுவே தற்கால தொலை நோக்கியின் தத்துவமுமாகும். இத்தத்துவத்தை மிக முற்பட்ட அக்காலத்திலேயே சிந்து வெளி மக்கள் அறிந்திருந்தனர்.

சிந்துவெளி திராவிடரி உலக அறிவு

அவர்களது உளநூற்பயிற்சியும் ஓங்கியிருந்தது என்பது அவர்களது குறியீடுகளுள் ஒன்றினால் விளங்கு கிறது. எண் (நினை; கருது) என்ற சொல்லின் குறியீடாக அவர்கள் ஒரு கிண்ணத்தையும் அதனுள் நிறுத்தப் பட்ட ஒரு குச்சியையும் வழங்கினர். மனிதனுடைய உள்ளம் ஒரு கிண்ணம். வெளியுலகத் தொடர்பு ஒரு குச்சி, உள்ளமும் வெளியுலக தொடர்பும் இணையும் பொழுது எண்ணங்கள் தோன்றுகின்றன. என்ற தற்கால உளநூற் கருத்தை அன்றே அவர்கள் உணர்ந்திருந்தனர் என்பதற்கு இக்குறியீடு சான்றாகும்

இதுகாறும் கூறியவற்றால் சிந்து வெளி மக்கள் தம்மையும் உலகத்தையும் பற்றிய அறிவில் சிறந்திருந்தனர் என்பது விளங்கும். கோள்களையும் மீன்களையும் அவற்றின் இயக்கத்தையும் அவ்வியக்கத்தால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் காலமாறுதல்களையும் பற்றிய அவர்களது அறிவு அளவு உயர்ந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.

இத்துறையில் மேலும் ஆராய்ச்சிகள் நிகழுமாயின் பல புதிய செய்திகள் வெளியாகும் அன்றியும் உலகத்தில் சிறந்த கலாச்சாரமுடைய இனங்களுள் திராவிட இனமும் ஒன்று என்பது உறுதிப்படும்

(விடுதலை 28.3.1954)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...