Total Pageviews

Sunday, December 2, 2007

மகிழ்ச்சியான செய்தி தமிழர் தலைவர் பவள விழா நேரடி ஒளிபரப்பு!தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் பெரியார் வலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப் பாக இருக்கிறது. 2.12.2007 அன்று காலை - மாலை நிகழச்சிகளை periyar.org.in வலைத்தளத்தில் நேரடியாகக் காணலாம். உலகத் தமிழர்களே! தமிழர் தலைவரின் விழா மாட்சியைக் காண இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்!

Saturday, December 1, 2007

பன்னாட்டு நிறுவனங்களில் ஜாதிப்பார்வை -
  சமூகநீதிக்குத் தலைநகரமான தமிழகம்-தான் இந்தியாவிற்கே இன்று வழிகாட்டி வருகிறது. எதையும் கொஞ்சம் முந்திச் சிந்திப்பது பெரியாரின் மரபு. கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, அதாவது இந்தியத் துணைக் கண்டத்தின் விடுதலைக்கு முன்பேயே சமூகநீதி குறித்து தமிழகம்தான் சிந்தித்தது. அரசியல் விடுதலையை விட, சமூக விடுதலையே அவசியம் என பெரியார் முழங்கினார். அன்றைய நாள் தொட்டு, திராவிட இயக்கம் நடத்திய போராட்டமே சமூகநீதியை உறுதி செய்து இட ஒதுக்கீடு முறையைத் தமிழகம் தக்க வைத்துக் கொண்டது.

   1985-களின்போது அரசுத் துறை நிறு-வனங்களைப் போலவே தனியார்த் துறையும் இந்தியா-வில் அதிக அளவு வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகின. இந்திய அரசியல் சூழல் உலக மயமாதலுக்கு உறுதுணையாக அமைந்தது; அதன் விளைவாக தனியார்த் துறையில் பனியாக்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஈடுபட்டு தொழில்களைக் கைப்பற்றி விடும் என முன்னேயே கணித்தது திராவிடர் கழகம். பெரியாரின் மரபில் அவரின் வீச்சோடு எதையும் தொலைநோக்கோடு சிந்திக்கும் ஆற்றல் வாய்ந்த தலைவர் கி. வீரமணி அவர்கள் தனியார், துறையிலும் இட ஒதுக்கீடு என்ற முழக்கத்தை முதன்முதலில் எழுப்பினார் 2.1.1982 இல் மதுரையில் நடைபெற்ற தி.க., மாநாட்டில்-தான் தனியார் துறையில் இட ஒதுக்கீடு குறித்த தீர்மானத்தை நிறைவேற்றினார்.

    இன்று இந்தியாவெங்கும் தனியார் துறைகள் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன. தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி சமூகநீதிக் கொள்கையில் உடன்பாடு கொண்ட அத்தனைக் கட்சிகளும் தி.க.,வின் அன்றைய தீர்மானத்தை இன்று வழிமொழிகின்றன. ஒரு பக்கம் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்திப் போராட்டங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், அண்மையில் நடந்த ஒரு நிகழ்வு ஜாதியப் பார்வை இன்னும் உயர் ஜாதியினரிடம் இருந்து அகன்று விடவில்லை என்பதை உணர்த்தியுள்ளது. டெல்லியில் உள்ள மயூர் பாஞ்ச் பகுதியில் இந்தியாவின் புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்கான நேர்காணலுக்கு பித்யூத் என்பவர் சென்றுள்ளார். இவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். டில்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் கணிதம் பயின்றவர். அந்தப் பன்னாட்டு நிறுவனத்தில் பித்யூத்க்கு அமர்வதற்கு நாற்காலிகூட தரப்பட-வில்லையாம். நேர்காணல் செய்யப்படும்போது பித்யூத்தின் கல்வித் தகுதியைத் தவிர்த்து விட்டு, குடும்பப் பின்னணி (அதாவது ஜாதி) பொருளாதாரப் பின்புலம், பெற்றோரின் வேலை வாய்ப்பு ஆகியவைபற்றியே கேள்வி கேட்கப்பட்டதாம். கடைசியில் அந்நிறுவன இயக்குநர், மிகக் குறைந்த ஊதியத்தில் பிழைக்கும் குடும்பத்தில் பிறந்தவருக்கு வேலை தர முடியாது என மறுத்துவிட்டாராம். இந்த நிகழ்வு ஒரு உதாரணம்தான். பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு இந்த நிலைதான் என்பதை ஒரு ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.

     நியூயார்க்கின் சிட்டி பல்கலைப் பேராசிரியர் பால் அட்டினுல் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைப் பேராசிரியர் கேத்ரின் நியூமென் ஆகியோர் இந்த ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்குத் தற்போதைய பல்கலைக் கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) தலைவர் சுக்தேவ் தோரட் ஒத்துழைப்புத் தந்துள்ளார். 2005 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நாளிதழ்களில் இருந்தது பன்னாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்களைச் சேகரித்தனர். அதிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் மூன்றுவிதமான மனுக்கள் மற்றும் கடிதங்களை இந்த ஆய்வில் ஈடுபட்ட-வர்கள் உருவாக்கினார்கள். அந்த மனுக்களில் எளிதில் பிரித்து அறிய முடியாத கல்வி மற்றும் இதர விவரங்களை இடம்பெறச் செய்தனர். ஜாதி மற்றும் மதப் பின்னணிபற்றி வெளிப்படையாகக் குறிப்பிடாமல் ஒவ்வொரு செட் மனுக்களிலும் - ஒன்று உயர்ஜாதி பெயர் கொண்டவராகவும், இன்னொன்று சிறுபான்மையினர் அல்லது தாழ்த்தப்பட்டவர் பெயர் கொண்டவராகவும் அமைக்கப்பட்டது. அதில் தொடர்பு முகவரியும் எழுதப்பட்டி-ருந்தது. இதுபோல மொத்தம் 4,808 விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. நேர்-காணலுக்-கான வாய்ப்பு எப்படி அமைந்தது என்பதில்தான் தனியார் நிறுவனங்களின் ஜாதிய மனப்பான்மை தெரிய வந்தது.

      உயர்ஜாதி மனுதாரரோடு ஒப்பிடும்போது அதே அளவு கல்வித் தகுதி உடைய தாழ்த்தப்-பட்ட மாணவருக்கான நேர்காணல் வாய்ப்பு 66 சதவிகிதமாக மட்டுமே கிடைத்தது. இஸ்லாமிய மனுதாரரைப் பொறுத்தவரை இந்த வாய்ப்பு 33 சதவிகிதமாகக் குறைந்து-விட்டது. தகுதிக் வாய்ந்த தாழ்த்தப்பட்ட மாணவரைவிட தகுதி குறைவான உயர்ஜாதி மாணவருக்கு 20 சதவிகித அளவில் அதிக வாய்ப்பு கிடைத்தது. சமூகப் பொறுப்-புணர்ச்சிபற்றிப் பேசும் பல நிறுவனங்களும் இதில் அடக்கம் என்று அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

       இந்த ஆய்வு குறித்துப் பேசிய சுக்தேவ் தோரட், வணிக நிறுவனங்கள் சமூகப் பின்னணியின் அடிப்படையில் பாகுபாடு காட்டுகின்றனர் என்பதற்கான ஆதாரம் முதல் முறையாகக் கிடைத்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறினார்.

        பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் இந்து மத இழிகுணம் எந்த வகையிலும் அதன் பார்வையைக் கைவிடவில்லை. ஒரு வேலைக்-கோ, தொழிலுக்கோ அதற்குத் தேவையான அறிவும் உழைப்புக்கான தகுதி மட்டுமே போதுமானது. ஆனால், இந்தியாவில் இதையும் தாண்டி ஜாதித் தகுதி என்ற மோசமான பார்வை இன்னும் இருக்கிறது என்பதையே இந்த ஆய்வு நமக்கு உணர்த்துகிறது. சமூகச் சமநிலையைக் கொண்டு வர அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமல்லாது தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கவேண்டிய சூழல் அதிகரித்து வருகிறது. அரசுத் துறை, நீதித்துறை, தனியார் துறைகள், பன்னாட்டு நிறுவனங்கள் என எல்லா நிலையங்களிலும் சமூகநீதியை வலியுறுத்திப் போராடுவதன்மூலமே சமுதாயத்தில் சம நிலையை உருவாக்க முடியும்.
        1. (நன்றி: தி சண்டே இந்தியன் (நவ.18, 2007)).

        Tuesday, November 20, 2007

        பா.ஜ.க., ஆசையில் விழுந்த மண்!

        சாலமன் கிரண்டி திங்கள்கிழமை பிறந்தான் (Born on Monday) ஞாயிறு அன்று மரித்தான் என்று கூறும் ஆங்கிலக் கவிதை பலருக்கும் நினைவிருக்கலாம். அதனை மறந்து போனவர்கள், அல்லது இதுவரை அறியாமல் இருந்தவர்கள் கருநாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா கட்சி - ஆட்சி அமைத்த ஒரு வார காலத்தில் மரணித்ததன்மூலம் தெரிந்துகொள்ளலாம்.சோ ராமசாமி கல்கி போன்ற பார்ப்பன அமைப்பு களே குமட்டிக் கொண்ட அளவுக்கு பா.ஜ.க.,வின் பதவி வெறி அனைத்து நியாய தர்மங்களையும் தூக்கி எறியச் செய்துவிட்டது.மற்ற மற்ற அரசியல் கட்சிகளைப் போன்றதல்ல பா.ஜ.க.; அதற்கென்று அறநெறிக் கோட்பாடுகள் அநேகம் உண்டு என்று வானக் கூரையேறி முழக்கம் போடுவதில் குறைச்ச லில்லை. ஆனால், நடப்புகள் என்னவோ அதற்கு நேர் எதிர்மறைதான்.மதச்சார்பற்ற ஜனதா தளம் தொடக்கத்திலேயே தன் ஆதரவை அளிப்பதில் கோணங்கி வித்தைகளை எல்லாம் காட்டியது. அப்பொழுதே மரியாதையாக ஆட்சியும் வேண் டாம் - மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்லியி ருந்தால், கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சியிருந்திருக்கும். இதில் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கேவ லத்தின் எல்லைக்கே சென்றுவிட்டது என்பது இன்னொரு சங்கதி.மதச்சார்பற்ற ஜனதா தளம் என்ற மகுடத்தைத் தரித்துக் கொண்டு, பாரதீய ஜனதாவின் தயவில் ஆட்சியை நடத்தியது. தொடக்கத்தில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவு இல்லை என்று தெரிவித்துவிட்டு, அதன்பின்னர் ஆதரவு என்றும், நேசக் கரத்தையும் நீட்டி துணை முதலமைச்சர் என்ற பதவியையும் பெற்றுக்கொண்டு, சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்கும் தருணத்தில் காலை வாரிவிட்டது! பா.ஜ.க.,வின் தகுதிக்கு சரியான கூட்டாளிதான் என்பதை இதன்மூலம் தனக்குத்தானே அறிவித்துக் கொண்டுவிட்டது மதச் சார்பற்ற ஜனதா தளம்.பா.ஜ.க., மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று மோசமாக நடந்துகொண்டாலும் எப்படியோ நாட்டுக்கு நல்லது நடந்துவிட்டது; மதவெறி ஆட்சியின் கீழ் அவலப்படவேண்டிய ஆபத்திலிருந்து கருநாடக மாநிலம் தப்பிப் பிழைத்துக் கொண்டுவிட்டது - அந்த அளவுக்கு அம்மாநில மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்.தென்மாநிலங்களில் கருநாடகத்தில் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்துவிட்டது பாரதீய ஜனதா தளம் என்ற மகிழ்ச்சியில் வாணவேடிக்கை நடத்தினார்கள். தமிழ்நாட்டு பா.ஜ.க.,வினர் இனிப்புகளை வழங்கி தீபாவளியும் கொண்டாடினார்கள். இப்பொழுது துக்க வீடாகக் களை யிழந்து காணப்படுகிறது.மதச்சார்பற்ற ஜனதா தளம் நம்பிக்கை மோசடி செய்துவிட்டது என்றெல்லாம் குற்றப் பத்திரிகை படிக்கலாம் பா.ஜ.க. ஆனால், அப்படி சொல்ல அதற்கு அடிப்படை அருகதை உண்டா என்பதுதான் முக்கியமான வினாவாகும்.ஜனசங்கத்தைக் கலைத்துவிட்டு ஜனதாவுடன் அய்க்கிய மான நிலையிலும்கூட, ஆர்.எஸ்.எஸில் உறுப்பினர் என்கிற இரட்டை நிலையை எடுத்தவர்கள்தானே இவர்கள்! அதன் காரணமாகவே தானே ஜனதா என்ற மதச்சார்பற்ற அமைப்பு நொறுங்கிப் போனது.நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி கரசேவை என்ற பெயரில் பாபர் மசூதியை ஒரு பட்டப்பகலில் இடித்து தரைமட்டமாக்கிய வாக்குச் (அ)சுத்தக்காரக் கூட்டம்தானே அது!மண்டல் குழுப் பரிந்துரைப்படி பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் அமல்படுத்திய காரணத்தால்தானே, வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க., விலக்கிக் கொண்டு, ஒரு நல்லாட்சியைக் கவிழ்த்த மாபாதகத்தைச் செய்தது.இந்த நிலையில், இன்னொரு கட்சியை நோக்கி விரலை நீட்டிக் குற்றம் சுமத்தும் யோக்கியதை பா.ஜ.க.,வுக்கு கிடையாது - கிடையவே கிடையாது என்பதைப் பொதுமக்கள் அறிவார்களாக!

        நன்றி: விடுதலை தலையங்கம் 20.11.2007

        எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!

        கர்நாடக பா.ஜ.க. அரசு கவிழ்ந்தது

        நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் 7 நாளில் பதவி விலகல்

        பெங்களுர், நவ.20-
        கர்நாடக மாநிலத்தில் அமைந்த எடியூ ரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு 7 நாள்களில் நம்பிக்கை வாக்கெடுப்புகூட நடத்தாமல் கவிழ்ந்தது.எடியூரப்பா அரசு அமைக்க முதலில் ஆதரவளித்த மதச் சார்பற்ற ஜனதா தளம் தனது முடிவை மாற்றிக் கொண்ட தால் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக் கும் முன்னதாகவே எடியூரப்பா அரசு பதவி விலகியது.இம்மாதம் 12 ஆம் தேதி பதவியேற்ற எடியூரப்பா 20 ஆம் தேதிக்குள் தனது பெரும் பான்மையை மெய்ப்பிக்க வேண்டுமென்று ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் காலகெடு விதித்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக 19 ஆம் தேதியே நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போவதாக எடியூரப்பா அறி வித்திருந்தார்.நேற்று மதச்சார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் நடந்தது. குமாரசாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது கொலைப் பழி சுமத்திய சிறீராமுலுவுக்கு அமைச்சர் பதவி தரக்கூடாது என்ற கோரிக்கையை பா.ஜ.க. ஏற்க மறுத்ததால், எடியூரப்பா அரசை எதிர்த்து வாக்களிப் பது என முடிவு செய்யப்பட் டது.பரபரப்பான இந்தப் பின் னணியில் நேற்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடி யது. முன்னாள் உறுப்பினர் களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்தி வைக்கப் பட்டு பிற்பகல் 3 மணிக்கு மறுபடியும் அவை தொடங் கியது. முதல்வர் எடியூரப்பா தனது அரசுமீதான நம்பிக்கைத் தீர்மானத்தைக் கொண்டு வந்த பேசினார். அதன் பின் அதன் மிது விவாதம் நடைபெற்றது.நம்பிக்கை வாக்கெடுப்பில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவு கிடைக்காது என்பது உறுதியான நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வ தாகத் தெரிவித்து விட்டு, ஆளுநர் மாளிகைக்குச் சென்ற அவர் தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.

        Friday, November 16, 2007

        பாசிச கொடூர சக்திகளிடமிருந்து ஈழ மக்களைக் காப்பாற்றும் ஒரே அமைப்பு விடுதலைப்புலிகளே! - கி.வீரமணி

        சுப. தமிழ்ச்செல்வன் மறைவிற்கு முதல்வர் கலைஞர் இரங்கல் தெரிவித்தது மனிதாபிமான அடிப்படையில்தான்!

        அதற்காக காங்கிரசார் இரத்தக் கண்ணீர் வடிக்கவேண்டுமா?        காந்தியாரைக் கொன்ற பரம்பரையினர் ஆட்சிக்கு வரவில்லையா - அவர்களோடு தேவைப்படும்போது நாகரிகம் கருதிக் கைகுலுக்குவதில்லையா?


        ஈழ மக்களை அழிக்கும் பாசிச கொடூர சக்திகளிடமிருந்து அம்மக்களைக் காப்பாற்றும் ஒரே அமைப்பு விடுதலைப்புலிகள்தானே!

        ராஜீவ் படுகொலையையும், இதனையும் குழப்பிக் கொள்ளலாமா?
        உரிமையுடன் காங்கிரசாருக்குச் சுட்டிக்காட்டுகிறோம்


        தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

        விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப. தமிழ்ச் செல்வன் மறைவிற்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கண்ணீர் இரங்கல் தெரிவித்ததற்காக ரத்தக் கண்ணீர் வடிப்பதாக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

        அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துள்ள தமிழக முதல்வர், முன்னாள் பிரதமரை படுகொலை செய்த, தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு எழுதிய கண்ணீர் அஞ்சலி இரங் கற்பா எங்களின் கண்களில் ரத்தக் கண்ணீரை வரவழைத் துள்ளது என்று சத்தியமூர்த்தி பவனில் கூட்டிய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.உலகத் தமிழர்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பார்களே!தங்களுடைய தலைவர் ராஜீவ் காந்தி அவர்கள் இந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, அவர்கள் மறக்கவொண் ணாத் துன்பம், துயரத்தின் காரணமாக இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்; இத்தீர்மானத்தினைக் கண்டு உலகம் முழுவதிலும் வாழும் மனிதநேயமும், தமிழ் இன உணர்வும் கொண்ட கோடானு கோடி தமிழர்கள் உண்மையாகவே இரத்தக் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மிகுந்த மரியாதையுடன் காங்கிரஸ் நண்பர்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

        மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப் பட்டதை, மனித இதயம் படைத்த எவராலும் ஏற்கவே முடியாது.அப்படி ஒரு கோரமான, சோகமான சம்பவம் அதுவும் தமிழ் மண்ணில் நிகழ்ந்திருக்கவே கூடாது; அது கண்டனத்திற்குரியது. இதை நாம் இப்போது சொல்லவில்லை. இந்தச் சம்பவம் நடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருக்கிறோம்.அந்நிகழ்வின் விளைவுதான் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழ்நாட்டில் இல்லாத ஓர் இயக்கமாக இருப்பினும்கூட - தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
        அண்டை நாட்டில் தமிழர்களைப் பாதுகாப்பவர்கள் யார்?
        ஆனால், அண்டை நாடான இலங்கையில் ஈழத் தமிழர்கள் - ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சொந்த நாட்டிலேயே அந்நாட்டு முப்படையினரால் - ஈவு இரக்கமின்றி காக்கைக் குருவிகளைப்போல் கொல்லப்பட்டும், வாழ்வுரிமையை இழந்தும், பட்டினியாலும், நோயாலும் அழிக்கப்படும் நிலை நிலவுகிறதே! சிங்கள அரசு தமிழர்கள்மீது மூர்க்கத்தனமாக கடந்த 20 ஆண்டு களுக்குமேல் திட்டமிட்டு போர் நடத்துகிறதே! சிங்கள அரசின் இனப்படுகொலையிலிருந்து அவர்களைக் காப்பவர்கள் அவர் களுக்குப் பாதுகாப்பாக அமைந்து போராடுபவர்கள் அவர்களின் வாழ்வுரிமையை மய்யப்படுத்தியுள்ள ஒரே இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது மறுக்க முடியாத உண்மை அல்லவா?

        ஈழத் தமிழர்களை அழித்துவரும் ராஜபக்சே அரசு ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில குறைந்தபட்ச சலுகைகளைக்கூட காலில் போட்டு மிதித்துவிட்டது என்பதும் உலகம் அறிந்த உண்மையல்லவா!
        சமாதானப் புறாவைச் சாகடித்துவிட்டனரே!
        அந்த மக்களின் வாழ்வுரிமையைக் காப்பாற்ற பற்பல வெளி நாடுகள் - நார்வே, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாட்டவர்கள் எல்லாம் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, தங்களது மனித நேயத்தைக் காட்டிவரும் வேளையில், சிவிலியன் மக்கள்மீதும், ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தின்மீதும்கூட குண்டுமாரி பொழிந்தவர்களைத் தடுத்ததோடு, சமாதானப் புறாவாகப் பறந்து, இப்பிரச்சினைக்கு ஓர் இணக்கமான உடன்பாடு காண முயன்ற ஒருவரது படுகொலைக்காக மனிதாபிமானத்தோடு, அதுவும் நாட்டால் வேறுபட்டாலும், தமிழ் மான உணர்வில் ஒன்றுபட்ட ஒருவருக்காகக் கண்ணீர் சிந்தி அழுவது எப்படி தேசியக் குற்றமாகும் என்பதை நிதானித்து நமது காங்கிரஸ் சகோதரர்கள் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும்.
        செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனை!

        கலைஞர் அவர்கள் ஆண்ட போது இப்படி ஒரு படுகொலை நிகழ வில்லை; மாறாக மத்தியில் உள்ள ஆட்சி - காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த ஓர் ஆட்சி - குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்தபோதுதான் நிகழ்ந்தது என்றாலும், செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதுபோல எத்தனையோ சொல்லொணாக் கொடுமைகளை தி.மு.க.,வும், அதன் தோழமையினரும் அன்று அனுபவித்தனர்.

        அவைகளையெல்லாம் தாண்டி சில மாதங்களுக்குமுன் நடைபெற்ற தமிழக சட்டமன்ற நிகழ்வுகளின்போது, இப்பிரச்சினை குறித்து மிகத் தெளிவாக முதல்வர் கலைஞர் அவர்கள் விளக்கி, நடந்த சம்பவங்களைக் கண்டித்துவிட்டு, அதற்காக ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை நாம் அலட்சியப்படுத்திவிடக் கூடாது என்பதை உள்ளடக்கமாகக் கொண்டு, தோழமைக் கட்சியினரின் ஒத்துழைப்போடு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது நினைவூட்டப்பட வேண்டியதாகும்.

        அன்று ராஜீவ் காந்தியோடு சந்திப்புஅம்பேத்கர் நூற்றாண்டு விழா குழு (1989 இல் மத்தியில் வி.பி. சிங் பிரதமராகவும், ராஜீவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தபோது)வில் ஓர் உறுப்பினர் என்ற முறையில் டில்லி பார்லி மெண்ட் அனெக்ஸ் கட்டடத்தில் நடந்த கூட்டத்தில் மதிய உணவுக் காகக் கலைந்து, உணவு பரிமாறும்போது, பலருடனும் ராஜீவ் காந்தி அவர்கள் சகஜமாகப் பேசி வந்தவர்; திடீரென என்னைப் பெயர் சொல்லி அழைத்து, அருகில் அழைத்து, தனியே பேசினார்.

        இலங் கையில் இனப்படுகொலை நடப்பது மிகவும் கொடுமை; இதை நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அங்கே தீவாயு (நாப்பாம்) குண்டு வீசுகிறார்கள் என்ற செய்தி வந்துள்ளது என்று கூறினார்.

        முதலமைச்சர் கலைஞரிடம் கூறினேன்

        ராஜீவ் அவர்களே, நீங்கள் தங்கள் தாயார் இந்திரா காந்தி அவர்கள் கடைசியாக தஞ்சாவூருக்கு வந்தபோதே இதே சொல்லை (ழுநடிஉனைந) பயன்படுத்தினார்; இப்போது நீங்களும் அதையே சொல்வது தங்களுக்குள்ள மனிதாபிமானத்தினைக் காட்டுகிறது என்று நான் சொன்னவுடன், தமிழ்நாடு முதல்வர் கலைஞரிடம் சொல்லுங்கள் என்றே சொன்னார். அதன்படி நான் சென்னை வந்து முதல்வரிடம் (கலைஞரிடம்) ராஜீவ் காந்தி அவர்கள் சொன்னதைக் கூறியதோடு, அவர்தம் பதில் பற்றி தன்னிடமோ அல்லது குறிப்பிட்ட சில அதிகாரிகளிடமோ கூறச் செய்யுங்கள் என்று ராஜீவ் காந்தி சொன்னதையும், முதலமைச்சரிடம் எடுத்துக் கூறினேன்.

        அப்படிப்பட்டவர் கொல்லப்பட்டது மிகக் கொடுமை - ஏற்கவே இயலாது!என்னை அவர் தனியே அழைத்துப் பேசியவுடன் சற்று தூரத்திலிருந்து பார்த்தவர் இந்து ஆசிரியர் என். ராம் அவர்கள். அதற்குப்பின் எவ்வளவோ நடந்துவிட்டன! இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது! ராஜீவ் கொலையையும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் 20 ஆண்டுகளாக நொடிதொறும் அனுபவிக்கும் வாழ்க்கைத் துயரத் தையும் ஒன்றாகவே காங்கிரஸ் கட்சியினர் பார்த்தால் அது சரியாக இருக்குமா?

        நிதியமைச்சர் ப. சிதம்பரம்கூறியதுகூடக் குற்றம்தானா?

        அண்மையில் இலங்கைக்குச் சென்று உரையாற்றிய, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய, நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள், இராணுவ நடவடிக்கையால் ஈழத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது; அரசியல் தீர்வுதான் வழி; விடுதலைப்புலி களுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று ராஜேபக்சே அரசுக்கு அறிவுரை கூறிவிட்டு வந்துள்ளாரே, அதுகுறித்து தடை செய்யப் பட்ட விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசியல் சட்டத்தின் மீது பிரமாணம் எடுத்தவர் பேசலாமா என்று கேட்டால், நியாயமா?அனுதாபம் தெரிவித்ததைவிட சற்றுக் கூடுதலான நடவடிக்கை அல்லவா, இது!

        முதல்வர் தெரிவித்தநல்லெண்ணக் கண்ணீர் அஞ்சலி

        நல்லெண்ணத்தோடு அவர்கள் சொன்னதைப்போலவே, எவ்வித உள்நோக்கமும் இன்றி கண்ணீர் அஞ்சலியை கலைஞர் விடுத்தால், அதைக் கண்டு ரத்தக் கண்ணீர் சிந்துகிறோம் என்று சொல்லி, இந்த ஆட்சியை வீழ்த்தவேண்டும், பலவீனப்படுத்தவேண் டும் என்று நினைக்கும் மதவெறி மற்றும் பார்ப்பனீய சக்திகளுக்கு அறிந்தோ, அறியாமலோ, தோழமைக்கட்சியினர் துணை போகலாமா?

        ஒரு மரணத்துக்காகக் கண்ணீர் வடிக்கக் கூடாது; ஆனந்தக் கண்ணீர் உகுக்கவேண்டும் என்ற எண்ணத்தை காங்கிரசார் உருவாக்கலாமா? இந்நிலை அக்கட்சிக்குப் பெருமை சேர்க்காதே!

        திரு. வீரப்பமொய்லி அவர்களிடம் கேட்கப்பட்டபோதுகூட, அவர்கள் அவர்களது தனிப்பட்ட உணர்வு என்று சொன்னதையும் சுட்டிக்காட்ட நாம் விழைகிறோம்.தேசத் தந்தை என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்களையே படுகொலை செய்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தனரே - அவர்களைப் பார்ப்பதே பாவம் என்றா கண்களை மூடிக்கொண்டு விட்டனர்? அரசியலில் தேவைப்படும் போது, கைகுலுக்கிக் கொண்டது இல்லையா? நாகரிகம் கருதி பல சந்தர்ப்பங்களில் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதில்லையா?

        பிரதமர் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்று கூறி ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தையே தீண்டத்தகாத பட்டியலில் வைக்க வில்லையே! தடை செய்யப்பட்ட காஷ்மீர், வடகிழக்கு மாகாண தீவிரவாத அமைப்புகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லையா?ராஜீவ் படுகொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் வாழும் ஒரு பெண்மணி (நளினி) விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் எப்படி நடந்துகொண்டார் என்பதைப் பெருமை மிக்க எடுத்துக்காட்டாகக் காங்கிரசார் கொள்ள வேண்டாமா? வெறும் வாய்க்கு அவலா?அவரவர்கள் கருத்துகளை வெளியிட அவரவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும்,அரசியல் எதிரிகளுக்கும், கலைஞரைத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்போருக்கும் வெறும் வாயை மென்றவர்களுக்கு இந்த அவலை மெல்லுங்கள் என்று தருவதால், என்ன லாபம்? மத்தியில் உள்ள ஆட்சிக்கு மூலக்கல்லாக இருக்கும் தி.மு.க., ஆட்சியை அசைத்துப் பார்த்தால் யாருக்கு நட்டம் - யோசிக்க வேண்டாமா?மனிதநேயர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதநேயர்கள் மத்தியில் இது எவ்வகையான சிந்தனைகளை எழுப்பும் என்பதை யும் அருள்கூர்ந்து காங்கிரஸ் கட்சி நண்பர்கள் சிந்திக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

        உரிமையுடன் சுட்டிக்காட்டுகிறோம்உங்களுக்கென்ன (தி.க.) உரிமை என்று யாரும் கேட்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்; காரணம், 1954 முதல் 1967 வரை அதை ஆதரித்ததோடு, 2004-லும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு மகத்தான ஆதரவினையும், 2006 சட்டமன்றத் தேர்தலில் அதனை ஆதரித்தோடு, இன்னமும் ஆதரிப்பவர்கள் என்ற உரிமையுடனும் சுட்டிக்காட்டுகிறோம்.

        கி.வீரமணி
        தலைவர், திராவிடர் கழகம்.
        சென்னை
        15.11.2007

        Tuesday, September 25, 2007

        ராம்விலாஸ் வேதாந்தியைக் கைது செய்க! - திராவிடர் கழகம் புகார் மனு

        முதல்வர் கலைஞரை கொலை செய்யத் தூண்டிய ராம்விலாஸ் வேதாந்தியைக் கைது செய்துநடவடிக்கை மேற்கொள்க!
        சென்னை காவல்துறை ஆணையரிடம் திராவிடர் கழகம் புகார்மனு

        சென்னை, செப். 24- தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களைக் கொலை செய்யத் தூண்டிய விசுவ இந்துபரிசத்தின் முக்கிய தலைவரும், பி.ஜே.பி., சார்பில் மக்களவையில் இருமுறை உறுப்பினராக இருந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தியைக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் சென்னை - மாநகரக் காவல் துறை ஆணையரிடம் இன்று புகார் மனு கொடுத்தார். வழக்கறிஞர் த. வீரசேகரன் உடனிருந்தார்.

        புகார் மனு விவரம் வருமாறு:விசுவ இந்து பரிசத் கேந்திரா மார்க்தர்ஷக் மண்டல் தலை வரும், பாரதீய ஜனதா கட்சி சார்பில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர் தி.மு.க., தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் தலையையும், நாக்கையும் துண்டித்து வருபவர்களுக்கு (பாட்வா) அயோத்தியில் உள்ள சாமியார்கள்மூலம் எடைக்கு எடை தங்கம் பரிசளிக்கப்படும் என்று அறிவிப்புக் கொடுத்துள்ள தானது - பச்சையாக கொலையைத் தூண்டும் வன்முறை செயலாகும்.இணைய தளத்திலும், ஏடுகளிலும் இந்தச் செய்தி விரிவாக வந்துள்ளது .கொலை வெறி, வன்முறையைத் தூண்டியுள்ள ராம் விலாஸ் வேதாந்தி என்பவரைக் கைது செய்து, தமிழகம் கொண்டு வந்து, சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.-

        இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        Saturday, September 22, 2007

        இராமாயணத்தைப் பற்றிய அறிஞர்கள் கருத்து -2

        ஆரியரல்லாதார் பட்ட பாடுஆரியல்லாத இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும், ஆரியப் புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதவர்களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள்தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறிவிட்டன.
        (சர். வில்லியம் வில்சன்ஹண்டர், கே.சி.எஸ்.அய்., சி.அய்.ஈ., எம்.ஏ., ஆக்ஸன் எல்.எல்.டி எழுதிய இந்திய மக்களின் சரித்திரம் என்னும் நூலின் 41 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------------------------------------
        இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவு படுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.
        (பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட
        மலபார் குவாட்டர்லி ரிவ்யூ என்னும் புத்தகம்).
        ------------------------------------------------------------------------------------
        நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை. ஒன்றையும் நம்புவதில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக.
        (ரிக் வேதம் அதிகாரம் 10 சுலோகம் 22-8).
        ------------------------------------------------------------------------------------
        ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.
        (ராகோசின் எழுதிய வேதகால இந்தியா என்னும் புத்தகம்).
        ------------------------------------------------------------------------------------
        இந்திய அய்ரோப்பியர்களால், அதாவது, ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்கள் (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப் பட்டிருக்கிறது.
        (பால்மாசின் அவர்செல் எழுதிய புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்
        என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)
        ------------------------------------------------------------------------------------
        மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ் வெள்ளையர்கள் மக்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.
        (சர் ஹென்றி ஜான்ஸ்ட்டன், ஜி.சி.எம்., ஜி.கே.சி.ஈ., 1937 இல் எழுதிய இந்தியாவில் அன்னியர்கள் என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)
        ------------------------------------------------------------------------------------
        இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ-ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும் . . . இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்சதந்திரம், அராபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.
        (பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள
        டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76-77).
        ------------------------------------------------------------------------------------
        இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.
        (டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 82)
        ------------------------------------------------------------------------------------
        ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும், மாறுபாட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்ட கால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.
        (டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 62).
        ------------------------------------------------------------------------------------
        இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.
        (திரு. நீலகண்ட சாஸ்திரி).
        ------------------------------------------------------------------------------------
        இராமாயணம் என்ற கற்பனைக் கதையின் அடிப்படை யாதெனில், திராவிடப் பழங்குடி மக்களுக்கும், ஆரியப் படையெடுப்பாளருக்கும் இடையே நடந்த போராட்டமே தவிர வேறல்ல.
        (சர். ஃபிரோஸ்கான்நன் (முன்னாள் மேற்கு பஞ்சாப் முதலமைச்சர்)
        1941 இல் எழுதிய இந்தியா என்ற புத்தகத்தில் பக்கம் 8).
        ------------------------------------------------------------------------------------
        இவ்வாரியப் பார்ப்பனர், ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப் பிரிவு, சாதிப் பிரிவுகளை உண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே, தத்தம் சாதியே உயர்ந்ததென்று சொல்லி, ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப்போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை - கண்ணன் கதை - கந்தன் கதை - விநாயகன் கதை - காளி கதை முதலிய பல்வேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து, அவற்றை ராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி, அவை தம்மை மற்றைய எல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.
        (மறைமலையடிகள் - அறிவுரைக் கொத்து)
        ------------------------------------------------------------------------------------
        ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த சூரன் - இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்.
        (மறைமலையடிகள் - வேளாளர் நாகரிகம் பக்கம் 61).
        ------------------------------------------------------------------------------------
        ஆரியர் வாய்ந்த பார்ப்பனர்கள், கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள்புரிந்தார்; இதோ, இவருக்கு நேராக அருள்புரிந்தார் என்று பொய்யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டி விட்டனர்.
        (மறைமலையடிகள் -
        'கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா' பக்கம் 33-34.)
        ------------------------------------------------------------------------------------
        இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசரர் - தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை - நாட்டாரை குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை தேவர்கள் என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் - அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.
        (திரு ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளை - இராமாயண உள்ளுரை பொருள் என்ற நூலின் முன்னுரையில்)
        ------------------------------------------------------------------------------------
        மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ சரித்திரமோ அல்ல; கட்டுக் கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்.
        (கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி - இந்திய சரித்திரம் முதல் பாகம் பக்கம் 34)
        ------------------------------------------------------------------------------------
        புதிய வரவினராகிய ஆரியர்க்கு அனுகூலராயும், பிரதி கூலராயுமிருந்த திராவிடப் பெருஞ்சாதி வகுப்பினரை ஆரியக் கவி அரக்கர் என்றும், குரங்கினம் என்றும் இறுத்துக் கூறியது, அவர்களுக்குரிய சாதித் துவேஷம், செய்நன்றி கொல்லல் ஆகிய குண தோஷத்தைக் குறிக்குமேயன்றி மற்றொன்னையுங் குறிப்பதன்று.
        (வெ.ப.சுப்பிரமணிய முதலியார் 1908 ஆம் ஆண்டில் எழுதிய
        இராமாயண உள்ளுரைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் பக்கம் 19)
        ------------------------------------------------------------------------------------
        இராமாயணம் கட்டுக் கதையாயினும், இராவணன் என்ற பாத்திரம் தலை சிறந்தது என்பதில் அய்யமில்லை. திராவிடர்கள் இராவணனை ஓர் இணையற்ற வீரனாகவும், தென்னிந்தியாவின் மீது ஆரியர் படையெடுத்ததைத் துணிவுடன் எதிர்த்து நின்ற பேரரசனாகவும் கருதியிருக்கின்றனர்.
        (எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 1928 இல் எழுதிய
        இராவணப் பெரியார் பக்கம் 78).
        ------------------------------------------------------------------------------------
        மகாபாரதத்தில் இருப்பது போலவே, இராமாயணத்திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண்டிலும் சரித்திர சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.
        (ஆர்.சி. தத், பழைய இந்து நாகரிகம் பக்கம் 138)
        ------------------------------------------------------------------------------------
        அண்ணனைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் பட்டத்தைப் பெறும் தம்பி பக்தன் என்று சொல்ல முடியுமா? பக்தி என்றும், லோக நியாயம் என்றும் யுக்தி செய்து கொண்டு யாரும் எளிதிலே நாட்டுக்கும், சகோதரர்களுக்கும் துரோகம் செய்யத் துணிந்துவிடலாமே.விபீஷணனுடைய செயலைப் பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத் துரோகிகள் ஆகிவிட்டார்கள்.
        (வ.ரா. எழுதிய கோதைத் தீவு பக்கம் 24, 25).
        ------------------------------------------------------------------------------------
        புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய் சரித்திரமல்ல. இவை மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகா. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே.
        (திரு. முன்ஷி, இந்திய மக்களின் கலாச்சாரமும் - வரலாறும் பக்கம் 8)

        Thursday, September 20, 2007

        இராமாயணம் உண்மைக் கதையா?

        இராமாயணத்தைப் பற்றிய அறிஞர்கள் கருத்து


        இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர்களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியளார்களும், பேரறிஞர்களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம்.
        -------------------------------------------------------------------------------------
        தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.
        (ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ். எழுதிய
        புராதன இந்தியா - 52 ஆவது பக்கம்)
        -------------------------------------------------------------------------------
        திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.
        (டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின்
        பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.
        (பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய,
        திராவிடரும் ஆரியரும் 24 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியர்களல்லாதவாகளையே குறிப்பதாகும்.
        (ரொமேஷ் சந்திர தத்தர் எழுதிய,
        பண்டைய இந்தியாவின் நாகரிகம் 139-141 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
        (சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் -
        இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.
        (1922 - ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ்
        பழைய இந்தியாவின் சரித்திரம் என்னும் புத்தகத்தில்).
        -------------------------------------------------------------------------------
        பகைமைக்குக் காரணம்ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.
        (டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய
        இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தில் 69 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        இராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால் ) நடத்தப்பட்ட போராட்டமாகும்.
        (டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய
        இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தின் 141 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும் இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் பாஷை
        (சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின்
        பக்கம் 67 இல் இருக்கிறது.)
        -------------------------------------------------------------------------------
        ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து, முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.
        (பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம்-3, பக்கம் 10)
        -------------------------------------------------------------------------------
        தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.
        (டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள் எழுதிய
        தென்னிந்தியாவும் இந்தியக் கலையும் என்ற புத்தகத்தின் 3 ஆவது பக்கம்)
        -------------------------------------------------------------------------------
        இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது.இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.
        (பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம், முதல் பாகம்
        என்னும் புத்தகத்தின் 10 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்..
        (ஜோஷி சந்தர் டம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும்
        என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        அசுரர்கள் யார்ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின் பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள்.இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப் பகை இருந்து கொண்டே இருந்தது.
        (ஏ.சி.தாஸ். எம்.ஏ.,பி.எல்., எழுதிய ரிக் வேத காலத்து இந்தியா
        என்னும் புத்தகத்தில் 151 ஆவது பக்கம்.)
        -------------------------------------------------------------------------------
        ஆரியர்களால் வெல்லப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
        (சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கர், எம்.ஏ., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, இந்திய சரித்திரம் - முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்).
        -------------------------------------------------------------------------------
        ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களை விட முன்னேற்றமாக திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.
        (எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம்
        என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.
        (நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா வால்யூம். 2 (1925) பக்கம் 273)
        -------------------------------------------------------------------------------
        இராமாயணம் வரலாற்றை உணர்த்தும் இதிகாசமே இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.


        (முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய
        இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல், எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்த கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்.
        (பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865 இல் எழுதிய
        விரிவான இந்திய சரித்திர முதற் பாகம் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்.)
        -------------------------------------------------------------------------------
        விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.
        (இ.பி.ஹரவெல் 1918 இல் எழுதிய இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம் என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்.)
        -------------------------------------------------------------------------------
        பாரத இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டு மிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை - திராவிட நாட்டைப் பற்றியே யாகும்.
        (ஜி.எச். ராபின்சன், சி.அய்.ஈ. யால் எழுதப்பட்ட
        இந்தியா என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        வட இந்திய திராவிடக் கலைவட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்க வில்லை.
        (தமிழ்ப் பேராசிரியர் கே.எம். சிவராஜ பிள்ளை, பி.ஏ., எழுதிய
        பண்டை தமிழர்களின் வரலாறு என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்.)
        -------------------------------------------------------------------------------
        பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.
        (நாகேந்திரகோஷ், பி.ஏ.,பி.எல். எழுதிய
        இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் என்ற புத்தகத்தின் 194 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
        (ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின்
        உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).
        -------------------------------------------------------------------------------
        இந்தியாவின் தென் பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.
        (வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய
        இந்திய சரித்திரம் 14 ஆவது பக்கம்).
        -------------------------------------------------------------------------------
        இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.


        (இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல்
        405 ஆவது பக்கம்.)
        (தொடரும்)
        நன்றி; விடுதலை 18-09-07

        Thursday, September 6, 2007

        பாரீசிலும் பகுத்தறிவுக் கொள்கை

        பார்ப்பனர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், எந்த ஊருக்குச் சென்றாலும், எங்கு குடியிருப்புகளைப் புதிதாக அமைத்தாலும் அவர்கள் செய்கின்ற முதல் வேலை -முக்கியக் கடமையாக நினைக்கின்ற வேலை ஒரு கோயிலை எழுப்புவதுதான்.

        நியூயார்க் சென்றாலும் ஒரு பிள்ளையார் கோயிலைக் கட்டி, தமிழ்நாட்டிலிருந்து பார்ப்பனப் புரோகிதர்களைத் தருவித்து, மகாகும்பாபிஷேகம் செய்துவிடுவார்கள்.

        பக்தியைப் பரப்புதல் என்பது அவர்களின் கலாச்சாரத்தை நிலை நிறுத்துவது என்பதை உறுதியாக மனதில் வைத்து அவர்கள் செயல்படுகிறார்கள்.
        இன்னொரு பக்கத்தில் பாரதி சங்கம் என்று வைத்து சன்னமாக தங்களின் சமஸ்கிருத மனப்பான்மை வேலையைச் செய்து வருவார்கள்.

        தமிழர்களில் மெத்த படித்தவர்களாக இருந்தாலும், கை நிறைய சம்பாதித்தாலும் பார்ப்பனர்களின் இந்த அணுகுமுறையில் உள்ள சூட்சமத்தை உணர்ந்து கொள்ளாமல் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விடுவார்கள்.

        'பாரீசில் விநாயகன் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார் கள். பார்ப்பனீயத்தைப் பரப்ப அவர்கள் முதலில் கையில் எடுத்துக் கொள்வது இந்த விநாயகனைத்தான். மகாராட்டிராவில் பாலகங் காதர திலகரும் இதனைத்தான் செய்தார். ஆர்.எஸ்.எஸ்., தோன்று வதற்குத் தோன்றாத் துணையாக இருந்தது திலகரின் இந்த முன்னோட்டமான நடவடிக்கைதான்!

        பாரீசில் பிள்ளையார் விழா கொண்டாடுவதைக் கண்டித்தும், ஆபாச விநாயகனின் பிறப்பைக் குறித்தும் பாரீசில் உள்ள பகுத் தறிவாளர்கள் துண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். தோழர்கள் தமிழச்சி, மாசிலா ஆகியோர் மேற்கொண்டுள்ள பணிக்காக உலகம் முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களால் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

        அவர்கள் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் காணப்படும் கருத்துகள் சிந்தனைக்கு விருந்தானவை; விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவையாகும்.
        "பிறந்து வாழ்ந்த நாட்டில் தான் சுயமரியாதை இழந்து மானங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தோம். வந்த இடத்திலும் 'சனியனை இழுத்துக் கொண்டு வர வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள். நம் அறியாமையையும், பக்தியின் பெயரால் நடக்கும் கொள்ளைகளையும் ஒரு சில வஞ்சகர்கள் அனுபவிக்கவிடலாமா? உதாரணமாக இலங்கையிலிருந்து 1971-இல் பாரீசுக்கு இடம் பெயர்ந்த ஒரு நபர் 1985-இல் மாணிக்க விநாயகன் ஆலயம் என்ற பெயரில் ஒரு கோயிலை நிர்மாணித்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய அவருடைய வசதி வாய்ப்பின் நிலை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கொண்டு போய்க் கொட்டிய தெல்லாம் கடவுளுக்கா போய்ச் சேருகிறது? தமிழா! கொஞ்சம் சிந்தித்துப் பார்!.. ஒழுக்கம், நாணயம் குறையவும் பலாத்கார உணர்ச்சியும், கெடுதல் புத்தியும் வளர்வதற்கும் யார் காரணமாகி றோம்? பக்தி என்னும் நம் அறியாமையால், மதம் ஜாதி திணிக்கப்பட்டு சிந்திக்கும் திறனையும், விழிப்புணர்வையும் சீரழிப்பதற்கு இவை இரண்டும்தான் காரணம்" என்று அந்தத் துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

        தந்தை பெரியார் அவர்கள் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்றபோதுகூட இதே கருத்தைத்தான் அங்குள்ள தமிழர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

        பிறந்த நாட்டில் வறுமை கொத்தித் தின்ற நிலையில், வெளி நாட்டுக்குப் பிழைக்கப்போன இடத்தில்கூட, முட்டாள்தனத்தையும், பிற்போக்குத் தனத்தையும் தங்களோடு மூட்டை கட்டிக்கொண்டு போகும் தமிழர்களை நினைத்தால் வேதனையும், வெட்கமும் தான் நம்மைத் தொலைத்து எடுக்கிறது.

        என்ன செய்வது! தலைமுறை தலைமுறையாகப் பார்ப்பனீயம் நம் மக்களின் மண்டைக்குள் திணித்த மூடத்தன கசுமாலங்களை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந்திட முடியுமா?தப்பித் தவறி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களாகிய தமிழச்சி, மாசிலாவைப்போல் செயல்பட்டால் அது மனிதகுலத்துக்கே செய்யப்பட்ட மாபெரும் அறிவுத் தொண்டாகும். தனி இணை யத்தையே உண்டாக்கிச் செயல்படுகின்றனர் பாரீசில். "பெரியார் விழிப்புணர்வு இயக்கம் என்று பொருத்தமான பெயரையும் கொடுத்துள்ளனர்.

        தந்தை பெரியார் மறைந்தாலும், அவர்கள் உருவாக்கிய கொள்கை உலகம் முழுவதும் பரவிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

        பெரியார் பன்னாட்டு மையம் உலகின் பல நாடுகளிலும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. டில்லியிலும் விரைவில் பெரியார் மையம் செயல்பட உள்ளது. இந்தியாவின் நான்கு திசைகளிலும் இத்த கைய மையங்களைத் தொடங்கும் திட்டமும் கழகத்திடம் உள்ளது. தந்தை பெரியாரை உலக மயமாக்கவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

        'விடுதலை' தலையங்கம்
        (செப்டம்பர்-6, 2007)

        Monday, August 20, 2007

        2007-லும் கோயில் நுழைவுக்காகப் போராடும் நிலையா?

        தமிழ்நாட்டில் இன்னும் சில ஊர்களில் குறிப்பாக, கிராமக் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்கிற கொடுமை உண்மையிலேயே வெட்கப் படத்தக்கதாகும்.70, 80 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய போராட் டங்களில் சுயமரியாதை இயக்கம் ஈடுபட்டு, அதன்பின் சட்ட ரீதியாகவே தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்கிற தந்தை பெரியார் அவர்களின் அறிவிப்பு -வெற்றி பெற்றுள்ள தறுவாயில், கோயில் கருவறைக்குள்ளேயே தாழ்த்தப்பட்ட தோழர்கள் அதிகாரப்பூர்வமாக அர்ச்சக ராகலாம் என்கிற அளவுக்கு மனித உரிமை வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் கோயிலுக்குள்ளேயே தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் சில இடங்களில் நுழைய அனுமதியில்லை என்பது எந்த வகையிலும் அனுமதிக் கப்பட முடியாத ஒன்றாகும்.சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள திரவுபதை யம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக் கப்படவில்லை என்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் கோயில் நுழைவுப் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணும்வரை கோயிலை இழுத்து மூடிவிடுவது என்று முடிவு செய்து, அதன்படி கோயிலும் இழுத்து மூடப்பட்டுள்ளது.இந்து அறநிலையத்துறை இதில் தலையிட்டு, தமிழ்நாடு முழுவதும் இந்துக் கோயில்களில் எங்கெங்கு தாழ்த்தப் பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லையோ, அந்தக் கோயில் களில் எல்லாம் அவர்களை அனுமதிக்க சட்ட ரீதியான முயற்சியினை மேற்கொள்ளவேண்டியது சட்டப்படியான கடமையாகும்.பிரச்சினை வரும் சூழல் இருந்தால் சுமுகமாகப் பேசிப் பார்ப்பதில் ஒன்றும் தவறு கிடையாது - நியாயத்துக்குக் கட்டுப்பட மேல்ஜாதி(?) மக்கள் மறுப்பார்களேயானால், அவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்கக்கூடாது.21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோமா அல்லது கற்காலத்தை நோக்கிப் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோமா?பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக் கச்சியேந்தல் போன்ற தாழ்த்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் 10 ஆண்டுகாலமாக தேர் தலையே நடத்த முடியாது என்றிருந்த நிலையையே மாற்றி, அங்கெல்லாம் தேர்தலையும் நடத்தி, இந்த அரசு பெரியார் அரசு என்று நிரூபித்த மானமிகு மாண்புமிகு கலைஞர் ஆட்சி, இந்தப் பிரச்சினையிலும் தலையிட்டு, ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.இந்துக்களே ஒன்றுபடுவீர் என்று குரல் கொடுக்கும் சங் பரிவார்க் கும்பல் எங்கே போய் இப்பொழுது ஒளிந்து கொண்டுள்ளனர் என்று தெரியவில்லை.பேச்சுவார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தீர்வு காணும்வரை போராட்டத்தை ஒத்தி வைப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்திருப்பது அவர்களின் பொறுப்புணர்ச்சியைக் காட்டக்கூடிய ஒன்றாகும்; இதனைப் பலவீனமாக யாரும் கருதக் கூடாது.சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்த தலைவர்களும், அரசியல் கட்சியி னரும், சமூக அமைப்பினரும் ஓரிடத்தில் அமர்ந்து பேச வேண்டும்.தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று சொல்லுகிற தமிழகக் கட்சி ஏதும் கிடையாதே. அப்படியிருக்கும்பொழுது இதில் சுமுகத் தீர்வு காண்பதில் என்ன இடர்ப்பாடு இருக்க முடியும்? அப்படியே முட்டுக் கட்டை போட யாரேனும் முன்வந்தால் அவர்களை எளிதில் அடையாளம் காணமுடியுமே!இது ஒரு கட்சிப் பிரச்சினையாக யாரும் கருதத் தேவை யில்லை. ஒட்டுமொத்தமான மனித உரிமைப் பிரச்சினை யாகும். இதில் திராவிடர் கழகம் தன் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் அளிக்க எப்பொழுதும் தயாராகவே உள்ளது என்பதையும் அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
        விடுதலை தலையங்கம்(17.08.207)

        மாட்டு மூத்திரம் வாங்கலியோ, மாட்டு மூத்திரம்

        நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் சில பொருள்களைக் கூவி விற்பதுண்டு - நாகரிகம் வளர்ந்து வரும் காலத்தில் இதுபோன்ற கூவும் குரல்களைக் கேட்பது அரிதாகி விட்டது.உத்தரப்பிரதேசத்தை இரு மாநிலங்களாகப் பிரித்து உத்தரகண்ட் என்று தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இங்கு பார்ப்பனர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். பா.ஜ.க., ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. கந்தூரி முதலமைச்சராக இருக்கிறார் (இவர் ஆட்சியும் இப்பொழுது ஆட்டம் கண்டுவிட்டது. பா.ஜ.க., தலைவர் ராஜ்நாத் சிங் அங்கு விரைந்துள்ளார் என்பது வேறு செய்தி!).இந்தப் பா.ஜ.க., ஆட்சியில் பசு மாட்டு மூத்திரத்துக்கு ரொம்பவும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் மூத்திரம் ஆறு ரூபாய்க்கு விலை போகிறதாம்.யோகா குரு ராம்தேவ் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துக்கு இந்த மாட்டு மூத்திரம் மிகவும் தேவைப்படுகிறதாம்.அந்த மாநிலத்தில் இருக்கும் கால்நடை வளர்ப்புத் துறையும், நாட்டு மக்கள் மத்தியிலே மாட்டு மூத்திரத்தைப்பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தப் போகிறதாம்.ரத்த வங்கி போல மாட்டு மூத்திர வங்கிகளை கூட்டுறவு சங்கங்களை அமைத்து மக்களுக்கு வழங்கப் போகிறார்களாம்!சபாஷ்! பி.ஜே.பி., என்கிற இந்துத்துவா ஆட்சி வந்தால் தண்ணீ ருக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைக் குடிக்க உத்தரவு போட்டு விடுவார்கள். இதன்மூலம் தண்ணீர்ப் பஞ்சத்துக்கும் தீர்வு கிடைக்கக் கூடும் அல்லவா?

        மாட்டு மூத்திரம் என்றால் அதுவும் பசுமாட்டு மூத்திரம் மட்டும்தான் - எருமை மாட்டு மூத்திரமோ, காளை மாட்டு மூத்திரமோ அல்ல! பசுதானே அவர்களின் கோமாதா! ஏற்கெனவே பசுவை உணவுக் காக வெட்டக் கூடாது என்று ஒரு சட்டத்தையும், அந்த மாநிலத்தில் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி விட்டனர். மீறி வெட்டினால் சிறைத் தண்டனையோடு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வேறு கட்டவேண்டும்.மாட்டு மூத்திரத்தை எடுத்து இரசாயன பரிசோதனை செய்து பார்த்தார்களா என்று தெரியவில்லை. அது ஒரு கழிவுப் பொருள்தான். கழிவுப் பொருளைச் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்று இதுவரை எந்த மருத்துவத் துறை விஞ்ஞானமும் தெரிவிக்கவில்லை.பஞ்சகவ்யம் என்று சொல்லி மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் ஒன்றாகக் கலக்கி, `சூத்திரன் வீட்டில் நடக்கும் திதி முதலிய காரியங்களில், வீட்டுப் பெரியவர்களைக் குடிக்கச் செய்வார்கள். அதற்குத் தட்சணையும் கொடுத்து பயபக்தியோடு குடிப்பார்கள் சூத்திரர்கள்.இதனை திருமண நிகழ்ச்சிகளிலும், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், நீத்தார் நினைவு போற்றும் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் எடுத்துக்காட்டி மானங்கெடப் பேசுவார்கள்.பஞ்சகவ்யத்தை முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம். அப்படி முகம் சுளிக்காமல் குடித்தால் பார்ப்பான் கணக்குப் போடுவானாம்! `பரவாயில்லை இன்னும் நூறு வருஷங்களுக்கு இவாளைச் சுரண்டலாம்! என்று கணக்குப் போடுவானாம் - தந்தை பெரியார் கூறுவார்.இன்னும் ஓர் அளவுகோலையும் தந்தை பெரியார் கூறுவதுண்டு.பஞ்சகவ்யம் குடிப்பது என்பது நமது முட்டாள்தனத்தைப் பார்ப்பான் அளக்கும் தர்மா மீட்டர் என்றும் சொல்லுவார்.தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றினார்; பிரச்சாரம் செய்தார். திராவிடர் கழகம் இருக்கிறது; தொடர் பிரச்சாரம் நடந்துகொண்டு இருக்கிறது. இத்தகு காரணங்களால் இந்தப் பஞ்சகவ்யம் எல்லாம் அனேகமாகக் குறைந்து போய்விட்டது.அதேநேரத்தில், பா.ஜ.க., - சங் பரிவார்க் கும்பல் பசுமாட்டு மூத்திரத்துக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை நம் மக்கள் தெரிந்துகொள்ளுவது நல்லது.தன் மலத்தையே தின்ன பரமஹம்சர்கள் எல்லாம் கூட இந்த நாட்டில் உண்டு.கேட்டால் அவர்கள் `மும்மலத்தையும் அறுத்த மலந்தின்னிகள் என்று பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.வெட்கக்கேடு. இந்த 2007-லும் இப்படி ஒரு கூட்டம்!இந்துத்துவா என்றால், ஓகோ என்று பேசுகிறார்களே - ஒரு வெங் காயமும் இல்லை - மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதுதான் - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதாதா?

        - மயிலாடன்


        Tuesday, August 14, 2007

        வகுப்பு வாரி உரிமை நாள்! - தமிழர் தலைவர் அறிக்கை

        தந்தை பெரியார் அவர்கள் 1950 ஆகஸ்ட் 14 ஆம் நாளை வகுப்புவாரி உரிமை நாள் என்று அறிவித்துப் போராடினார். அந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-


        இன்று ஆகஸ்ட் 14!


        இந்நாள் இயக்க வரலாற்றில் மட்டுமல்ல -ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில், சமூகநீதி தேவைப்பட்ட பெரும்பான்மை மக்களின் வாழ்வில் மறக்க முடியாத - மறக்கவே கூடாத ஒப்பற்ற ஒரு பெரும் நாள்!


        சென்னை மாநிலத்தில் நீதிக்கட்சி ஆட்சியில் 1921 இல் உருவாக் கப்பட்டு, 1922, 1924 ஆம் ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்டு 1928 இல் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள் அமைச்சராகயிருந்த காலத்தில் அமலுக்குக் கொண்டு வரப்பட்ட வகுப்புவாரி ஒதுக்கீடுச் சட்டம் பார்ப்பனர்களின் தொடர் முயற்சியால் செல்லாது என்று சென்னை - உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது (28.7.1950).


        உச்சநீதிமன்றமும் 1950 செப்டம்பரில் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது.வகுப்புவாரி உரிமை நாள்!தந்தை பெரியார் வெகுண்டெழுந்தார்; போர்ப்பறை கொட்டினார். நாலாத் திசைகளிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகக் கிளம்பி மாணவர்களை, ஒடுக்கப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பினார்.ஆகஸ்ட் 14 ஆம் தேதியை வகுப்புரிமை நாளென்று அறிவித்தார். தந்தை பெரியார் வேண்டுகோள்படி அன்று தமிழ்நாடெங்கும் கடைகள் திறக்கப்படவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. மாணவர்கள் கல்வி நிறுவனங்களைப் புறக்கணித்தனர்.கல்வித் துறையில் பார்ப்பனர் ஆதிக்கம்!


        தமிழ்மண் - தன்மான மண் - சமூகநீதி மண் என்ற உண்மை மத்தியில் ஆட்சியில் இருந்தோர்க்கு மிகத் தெளிவாக உணர்த்தப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் பார்ப்பனர் ஆதிக்கம் எப்படி இருந்தது?மக்கள் தொகையில் 2.7 சதவிகிதமாக இருந்த பார்ப்பனர்கள்பற்றிய புள்ளிவிவரம் இதோ:


        இண்டர் மீடியட் 33.8 சதவிகிதம்

        பி.ஏ.; பி.காம் 33.6 சதவிகிதம்;


        பி.எஸ்ஸி., 46.6 சதவிகிதம்;


        பி.ஏ. ஆனர்ஸ் 48.5 சதவிகிதம்


        என்று நூற்றுக்கு மூன்று சதவிகிதம்கூட முழுசாக இல்லாத பார்ப்பனர்கள் இந்த அளவுக்கு அவர்களின் விகிதாச்சாரத்துக்கு மேலாக இருபது மடங்கு அனுபவித்து வந்தனர்.வகுப்புவாரி உரிமையும் செல்லாது என்று ஆக்கப்பட்டு விட்டதால் இந்த ஆதிக்கம் இன்னும் பன்மடங்கு உயர்ந்து, பார்ப்பனர் அல்லாத மக்கள் படுகுழியில் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டு விடாதா?முதல் சட்டத் திருத்தம்அந்த நியாயமான கோபம்தான் தந்தை பெரியார் அவர்களைத் தணலாகக் கொதிக்கச் செய்தது; எரிமலையாக வெடிக்கச் செய்தது.


        சென்னை மாகாணத்தில் தந்தை பெரியார் தலைமையில் மக்கள் கொதி நிலையை அடைந்ததைக் கண்ட பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை முதன்முதலாகத் திருத்த முன்வந்தார்.தமிழ்நாட்டில் நடக்கும் வகுப்புரிமைக்கான போராட்டம்தான் சட்டத் திருத்தத்துக்குக் காரணம் என்பதை நாடாளுமன்றத்திலேயே பிரதமர் நேரு அவர்கள் அறிவு நாணயத்தோடு ஒப்புக்கொண்டார்.


        அதன்படி 1951 பிப்ரவரியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் (15(4)) கொண்டு வரப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களின் வயிற்றில் `பால் வார்க்கப்பட்டது.இன்றைக்கு தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு என்றால், இதற்கு அஸ்திவாரக் கல் அதுதான். இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது என்றால், அதற்கான மூலம் - அதுதான் என்பதை மிகுந்த நன்றி உணர்ச்சியோடு நினைவு கூரவேண்டும்.


        1950 இல் சென்னை மாநிலத்தில் இருந்த அதே நிலைதான் இன்றைக்கு இந்தியா முழுமையும் உருவாகியிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.கல்வியில் இட ஒதுக்கீடு கானல் நீரா?


        பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு மண்டல் குழுப் பரிந்துரையின் காரணமாக -சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது 1990 இல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதுவும் எளிதில் கிடைத்துவிட வில்லை. சட்ட ரீதியாகக் கிடைக்கவேண்டிய அந்த உரிமைக்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தவேண்டியிருந்தது.


        மண்டல் குழுப் பரிந்துரைகளில் கூறப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வியிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இதுவரை கானல் நீராகவே இருந்து வருகிறது.வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்பது எப்பொழுது அமலுக்கு வந்ததோ, அப்பொழுதே கல்வியிலும் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு என்பது சொல்லாமலேயே அமலுக்கு வரத் தகுதி படைத்ததாகத்தான் பொருள்.


        ஆனாலும், நீதிமன்றங்கள் அன்று முதல் இன்றுவரை எல்லை தாண்டிய பயங்கரவாதமாக இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் நடந்துவருவதைப் பார்க்கிறோம்.வெட்கப்படவேண்டிய ஒன்றுபிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கான சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்தச் சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது (29.3.2007) எந்த வகையில் நியாயம்? அந்தத் தடை ஆணையை நீக்கக் கோரி மத்திய அரசு மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது (7.8.2007).


        மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஜனநாயகத்தின் கெதி இந்த நிலையில்தானிருக்கிறது என்பது வெட்கப்படவேண்டிய ஒன்றல்லவா?பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் (அரசமைப்புச் சட்டம் 340 ஆவது பிரிவின்படி) அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் தரும் பரிந்துரை களை அமல்படுத்தவேண்டும் என்று உள்ளதே அது வெறும் ``ஏட்டுச் சுரைக்காய்தானா?


        1950- அதே நிலைதான் இன்றும்!1950 இல் வகுப்புவாரி உரிமைக்குக் கத்தி தீட்டப்பட்டபோது எழுந்த அதே கொந்தளிப்பு அதைவிடவும் அதிகமாக இப்பொழுது ஏற்பட்டாக வேண்டும். இதில் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டம் தேவையில்லை! ஓரணியில் அனைவரும் திரளவேண்டும். தங்களுக்கு ஏற்பட்டு இருக்கும் மிகப்பெரிய வாய்ப்புக் கேட்டை பிற்படுத்தப்பட்ட மக்கள் போதிய அளவுக்கு உணர்ந்ததாகத் தெரியவில்லை என்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.தந்தை பெரியார் 1950 இல் அறிவித்த இந்த வகுப்புரிமை நாளில் மக்களைத் திரட்ட உறுதிகொள்வோம் - திட்டங்களை வகுப்போம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம்!        சென்னை
        14.8.2007


        தலைவர்,திராவிடர் கழகம்.

        Tuesday, July 17, 2007

        சோதனைப் பதிவு

        கடவுள் இல்லை!
        கடவுள் இல்லை!!
        கடவுள் இல்லவே இல்லை!!
        கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்!
        கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்!
        கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!

        தர்மகர்த்தா அணுகுமுறைவேண்டாம்! - தலையங்கம்

        சென்னை - செவ்வாய் - ஜூலை 17 - 2007
        தர்மகர்த்தா அணுகுமுறைவேண்டாம்!
        தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது காலத்தின் கட்டாயமாகும். மண்டல் குழுப் பரிந்துரையில்கூட தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.நிறுவனங்கள் தனியார்களுக்கு உரிமை உடையன என்றாலும், நிலம், நீர், மின்சாரம், கடன் உதவி இன்னோ ரன்ன வகைகளில் அரசின் உதவிகளைப் பெற்றுதான் அவை செயல்படுகின்றன.புதிய பொருளாதாரக் கொள்கைப்படி தொழில் நிறு வனங்கள் பெரும்பாலும் தனியார் கைக்குப் போய்க் கொண் டிருக்கும்போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தர வாதம் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டினை கறாராக அமல்படுத்த தனியார் நிறுவனங்கள் கடமைப்பட்டே இருக்கின்றன.அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் குறைந்தபட்சத் திட்டத்திலும், தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அவர்கள்கூட இதனைச் சுட்டிக்காட்டி யுள்ளார்.தனியார் துறை நிருவாகிகள் நாங்களாகப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்போம் என்றும், அதற்காகத் தனி சட்டம் தேவையில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். இந்தத் தர்மகர்த்தா முறை என்பது, அவர்களாக மனமிரங்கி பிச்சை போடும் ஒரு முறையாகும்.இந்த நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப் பட்டவர்களும், சிறுபான்மையினரும், பெரும்பான்மையினர் ஆவார்கள்.இவர்கள் காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்புகளில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இட ஒதுக்கீடு சட்ட ரீதியாக அமலுக்கு வந்த பிறகேதான் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஓரளவு முன்னேற்றத் திசையில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதிலும் மாநில அரசுகள் இட ஒதுக்கீட்டில் அக்கறை காட்டும் அளவுக்கு மத்திய அரசு கவலை எடுத்துக்கொள்வதில்லை.இந்தச் சூழ்நிலையில் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு என்பது சட்டப்படியாக உறுதிபடுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.தனியார் துறைகளில் மேலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர் என்பது போன்ற பதவிகளில் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிபத்தியம் செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் அந்த நிறுவனங்களில் வேலைக்கு ஆள்களைத் தெரிவு செய்யும்போது எந்தக் கண்ணோட் டத்தில் அவர்கள் நடந்துகொள்வார்கள் என்பது எல்லோ ருக்கும் தெரிந்ததே!சட்டப்படியாக அறுதியிடவில்லையென்றால், தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்பு என்பது அறவே புறக்கணிக்கப்பட்டுவிடும். அந்த நிலை சமூகத்தில் அமைதியற்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்காதா என்பதை தனியார் துறை நிருவாகிகளும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.இந்தியாவுக்குள் தொழிலகங்களை நடத்தும் முதலாளி கள், இந்தியாவுக்குள் ஒரு நீதி, வெளிநாடுகளில் ஒரு நீதி என்கிற மனுதர்ம மனப்பான்மை உடையவர்களாகவே இருக்கிறார்கள்.இந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் தொழில்களை தொடங்கும்போது, அந்நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கின்றனர். அதே முதலாளிகள் இந்தியா என்று வருகிறபோது தட்டிக் கழிக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.எனவே, இந்திய முதலாளிகள் அல்லது இந்தியாவில் தொழில் நடத்தும் வெளிநாட்டு முதலாளிகள் தர்மகர்த்தா முறையில் (மனம் இரங்கிப் பிச்சைப் போடுவது) வழங்கு வதாகக் கூறும் இட ஒதுக்கீடு என்னும் கானல் நீரைக் கண்டு மயங்கக் கூடாது.அரசுத் துறை, பொதுத் துறை, கூட்டுறவுத் துறை, தனியார் துறைகள் அத்தனையிலும் இட ஒதுக்கீடு கண்டிப் பாக, சட்ட ரீதியாக அமல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.அதிலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்று பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல் அவரவர்களுக் குரிய விகிதாசாரத்தில் வாய்ப்புக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்
        தந்தை பெரியார் அறிவுரை
        ஏற்றத் தாழ்வை விரும்புவோர்!``உயர்வு தாழ்வுகளைச் சரிப் படுத்துவதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள், தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப்பார்கள். அதாவது பறையன் இருக்கவேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான்.
        (பெரியார் 85 ஆவது பிறந்த நாள் மலர், பக்கம் 92)

        தமிழக தமிழ் நாளேடுகளில் முதல்முறையாக...

        'ஒருங்குறி'யில் விடுதலை!
        http://viduthalai.com/20070717/news03.htm
        தமிழக தமிழ் நாளேடுகளில் முதல்முறையாக ஒருங்குறியில் விடுதலை நாளேடு தன் பணியைத் தொடங்குகிறது. 1994-இல் முதல் தமிழ் இணைய நாளேடாக வெளிவந்த ஏடு 'விடுதலை'தான் என்பது குறிப்பிடத்தக்க செய்தி!
        அய்யாவின் கொள்கைகள் அகிலம் முழுக்க சென்றடைய ஒவ்வொரு பணியும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் விடுதலையும், பெரியார் இணையக் குழுவும்
        நடைபோடுகின்றன. தொடர்ந்து விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு மற்றும் பெரியாரின் எழுத்துக்கள் யூனிகோட் எனப்படும் ஒருங்குறியில் உலகெங்கும் வலம் வர இருக்கின்றன என்ற மகிழ்ச்சிச் செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறோம்!

        Thursday, March 22, 2007

        பெரியார் - அண்ணா வழி ஆட்சியில் அமைச்சராக இருக்கும்
        துரைமுருகன் கட்சிக்கரை வேட்டியை மாற்றி
        மேலாடையின்றி கோயிலுக்குச் செல்வதா?
        தி.மு.க.வுக்கும் கலைஞருக்கும் இழைத்த
        தீரா களங்கம் கறை வேறு உண்டா?
        துரைமுருகன் அவர்களை அமைச்சராக்கியது
        கட்சியும் கலைஞருமா -
        ஆதிகேசவப் பெருமாளா?

        தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

        தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர் துரை முருகன் குமரி மாவட்டம் ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு கட்சிக்கரை வேட்டியை மாற்றிக் கொண்டு மேலாடையின்றி சென்றது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
        பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களைப் பற்றி எழுத அவர் நமக்கு ஓர் அவசியத்தை உண்டாக்கித் தந்தமைக்காக வெட்கமும் வேதனையும் அடைவதோடு கூனிக்குறுகி நிற்கும் பகுத்தறிவுச் சுயமரியாதைக் கொள்கை யாளர்களின் குமுறலை முறைப்படி வெளியிட்டுநகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென்று இடித்தற் பொருட்டு (குறள் 784)என்பதற்கொப்ப நமது வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியுள்ளது குறித்து நாம் மகிழவில்லை; மிகுந்த துன்பத்துடன் தான் எழுதுகிறோம்.
        கரை வேட்டியை மாற்றுவதா?
        அவர் ஒரு சாதாரண துரைமுருகனாக இருந்து எந்தக் கோயிலுக்குள்ளும் சட்டையைக் கழற்றிவிட்டுச் சென்றால் அதுபற்றி பத்தோடு பதினொன்று சம்பவம் என்று நாம் அலட்சியப்படுத்தி விடலாம் கவலைப்படத் தேவையில்லை.
        அவர் மானமிகு முதல்வர் கலைஞர் அவர்களது அமைச்சரவையில் உள்ள ஒரு மூத்த அமைச்சர். தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பாளர்களில் ஒருவர். அவர் தனது குமரி மாவட்ட கேசவப் பெருமாளிடம் உள்ள பயபக்தியைக் காட்ட சட்டையைக் கழற்றியதோடு தி.மு.க. கரை போட்ட தனது வேட்டியையும் கூட மாற்றிவிட்டு வேறு வேட்டி அணிந்து ``பகவானைத் தரிசித்துப் பரவசமானார் என்றால் இதைவிட தி.மு.க.வுக்கு அதன் ஒப்பற்றத் தலைவருக்கு தன்னை அமைச்சராக்கிய முதல்வருக்குத் தீரா களங்கம் - கறை வேறு உண்டா? `குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைப் படத்தையும் செய்தி யையும் படிக்கும் கலைஞர் மனது எவ்வளவு காயப்பட்டு உள்ளம் ரத்தக் கண்ணீர் வடித்திருக்கும் என்பதை நாம் நன்கு உணர்வோம்.
        தம்முடைய தோழர்கள் தொண்டர்கள் பெரியார் - அண்ணா வகுத்த கொள்கை நெறியில் நிற்கவேண்டும் என்பதற்காக வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி எழுதியும் பேசியும் வருபவர் நம் முதல்வர் கலைஞர் அவர்கள்.
        83 வயதிலும் `சதாவதானம் செய்யும் கலைஞர்`குடிசெய்வார்க்கில்லை பருவம் என நேரங் காலம் பார்க்காது தனது 83 ஆம் வயதிலும் கூட அத்துணைப் பிரச்சினைகளையும் சந்தித்து - அஷ்டாவதானம் கூட அல்ல - ``சதாவதானம் செய்து கடுமையாக உழைக்கும் அவருக்கு சக அமைச்சர்கள் மகிழ்ச்சியைத் தருவதா அல்லது மாறாக நடப்பதா?
        `மாண்புமிகு வரும் போகும் - `மானமிகு அப்படியல்லவே!
        `மாண்புமிகு என்பது வரும் போகும்; ஆனால் `மானமிகு என்பது ஒருமுறை ஏற்றுக்கொண்டால் அது கொள்கையாளர்களை விட்டு இறுதி மூச்சடங்கும் வரை விலகாது!25.3.2007 `குமுதம் ரிப்போர்ட்டரில் அட்டையிலேயே ``பக்திப் பழமான அமைச்சர் துரைமுருகன் என்று அவரின் சட்டை அணியாத படம் போட்டு உள்ளே எழுதியுள்ள கட்டுரையில் உள்ள முக்கிய பகுதிகள் இதோ:
        ``...திருவட்டாரில் அமைச்சரின் கார் நேராகப் போய் நின்ற இடம் பிரசித்திப் பெற்ற ஆதிகேசவப் பெருமாள் ஆலயம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழைமையான ஆலயம் இது. திருவிதாங்கூர் மகாராஜா வம்சத்தினர் இன்றும் தங்கள் குல தெய்வமாகக் கொண்டாடும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலுக்கு முன் மாதிரியே இந்த ஆலயம்தான் என்கிறார்கள். ஒரே வித்தியாசம் அங்கு மூலஸ்தானத்திலுள்ள விஷ்ணுவின் சிலை சயன (படுத்த) நிலையில் பதினெட்டு அடி நீளம் இருக்கும். இங்கோ சிலையின் நீளம் இருபத்திரண்டு அடி.தமிழக அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் வருகிற 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. கோயிலின் கும்பாபிசேகமும் நடைபெற இருப்பதால் திருப்பணி வேலைகளும் நடந்து கொண்டிருக் கின்றன. இந்தச் சூழலில்தான் கட்சிக் கரை வேட்டி சகிதமாக அமைச்சர் கோயில் வளாகத்திற்குள் வந்தார்.

        கேரளா ஆகம விதிமுறைகள் இங்கு கண்டிப்பாக அமல்படுத் தப்படுவதால் மேல்சட்டை அணிந்து உள் பிரகாரத்தினுள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. எனவே அமைச்சரை கோயில் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் அவருக்கு ஜரிகை போட்ட பட்டு வேஷ்டி மற்றும் மேலே போர்த்திக் கொள்ள மெல்லிய அங்கவஸ்திரம் ஆகியவற்றை வழங்கினர். அமைச்சரும் பவ்யமாக அவற்றை வாங்கிக் கொண்டு கட்சிக் கரை போட்ட வேஷ்டிக்கும் தனது சட்டைக்கும் விடை கொடுத்தார். சந்தன மாலை மரியாதைகளையெல்லாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அடுத்து கோயில் உள் பிரகாரத்தினுள் செல்ல ஆயத்தமானார்.உடனே பூஜைக்கான பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் ஒரு தாம்பாளத்தில் கொண்டு வரப்பட்டன. உதவியாளர் ஒருவர் அதனை ஏந்திக் கொண்டுவர அமைச்சர் உள்ளே போனார்.கோயிலில் பூஜை செய்யும் நம்பூதிரி முதலில் அமைச்சரின் பெயரைக் கேட்டிருக்கிறார். அமைச்சர் தனது பெயரைச் சொன்னதும் நட்சத்திரத்தைக் கேட்டாராம் நம்பூதிரி. சற்று நிதானித்து `கார்த்திகை என்று சொன்னாராம் அமைச்சர். பின்னர் அமைச்சரின் பெயரில் சிறப்புப் பூஜை நடந்திருக்கிறது. பூஜை முடிந்ததும் நம்பூதிரி கொண்டு வந்த பழங்கள் உள்ளிட்ட பிரசாதங்களைத் தொட்டு ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட அமைச்சர் சந்தனத்தை எடுத்துத் தனது மார்பில் லேசாகத் தேய்த்துக் கொண்டாராம்.அதன் பிறகு அங்கவஸ்திரம் சகிதமாகவே கோயிலை வலம் வந்து அங்குள்ள சிற்பங்களை வெகுவாக ரசித்தார் அமைச்சர். உத்தேசமாக முக்கால் மணிநேரம் அங்கு செலவழித்த அமைச்சர் பின்னர் கரைவேஷ்டி - சட்டைக்கு மாறி நாகர்கோயிலுக்குப் பயணமானார்.மாணவப் பருவம் தொட்டு திராவிட இயக்கத்தில் ஊறியவரான துரைமுருகன் இந்த அளவுக்கு பக்தி மானாக மாறிப் போனதை தங்களாலேயே நம்ப முடியவில்லை என் கிறார்கள் உடன்பிறப்புகள். அதே சமயம் தி.மு.க.வின் மேல்மட்டப் பிரமுகர் ஒருவர் நம்மிடம் கூறுகையில் ``மிக மோசமான உடல்நலப் பாதிப்பு இருதய அறுவை சிகிச்சை ஆகிய பிரச்சினைகளுக்குப் பிறகுதான் அமைச்சரின் போக்கில் இந்த மாற்றம் என்றார்
        என்று `குமுதம் ரிப்போர்ட்டர் எழுதுகிறது!
        அன்று சாய்பாபா சிக்கல்!
        முன்பு முதல்வர் கலைஞர் இல்லத்திற்கு சாய்பாபா வந்தபோதே அவரை வரவேற்று மேலே அழைத்துப் போக கலைஞரின் தூதுவராக வந்த சகோதரர் துரை முருகன் சாய்பாபாவிடம் மோதிரம் பெற்றதோடு எதையும் முன்கூட்டியே அறியும் சக்தியை சாய்பாபா பெற்றிருக்கிறார் என்று பேசிய போதும் மோதிரம் வரவழைக்கும் சாய்பாபாவின் மோடி மஸ்தான் வேலை பி.பி.சி. தொலைக்காட்சி மூலம் சந்தி சிரித்ததும் உலகம் முழுவதும் அறிந்த செய்தி என்றே அவருக்குச் சுட்டினோம்.
        நீங்கா அவமானம்!
        இப்போதும் அதுபற்றிக் கவலைப்படாமல் இப்படி நடந்துகொள்வ தனால் தி.மு.க.வுக்கும் கலைஞர் அரசுக்கும் நீங்கா அவமானத்தை அல்லவா தேடி வைத்துவிட்டார்! நாம் எங்கு போய் முட்டிக் கொள்வது?
        இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கென்றே ஓர் அமைச்சர் உள்ளார். கோயிலுக்குச் செல்வதும் அவருடைய பல பணிகளில் ஒரு பகுதி என்றாலும்கூட அவர் கூட தி.மு.க. கரை வேட்டியை மாற்றிக் கொண்டு சென்றார் என்று செய்தி வந்ததில்லையே!
        அ.தி.மு.க.வும் - பகுத்தறிவும்
        முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மண் சோறு கல் சோறு தின்று வீதியில் புரண்டனர் என்றால் அவர்கள் தலைமையும் சரி அவர்களும் சரி தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று என்றும் அழைத்துக் கொண்டதில்லை.
        ஆனால் கலைஞர் அரசில் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது முதல்வரிலிருந்து எந்த அமைச்சரும் கடவுள் பெயரால் பிரமாணம் எடுக்கவில்லை என்பதற்கு என்ன காரணம்? ஒரே காரணம் இது பெரியார் - அண்ணா வழி நடக்கும் பகுத்தறிவாளர் அரசு என்று உலகுக்குப் பிரகடனப்படுத்தத்தானே!அப்படி உறுதிமொழி எடுத்த பிறகு இப்படி ஒரு அலங்கோலமா? அவலமா?
        முதலமைச்சருக்கு மன உளைச்சல்!
        முதல்வர் கலைஞருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாவிட்டாலும் மன உளைச்சலையாவது ஏற்படுத்தாமல் உதவ வேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றோரின் ஆதரவுகளைவிட அவருடைய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்களின் ஆதரவு அன்றாடக் கடமை அல்லவா?அமைச்சராக ஆக்கியது கேசவப் பெருமாளா?தி.மு.க. கரை போட்ட வேட்டிதான் அவரை மந்திரியாக்கியது - கலைஞரின் சகோதரப் பாசமும் கொள்கைக் குடும்பம் இது என்று காட்டுகின்ற வற்றாத அன்பும்தான் அவரை அமைச்சராக்கியது!

        கேசவப் பெருமாளோ அல்லது பட்டுத் துண்டு பட்டு வேட்டியோ அல்ல. வேலிகள் பயிரை மேய்ந்தால் நாம் வன்மையாகக் கண்டிப்பது நம்முடைய கடமையாகிறது!இந்த அரசின் சாதனைகளைப் பாராட்ட வேண்டியவற்றை பாராட்டும் அதே நேரத்தில் கண்டித்து உரிமையுடன் சுட்டிக் காட்டவேண்டியவற்றை உடனடியாகச் சுட்டிக்காட்ட திராவிடர் கழகம் ஒருபோதும் தயங்காது!

        கி.வீரமணி,
        தலைவர், திராவிடர் கழகம்.
        சென்னை 22.3.2007